November 24, 2011

Why this கொலவெறி....?!





சங்ககாலமெல்லாம் நமக்குப் புரியவே புரியாது. அதை ஒதுக்கி வைத்து விடுவோம். 'கம்பன், வள்ளுவன் பாரதி' என்ற வரிசைகளையும் விட்டுவிடுவோம்.

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே



என்றெல்லாம் பாடல்கள் எழுதிய கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். பாடலில் மேலோட்டமான கருத்து, அதனைத் தாண்டிய இன்னொன்றும்,அதற்குப் பின்னும் தோண்டித் துழாவினால் வேறொன்றும் பொக்கிஷம் போல் பொங்கிக் கொண்டிருக்கும்.



புரட்சிக் கவிஞர்கள் என்று பெயர் பெற்றவர்களும், தங்கள் நோக்கத்திலிருந்து சற்றும் வழுவாது உயர்ந்த எண்ணங்களை முன் வைத்த சுதந்திரப் போராட்ட கவிஞர்களும் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவரவர் காலத்திற்கேற்ற சூழ்நிலையில் பாட்டு புனைந்தாலும், காலத்தை வென்ற பாடல்களாக அவை திகழ்கின்றன.



கவித்துவத்தில் அடுத்த கட்டமாக, ரசனையை முன் வைத்து, உவமை, உவமேயம் மூலம் கற்பனையூற்றிக் கவிதை புனைந்த கட்டமும் அழகு. இப்படிக் கூட அழகாய் சிந்தனை விரியுமா என்று பாராட்ட தூண்டும் எண்ணங்கள், வார்த்தைக் கோர்வைகள். இப்படிப்பட்ட வரிகளைக் கேட்கும் பொழுது, புனைந்த கவிஞரே நம் மனத்திரையில் கவிதையாகிப் போவதுண்டு.


எல்லா காலகட்டத்திலும், கவிதை வேறு திரைப்படத்திற்கு பாடல் எழுதுவது வேறு என்ற அளவில் பார்க்கப்பட்டது.சிறந்த கவிதைத் தொகுப்பாக கவிஞர்கள் கொணர்வது திரைக்கு சரிவராத எழுத்தாக அமைந்துவிடுகிறது. காலத்தின் சுழற்சியில் சற்றே மாறுபட்ட தோற்றம் கொண்டு இப்பொழுதும் சில பாடல்கள் அவ்வாறு அமைகிறது. வேற்று மொழியும், நடைமுறையில் இருக்கும் வார்த்தைகளைக் கோர்த்து அதற்கு ராகம் உருவேற்றி சமைத்து விடுகிறார்கள்.

கலாரசனை, சொற்களையும் அதன் சந்தங்களையும் ரசித்து சுவைப்பதற்கு யாருக்கு நேரமோ பொறுமையோ இருக்கிறது? அதிகம் யோசிக்கத் தேவையற்ற வார்த்தைகளை சேகரித்தால் mass reach சுலபமாகிவிடுகிறது.


"Why this கொலவெறி கொலவெறி கொலவெறி டி...." எத்தனை சுலபமாக முடிந்து விட்டது பாருங்கள்! யதார்த்தமான சூழ்நிலைக்கு அமைந்த பாடல், மெட்டு, அதனால் ஒன்றிவிட முடிகிறது .


இதுவெல்லாம் தமிழா? கவிதையா? என்று பட்டிமன்ற பேச்சுக்கள் நேர விரயம். திரைப்படங்களோ, அல்லது இசைதொகுப்புக்களோ, கவிதைகளின் தொகுப்பாக மட்டுமே இருக்க வெண்டும் என்ற எண்ணம் குறுகியது. பட்டித் தொட்டிப் பாடல்கள், கிராமிய மணம் சிந்தும் மெட்டுக்கள், நகர வாழ்வின் பிரதிபலிப்புகள் எனப் பாடல்கள் பலவகை இருப்பதை ஒப்புக் கொண்டு வழிவிடுவோம்.


