September 30, 2010

திரையிசைப் பயணங்கள் - 5 (அழகான சந்தங்கள்-சந்திரபோஸ்)

உடல் நலக் குறைவால் பிரபல இசையமைப்பாளார் சந்திரபோஸ் இன்று காலை காலமானார். எண்பதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபோஸ் ஏறக்குறைய முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர்களின் தாயாரும் முன்னாள் பாடகியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எம்.எஸ்.வி அவர்களின் இசையில் "ஏண்டி முத்தம்மா" என்ற பாடலைப் பாடி திரையுலகிற்கு அறிமுகமானவர்.

சூரியனின் பிரகாசத்தில், பல உயிர்ப்புள்ள ஜொலிக்கும் நட்சத்திரங்களின் சுடரை சற்றே முயன்று தேடி கண்டுணர வேண்டியுள்ளது. "இளையராஜா" என்ற சூரியனின் பிரகாசத்தில் மறைந்து விடாமல் தன் தனித்தன்மையை ஜொலிக்கச் செய்த நட்சத்திரமாய் ஒளிர் விடுகிறது சந்திரபோஸ் அவர்களின் இசை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று "ரவிவர்மன் எழுதாத கலையோ" என்ற பாடல். நளினமான ஓவியம் மெல்ல எழுந்து நடப்பது போன்ற உணர்வைத் தட்டி எழுப்பியிருப்பார்.

சந்திரபோஸ் இசையில் பாரம்பர்ய வருடலுடன் துள்ளலும் உணர்வும் சேர்ந்து மிதக்கும். இளையராஜா அவர்களின் இசைக்கும் எம்.எஸ்.வி அவர்களின் இசைக்கும் இடையில் அமைந்த அற்புத இடைவெளிப்பாலமாக இவரது இசை அமைந்தது என்பது என் கருத்து. சந்திரபோஸ் இசையில் மனதில் நின்ற பாடல்களுக்கு நிச்சயமாக இந்த ஒரு பதிவு போதாது.

"நீலக்குயில்கள் ரெண்டு"
"இளஞ்சோலை பூத்ததோ"
"மாம்பூவே"
"வண்ணத்துபூச்சிக்கு வயசென்ன ஆச்சு"


ஆகிய பாடல்கள் என் நெஞ்சில் நிறைந்த பாடல்களில் சில என்றாலும் இவற்றையும் தாண்டி என் மனதில் முதலிடம் பிடித்த பாடலைத் தான் இன்று நான் இடப் போகிறேன். அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்" என்ற பாடலை "rare songs" பிரிவில் சேர்க்கலாம். மற்ற பாடல்கள் அளவு பேசப்படாத பாடல். கேட்டுப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.

http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.

படம்: அது அந்தக் காலம்
பாடல்: அழகான சந்தங்கள்
பாடியவர்கள்: கே.ஜெ.யேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை: சந்திரபோஸ்


த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
ஸ நி த நி த ப க ப நி த
அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது!!!
அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

த த நி த நி த த நி த நி த ப க
த த நி த நி த த நி த நி த ப ப
சுர மழையில் இவள் நனைந்து கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்

சங்கீதம் முதல் என்று யார் சொன்னது
சாஹித்யம் முதல் என்று நான் சொல்வது
எப்போது ஆகாயம் உண்டானது
அப்போது சங்கீதம் உருவானது
சங்கீதமோ உயிர் போன்றது
சாஹித்யமோ உடல் போன்றது
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
உடலோடு உயிர் சேரும் திருநாளிது.

நான் பாடும் சங்கீதம் சுகமானது
நதி பாடும் சங்கீதம் நயமானது
மண்ணோடு நீர் சேரும் புதுவானது
உன்னொடு நான் சேர முடிவானது
பூங்காக்களே வாருங்களேன்
பூமாலைகள் தாருங்களேன்
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
குயில் கூட்டம் பல்லாண்டு பாடுங்களேன்

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
சுர மழையில் நனைந்து ஒரு கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்

இவ்விசைக்கு மயங்கி நடனமாட வேண்டும் என்ற எண்ணம் நடனமாடத் தெரியா பாமரனுக்கும் வந்து விடும். இங்கு மயங்கி ஆடும் இருவரின் மயக்கம் இசையின் மயக்கமா, ஆடலின் மயக்கமா அல்லது காதலின் மயக்கமா? எல்லாம் கலந்ததொரு விருந்தின் மயக்கம்.

http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.

இந்த இசைப் பயணம் துவங்கியதிலிருந்து வரிசையாக முரளி அவர்கள், ஸ்வர்ணலதா அவர்கள், சந்திரபோஸ் அவர்கள் என்று அஞ்சலி பதிவுகளாய் பதிக்க நேரிடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சந்திரபோஸின் இசைக்கு என் வணக்கங்கள்.

September 28, 2010

எண்ணற்ற பொக்கிஷங்கள் (சோ-வின் எங்கே பிராமணனிலிருந்து தொகுக்கப்பட்டது )

காலகாலமாக நாம் போற்றி வரும் புராண இதிஹாசங்கள், வேத மந்திரங்கள், உபநிஷதுக்கள் இவற்றுள் நமக்கு தெரிந்தவை சில. தெரியாதவை கணக்கற்றவை. ரிக், யஜூர், அத்ர்வன, சாம வேதங்களாக இன்றைக்கு நான்கு வேத மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நம் மதம் வழங்கி வருகிறது. ஆனால் வேதமோ மொத்தம் நான்கு மட்டுமல்ல. கணக்கிலடங்காதவை. எண்ண எண்ண குறையாதவை. எத்தனை வேதங்கள் என்று கண்டுணர முடியாதவை. இறைவனைப் போல் முடிவற்றவை. சாமான்யனின் புரிதலுக்கும் புலனறிவுக்கும் அப்பாற்பட்டவை.

"அனந்தாவை வேதானாம்" என்று வேதமே குறிப்பிடுகிறது. இதில் நான்கே நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். வேதங்களை ரிஷிகள் உணர்ந்தனர். ஞானிகளால் "உணரப்பட்டவை", கற்றுக்கொடுக்கப்பட்டவை அல்ல. அதனாலேயே இம்மந்திரங்களை ஓதுவது மட்டுமே சிறந்தது - குரு மந்திரம் ஓதும் பொழுது அதனை கேட்டே தெளிவுற்று மாணாக்கன் ஓதினான். வேத மந்திரங்களை எழுதி கற்பித்தல் முறையாக கருதப்படவில்லை. ஒலி நீட்சி , i.e. குறில் நெடில் முதலியவை மிகுந்த கவனத்துடன் ஓதவேண்டும் என்பதால், தானாக எழுதி படித்தலை விட குருவின் மேற்பார்வையின் கீழ் ஓதுதலே சரியென உணர்ந்து அவ்வழியே பின்பற்றப்பட்டது. வேதங்களை சரிவர கற்றுணர கிட்டத்தட்ட பனிரெண்டு வருட காலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தற்காலத்தில் நாம் வேதமந்திரங்களை அல்லது வேதத்தின் ஒரு பகுதியான ருத்ரம் சமகம் முதிலிய மந்திரங்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து, வீட்டில் மந்திர ஓலியை நிரம்பச் செய்கிறோம். இது மிகவும் உன்னதமானது என்று கூறிவிட முடியாது என்கிறார் சோ. மந்திரங்களை சரியாக பயின்ற ஒருவர் நேரடியாக ஓதுவதே மிக்க நலன் விளைவிக்கக் கூடியது. மேலும் வேத மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில் மற்ற சப்தங்கள் ஒடுங்கி இருத்தல் சிறப்பு. காலத்திற்கேற்ப நாம் நம்மை மாற்றிக்கொண்டு விட்டாலும், இவ்வழக்கத்தை ஒப்புக்கொண்டு விட்டாலும், இவ்வழி பின்பற்றினால் பயனோ பலனோ முழுமை பெறுவதில்லை.


பரத்வாஜ மஹரிஷிக்கு ப்ரம்மன் முன்னூறு வருட கெடு கொடுத்து வேதம் முழுவதையும் அறிந்து வரச் சொல்கிறான். முன்னூறு வருடம் முடிந்த பின், இந்திரன் அவர் முன் தோன்ற, பரத்வாஜ முனிவரோ "இன்னும் நூறு வருடம் கொடுத்தாலும் அதை வேதத்தை உணரும் பொருட்டே செலவிடுவேன். தெரிந்து கொள்ள வேண்டியதோ மிக அதிகம்" என்கிறார். அங்குள்ள சில மலைகளை சுட்டிக்காண்பித்து அவற்றை வேதம் என்று உருவகப்படுத்தினால் 'நீங்கள் தெரிந்து கொண்டதோ இவ்வளவே' என்று ஒரு பிடி மண் அளந்து காட்டுகிறான். வேதத்தை முழுவதுமாய் தெரிந்து கொள்வது இயலாத காரியம். அவை முடிவற்றவை கணகற்றவை என்று இந்திரன் சொன்னது புராணக் கதை.

தொலைந்த பொக்கிஷங்கள் பலவற்றில் திவ்ய ப்ரந்தமும் ஒன்று. வெவ்வேறு ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்யப்ரபந்தம் முதலில் கிடைக்காமலே இருந்தது. நாதமுனிவர் என்பவரே, தொலைந்த பிரபந்தங்களை மக்களுக்கு சேர்பிக்க மனம் கொண்டு அவற்றில் சிலவற்றை தேடி நம்மிடம் கொணர்ந்தார். அவையே நாலாயிரம் திவ்யப்ரபந்தமாக வழங்கப்படுகிறது. தமிழில் ஆழ்வார்கள் பலர் தமக்கு தெரிந்த வேதத்தை முன்னிறுத்தி அதனையொட்டி பாடல்கள் புனைந்துள்ளனர். நம்மாழ்வாரின் பல பாடல்கள் வேதங்களின் சாராம்சத்தை விளக்குகிறது. அவர் எழுதிய திருவாய்மொழியை ஆதாரமாக வைத்தே இராமானுஜர் வைணவ விளக்கங்களையும் நியதிகளை வகுத்ததாக அபிப்ராயப்படுகின்றனர்.

