December 14, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 ( முறையாக பூணூல் போடப்படுகிறதா? )

உண்மையில் பூணூல் விழா என்பதே வைதீக விழா. அதன் போக்கே மாறிவரும் இந்நாளில், வைதீகத்தை பற்றி ஒருவரும் நையா-பைசா கவலைப்படாமல், லௌகீக, லோகாந்திர செலவுகளை அதிகரித்து, பணம் புரளுவதால், பட்டும் பளபளப்புமாய் விழக்கள் மாறிவருவது வேதனைக்குறியது (கல்யாணங்களும் இதில் அடக்கம்). பூணூல் என்பது அக்கால வழக்கப்படி, க்ஷத்திரியர்கள், வைஸ்யர்கள் என எல்லோராலும் அணியப்பட்டது.

மந்திரங்களை முறையாய் குரு ஸ்தானத்தில் ஒருவர் ஓதி இன்னொருவருக்கு சொல்வது என்பது தான் நியதி. குரு என்பவர் அம்மந்திரத்தின் தன்மையை, அதன் பக்தியை உணர்ந்து நடைமுறை வாழ்வில் கடைபிடிப்பவராய் இருக்கவேண்டும். இன்றைக்கு பல பேர் ஆவணி அவிட்டம் அன்று காயத்ரி சொல்வதுடன் சரி. முறையான ஒரு குரு உபதேசித்து மந்தோபதேசம் பெறுவது என்பது பலருக்கு இன்று நடப்பதில்லை.

மான் தோல் பூணூலில் கட்டப்படுகிறது. மான் தோல் தூய்மையை குறிப்பதாகும். மூன்று நூல்கள் அணிந்திருப்பது மூன்று குணங்களை குறிப்பதாகும். சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்கள் என்பவை. ஒரு மனிதனிடம் பொதுவாக எல்லா குணங்களும் கலந்து அமையப்பெற்றிருக்கும். எனினும், ஒவ்வொருவனுள்ளும் சில நேரங்களில் ஒரு குணம் மேலோங்கி நிற்கும். எப்படிப்பட்ட குணங்கள் அதிகமாக மேலோங்கி நிற்கிறது என்பதை வைத்தே அவன் எப்பேற்பட்டவன் எனத் தீர்மானிக்கப்படுகிறான். முப்புரி நூல் மனிதர்களிடத்து விளங்கும் மூன்று கடன்களையும் குறிக்கிறது. ரிஷிகளுக்கு அவன் செலுத்த வேண்டிய கடன், தேவர்களுக்கு அவன் செலுத்த வேண்டிய கடன், பித்ருக்களுக்கான தர்பணம் முதலிய கடன் என்பனவற்றையும் குறிக்கும்.

கல்லாலான அம்மியை போல் உறுதி மனம் குணம் பூண்டவனாய் அவன் விளங்க வேண்டும் என மந்திரங்கள் உபதேசிக்கிறது. மித்ரன் எனும் தேவனைப் போல் எல்லோரிடத்தும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவோனாக விளங்கவேண்டும். என மந்திரங்கள் அறிவுருத்துகிறது. பிரம்மச்சர்யத்தை மேற்கொள்பவன் அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளான்.

சம்பிரதாயமாக சொல்லப்படும் பல மந்திரங்களுக்கு விளங்கங்கள் அறிந்து சொல்வதாலேயே பயன் சிறந்து விளங்குகிறது. இல்லாவிடில் செய்யபடும் கடமை சரிவர செய்யாததாகிவிடுகிறது. இன்றைக்கு ஒரு வீட்டில் பூணூல் விழா எப்படி நடைபெறுகிறது? முறைப்படி பூணூல் போடப்படுவதற்கு "விழா" எனும் சொல்லே தவறு. அர்த்தம் புரியாமல் ஓதப்படும் மந்திரங்கள், செய்யும் செயலிலோ மந்திரங்களிலோ, வேதங்களிலோ சிறிதும் சிரத்தையற்று வருவோரை கவனித்து உபசரிக்கும் குதூகல விழாவாகி விட்டது. பட்டும் பளபளப்பும் அங்கு பேசப்படும் வம்பும் மட்டுமே இன்றைக்கு படாடோபமாக பூணூல் விழாவை முடித்து வைக்கிறது.