யதார்த்த பேச்சுக்களை நடைமுறைகளை பிரதிபலுக்கும் திரைப்படம், பாடல்கள், எழுத்து, கதை, கவிதை, நாடகம் போன்றவை முதலிடம் பெற்றுவிடுகின்றன. என்னதான் மூக்கை சிந்தி நின்றாலும் இலக்கியம் இலக்கணம் எல்லாம் அதற்கு அப்புறம் தான்.


இணையத்தை அதிகம் வலம் வருவது இளைய தலைமுறை என்பதால் Soup song மற்றும் flop song இங்கே top song ஆகி விட்டது. அவ்வளவு சுயபச்சாதாபமா இளைஞர்களுக்கு?



(இதைப் பற்றிய செய்தி கீழே)




http://www.thehindu.com/arts/cinema/article2650957.ece


சில படைப்புகள் நீண்டு நிரப்பி பல காலம் ஒளிவிடும் நட்சத்திரங்கள். வேறு சிலது, சில மணித் துளிகள் பளீரென மின்னி மறையும் மின்மினிப்பூச்சிகள்.


இணையம், யூட்யூப், கூகுள் போன்ற இணைப்புகளுடன் இந்தப் பாட்டை மட்டும் இருபது லட்சம் மக்கள்கேட்டு மகிழ்ந்தனராம். ஆஹா! இருபது லட்சத்து ஒன்றாக நீங்களும் இணையுங்கள்.


புது இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.








November 14, 2011

வாலி வதம் - (கம்பனும் வால்மீகியும்)


(சோ-வின் எங்கே பிராமணனைத் தழுவியது)





ராமாயணத்தையோ மஹாபாரதத்தையோ பொருத்த வரை விவாதங்களுக்கு இடம் வகிக்கும் சம்பவங்கள் நிரம்ப உள்ளன. வாலி வதம் பற்றிய சர்ச்சை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றிருப்பானேயானால் அது தவறான ஒரு செயலே. அதை நியாயப்படுத்த முடியாது.


மறைந்திருந்து இராமன் கொன்றான் என்பதற்கு ஆதாரம் இல்லை, மாறாக வாலி மறைந்திருந்து கொல்லப்படவில்லை என்று நிறைய ஆதாரம் இருக்கிறது. ராமன் மறைந்து நின்றிருந்ததாக வால்மீக ராமாயணத்தில் இல்லை. வாலியை வதம் செய்ய நாண் ஏற்றும் போது பட்சிகளும் மிருகங்களும் அலறுகின்றன. பேரொலி எழும்புகிறது. அப்படியொரு ஒலியை அவன் கவனியாமல் இருந்திருக்க முடியாது. அம்பு எய்தபின் வாலி புலம்புகிறான் "நான் பார்க்காத போது நீ என்னை வீழ்த்தினாய்" என்கிறானேயொழிய மறைந்து நின்று அடித்ததாக கூறப்படவில்லை. அதற்கு ராமன் "யுத்தத்தில் அம்பு எய்தும் பொழுது எதிரி அதை பார்க்கிறானா இல்லையா என்பது அவசியம் இல்லை. மேலும் நீ ஒரு மிருகம், மிருகத்தை மனிதன் வேட்டையாடும் பொழுது அதற்கு நியதி ஏதும் இல்லை" என்கிறான். நாரதர் சொல்லச் சொல்ல வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதுகிறார். நாரதர் சொல்லும் பொழுது வாலியை தன் பராக்ரமத்தினால் வீழ்தினார் என்றே வருகிறது.


குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் - திண்மை
அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்?"