September 26, 2010

சில நேரங்களில், சில ஆசிரியர்கள்! ( பகுதி 3 - ஆசிரியர்கள்)

பள்ளிக்குச் சற்றே தள்ளி, அடுத்த தெருவில் இரண்டு கார் ஷெட் உண்டு. அங்கு தான் எங்களுக்கு இரண்டாம் வகுப்பு. (இரண்டாம் வகுப்பு ஏ செக்ஷன், மற்றும் பி செக்ஷன்). அதை அடுத்து உடனேயே மணல் நிரப்பிய விளையாட்டுத் திடல். முக்கால்வாசி நேரம், ரன்னிங் அண்ட் காட்சிங், இல்லாவிட்டால் லாக் அண்ட் கீ விளையாடுவோம். பொட்டல் கிரௌண்டின் பக்கத்தில் வகுப்பு என்பதால் வெயிலாய் இருக்கும். எங்களுக்கு வகுப்பெடுத்த மிஸ்ஸின் பெயர் 'சாரதா' மிஸ். வகுப்பில் நான் வழக்கம் போல் கடைசி பென்ச்சில் தான் உட்கார்ந்திருப்பேன். பாதி நேரம், க்ரவுண்டை வேடிக்கை பார்ப்பதும் பிடித்த விஷயம். சாப்பாடு கொண்டு வரும் ஆயாக்கள், பிள்ளைகளுக்கு உணவூட்ட வரும் அம்மா, என்று பலரும் பன்னிரெண்டு மணி அளவில் கிரவுண்டில் குழுமி விடுவார்கள்.

ஆங்கில வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் சாரதா மிஸ்.


"Can I marry u mary" asked john

"No john, you can marry me when I am 20 and you are 25"


இதற்கு அழகாய் தமிழில் விளக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பிற்கு சாரதா மிஸ் தான் வகுப்பாசிரியை. முக்கால் வாசி ஆசிரியைகள், ஆங்கிலம், தமிழ், கணக்கு என பல வகுப்பும் எடுப்பார்கள். விளக்கம் கொடுக்கும் பொழுது, பக்கத்து செக்ஷன் மிஸ் வந்து விட்டதால், சற்றே பாடத்தை நிறுத்தி, தங்களுக்குள் ஏதோ பாடம் எடுக்கும் அந்த வாக்கியத்தைப் பற்றி தமிழில் கூறி சிரித்துக் கொண்டனர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், marry என்ற வார்த்தை மட்டும், ஏதோ கெட்ட வார்த்தை என்று புரிந்தது போல் இருந்ததால், ஒருவரை ஒருவர் பார்த்து, ரகசியமாய் புன்னகைத்துக் கொண்டோம்.

என் அம்மா அப்பொழுதெல்லாம் தனி வித சிகையலங்காரம் செய்து விடுவார்கள். அதன் பொருட்டு 'லண்டன் லேடி' என்று என்னை பல ஆசிரியைகள் கூப்பிடக் காரணமாய் இருந்தது சாரதா மிஸ் தான். சாராதா மிஸ்ஸுக்கு என் மேல் தனி பிரியமா இல்லையா என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் என்னைத் திட்டியதில்லை. 'என்ன லண்டன் லேடி எதுக்கு சிரிக்கற' என்று கேள்வி எழுப்ப, எக்குத் தப்பாய் மாட்டிக் கொண்டு நான் முழித்தேன்.

'இல்லை மிஸ் சும்மா தான்.. சாரி'

அன்று நல்ல மனநிலையில் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தார்.

'சரி இதனால எல்லாருக்கும் என்ன தெரியுது? யாரானும் கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா 20 பொண்ணுக்கும் 25 ஆணுக்கும் இருந்தால் தான் செஞ்சுக்க முடியும்' என்று சொல்லி சிரித்தார். (ஏன் சிரித்தார் என்று அப்பொழுது விளங்க வில்லை!)

குறைந்தது பத்து அல்லது பன்னிரெண்டு வயது வரை, ஐந்து வருட இடைவெளி இருக்கும் ஆணை மட்டுமே ஒரு பெண் திருமணம் செய்ய வேண்டும் என்று தீவிரமாய் நம்பிக்கொண்டிருந்தேன்!



சாரதா மிஸ்ஸுக்கு ஒரு (கெட்ட?!) பழக்கம் உண்டு. எந்த மாணவனோ மாணவியோ 'தெரிலை மிஸ்' என்று சொன்னால், வெகு நக்கலாய் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவார்கள். மிச்ச மாணவ மாணவியரின் முன் அவமானப்படுத்தவும் செய்வார்கள்.இதனால்யே சாரதா மிஸ் என்றால் ஏனோ எனக்கு அவரால் விளைந்த ஒரு கசப்பான அனுபவம் தான் நினைவில் வரும்.

எங்கள் வகுப்பில் விஷால் என்று ஒரு மாணவன் இருந்தான். படிப்பில் சற்றே சுமாரான மாணவன். இதைத் தவிர அவனிடம் தவிர்க்க முடியாத விஷயம் இன்னொன்று இருந்தது. அப்பாவியாய், அசமஞ்சமாய் முகம் வைத்திருக்கும் இவன் தன் அரை டிராயரிலேயே மலம் கழித்து விடுவான். சில நாட்களில் அல்லது பல நாட்களிலும் சாரதா மிஸ் ரொம்ப அமைதியாய் அதை அணுகியிருக்கலாம். அணுகியிருப்பார்கள். நினைவில்லை.

ஒரு மதிய வேளை விஷால் மலம் கழித்திருந்தான். அவனது கை, கால்கள், சட்டை, ட்ரவுசர், பெஞ்ச் என எல்லாவற்றிலும் கறையாகி ஆகி விட, ரொம்ப எரிச்சலடைந்தார். சொல்லி களைத்துவிட்டதாலோ என்னவோ அல்லது வேறேதோ எரிச்சலின் பிரதிபலிப்பாக இருக்கலாம், அன்றைக்கு அவனை அத்தனை மாணவர்களின் முன்னிலையில் வெகுவாய் அவமானப்படுத்திவிட்டார். வகுப்பில் துர்நாற்றம் மிகுந்திருந்தாலும், சக மாணவன் என்ற முறையில், டீச்சரிடம் திட்டு வாங்குகிறானே என்ற பரிதாபத்தில் யாருமே அவனை கிண்டல் செய்யவில்லை. நாங்கள் அப்படி இருக்க, அவர் வெகுவாக கிண்டல் செய்து, மிகவும் அவமானப் படுத்திவிட்டார்.

பெயர் பெயராய் எங்களை அழைத்து, ' நீ உள்ளாடையில் மலம் கழிப்பாயா' என்று கேட்க, பலரும் அமைதியாய் இருந்தோம். ஆனாலும் வற்புறுத்தி எங்களை 'இல்லை மிஸ்' என்று கூறவைத்தார். அவன் முகம் வெகுவாய் சிறுத்துப் போனது.

சிரித்த முகத்துடன், நளினமாய் இருக்கும் சாரதா மிஸ் ஏன் அன்று அவ்வாறு அவனை சிறுமைப் படுத்தினார் என்று இன்னும் விளங்கவில்லை. பல வருடங்கள் பள்ளியில் இருந்த பொழுதும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, சாரதா மிஸ்ஸை எப்பொழுதேனும் தெருவில் பார்க்க நேரிடும். அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் விஷாலின் சிறுத்துப்போன அழுத முகமே நினைவிலாடும்.

அதன் பின் அவர்களின் அன்புக்குறிய மாணவியாக ஆக இருக்க எனக்கு மனம் வரவில்லை.

சில நேரங்களில், சில ஆசிரியர்கள்!

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)

September 25, 2010

இரந்துண்டு வாழ்தல் - (சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து)


"ஏற்பது இகழ்ச்சி" என்கிறார் அவ்வை. இரந்துண்டு வாழ்தல் என்பது இகழ்ச்சியாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரின் மரண பயத்தையும் மிஞ்சி நிற்கிறது பிறரிடம் நாம் கடன் பட்டு விடுவோமோ, அவர்கள் தயவை எதிர்பார்த்து வாழ நேரிடுமோ என்ற பயம். அதற்காகத் தானே பணமும் சேமிப்பும்!

"இறைவனே உன்னிடம் மாறாத பக்தி, பிறரிடம் கை ஏந்தாத வாழ்வு, அனாயாசமான (எளிதான) மரணம்" இவற்றைத் தவிர வேறேன்ன வேண்டும்!

அனாயாசேன மரணம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வை பக்திம் அசஞ்சலாம்


இரந்து வாழும் நிலையல்லவா பிரம்மச்சரியத்தின் கடமை. பிக்ஷை பெறுதல் என்பதே இங்கு எப்படி மேன்மையாக்கப்படுகிறது? என்றால்...

பிட்சை உண்டு வாழ்தல் பிரம்மச்சரியத்தின் கடமை. அவன் தன் கடமையை கர்மயோகியாகச் செய்யும் பொழுது அது உயர்வுக்கே வழிவகுக்கும். உஞ்சவ்ருத்தியும் பிட்சையும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசப்பட்டவை. உஞ்சவிருத்தி பிரம்மாச்சாரியின் கடமை இல்லை. அது பிராமணனின் கடமை. போர் அடிக்கும் இடத்திலோ அங்கு இல்லாத பொழுது கடை வீதியில் சிதறிக்கிடைக்கும் நெல்லை எடுத்து உண்பதே உஞ்சவ்ருத்தி. உஞ்சவிருத்தி செய்பவர்கள் வேறு எவரிடமும் உணவை வாங்கிக்கொள்ளுதல் கூடாது.

தானம் வாங்கலாம். முந்தைய காலத்தில் மூதாதையர்களுக்குறிய கடனை / காரியத்தை செய்யும் பொழுது அங்கே பிராமணன் ஒருவனுக்கு தானம் கொடுப்பது வழக்கம். தானம் எப்படி வாங்க வேண்டும் கொடுக்க வேண்டும் என்பது சாஸ்திரப்படி தெரிந்து கொண்டு வாங்கிக்கொள்ளுதல் நலம். உதாரணத்திற்கு பசு தானம் வாங்கினால் லக்ஷம் முறை காயத்ரி மந்திரம் சொன்னால் வாங்கியவனின் சுமை குறையும். தானம் பெறுபவனின் தலையில் மிகப்பெரிய சுமை இறக்கி வைக்கப்படும். தானம் கொடுப்பவனின் பாதி பாபங்களும் வாங்குபவனுக்கு போய் சேரும். இதெல்லாம் தான மனப்பான்மையோடு செய்யப்படும் உண்மையான தானத்திற்கு பொருந்தும். தானம் என்பது பிச்சையிடுவதல்ல, தானம் என்பது அன்பளிப்பு அல்ல.