ஓம் பூர் புவஹ-சுவஹ
தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தீயோ யோன ப்ரசோதயாத்


என்பது காயத்ரி மந்திரம்.

முக்காலங்களையும் மூன்று லோகங்களையும், முக்குணங்களையும் கடந்து நிற்கும் அன்னையே, உன்னை நான் வணங்குகிறேன். இருளை நீக்கும் சூரியனின் கிரணங்களையொத்து என் மாயையை, அறிவீனங்களை அகற்றி, அறிவொளி வழங்குமாறு வேண்டி அன்னையே உன்னைப் பணிகிறேன்। என்பது இதன் பொருள்.

பூணூல் போட்ட பிறகு அம்மாணாக்கன் சூரியனை காண்பது என்பது வழக்கு। சூரியனைப் போல் கடமைத் தவறாதோன் பிரபஞ்சத்தில் இல்லை. அவனைப் போல் இனி நானும் திகழவேண்டும் என்று மாணாக்கன் மன உறுதி பூண்கிறான். இது போல் சடங்குகளில், சின்னங்களின் அவசியங்களை விளக்க வரும் போது, அலைபாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நம் மனத்திற்கு ஸ்திரமாய் உறைக்க, பதித்து வைக்க சின்னங்கள் தேவை, அதிலும் ஆன்மா, இறை ஞானம் போன்ற சூக்ஷ்ம வஸ்துக்களை விளக்க சின்னங்கள் அவசியமாகிறது.
அதன் பயனாக ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு சொல்லப்படுபவை எளிதில் சென்றடைகிறது.

தான் யார், எவ்வழி, எக்குலத்தின் தோன்றல் என்றெல்லாம் தன்னை பற்றி கூறிக்கொண்டு, இன்னான் இந்த பிரம்மச்சரியத்தை மேற்கொண்டிருக்கிறேன்। எனக்கு இனி....


இகழத்தக்கதல்ல இகழ்ச்சி
போற்றத்தக்கதல்ல இகழ்ச்சியின்மை
மேலும்,

நல்லவற்றில் கவனம்
தீயவற்றில் அலக்ஷியமும்

அறியத் தக்கதை அறிவது
அறியத் தகாததை அறியாமலேயே இருப்பது

நல்லவற்றையே கேட்பது
தீயவற்றை கேளாமல் இருப்பது


உண்மையை பேசுவது
பொய்யை பேசமலே இருப்பது

இவை எல்லாம் என் விரதங்கள், என்று உறுதிமொழி எடுத்து விரதம் பூண்கிறான். பூணூல் போடப்பட்டவன், குருவிற்கேற்ற நல்ல அடக்கமான சீடனாக விளங்குவது அவன் தலையாயக் கடமை. அவன் பிக்ஷை எடுத்து உண்ணல் வேண்டும். பிக்ஷை எடுப்பதால், ஒரு மனிதனின் அஹம் அடக்கப்பட்டு, அங்கு தன்னடக்கம் தானாய் வந்தமர்கிறது.

இத்தனைப் படிகளைக் கடந்துகொண்டே அவன் பாடங்கள் பயின்று நித்திய கர்மாக்களை செய்தால் மட்டுமே அவனுக்கு போடப்பட்ட பூணூல் முழுமையான பயன் பெறுகிறது. மறுபடியும் அதே கேள்வி. பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணானா? போடப்பட்டதும் சரியாய் முறையாய் போடப்படுகிறதா?

"இத்தனை சடங்குகள் நடந்தாலும் கூட, இன்றைய காலகட்டங்களில் போடப்படுவது பூணலே அல்ல. பூணல் போட்ட மாணவன் பெறுவது பிரம்மோபதேசமே அல்ல "

பூணூல் வைபவங்களோ, அல்லது நித்திய கர்மாக்களோ, உயர்ந்த நிலையை அடைய ஒரு பாதை மட்டுமே, படிக்கட்டுகள் போன்றவையே. பறக்கும் தருணம் வரும் பொழுது அக்கர்மாக்களைக் விட்டுச் செல்லவதே இயல்பு.

No comments:

Post a Comment