(நன்றி chennailibrary.com)


"உன் குலம், அறிவு, கொற்றம் தான் என்னே! உன்னுடன் வந்து இணைந்த நற்பண்புகள் எத்தகையது!உலகம் மூன்றின் ஆளுமையானவன். உன் ஆற்றல் வண்மை எப்படிப்பட்டது! உன் பண்புகள்மறந்து இத்தகைய தகுதியற்ற செயலை செய்யலாமோ" என வாலி இகழ்வதும்


"நீ பிறன் மனை கவர்ந்த கொடிய பாவத்தை செய்துள்ளாய். சரணம் என அடைந்தவனை கொல்ல முயன்றாய்.இதையெல்லாம் தடுத்து அறத்தை நிலை நாட்டுவது என் கடமை" என்று இராமன் சொல்வதெல்லாம் கவிதைக்குமகுடமான கம்பராமாயணத்தில் உள்ளது.


இது பற்றிய ஆய்வு மேற்கொண்டு 1939 ஆம் வருடம் ஸ்ரீ சீதாராம சாஸ்த்ரிகள் என்பவர் எழுதியிருக்கிறார். கம்ப ராமாயணத்தில் வாலியை மறைந்து வீழ்த்துவது போல் இருந்தாலும், நாரதர் சொல்லி வால்மீகி முனிவரால் எழுதப்பட்டதும், முதன்மையானதும் ஆதாரமானதுமான வால்மீகி ராமாயணத்தில் அவ்வாறு இல்லை.

November 06, 2011

இராமன் எனும் மனிதன்


(எங்கே பிராமணன் தொடரைத் தழுவியது)



அவதாரங்களில் க்ருஷ்ண அவதாரம் பரிபூர்ண அவதாரம். அதாவது இறைநிலையில் நின்றே, அதனை விட்டு விலகாமல், செயலாற்றிய அவதாரம் என்று சொல்வர்.

ராம அவதாரமோ மனிதனாக வாழ்ந்து, மனிதனாகவே உணர்ந்து நடைமுறை இன்ப துன்பங்களை அனுபவித்து பின் படிப்படியாக இறைநிலையின் பூர்ணத்துவத்தை உள்வாங்கிக் கொண்டவர். ராமன் தன்னை பலவேறு நேரங்களில் சாமான்ய மனிதனாக மட்டுமே உணர்ந்தான் எனக் எடுத்துக்கூறக்கூடிய சம்பவங்கள் பல.



ராமனிடம் குகன் கொண்டிருந்த அன்பும் நீதி வழுவாத சிறந்த அரசனிடம் பிரஜை கொண்டிருந்த மரியாதையை ஒத்திருந்தது. "பாருக்கே அரசனான உன்னை இந்தச் சடை முடியில் பார்த்த கண்ணை புடுங்காமல் இருக்கிறேனே" என்று கற்பித்து எழுதப்பட்டிருக்கிறது. "பாருக்கே அரசன்" என அன்பு மிகுதியில் குறிப்பிடும் குகன், அரசனாக ராமனை வரிக்கிறானேயன்றி இறைவன் என நினைத்து அன்பு செலுத்தியதாகப் புலப்படவில்லை.


