December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (பஞ்சகர்மா)

பஞ்ச கர்மங்களாக ஐந்து கர்மங்கள் மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

"தேவ யக்ஞம்" : தேவர்களின் ப்ரீதிக்காக ஆற்றப்படும் யாகங்கள் யக்ஞங்கள் தொண்டுகள், பூஜைகள். யக்ஞம் என்றால் நெய் ஆஹுதி வளர்த்து என்று மட்டும் பொருள் கொள்ளல் வேண்டாம். தேவர்களின் பிரியத்திற்காக நம்மால் முடிந்த ஸ்தோதிரங்கள் சொல்லி துதி பாடுவதும் இவ்வகையைச் சேரும்.

"மனுஷ்ய யக்ஞம்" : இன்வார்த்தைகள் பேசுதல், பிறரை வாக்கால், மனதால், செயலால், துன்புறுத்தாமை, விருந்தோம்பல் முதலியன அடக்கம்.

"பித்ரு யக்ஞம்" : பித்ருக்களுக்கான கடன், அமாவாசை தர்பணங்கள், திதிகள் முதலியன

"ப்ரம்ம யக்ஞம்" : பிரம்ம ஞானத்தை நோக்கிய பயணங்கள், வேதம் கற்றல், அதை பிறருக்கு கற்பித்தல், பிரம்ம ஞானத்தை பிறருக்கு எடுத்துரைத்தல்.

"பூத யக்ஞம்" : என்ற ஐந்தாவது கர்மம், தெரியாமல் செய்த ஹிம்ஸைகளுக்கு பிராயச்சித்தமாக செய்யப்படுவது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுதல் இதில் அடக்கம். நம் அன்றாட வாழ்வில், நம் ஜீவனத்திற்காக பல நுண்ணுயிர்கள், பூச்சிகள் முதலியன கொல்லப்படுகின்றன. நம் மூச்சுக்காற்றில் பல கிருமிகள் மடிகின்றன. நம் ஆரோக்கிய வாழ்விற்காக நம்முள்ளும் புறமும் வாழும் பல கிருமிகளை நாசம் செய்கிறோம். நடக்கும் போது சிறிய உரு கொண்ட பூச்சிகள் கொல்லப்படுகின்றன. நம் பசிக்காக வெட்டப்படும் மரங்கள், செடிகள், காய்கள் கனிகளில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றிற்காக செய்யும் பிராயச்சித்த கர்மாவாக பூத யக்ஞம் செய்யப்படுகிறது.

ஜைன மதத்தை சேர்ந்த துறவிகள் தாம் செல்லும் பாதையை பெருக்கி சுத்தப்படுத்திக்கொண்டும், தம் மூச்சுக்காற்றின் வழியாக நுண்ணுயிர்கள் கிருமிகளை சுவாசித்து அதை அழிக்காது இருக்க, சுவாச உரை ஒன்றும் அணிந்து கொள்கின்றனர்.

யாகத்திற்கும் யக்ஞத்திற்கும் செலவழித்தலை விட தான தர்மங்கள் செய்தல் உயர்ந்த காரியம். பாலையும் நெய்யையும் கற்சிலைக்கு அபிஷேகம் செய்வித்தலை விடவும், ஆஹுதிக்கு நெய் சொரிதலை விடவும் ஏழையின் பசிக்கு உணவளித்தால் அதன் உபயோகம் பன்மடங்கு, என்று சில நேரங்களில் நம்மில் பலருக்கு தோன்றலாம்.

அதற்கு விடையாய் பஞ்ச கர்மாக்கள் மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ளதாய் கூறுவதையே நினைவு கோர வேண்டும். அக்கர்மங்களில் தானம் தர்மம் செய்தல் உயர்ந்த பண்பு, புண்ய காரியமாகவும், பலனை எதிர்பார்த்து செய்தாலும் கூட பலன் தர வல்லது என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட தான தர்மங்கள், மனுஷனுக்கு செய்யும் போது, அது மனுஷ கர்மாவாக பாவிக்கப்படுகிறது. தேய்வத்திற்கும் தேவர்களுக்கும் செய்யப்படவேண்டிய கர்மா, யக்ஞங்கள் யாகங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.