தானம் கொடுப்பதற்கு பரந்த மனசு முக்கியம். பணம் இருப்பதோ இல்லாததோ இங்கு பொருட்டு அல்ல. உன்னிடம் என்ன இருக்கிறதோ அதை கொடு. தானம் கொடுக்கும் பாவத்துடன் கொடு. தானம் கொடுக்கும் பொழுது

* சிரத்தையுடன் கொடுக்கவேண்டும்
* பயத்துடன் கொடுக்கவேண்டும் (பவ்யம் /அடக்கம் என்று கொள்ளலாம்)
* வெட்கத்துடன் கொடுக்க வேண்டும் ('இது என்ன பெரிய தானம்' என்ற கூச்சம் நிரம்பியிருக்க வேண்டும்)
* சந்தோஷத்திடனும் முகமலர்ச்சியுடனும் கொடுக்க வேண்டும்.
* தானம் கொடுப்பதன் அருமை பெருமைகளை அறிந்து கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தானத்தை ஏற்பவனுக்கு நிச்சயம் அதன் சுமை கூடும். அப்போது அவன் தானம் ஏற்றதற்கு பரிஹாரம் செய்து கொள்ளுதல் நலம். தானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் பலரும் அறிந்ததே. கீரிப்பிள்ளை பிராமணன் ஒருவனை தானத்தை உயர்வாகப் பேசிய கதை நமக்குத் தெரியும். அதுவே சிறந்த தானத்திற்கு உதாரணம். எது இருக்கிறதோ அதையும் இழக்க மனம் துணிந்தால் அதுவே தானம்.

ரந்திதேவன் என்ற ஒரு அரசன். அவன் நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அரசனும் மக்களுக்காக வருந்தி உணவருந்தாமல் இருந்தான். மக்கள் மனம் வருந்தி, அரசனே மக்களை வழிகாட்ட வேண்டியவன், அவன் உண்ணாவிட்டால் எப்படி சாத்தியப்படும் என்று எடுத்துக்கூறி அவனை உணவருந்தச் செய்தனர். மிகுந்த வற்புறுத்தலின் பேரில் அவன் முதல் கவளம் உண்ணும் போது வேறொருவன் பசி பொருக்காது பிச்சை கேட்கிறான். அரசனும் சிறிது உணவை தானம் வழங்குகிறார். திரும்பவும் உண்ண முற்படுகிறான் இப்பொழுது பசி பிச்சை கேட்டு இன்னொருவன். இப்படியே அனைத்து உணவையும் தானம் வழங்கிவிட்டு பசிக்கு கொஞ்சமேனும் நீர் அருந்த நினைக்கிறான். அதையும் ஒருவன் இரந்து கேட்க, நீரையும் தானம் வழங்கி விடுகிறான். அதன் பின் இறைவன் கருணை உள்ளம் கொண்டு அவனையும் அவன் நாட்டு மக்களையும் அருள்வதாக புராணக் கதை கூறுகிறது. இறை தரிசனம் பெற்ற அவன் "அஷ்ட சித்திகள் வேண்டேன், பிறவா வரம் வேண்டேன், உலகில் உள்ள துன்பம் அனைத்தும் எனக்கே வந்து சேரட்டும்" என்று கேட்டுக்கொள்கிறானாம். அப்பேர்பட்ட கருணை உள்ளம் கொண்டவன்!

"நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் - இன்னும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்"


(ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா)

September 21, 2010

குங்குமச் சிமிழில் வெளிவந்துள்ள பதிவர் ஷைலஜாவின் நாவல்

"குங்குமச் சிமிழ்" பத்திரிகையில் வெளி வந்துள்ள நாவல்


மலர் போல மனம் வேண்டும்


ஆசிரியர்- ஷைலஜா


வாழ்த்துக்கள் ஷைலஜா. இன்னுமொரு நாவல் உங்கள் கைவண்ணத்தில்.


நாவலை வாசித்தவுடன், கலகலப்பாக ஒரு பதிவு போட வெண்டும் என்று தான் முதலில் நினைத்தேன். கதை இறுதி கட்டத்தில் மளமளவென கனத்து விட்டது. அதன் பின் கலகலப்பாக பதிவிட மனம் இடம்கொடுக்கவில்லை.


"மலர் போல் மலர்கின்ற மனம்" என்றால் 'அன்றலர்ந்த தாமரைப் போல்' என்ற வாக்கியம் எண்ணத்தில் உதிப்பது சகஜம். துன்பத்திலும் துவளாது மலர்கின்ற மனம். அப்படி பட்ட மனம் தான் கதாநாயகிக்கு என்று நினைத்தால், கதாநாயகியை தூக்கி சாப்பிட்டு விட்டு மலர் போல் மலர்ந்து மணம் பரப்புவது வேறு சில கதாபாத்திரங்கள்.


மகளிரை மைய்யமாக வைத்து கதை எழுதியிருக்கிறார்கள். துவண்டு விடாத எண்ணமும், தைரியமும் பெற்ற துணிந்த பெண்களின் கதை. கதையின் மையப் பாத்திரத்துக்கு அமைதியாய் துணை நிற்கும் வேறு பாத்திரங்களின் துணிவு எனக்கு இன்னும் பிடித்திருந்தது.


பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை -நிதர்சனமான உண்மை. வீழ்ச்சியடைந்தவர்களின் கண்ணீர் கதைகள் ஏராளம். குறிப்பாக பங்குச் சந்தையின் சரிவின் போதும், நிதி நிறுவனங்களின் சக்கரவீழ்ச்சியில் பாதிக்கப் பட்ட பல நிறுவனங்கள் சரிந்து அதள பாதாளம் சென்றது. பணவீழ்ச்சியில் பாதிக்கப்பட்டு நின்று போகும் திருமணம் "படிக்காத மேதை" சாயலில் இருந்தது.

மசாலாப் பொடிக்கு பெயர் பொருத்தம் பரவாயில்லை, இருந்தாலும் வாஷிங் சோப்புக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா? பெண்ணின் மேல் கொணட பாசத்தால் அவளே அதிர்ஷ்ட தேவதையாக பிறப்பெடுக்கிறாள். அதனாலேயே சோப்பு என்ன, தொழில்நுட்ப பொருட்களின் தயாரிப்பில் இறங்கியிருந்தால் கூட பெண்ணின் பெயரிலேயே தயாரித்திருப்பார்கள்.

ஆசிரியருக்கு எந்தெந்த நடிகர்கள் நடிகைகளையெல்லாம் பிடிக்கும் என்று நாவலைப் படித்து தெரிந்து கொள்ளலாம். கதையில் வலம் வரும் ஏறக்குறைய நிறைய கதாபாத்திரங்கள் நடிக நடிகையர் சாயலில் இருக்கிறார்கள். கதை படமாக்கப்பட்டால் உதவும் என்பதாலா? கதையில் இன்னும் வியாபார நுணுக்கங்களும், சில "டெக்னிகல்" விஷயங்களையும் ஊடே புகுத்தி கனம் சேர்த்திருக்கலாம். தெளிவாக நிதானமாக சென்று கொண்டிருந்த கதையோட்டம் திடீரென அடம் பிடித்து ஆபார வேகத்துடன் திரும்புகிறது. அதே வேகத்தின் முடிந்தும் விடுகிறது.


எல்லாரும் கொல்-னு சிரிக்க, கெட்டி மேளம் முழங்க, ஹீரோயின் வெக்கப்பட ஹீரோ அவள் காதில் காதல் வார்த்தைகள் கிசுகிசுக்க இப்படி முடிச்சாத் தான் கதையில் திருப்தி. நிஜத்தில் அப்படி முடிக்காத சில கதைகள் தான் இன்னும் ஆழமாக பதிகிறது. கதையின் பலமே எதிர்பாராத தருணத்தில் திரையை மூடி, அதே நேரத்தில் நம்பிக்கைக்கும் ஊறு விளைவிக்காமல் வணக்கம் கூறி முடித்திருப்பது தான்.


துன்பத்திலும் துவளாத மனம், பத்து அடி சறுக்கினாலும் இரண்டடி மேலே வைக்கும் திடம், இவை மூலதனமாக கொண்டு பலர் முன்னேறியுள்ளனர். இன்றும் பல பெண்கள் தங்கள் திறமைகளை முடக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பது உண்மை. இப்படிப்பட்ட கதைகள் சாதனை படைக்கத் துடிக்கும் பெண்களுக்கு உற்சாகமும், நம்பிக்கையும் ஊட்டுகிறது. சாதனைப் பெண்களைப் பற்றி தகவல் சேகரித்து நமக்கு தொடராய் தந்துள்ள சாதனைப் பெண் ஷைலஜா அந்த தாக்கத்திலிருந்து மீள்வதற்கு முன் அவற்றையெல்லாம் ஒரு குமிழில் (சிமிழில்) நிரப்பி நமக்கு இந்த நாவலை தந்துள்ளார்.

குங்குமச் சிமிழ் புத்தகத்தில் தனது நாவல் வந்திருப்பதாக சொன்னது முதல் நானும் வாங்கி விட நினைத்திருந்தேன். "இவளெல்லாம் எங்க வாங்கி படிக்க பொறா" என்று நம்பிகை இழந்துவிட்டதாலோ என்னவோ, நாவல் மென்நூல் வடிவில் வரப் பெற்றிருப்பதையொட்டி "என் நாவலைப் படிச்சுட்டு சொல்லு" என்று அன்பான மடல் காலையில் வந்திருந்தது. எழுத்துலகில் தனக்கென பெயர் நாட்டிய பிறகும் ஷைலஜாவின் மாறாத நல்ல மனமும் பிள்ளை குணமும் தான் தலைப்பிற்கும் காரணம் போலும்.

நன்றி.

September 20, 2010

சத் சங்கம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2லிருந்து தொகுக்கப்பட்டது)

ஒவ்வொரு சிந்தனையுமே அலைளை எழுப்ப வல்லது. சிந்தனை மட்டுமன்றி செயல், வார்த்தைகள் என அனைத்திற்கும் அலைவடிவம் உண்டு. அது சுற்றுப்புறத்தை பாதிக்கின்றது.

ஆதிஷங்கரர் மண்டல மிஸ்ரரைத் தேடி வருகிறார். மண்டல மிஸ்ரர் சிறந்த கர்ம யோகி. அவர் வீட்டிற்கு வழிகேட்டு வரும் ஆதிஷங்கரரை "எந்த வீட்டில் கிளிகள் "ஸ்வதப்ரமாணம் பரத ப்ரமாணம்" பொன்ற விஷயங்களை அலசுகின்றதோ அதுவே அவர் வீடு என்று காண்க" என்று வழிகாட்டுகின்றனர் மக்கள்.

