January 11, 2016

மௌனமான நேரம்அருகேயுள்ள திருக்கோவிலில்  பூஜைக்கு பூ பறித்து கொடுப்பது என் அன்றாட பணிகளுள் தலையாயது, பிடித்தமானதும் கூட. 

பூஜைக்கு தேவையான பூவை குருக்களே சில நாள் பறித்திருப்பார். அன்றைக்கெல்லாம் இறைவனின் நாம ஜபம் செய்து விட்டு புறப்பட்டு விடுவேன்.

சென்னையின் வெயிலுக்கு சளைக்காமல், கிட்டத்தட்ட  ஒரு  நந்தவனமே கோவிலுள் குடிகொண்டுள்ளது. அதை  நங்கு செழிப்புடன்   பராமரித்து சுத்தமாய் வைத்திருக்கின்றனர்.  செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மௌனம் அனுஷ்டிப்பதால், பெரும்பாலும் நான் பேசி யாரும் கேட்டிருக்கும் வாய்ப்பு அரிது அல்லது மிகவும் குறைவு. மௌனம் அனுஷ்டிக்காத தினங்களிலும் கூட நாம ஜபத்தில் ஈடுபடுவதால், பெரும்பாலும் அறவே பேச்சை தவிர்த்து வருகிறேன். 

இன்றைக்கு அன்றாட பூக்களை சேகரித்த பின்னர், சேற்றில் புதைந்த என் கால்களை கழுவ அங்கு தொண்டு செய்யும் இன்னொரு பெண்மணி முன் வந்தார். "அடடா! வேண்டாங்க" என கூச்சத்துடன் நெளிந்த என்னை....

"அட வுடுப்பா,  நீயும்  நானும் ஒன்னு தான், சும்மா இரு,  நான் தண்ணி ஊத்தறேன்" என கூறியபடி  நீரூற்றி உதவி செய்தாள். 

அங்குள்ள இன்னொரு பெண்மணியும் மெதுவே பேச்சுக்கொடுத்தாள். 

"நீ பேசியே  நான் பார்த்ததில்லை" "செவ்வாய் சனி மௌனம், மிச்ச நாளுங்க
கண்ண மூடி உக்காந்துக்குற,  உங்குரல இன்னிக்குத் தான்   கேட்டனே" என்றாள்."அப்படியில்லம்மா, மௌனம் இல்லைன்னாலும், சாமி பேர சொல்லிட்டு இருப்பேன் அதான்" எனவும்,

"அப்புடித்தான் இருக்கணும், சொம்மா எதையானும் பெசி என்னத்த கண்டோம்,  நீ செய்யுறது தான் சரி தாயி, உன்னப் பாத்து  நாலு பேரு, கண்ணமூடி ரெண்டு  நிம்சம் சாமிய நெனைப்பாங்க பேச்சக் குறைப்பாங்க"


ஒவ்வொருவரின் செயல்பாடும் சுற்றியுள்ள சிலரயாவது சிந்திக்கத் தூண்டுவதாய் இருக்கும் பொழுது, சீரிய கவனதுடன் நம் எண்ணங்களை, செயல்களை, சிந்தனைகளை வடிவமைத்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு நம்மிடம் இருப்பது புரியத் துவங்குகிறது. January 07, 2016

காத்திருப்புஉடனிருந்த கணங்களுக்கு
உரமிட்டு உயிரூட்டி
நீரூற்றி  நிறம்சேர்த்து
செழித்தோங்கும் மனத்தோட்டத்துப் பூக்களின்
பறிக்கப்படாத  வாசம்...
()
கடன்படவில்லை உனக்கெனவே உயிர்பெற
திடம் பெறவில்லை   உறவெனவே  உரிமை தற
உன் தோளில் உறவாடும்  வேறொருத்திக்கு
என் மனப்பூக்களை அணிவித்து அழகூட்டி
அறிவிப்பின்றியே அகன்றிடவோ...

ஷக்திப்ரபா