திருமூலர் தம் திருமந்திரத்தில்

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.


எனக்கூறுகிறார்.

எல்லோருக்கும் விதிக்கப்பட்டுள்ள கர்மங்கள் இறைவனுக்கு அளிக்க ஒரு இலை. கீதையில் கண்ணன் "பக்தியுடன் எனக்கு ஒரு பழமாவது, ஒரு பூவாவது, ஒரு இலையாவது அர்பணி" என்கிறான். இறைவனுக்குறிய கர்மாவைப் போல் வாயில்லா ஜீவன்களுக்கு சிறிது உணவளிப்பதும் நமது கடமை. இதுவே பூத யக்ஞமாக கூறப்படுவது. தினம் செய்யப்பட வேண்டிய கர்மாக்களில் இன்னொன்று நாம் உண்ணும் உணவை பகிர்ந்து ஒரு பிடி உணவாவது இன்னொருவனுக்கு அளித்து உண்ண வேண்டியது. இதுவே தான தர்மங்களாக விரிவடையும் மனுஷ்ய கர்மா அல்லது யாகம். இதையும் தாண்டி இன்னொன்றும் செய்ய வெண்டுமாம், அது, பிறருக்கு இதம் தரும்படி நம் பேச்சும் செயலும் அமைவது ஆகும்.

மனுஷ்ய யக்ஞம் செய்வதால் தேவர்களுக்குறிய கடமைகளை செய்ய வேண்டாம் என புறம் தள்ளக்கூடாது. தேவ கார்யங்கள் நடை பெறுவதால், பூமியில் செழிப்பும், சுபீக்ஷமும், நம்மைச் சுற்றியுள்ள அதிர்வாற்றல் இணக்கத்திற்குறியதாகவும் அமைகின்றன.


கண்ணுக்கு அல்லது புலன்களுக்கு எட்டாத / அப்பாற்பட்ட விஷயமாக இருப்பதால் நம்பிக்கை குறைந்துவிடுகிறது. சில செயல்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் கொடுத்து நம்மை நாமே சாந்தப்படுத்திக் கொள்கிறோம். விஞ்ஞானத்திற்கு விளங்காத விஷயங்களை, "மூடநம்பிக்கைகளாக" முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துவிடுகிறோம்.

பரிசேஷனம் செய்வது ஒரு சில சாரார் கடமையாக செய்து வருகின்றனர். அதற்கு விஞ்ஞான விளக்கங்கள் கண்டு பிடித்து, தங்களின் reasoning ability குறித்து பெருமை படுகின்றனர். பரிசேஷனம் என்பது "ஆபோஜனம், பிராணஹுத்தி, உத்தராபோஜனம்" என்று மூன்று பகுதியாக செய்யப்படுகிறது. மந்திரங்கள் பிராணன், அபானன், துவங்கி பிரம்மத்தில் முடித்து அர்பணிக்கபடுகிறது. உண்டு முடித்த பின்பு உத்தரபோஜனம் செய்து பரிசேஷனத்தை முடிக்கவேண்டும். (இப்படி யாரேனும் செய்கிறார்களா என்னும் கேள்விக்குறியே வேண்டாம். வைதீகம் செய்வோர்கள் சிலரைத் தவிர, வேதத்தில் நாட்டம் கொண்டுள்ள வெகு சிலரைத் தவிர மீதி யாரும் செய்வதில்லை. )

தோர்பிக்கரணம் என்னும் தோப்புக்கரணம் போடுவது முதற்கொண்டு, நமஸ்காரம் செய்வது வரை எல்லாவற்றிற்கும் விஞ்ஞான அடிப்படையும் இருந்தால் நம்மை நாமே "அறிவாளிகள்" என்று மெச்சிக் கொள்கிறோம். "நம்பிக்கை"யின் அடிப்படையில் செய்யப்பட வேண்டியவைகளுக்கும் விஞ்ஞான விளக்கங்கள் தேவைப்படுவதால், நம்பிக்கையே அடிப்பட்டுப்போகிறது.

No comments:

Post a Comment