{ ஸ்வதப்ராமணம் என்றால் அதுவே தன்னை சுயமாக விளக்கிக்கொள்வது (it is self explanatory) பரதப்ரமாணம் என்றால் வேறொரு வஸ்து அதனை விளக்குவது (needs another object to throw light ) (இதனைப் பற்றி இன்னும் விளக்கம் தெரிந்தவர்கள் விளாக்கலாம் அல்லது வலைப்பதிவு சுட்டி இருந்தால் இடலாம். நன்றி) }

அதாவது அங்குள்ள கிளிகள் கூட மேதாவிலாசத்துடன் விளங்குகிறது. பெரிய தத்துவங்களை ஆராய்கிறது. ஏனென்றால், அங்கு பேசப்படும் பேச்சும், எண்ண ஒலி அலைகளும் உயர்வான விஷயத்தை ஊக்குவிப்பதாய் அமைகிறது. இதன் காரணத்தை யொட்டியே நல்லதை கேட்டு பேசி செய்ய வேண்டும் என்று வேண்டப்படுகிறது. வீட்டில் தொலைககாட்சி பார்க்கலாம். அதே நேரத்தை வேறு விதமாக பயன்படுத்தி நல்லவற்றை பேசி படிப்பது உத்தமம். உபன்யாசம் கேட்பது சிறந்தது. அங்கு சொல்லப்படும் கதை நம் மனதில் சாதகமான அலைகளை எழுப்பவல்லது. தற்கால மனிதனின் குணநிலைக்கேற்ப பாகவதர்களும் கற்பனையை, ஸ்லோகங்களை, சாஹித்தியத்தை, பாடல்களை ஊடே சேர்த்து சுவையாக உபன்யாசம் செய்கின்றனர். நடுநடுவே ஆங்கிலம் கலந்து ஜனரஞ்சகம் ஆக்கப்படுகிறது. கலை இன்னும் அழியப்படாமல் நிறைய இடங்களில் தற்காலத்திற்கேற்ப ஒப்பனையுடன் தொடரப்பட்டுதான் வருகிறாது. ஆனாலும் இன்று நமக்கெல்லாம் இவற்றை கேட்பதற்கு நேரம் ஒழிவதில்லை. ஒதுக்குவதில்லை. சொற்பொழிவின் ஊடே சில நேரங்களில் நம் சந்தேகங்களுக்கோ அல்லது பிரச்சனைகளுக்கோ கூட தீர்வு கிடைக்கலாம்.

இது போன்ற கலைகளை அழியவிடாமல் வளரவிட வேண்டும். என்னைப் பொருத்த வரை கோவில்களில் கூட உபன்யாசங்கள் குறைந்து வருவதாக நினைக்கிறேன். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில், தொலைக்காட்சியில் காலை / மாலை வேளைகளில் சில சானல்கள் உபயாச சொற்பொழிவுகளை ஒளிபரப்புகின்றனர். ஆன்மீகம் / பஜனை / சமய வழிபாடுகள் இவற்றை மட்டுமே ஒளிபரப்பும் சானல்களும் உண்டு. அவ்வப்பொழுது கண்டு கேட்டு பயன் பெறலாம்.

ஸ்த் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி

September 17, 2010

கிரஹணம் முதல் கிரகம் வரை (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)


சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே கோட்டில் நின்றால் அது கிரஹணம். நம் ஜாதகத்தில் நவ கிரஹங்களும் சாயா கிரஹங்களான ராகு கேது உட்பட ஒன்பதும் கிரஹ நிலைகள், athan வீர்யம், வீழ்ச்சி, உச்சம், பார்வை என பலவும் கணிக்கப்பட்டிருக்கும்.

அண்டவெளியில் என்னவெல்லாம் நிகழ்கிறதோ அது ஜீவராசிக்குள்ளும் நிகழும் என்று கூறுவதுண்டு. இதன் அடிப்படையிலேயே நம் ஜோசிய ஜாதக கணிப்புகள் அமைந்துள்ளன. எங்கோ எதிலோ அண்டத்தில் நிகழும் நிகழ்வுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்றால், அங்கு பெரிய (macro) அளவில் நிகழும் அனைத்தும் ஒவ்வொறு சிறு ஜீவராசியின் உள்ளும் சிறு அளவில் நிகழ்கிறது என்கின்றனர். "பிண்டத்துள் அண்டம்" என்பதே ஆன்மீக தத்துவமும். வேளியே வெளி ஆராய்ச்சியில் இறங்கி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பும், தன்னுள் இறங்கி ஆராயும் ஞானமும் எங்கோ எப்படியோ பின்னிப்பிணைவதே இறைத் தத்துவதின் ஆணிவேர்.

அப்படி இருக்கையில், கிரஹண நிகழ்வுகள் நம்முள்ளும் சிறிய அல்லது பெரிய மாற்றத்தை தற்காலிகமாக உண்டுபண்ணலாம். (அல்லது பண்ணாமலும் போகலாம்). கிரஹண நேரங்களில் இறைவனை தியானித்தலே சிறப்பு. மற்றபடி கிரஹண நேரத்தில் பிள்ளை பிறந்தால் அது குற்றம் ஆகாது. கிரஹண நேரத்தில் இன்புற்று இருந்து கர்பம் தரித்தால் அப்படிப்பட்ட சிசுவிற்கு தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி கர்மவினை கடுமையாக இருந்தால் ஜோதிடமும் ஜாதகமும் அதை சுட்டிக்காட்ட வல்லவை. எப்பேர்பட்ட பரிகாரமும் அதனை தடுக்க முடியாமற் போகலாம்.

கணித மேதை பாஸ்கராச்சார்யாரின் வாழ்வில் நடந்ததே இதற்கு சான்று. அவரின் பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை அறிந்து, அதனை தடுக்கும் பொருட்டு, பல ஆராய்ச்சிக்கு பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் நிகழ திட்டமிட்டிருந்தார். அக்கணத்தில் திருமணம் நிகழ்ந்தால் மாங்கல்யம் பலம் பெறும் என்று கணித்து அதன் படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று திருமணமும் குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. ஆனாலும் லீலாவதியின் கணவன் இறந்து விடுகிறான். எங்கேயோ தவறு நேர்ந்திவிட்டிருக்கிறது புரிந்தது. கடிகா / கடிகை என்பது அக்காலத்தில் நேரம் கணிக்க உதவிய கருவி. அதன் அருகில் எட்டிப்பார்த்து விளையாடிக் கொண்டிருந்த லீலாவதியின் மூக்குத்தி கடிகையினுள் விழுந்து விட கடிகையின் நேர கணிப்பு குழம்பி, தவறாகி விடுகிறது. மனித முயற்சிக்கு மேற்பட்ட கர்மவினை தான் இறுதியில் வாழ்வை வழிநடத்திச் செல்கிறது!

நம் வினையே நம்மை ஆட்டுவிக்கிறது. நம் வினையை நம் ஜாதகத்திலும், துணைவன் / துணைவியின் ஜாதகமும் மேலும் நமக்கு பிறந்த குழந்தைகளின் ஜாதகமும் சுட்டிக்காட்ட வல்லவை. பிறந்த குழந்தை நம் வினையை சுட்டிக்காட்டுகிறது. அல்லது நம் வினைக்கேற்ப சிசு பிறக்கின்றது. அது பிறந்த வேளையால் நாம் உயர்வதும் தாழ்வதும் இல்லை. அதனால் யாரையும் இராசி இல்லாதவர்கள் என்றோ அல்லது மிகுந்த ராசிக்காரர்கள் என்றோ அபிப்ராயப் படுவது அறிவீனம். அவரவர்களின் உயர்வும் தாழ்வும் அவரவரின் கர்மாவைப் பொருத்தே அமைகிறது. வினைப்பயனை வெல்லக்கூடியது பிரார்த்தனையும் இறைவன் அருளும் மட்டுமே. வினை கடுமையாக இருந்தால், மகத்தான பிரார்த்தனையும், அருளும் வேதனையை மட்டுப்படுத்த செய்யலாமேயன்றி அகற்றுவது மிகவும் கடினம். கடும் வினையின் காரணமாக பிரார்த்தனை செய்யும் மனநிலையும் இயல்பும் கூட இல்லாமல் போகலாம்.

September 15, 2010

(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 5) மௌனத்தின் அலறல்



உதடுகள் உயிறற்று உலர்ந்திருந்தாலும்
உயிரோசையில் ஓய்வற்ற அனத்தல்
பழையது புதியது
பத்து வருடத்து முந்தைய தூசு
சின்ன வயது பல்லாங்குழி
வயது வந்ததும் வந்த ஈர்ப்பு்
முற்றிலும் மெய் மறந்த முதல் காதல்
இதுவும் அதுவும்
இன்னும் சிலவும்
நினைவு கிடங்கில்
கூச்சலிடும் சப்தங்கள்
விரதங்களைக் கீறிவரும் ஓசைகள்
உள்ளொன்று வைத்து புறமொன்று
போர்த்தியிருக்கும் பொய் முகத்துடன்
ஓயாமல் ஒலிப்பதால்
மௌனம்
அர்த்தமற்றது

September 14, 2010

திரையிசைப் பயணங்கள் - 4 (ஆசையே அலை போலே)

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்


பாடலைக் கேட்க சுட்டுக:

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/aasaialai.rm

ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சில வரிகளின் ஆழம் புதிய பரிமாணத்துடன் மிளிரும். எல்லா சூழ்நிலைக்கும் சரியான வரிகளாக அமையும். மனித வாழ்வின் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் மூன்றே மூன்று ஆசைகள்தாம் என ஞானிகள் முதல் சாமான்யர் வரை பலரும் கண்டுள்ளனர். அவற்றை மூன்றே மூன்று தொகுப்பிற்குள் அடக்கி விடலாம். எப்பேர்பட்ட ஆசையாக இருந்தாலும் இம்மூன்றில் அடங்கி விடும்.
மண்/ஆளுமையின் ஆசை
பெண்/ஆண் ஆசை
பொன்/பொருளின் ஆசை

இவைகளுள் அடங்கும். இந்த ஆசைகளே இரண்டு விதமாக செயல்படும் திறமையுடையது. இவையே இன்பத்தையும் தரவல்லது துன்பத்தையும் வரவழைப்பது. இவற்றால் கட்டுண்டு நம் மனமும் எப்படி எல்லாம் ! அலை போல் மேலும் கீழும் நம்மை ஆட்டுவிக்கிறதல்லவா இந்த ஆசைகள்!

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே


இந்த உண்மையைக் கண்டாலும் கேட்டாலும் உணர்ந்தாலும் கூட பருவம் பொல்லாதது. அங்கு காதல் கொண்ட ஆணின் மனமும் பெண்ணின் மனமும் ஆசையின் பூர்த்தியால் களிக்கிறது. ஆசையை நிறைவேற்றிக் கொண்ட ஓடம் போன்ற மனமும் உச்சத்தில் ஆடி வெல்லமாய், வெள்ளமாய் களிக்கிறது.

பருவம் என்னும் காற்றிலே ..பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்...
சுகம் பெறுவார்...
அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்


நேற்றைக்கு சுகம் பெற்று இன்று பாதை மாறினாலும் சுகத்தின் சுவையும் நினைவும் கூட மனிதனை வாழ வைத்து விடுவது. வாழ்கை முதுமையின் போர்வையில் நுழைந்து ஆசுவாசப் படுத்தி, துயில் கொள்ள எத்தனிக்கும் முன், அனைத்து சுகமும், துக்கமும், ஆசையலையின் உச்சமும், போராட்டமும் நினைவில் வந்து போகும். வாழ்கை தீர்ந்ததாக நினைக்கும் சாமான்ய மனிதனும் நேற்றைய "வடிவங்களை" நிகழ்வுகளை எண்ணத்திலேற்றி அதில் இன்பம் கொள்கிறான். அப்படி கொள்ளும் இன்பத்தில் சுகமா? அல்லது இளமைக் காலங்களின் அதிசய உலகம் சுகமா? சில நேரங்களில் நிஜத்தை விட அசை போடும் நினைவு சுகம் தரும் போலும்.

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்...
இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்

அலையுச்சத்தில் மகிழ்வது மட்டுமா வாழ்வு? ஓடம் துக்கம் எனும் சூறைக்காற்று மோதினால் துவண்டு பலமிழந்து விடுகிறது. மிகுந்த சிரமத்துடன் படகை மெல் செலுத்த வேண்டியுள்ளது. மனித மனத்தின் சுகமும் துக்கமுமே வாழ்கையை முன்னேற்றுவதும் அல்லது தேங்கச் செய்வதுமான வல்லமை படைத்தது.

வரவு என்று இருந்தால் செலவு இருக்கத்தானே செய்யும். உலகமே இரட்டைத் தன்மையுடையது. நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய வரிகளைக் கவிஞர் பாடியுள்ளார். சுகத்தை வரவு என்று சொல்லவில்லை. சுகம் தான் செலவாம். துக்கம் நமக்கு வரவு. நாம் எக்கடமையை முடிக்க பூமியில் பிறப்பெடுத்துள்ளோம் என்று அறியோம். நாளை நடப்பதும், காலம் வகுத்த கணக்கும் தெரியாது. ஆனால் துக்கம் தரும் பாடமும், படிப்பினையும் நமக்கு வரவு. ஏனெனில் துக்கம் நம்மை செம்மை படுத்தும். சுகம் சேமிப்பில் வைத்த புண்ணிய கணக்கை செலவிடுவதாகிறது. துக்கம் நம்மை மேன்மை படுத்தி செப்பனிடுவதால் 'வரவு' என்று வரவேற்கிறார் கவிஞர். எத்தகைய தெளிவுள்ள மனிதனுக்கு இப்படிப் பட்ட சிந்தனை பிறக்கும்? வெகு சொற்பம்.

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்


"இருப்பதே கனவு" - ப்ரபஞ்சமே நிலையாமை தத்துவத்தில் மாறிக்கொண்டே இருப்பதால், இன்று இருப்பதும், நாளை இருப்பதும் நிலையில்லை. இந்த வாழ்வை செம்மையாக வாழ்ந்து உயர்நிலை அடைந்தால் இந்த வாழ்வு இங்கு வாழ்ந்ததும், இங்கு கண்ட காட்சியும், நிகழ்வும் கூட ஒரு கனவு தானே?!

இப்பாடலை கவிஞர் ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக காத்திருந்த போது சிகரெட் பாக்கெட்டில் எழுதினாராம். திருச்சி லோகநாதனின் குரலும் கே.வி மஹாதேவன் இசையும் அர்த்தம் நிறைந்த தத்துவமும் மோனத்திற்கே இட்டுச் செல்கிறது.


September 13, 2010

பிரதோஷம் ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து தொகுக்கப்பட்டது)

பிரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியம் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் பிரதோஷ நேரம்.

சகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை

தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் பிரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.

பிரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். பிரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.

நித்திய ப்ரதோஷம்: என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.

பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச(வளர்பிறை) சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ (தேய்பிறை) திரயோதசியில் பிரதோஷம் அனுஷ்திப்பது

மஹா பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ திரயோதசி சனிக்கிழமை அன்று வந்தால் அன்று மஹா பிரதோஷம்

பிரளய பிரதோஷம்: மஹா பிரளய காலத்தில் அண்டசராசங்களும் அழிந்து அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும் நேரம், பிரளய பிரதோஷம்.

பிரதோஷத்தின்போது அப்பிரதக்ஷிணமாகவும் பின்னர் பிரதஷிணமாகவும் மாறி மாறி மூன்று முறை (பொதுவாகவே சிவனை மூன்று முறை வலம் வருதல் சிறப்பு) வலம் வருவது சோமசூத்திர வலம் வருதல் எனப்படுகிறது. இது பிரதோஷ காலத்திலோ அல்லது எந்த நாளிலும் கூட செய்வது உத்தமம்.

சிந்தையும் நித்தியம் அஸ்தமனத்தின் போது ஈஸ்வரனை தியானித்தல் மிக நல்ல சித்தியும், அமைதியும் கிட்ட வழிவகுக்கும். அண்டங்களை அழித்தலை (இங்கே கூட்டுக்குள் ஒடுக்குதல் என்று கொள்ளவேண்டும்) அல்லவா சிவனின் பிரதான தர்மம். பிரளயத்தில் அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் ஏற்று பின்னர் மீண்டும் தோன்றச் செய்கிறார் சர்வேஸ்வரன். அப்படிப்பட்டவனை வணங்கி அவன் கருணை பெறுதல் வீடுபேறு எய்த சுலபமான வழி.

ஆசிரியர்கள் பகுதி - 2 - பழைய பதிவு

நம் ஒவ்வொருவரின் பிறப்பிலும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாமும் மெருகேறி, நம்மை செப்பனிட்டுக் கொள்ள விழைகிறோம். எத்தனையோ பள்ளங்கள், தோல்விகள், விழுந்து எழும் சிராய்ப்புகள். இத்தனையும் மீறி நிமிர்ந்து நின்று, கணப்பொழுதும் கற்கும் பாடத்தால் நம்மை உயர்த்திக் கொள்வதே வாழ்வின் குறிக்கோள்.

இதற்கு ஆசிரியர்களின் பங்கு சொல்லி மாளாதது. நான் கூறுவது பாடதிட்டத்தை சிந்தையில் புகுத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல. பல்வேறு முகமூடிகளின் ஊடே ஒளிந்திருக்கும் பலரின் செயல், சொல், சில நேரம் நாம் பட்டு அனுபவிக்கும் படிப்பினை என எல்லாமே ஆசிரியர்கள் தான்.

காலம், நேரம், அனுபவம் இவை தான் முன்னோடி ஆசிரியர்கள். இவை கற்றுக்கொடுக்காதது கொஞ்சமே. அவ்வப்பொழுது பல ஆசிரியர்கள் பாடங்களை இன்னும் மெருகூட்டுகிறார்கள்.

குழந்தை பிராயம் முதல் எத்தனை பாடங்கள்! கீழே விழுந்தால் அடி. முதல் பாடம். தீ சுடும் அடுத்த பாடம். பாடங்கள் என்றும் கசக்கும். சிறு குழந்தை முதல், பெரியவர் வரை பாடங்களை என்றும் கசப்புடனேயே அசை போடுவர். ஆனால் அவற்றால் நாம் பெற்ற பயன் மட்டும் மிகவும் தேவையான படிப்பினை. அதனை அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் என்ற போர்வையில் விளங்கும் அனைவருக்கும் நாம் கடமைப் பட்டுள்ளோம்.

முதல் ஆசிரியர் அம்மா தான். நானென்று இல்லை அனைவரும் கூறும் மறுக்க முடியாத உண்மை. உலகை அறிமுகப்படுத்துபவள். அப்பாவை உற்றாரை, உறவினரை, நல்லதை, கெட்டதை, அறிமுகப்படுத்தி நம்மை உலகை எதிர்கொள்ளத் தயாராக்குபவள். அவள் சொல்லிக்கொடுக்காததை படிப்பினையாய்ப் பிறரிடம் புரிந்து கொள்ளும் பொழுது சில நேரம் வலிக்கும்.

காலமும், சூழ்நிலையும், நிறையவே சிந்திக்க வைக்கும் பல படிப்பினைகள் தந்ததைப் பற்றி நான் யோசிக்கும் முன், எனக்கு நினைவிற்கு வருபவர்கள் சில பள்ளி ஆசிரியர்களும்.

எனக்கு நினைவாற்றல் நிரம்பக் கம்மி. எனினும் என்னுடைய ஒவ்வொரு ஆசிரியை, தோழி, தோழர்கள் என பலரின் பெயரும் முகமும் இன்னும் நினைவில் நின்றாடும் ஒன்று.

எல்.கே.ஜி.யில், 'கீதா' மிஸ் நினைவுகோரும் பொழுது வேறெதுவும் நெகிழ்ச்சியாகவோ, இகழ்ச்சியாகவோ தோன்ற வாய்ப்பே இல்லை. ஏனெனில் இவர் எங்களுக்கு பாடம் புகட்டிய நினைவு இல்லவே இல்லை. ஸ்கேல் ஒன்று வைத்திருப்பார். பெஞ்செல்லாம் இருக்காது. தரையில் அமர்ந்திருப்போம். என்ன செய்வோம் என்றும் நினைவில்லை. ஏ,பி.சி சொல்லிக் கொடுத்திருக்கலாம் (சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்). சற்று நேரத்திற்கெல்லாம் எல்லோரும் கட்டாயமாகப் படுத்து விட வேண்டும். ஸ்கேல் வைத்துக் கொண்டு வலம் வருவார். யார் கண்ணை மூடவில்லை என்று மிரட்டிக் கொண்டே வருவார். ஆனால் இவரிடம் யாருக்கும் பயமே இல்லை. சாந்தமான முகம். கோபம் வரவே வராது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். அதனால் அரைக் கண் மூடி, தூங்குவது போல் நான் நடித்தது நன்றாய் நினைவிருக்கிறது. ஒல்லியாய் குச்சியாய் வெள்ளையாய் தேகம். ஒல்லியாய் குச்சியாய் நீளமாய் முடி. பின்னலிட்டிருப்பார். மாமியாருக்கு வேண்டியதை செய்து விட்டு, பொழுது போகாத நேரத்தில் (ஊதியத்திற்காகவும்) எங்களுடன் மாரடித்தார் என்று இப்பொழுதும் தோன்றுகிறது. அப்பட்டமான நடுத்தர வர்க்க முகம். எல்.கே.ஜியெல்லாம் தாண்டிய பின், ஐந்தாம் வகுப்பு வரை இவரை பலமுறை பார்த்திருந்தாலும் ஒரு முறை கூட, மாணவ மாணவிகளைப் பார்த்து புன்னகைத்ததே இல்லை. இவரை பற்றி ஏன் எழுதுகிறேன் என்பதற்கு ஒரே காரணம் தான். என் பள்ளி வாழ்க்கையின் *முதல் ஆசிரியை* என்பதால் மட்டுமே.

அடுத்து சியாமளா மிஸ். கருப்பாய் குள்ளமாய் இருப்பார். இவருக்கு பாபு என்று ஒரு மகன் உண்டு. அவனும் என்னுடன் யூ.கே.ஜி படித்தான். என் பக்கத்தில் உட்காருவான். பென்சில் ஸ்லேட் என எல்லாவற்றையும் பிடிங்கிக் கொண்டுவிட்டு அழவிடுவான். குறும்பு கொப்பளிக்கும் அவன் முகத்தில், நான் அழும் பொழுது அப்படி ஒரு திருப்தி தெரியும்! அடிக்கடி சியாமளா மிஸ்ஸிடம் போய் கோள் மூட்டிவிடுவேன்; 'பாபு இப்படி செய்யறான் மிஸ்!' என்று. அவரும் அவனைக் கண்டிப்பார். ஒரே ஒரு முறை, ஏனென்று நினைவில்லை, எதோ தவறு செய்து விட்டதால் இருக்கலாம். என்னை கூப்பிட்டு ஸ்கேலால் 'படீர்' என்று ஒரு அடி உள்ளங்கையில் கொடுத்தார். பள்ளி ஆசிரியர்களிடம் நான் வாங்கிய இரண்டு அடிகளில் முதல் அடி, இவர் கொடுத்தது தான். ரொம்ப அவமானமாய் இருந்தது. அன்று முழுக்க குனிந்த தலை நிமிராமல் வகுப்பில் இருந்தது நினைவில் இருக்கிறது.

பாவாடை தாவணியில், பதினெட்டு வயது மிஸ் ஒருவர் எங்களுக்கு பாடம் எடுப்பார். அப்பொழுது நாங்கள் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். எனக்கு அரவிந்த், சத்ய மூர்த்தி என்று சில நண்பர்கள் இருந்தனர். இவர்களுடன் கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பேன். டீச்சரை கிண்டல் அடிப்பது, கமுக்கமாய் சிரிப்பது என்று நல்ல காரியங்களில் அவ்வயதில் ஈடுபட்டிருந்தேன். இந்த அழகான பதினெட்டு வயது டீச்சரின் பெயர் ப்ரேமா. முகத்தில் பரு இருக்கும். சற்றே பூசினாற் போன்ற தேகம். எல்லா மிஸும் சுமாராய், வயதானவராய் (comparitively) இருக்கும் நேரத்தில் இவர் மட்டும் சின்னப் பெண்ணாய் பளிச்சென்று இருப்பார். நீள அடர்த்தி முடி. இவரை கிண்டல் செய்வது எங்களின் பொழுது போக்கு. ஏதேனும் துர்நாற்றம் வருவது போல் அர்விந்த் மூக்கை மூடிக் கொள்வான். உடனே இன்னொருவன் "ப்ரேமா மிஸ் குளிக்காம வந்துட்டாங்களா" என்பான். நான் கிக்கிபிக்கி என்று இளிப்பேன். இப்படி அவர் எங்களைக் கடக்கும் பொழுதும் வேண்டுமென்றே நிறைய பேசுவோம். அதெல்லாம் அவரின் காதில் விழாதா, அல்லது விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தாரா என்பது இன்று வரை மர்மம்.

சாவை பற்றியும், சோகத்தை பற்றியும் நிறைய தெரியாது தான். முதன் முறை அன்று தான் கேட்டோம்.

"சில்ரென், இன்னிக்கு உங்களுக்கு லீவ். ப்ரேமா மிஸ்க்காக எல்லாரும் எழுந்து நிக்கறீங்களா?"

"ஏண்டா சத்யமூர்த்தி என்னாச்சு?"

"ப்ரேமா மிஸ் செத்து போய்ட்டாங்களாம்!"

"அப்டீன்னா"

"தெரில. ஆனா இனிமே வரமாட்டாங்க."


வீட்டிற்கு சென்று நிறையவே அழுதேன். ப்ரேமா மிஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுவிட்டிருந்தார்கள். (காதல் தோல்வியாய் இருக்கலாம்.... இல்லை பரிட்சையில் பெயில் ஆனார்களோ என்னவோ) வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். "ரொம்ப கிண்டல் பண்ணினோம் மிஸ்ஸை.. இனி வரவே மாட்டாளா" என்று.

ஒரு வாரம் எல்லோருமே சுரத்தில்லாமல் இருந்தோம். அதன் பிறகு மீண்டும் சாவு என்ற வார்த்தை மறந்து போனது. அதைப்பற்றி அதிகம் யோசிக்கவும் இல்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு அர்விந்த் "இங்க தான் ப்ரேமா மிஸ் தூக்கு போட்டுட்டாங்க" என்று எங்களை பயமுறுத்த, ரொம்ப டென்ஷனோடு இரண்டாம் வகுப்பு உத்திரத்தைப் பார்த்து, அந்த பயத்திலேயே ப்ரேமா மிஸ்ஸின் சோகத்தை மறந்து போனோம்.

(இன்னும் வரும்)

September 08, 2010

கூடு விட்டு கூடு பாய்தல் ( சோவின் எங்கே பிராமணன் - பகுதி 2ல் இருந்து கோர்கப்பட்டது)

உடல் அநித்தியம், ஆன்மா நித்தியம், உடலானது உயிர் தங்கும் கூடு. 'கூடுவிட்டு கூடு பாய்தல்' பெரிய சித்தர்களால் ஞானிகளால் செய்யக்கூடிய சித்திகளுள் ஒன்று. இன்னொருவரின் உடல் தாங்கி நின்ற போதும், ஆன்மா வேறுபடுவதால் (நிற்க: ஆன்மா வேறுபடாது என்றாலும், தனிப்பட்ட கர்ம பதிவுகளைத் தாங்கிய ஜீவ-ஆத்மா என்று கொள்ளலாம்) நடை உடை பாவனை குணம் முதலியவை வேறுபடுவதால் தங்கியிருப்பது வேறு ஒரு ஆன்மா என்று கண்டுகொள்ளலாம்.

"கூடுவிட்டு கூடு பாய்தல்" முக்கியமாக சித்தர்கள் வரலாற்றில் சர்வசாதாரணமாய் சுட்டிக்காட்டப்படும். ஆதிஷங்கரர் இதே முறையை கையாண்டு, விடையுணர்ந்து நிபந்தனையில் வென்ற சரித்திரம் அனைவரும் அறிந்ததே. பாம்பாட்டி சித்தரும் கூடுவிட்டு கூடு பாய்ந்து சில ஞான உபதேசங்களை உபதேசித்தார். சித்தர்கள் இச்சித்தியை உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தினர் என்பது நினவில் கொள்ளத்தக்கது.

பெயருக்கேற்றார் போல் பாம்பாட்டி சித்தர், பாம்பை பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, அவைகளில் விஷத்தை சேமித்து விற்பது இதையே தொழிலாகக் கொண்டிருந்தார். பாம்புடன் பழகுவதால் அவருக்கு விஷமுறிவு மூலிகைகளெல்லாம் அத்துபடி. அவ்வூரில் பாம்பு கடிக்கு சிறந்த வைத்தியராகவும் திகழ்ந்தார். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இறங்கினார். மருதமலைப் பகுதியில் விஷவைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றும் துவங்கினார்.

ஒரு சமயம் நவரத்தின பாம்பு ஒன்று மருதமலைப் பகுதியில் வசிப்பதாகவும், அதன் நஞ்சு மிகப்பெரிய சித்து வித்தைகளைச் செய்யும் திறன் கொண்டது என்றதால் அதனை பிடிது விட உறுதிபூண்டு மருதமலைக் காட்டிற்கு சென்றார். இவர் தேடும் பணியில் மும்முரமாக இருக்கும் தருவாயில், பலத்த சிரிப்பொலியுடன் பிரகாச உருவம் தாங்கி சட்டை-முனி சித்தர் பாம்பாட்டி சித்தர் முன் தோன்றினார்.

இவர் பாம்பை தேடுவதைப் பார்த்து சிரித்தபடி, "நவரத்தின பாம்பை நீயே உனக்குள் வைத்துக்கொண்டு வெளியே தேடுகிறாயே இது பயனற்ற செயல்தானே" என்றார்.

"மிகுந்த உல்லாசத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு பாம்பு உன் உடலுக்குள் குடியிருக்கிறது (பாம்பாக உருவகப்படுத்துவது உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி ஷக்தியை) , உன் உடலில் மட்டுமன்றி எல்லோர் உடலிலும் குடியிருக்கிறது, உன் உடம்புக்குள் இருக்கும் அப்பாம்பை ஆட்டுவிப்பவன் தான் அறிவாளி. அதனை அடக்கி ஆளக்கூடியவர்கள் தான் சிறப்பு மிக்க சித்தர்கள் எனவே வெளியில் இருக்கும் அந்தப்பாம்பை விட்டு விட்டு, உன்னுள் இருக்கும் இந்தப்பாம்பை அடக்க வழி தேடு" என்று அருள் கூர்ந்தார். மேலும், 'இறைவனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும், குண்டலினி விழித்து எழும், தியானம் சித்திக்கும்ம். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே' என்கிறார்.

பாம்பாட்டி சித்தர் பக்குவம் அடைந்து இனி இப்பாதையை விட்டு விலகாத யோகம் பயில்வேன் என்று உறுதிபூண்கிறார்.

"அப்பொழுதும் நீ பாம்புகளை பிடித்துக்கொண்டிருந்தாய், இப்பொழுதும் சூட்சுமமான பாம்புகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளாய் எனவே நீ இப்பொழுதும் பாம்பாட்டி தான்" என்று அருளி மறைந்தார் சட்டை முனி சித்தர்

ஒரு ஊரில் இறந்து போன மன்னனைச் சுற்றி மனைவி சுற்றத்தார் அழுது புலம்பிக்கொண்டிருந்தனர். கொடுங்கோலாட்சி புரிந்த தீய நடத்தை கொண்டிருந்தவன் மன்னன். அப்படியும் மக்கள் அவன் மேல் வைத்த பாசம் ஆச்சரியம் தந்தது. அவனை நல்லவனாக்கி நடமாடவிட்டு, நல்ல உபதேசம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, தன் உடலை பத்திரப்படுத்திவிட்டு, இறந்து போன பாம்பு ஒன்றை அரசன் உடலில் விசிறியடிக்கிறார். மக்கள் எல்லோரும் பீதியுடன் விலக அரசி மட்டும் உடலை விட்டு நகராது நிற்கிறார். அதன் பின் அரசன் உடலில் சித்தர் புகுந்து கொண்டார்.

பாம்பு தான் அரசனை கொன்றுவிட்டது என்று அதனை அடிக்க மக்கள் புறப்படுகின்றனர். அரசன் உடல் தாங்கி எழுத சித்தர் "செத்த பாம்பை ஏன் அடிக்கிறீர்கள்? என்று அதனை தடவி கொடுத்து " பாம்பே நான் எழுந்து விட்டேன், நீயும் எழுந்திரு" என்றார்.

ஆடு பாம்பே என்று பாம்பை ஆட்டுவித்து தத்துவங்கள் நிரம்ப பாடல் பாடுகிறார். அரசிக்கு வந்திருப்பது வேறு ஒரு நபர் என்ற
சந்தேகம் உதித்தது.

நாடுநகர் வீடு மாடு நற்பொருள் எல்லாம்
நடுவன் வரும்போது நாடிவருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னே?
கூத்தன் பதங்குறித்தி நின்று ஆடு பாம்பே


முக்கனியும் சக்கரையும் மோதகங்களும்
முதிர்சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாக கண்டோமென்று ஆடு பாம்பே

(பாடல் எளிமையாய் இருக்கிறது. self explanatory ) செல்வமும், புகழும், படை பலமும், இறப்பும் காலனும் தேடி வரும் போதும் கூட வருமோ? கூடு விட்டே ஆவி பொனால் அவற்றின் பயன் தான் என்ன என்று ஆடு பாம்பே (கூத்தன் பதம்: ? இங்கு சிவனை அவனின் புகழைக் குறிக்கிறதா அல்லது சிற்றறிவு கொண்டு கூத்தாடும் மாநதரைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை...any takers? )

முக்கனி சக்கரை பத்து வகை பட்சணங்கள் உண்ட வாய், இப்போது மண்ணைக் கவ்வும் நிலை குறித்து, உடலின் நிலையற்ற தன்மை நினைந்து எழுதாடு பாம்பே என்பது குத்துமதிப்பான விளக்கம்.

ஆதி சங்கரர் அருளிய பஜகோவிந்த வரிகள் நினைவிற்கு வருவதை தவிர்க முடியவில்லை.

மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

ஞான உபதேசங்கள் தொடர்ந்து பாடிய வண்ணமிருக்கிறார். அதன் பின் சந்தேகம் உதித்த அரசிக்கும் தான் யார் என்று கூறி நல்லுபதேசம் செய்து மீண்டும் தன் உடல் கொண்டார். பல அறிவுரைகளும் தத்துவ உபதேசங்களும் செய்த வண்ணம் தன் வாழ்நாள் தொடர்ந்தார். தேடிப்போய் உபதேசித்தும் இந்த அறிவிலி மக்கள் திருந்துவதில்லையே என்று வருந்திய் சித்தர், யார் கண்ணிலும் படாமல் மறைந்தார்.

திருமூலர் என்ற சித்தரும் கூடுவிட்டு கூடுபாய்ந்ததாக சொல்லப்படுகிறது. திருமூலர் கைலாய பரம்பரையை சேர்ந்தவர். சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனனாகிய மூலன் பசுக்கள் மேய்த்து வந்தான். அவன் வாழ்நாள் முடிந்த வினையால் உயிர் நீங்கி நிலத்தில் வீழ்ந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி கதறி வருந்தின. இதனைக் கண்ட திருமூலர் பசுக்களுக்காக மனம் நெகிழ்ந்து அவன் உடல் கொண்டார். பசுக்களை மேய்த்து தத்தம் இடத்தில் அனுப்பிய பின், தனித்து நின்று கொண்டிருந்த திருமூலரை மூலன் மனைவி கண்ணுற்றாள். விரும்பி வீடு அழைக்கும் அவளுக்கு தான் மூலன் அல்ல என்றும் அவன் விதி முடிந்து இறந்து விட்டான் என்ற உண்மை திருமூலர் கூறியும் உரைத்தபாடில்லை. தன் கணவனுக்கு புத்தி தடுமாறியதென்று ஊரைக் கூவி அழைத்து, அவனை தன்னுடன் இருக்குமாறு அறிவுரை வழங்கச் செய்கிறாள். தன்னுடலைத் தேடி அதனுள் புகுந்து உண்மையை உணர்த்தி இவ்வுடலை செய்யலற்றதாக்கி தன்னை யார் என்று நிரூபித்தார். உண்மை உணர்ந்த சான்றோர் மூலன் மனைவியைத் தேற்றி அவளை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

அதன் பின் அவருக்கு எங்கு தேடியும் தன் பழைய உடல் தென்படவில்லை. மூலன் உடலிலேயே நிரந்தரமாகத் தங்கி விட நேரிடுகிறது. உலகத்தோர் உய்யும் பொருட்டு க்ரியை, ஞானம், சரியை, யோகம் என்று நால்வகை நன்னெறிகளும் விளங்கும் திருமந்திரம் என்னும் நூல் வழியாக ஓர் ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் வழங்கியுள்ளார். பின்னர் இந்நூல் நிறைவுற்றதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இறைவன் திருவடி அடைந்தார்.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நென்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே

- திருமந்திரம்.

உயிர்கள் அனைத்தும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன், என்று நினைப்பவருக்கு மரணமில்லை i.e. அவர்கள் இறவாத்தன்மை அடைந்து விடுகின்றனர். இந்த எண்ணத்தில் நீர் நிலைபெற்று நின்றால் அதுவே முக்திக்கு வழி. வேறில்லை என்பது தோராயமான பொருள்.


(நன்றி: சி.எஸ் முருகேசன் அவர்கள் எழுதிய பதினெண் சித்தர் வரலாறு )

(தொடரும்)

September 07, 2010

திரையிசைப் பயணங்கள் - 3 (நடிகர் முரளியின் நினைவில்)


நடிகர் முரளி "பூவிலங்கு" திரைப்படத்தில் அறிமுகமாகி, பல வெற்றித் திரைப்படங்களைத் தந்துள்ளார்। அவர் படங்களின் பல பாடல்கள் மனதில் தனியொரு இடத்தைப் பிடித்தவை. "இதயம்" படத்தின் அனைத்துப் பாடல்களும் பல வீடுகளில் முணுமுணுக்கப்பட்டவை. அதிகம் பேசப்படாத "இங்கேயும் ஒரு கங்கை" படத்தின் பாடல்கள் மனதை நெகிழச்செய்வன.


பூவிலங்கு, கீதாஞ்சலி முதலிய பழைய படங்களிலும் சரி, வெற்றிக்கொடிகட்டு, போர்களம் போன்ற சமீபத்தில் வெளி வந்த திரைப்படங்களிலும் அமைதியான, மிகையற்ற, இயல்பான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு முத்திரை பதித்துச் சென்றார். அவருக்காக என் பிரார்த்தனைகளை சமர்ப்ப்கிறேன்.

முரளி நடித்த திரைப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001785

படம்: புதியவன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்

தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே
சங்கீதம் நானே

இன்னும் தனிமைக்கு துணையில்லை
இந்த இளமைக்கு அணையில்லை
துள்ளி பறக்கவும் துணிவில்லை
உள்ளுக்குள் உஷ்ணங்கள்

உனை நினக்கிறது குயில் தவிக்கிறது
சிறகை விரித்து சிறையை உடைக்க துடிக்கிறதே
குயில் எங்கே வசந்தம் அங்கே
நீ வா நீ இங்கே

எந்தன் இசை மழை பொழியலாம்
உள்ளம் என்னும் கிண்ணம் வழியலாம்
கவலைகள் அது கரையலாம்
அன்பே வா அருகே வா

கரையை கடந்து ஒரு கடல் வருகிறது
அலைகள் இரண்டு இதயம் நுழைந்து தொடுகிறதே
உன்னைத்தான் நானே நனைத்தேனே
வா பொன் மானே

ஆசிரியர்கள் - 1 நினைவலைகள் (பழைய பதிவு)

நம் வாழ்வில் ஒவ்வொரு கணத்திலும் நாம் கற்றுக்கொண்டே இருக்கிறோம். பலர் நமக்கு பாடம் படிப்பிக்கின்றனர். ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு பாடம் சொல்லிச் செல்கிறது. சில பாடங்கள் சுவையானவை. சிலது நம்மை செம்மைப் படுத்தக் கூடியவை.

ஜாதிவெறி வெறியைத் தாண்டிய வெறி எது தெரியுமா? பொருளாதார நிலையினால் ஒருவரை மட்டம் தட்டுவது. என்னுடைய அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த பிழைகள் நிறைய.

இந்த வெறிகளுக்கெல்லாம் என்ன பெயரிட்டு அழைப்பது என்பது விளங்கியதில்லை. கருப்பாய், நன்றாக உடை உடுத்தாமல், நாகரிகமாய் பழகத் தெரியாமல், ஆங்கிலம் நவநாகரிகமாய் பேசத் தெரியாமல், அழுக்காய், இப்படியெல்லாம் யாராவது இருந்தால், அல்லது இதில் ஒரு குணமாவது இருந்தால், அப்படிப்பட்டவர்களுடன் நான் பழகமாட்டேன். மரியாதைக்கு புன்னகைத்து விட்டு நகர்ந்து விடுவேன். அதற்காக அவர்களை கிண்டல் செய்வேன் என்பது கிடையாது. எனக்கும் அவர்களுக்கும் சரிப்படாது என்ற எண்ணம் மேலிட விலகிவிடுவேன்.

ஒரு சுபயோக சுபதினத்தில்தான் என்னை உலுக்கவைத்த அந்த நிகழ்ச்சி நடந்தது. ரொம்பப் பெரிய சம்பவமெல்லாம் இல்லை. ஆனால் என்னிடம் சுடு சொற்கள் கூட வீசாத அப்பாவிடம் நான் அடிவாங்கிய நாள்.

அப்பா என்றாலே ரொம்ப செல்லம்தான் எனக்கு. அம்மா போல் கடிந்து கொள்ளாமல், கேட்டதை வாங்கித் தருவார். எப்பவும் என் கட்சி பேசுவார். ஒரு முறை பெங்களூருக்கு அலுவலக நிமித்தமாய் சென்று வந்த பொழுது, எனக்காக தோடு ஒன்று வாங்கி வந்தார். சிறு வயது முதல் எனக்கு விதவிதமான காதணிகள் மிகவும் பிடித்தமானவை. குட்டி சிவப்பு கல் வைத்த தொங்கும் காதணி. அப்பா வாங்கி வந்ததாலேயே அதிக நாளைக்கு அதையே போட்டுக்கொள்வேன். எனக்கும் என் தோழிக்கும் சண்டை வந்தால் கூட அப்பா தான் சமாதானப்படுத்துவார்.

"உன் க்ளாஸ்ல யாரு உனக்குப் பக்கத்துல உக்காந்துப்பா"

"ஒ, என் க்ளாஸில் எனக்கு நெக்ஸ்ட் சாண்ரா நொரோனா தான் இருப்பா. ரொம்ப ஸ்டைலா இருப்பா தெரியுமா. ஷீ இஸ் மை பெஸ்ட் ·ப்ரெண்ட்"

"அப்ப நான் பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லையா?"

"நீயா... உனக்கு சாண்ட்ரா நொரோனா என்பதை சரியா சொல்லத் தெரியுமா"

"ஏன் தெரியாம.... சா¡ண்டிரா.. நோர்ர்ர்ரோனா"

"சரி நீ வீட்டுக்குப் போ, சாண்ட்ரா என்ற பெயரைக் கூட சரியா சொல்லத் தெரியாத உன்னோட நான் பேச மாட்டேன்"

அவளை நன்றாகக் கிள்ளிவிட்டேன். அழுது கொண்டே வீடு சென்றவள் அடுத்த பத்து நாளைக்கு வரவே இல்லை. பொதுவாய், இரண்டு நாள்களில் அவளே வந்து நிற்பாள். நான் போய் சகஜமாய் பேசவெல்லாம் மாட்டேன். என் கௌரவம் என்ன ஆவது!! அவளே வரட்டும் என்ற வரட்டு ஜம்பம் நிறைய உண்டு. என்னை விட்டால் அவளுக்கு வேறு கதி உண்டா என்ன!

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், இன்னொரு தொழியுடனும் நெருங்கிய தோழமை உண்டு। அவள் பளிங்குக் கலரில் வெள்ளைத் தும்பைப் பூவைப் போல் ஜொலிப்பாள்। இதனாலேயே எனக்கு அவளைப் பிடிக்கும்। குழந்தைகள் யாரேனும் அழகாய் இருந்தாலோ, வெள்ளையாய் இருந்தாலோ, அவர்களின் கன்னத்தைக் கடித்து விடுவேன்। (செல்லமாய்த் தான்)। அப்படி ஒரு என்னையும் மீறிய ஆசையில், ஆவலில்(!!!!) ஒரு நாள் அந்த வெள்ளைப் பெண்ணின் கன்னத்தைக் கடித்து விட்டேன்। வெள்ளைக் கன்னம் சிவந்து போனது. அழுதபடி வீட்டிற்குச் சென்றவள் அதன் பிறகு வரவே இல்லை.

இவர்கள் இருவரும் செட் சேர்ந்து கொண்டார்கள். நான் விளையாட ஆளின்றி, ஆனால் தவறை ஒப்புக்கொள்ள மனமின்றி வீம்புக்கு திரிந்துக் கொண்டிருந்தேன். பத்து நாளைக்குள் அந்த தோழியின் வீட்டிற்கு போனால் போலீஸ் பிடித்துப் போய்விடும் என்று அம்மா பயமுறுத்தியிருந்தார்கள். கன்னத்தை கடித்துவிட்டேன் அல்லவா. எப்படியானும் இப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காய் அம்மா செய்த சதி! செய்யக்கூடாத குற்றம் செய்து விட்டது புரிந்தது. 'அப்படி என்ன ஆசை! கட்டுப்படுத்தத் தெரிய வேண்டாமோ! கன்னம் என்றால் கொழுக் மொழுக்கென்று இருக்கத்தான் செய்யும். அது வெள்ளையாய் வேறு இருந்து தொலைத்தால் அதற்கு நான் என்ன செய்ய? சின்னப் பெண் எப்படி ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பாள்!' இப்படியெல்லாம் வாதிட்டேன். மனதிற்குள்தான். ஆனாலும் அவள் வீட்டிற்கு சென்றால் எங்கே போலிஸ் பிடித்துக்கொண்டு போய்விடுமோ என்ற பயத்தில் போகவே இல்லை.

சோகமாய் உட்கார்ந்திருந்த என் மேல் அப்பாவின் கருணைக் கண்கள் தீண்ட, இரு தோழியரையும் அழைத்து சமாதானப்படுத்தி, ஆளுக்கு ஒரு பேனா பரிசு கொடுத்தார். அவர்கள் சென்ற பிறகு, அப்பாவிடம், "கன்னத்தை கிள்ளினதும் கடிச்சதும் வேணா தப்பு, பட், அந்த தட் அதர் கேர்ல் இஸ் சோ டம்ப் அப்பா, அவளுக்கு சாண்ட்ரான்னு சொல்லக் கூட தெரில. ஹௌ கேன் ஷீ பீ மை ·ப்ரெண்ட்!" என்றேன்.

"இது தேராத கேஸ்!" என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தார் அப்பா.

அப்பொழுது தான் அவர் வந்தார். வாசலில் கேட்டில், உள்ளே வரத் தயங்கியபடி நின்றிருந்தார். முப்பது வயதிருக்கும். கறுப்பாய், அழுக்குத் துணி அணிந்து, எளிமையும் ஏழ்மையும் முகமெங்கும் அப்பியிருக்க, வெள்ளைப்பற்கள் தெரிய புன்னகைத்துக்கொண்டு,

"அப்பாரு இருக்காரா பாப்பா" என்றார். அவரது பேச்சில் கூட class இல்லாததாய் எனக்குத் தோன்றியது.

"அப்பா உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கா"

"யாருன்னு கேளு" உள்ளிருந்தே அப்பா கூவினார்.

"தெரிலப்பா, யாரோ கறுப்பா பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்" என்றேன்.

அப்பா வெளியே வந்து பார்த்தவுட்ன் முகம் இருண்டு போனது.

"இங்க வா!!" அப்படி ஒரு உறுமலுடன் என்னை அழைத்தார். அப்படி ஒரு கோபத்தையும் குரலையும் அதற்கு முன்பும் கேட்டதில்லை. அதற்குப் பின்பும் கேட்டதில்லை.

"எங்க ஆ·பிஸ்லேருந்து எலெக்ரீஷியனை நான் தான் கூப்பிட்டிருந்தேன். யாருன்னு தெரிலையன்னா தெரியலைன்னு சொல்லணம். இப்படி கன்னாபின்னான்னு மண்டை கர்வம் புடிச்சு பேசக்கூடாது"

"இனிமே இப்படி செய்வியா?" கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் தொடர்ந்து, படீர் படீர் என முதுகில், முகத்தில், கன்னத்தில், முட்டியில், சரமாரியாய் அறை. அம்மா பதற, வந்திருந்த மனிதரோ "போனா போகுது சார் பாப்பா தானே, விடுங்க சார்" என்று கெஞ்ச...

அப்பா அடியை நிறுத்தவே இல்லை.

முகம் முழுவதும், வெளறிய அடையாளங்களுடன், அவமானத்துடன், அந்த இடத்தை விட்டு அழுதபடி சென்று விட்டேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அப்பாவுடன் பேசவே இல்லை.

இரவு அப்பாவும் அம்மாவும் என்னுடன் பேச வந்தனர். நான் முகத்தை திருப்பிக்கொண்டேன். அப்பா என்னை மறுபடி தொட்டபோது கூட கையைத் தட்டி விட்டேன். தொடர்ந்து அறிவுரை. எதுவும் முதலில் புரியவில்லை. பிடிக்கவில்லை.

"நான் கூட கறுப்புதான், என்னை ஒதுக்கிடுவியா" என்றார் அப்பா

ஆடிப்போய்விட்டேன்.

"நானும் அம்மாவும் கூட, ஏழ்மைநிலையிலிருந்து வந்தவா தான். இன்னும் ரொம்ப வசதியெல்லாம் நமக்கு இல்லை. உன்னை கான்வெண்டில் படிக்க வெக்கணம்கறது எங்களுடைய சின்ன ஆசை. அதற்கு எவ்வளவோ தியாகம் செய்துதான் படிக்க வெக்கறோம். நீ ஒண்ணும் பணக்கார சீமாட்டி இல்லை, அதைப் புரிஞ்சுக்கோ. இங்க்லிஷ் தெரிலைன்னோ, கறுப்பா இருக்கான்னோ ஒருத்தரை அவமானப் படுத்தலாமா?"

"சரி அதையெல்லாம் விடுங்கோ, இவ என்ன பெரிய உசத்தின்னு மத்தவாளை மட்டம் தட்டறா?" என்று அம்மா எரிச்சலூட்டினாள்.

அம்மா சொன்னது உண்மை என்றாலும் எனக்குப் பிடிக்கவில்லை. அப்பா சொன்னது உண்மை என்பதாலேயே என்னை யோசிக்க வைத்தது.

அன்று வந்தவர் அதன் பின் சில முறை வீட்டிற்கு வந்தது, எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது, என் திருமணத்தின் பொழுது, அவர் தன் குடும்பத்துடன் வந்தது, என்னை வாழ்த்தியது, அவரை பார்த்து நான் நெகிழ்ந்தது, எல்லாம் ஒன்றொன்றாய் பிறகு நடந்தது.

எல்லாமே மெதுவாய் புரிந்தது.

என் தோழிக்கு சாண்ட்ரா பெயர் தெரியவில்லை என்றால் என்ன? சாண்ட்ராவுக்கும் கூடத்தான் என் தொழியின் தமிழ்ப் பெயரை சரியாய் உச்சரிப்பதில்லை என்று தெளிந்தேன். ஆங்கிலம் அதிகம் பேசாத அந்த தமிழ்ச்சிறுமி நேருங்கிய தோழியிலிருந்து, பதவி உயர்வு பெற்று உற்ற தோழியானாள்.

நிற, இன, மொழி வெறிகள் என்னிடம் நிரம்பக் குறைய காரணமாய் இருந்தவர் அப்பா. பவ்யமாய் வலம்வர வேண்டும் என்ற எண்ணம் விதைத்தவர் என் அப்பா.

என் ஆசிரியர்களிலேயே முதன்மையானவரும், என்றும் உயர்ந்து நிற்பவரும் என் அப்பாதான்.

(இன்னும் வரும்)