குகன் நினைப்பும் புரிதலும் ஒரு புறம் இருக்கட்டும். இராமனே தன்னை சாமான்ய மனிதாக உணர்ந்து தான் வாழ்ந்து முடித்திருக்கிறான். முன்பு சொன்னது போல், இறைநிலையிலிருந்து செயலாற்றிய அவதாரம் க்ருஷ்ண அவதாரம் தான். இராமன் தன்னை மனிதனாகத் தான் உணர்ந்தான். சீதையின் அக்னிப்ரவேசத்தின் பொழுது பல தெய்வங்களும் வந்து மன்றாடுகிறார்கள். "நீ யாரெனவே மறந்தாயா" என்று கேட்பதாகவும், அதற்கு ராமன் "நான் தசரதப் புதல்வன், நான் ஒரு மனிதன்" என்று பதிலுரைப்பதாகவும் தான் புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இராமனும் துக்கம் உணர்ந்திருக்கிறான். பிரிவை உணர்ந்து வருந்தியிருக்கிறான். சாமன்யன்யனைப் போல் பாசத்திலும் கட்டுண்டிருந்திருக்கிறான். சீதையைக் காணாமல் பரிதவித்து துடித்திருக்கிறான். இலக்குவனை மறுபடியும் நாட்டுக்குச் செல்லப்பணித்து, தன்னால் சீதையின்றி உயிர் தாங்க முடியாதுஎன்றே புலம்புவதாக வால்மீகி எழுதியுள்ளார். அலைகடலில் சிக்கிய படகினைப் போல் தவிக்கும் இராமனுக்கு இலக்குவன் ஆறுதல் அளிப்பதாகவே எழுதப்பட்டிருக்கிறது. பாசமும், பந்தமும், மாயையும் அத்தனை ஷக்தி வாய்ந்தவை. "மாயாதீத ஸ்வரூபிணி"யாக இருக்கும் அவள் விரிக்கும் வலையில் இராமனே சிக்கியிருந்தான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.

'கல்கி' வார இதழின் பரிசுப் போட்டி



'கல்கி' வார இதழ் நடத்திய "கௌதம்-வாசுதேவ்-மேனன் கை குலுக்கும் மெகா பரிசுப் போட்டியில்" 'கதாசிரியர் பொட்டியில்' என்னை வெற்றி பெற்றவராக அறிவித்துள்ளனர்,என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டி பற்றிய முடிவுகள் 13.11.2011 கல்கி இதழில் வெளிவந்துள்ளது.


நன்றி.

November 03, 2011

நளனின் சமையல் கலை

(எங்கே பிராமணன் தொடரைத் தழுவியது )






உணவை பக்குவமாகத் தயாரித்து பரிசாரகம் செய்வது விருந்தோம்பலின் முக்கிய குணம். உபசாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. விருந்தினர்களை தெய்வ அம்சமாகக் கருதி உணவளித்தல் அவசியம். சமையல் வல்லுனர்களை அக்காலத்தில் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர்களும் மதாச்சார்யார்கள் பணப் பெற்ற ஏனைய பலரும் ஆதரித்துள்ளார்கள்.


நளனின் அமுதபாகத்திற்கு பின்னால் ஒரு கதை உண்டு. விதர்ப நாட்டு இளவரசி தமயந்தியின் அழகில் மானிடர் மட்டுமின்றி மற்ற லோகத்தவரும் மோகம் கொண்டனர். இந்திரன், அக்னி, வருணன், யமன் ஆகிய தேவர்களும் அதில் அடக்கம். சுயம்வரத்தின் போது தம்மில் ஒருவரை தேர்ந்தெடுக்க நளனையே அவர்கள் தூது அனுப்ப, தமயந்தியோ நளனைத் தவிர வேறு யாரையும் மணக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறாள். நளனைப் போலவே வேடம் தரித்து நால்வரும் சுயம்வரத்தில்பங்கேற்க, தன் அன்புக்குறிய நளனை கண்டுணர்ந்து மாலையிடுகிறாள் தமயந்தி. தேவர்கள் நால்வரும் விட்டுக்கொடுத்து ஆளுக்கு இரு வரம் தருகின்றனர். அதில் ஒன்று யமதர்மன் கொடுத்த வரம். உணவு சமைப்பதில் வல்லுனர் மட்டுமன்றி, ஈடு இணையற்ற சுவைபெற்று திகழும்படி அருளிச் சென்றான்.


அந்த உணவே நளனுக்கு தன் வாழ்வை மீட்டுத்தந்தது என்றால் அது மிகையாகாது. கலிபுருஷனும் தமயந்தியின் பால் ஆசைப்படுகிறான். நளனுடன் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதைக் கேள்வியுற்றதும், அவன் நாடும் நகரமும் சூதாட்டத்தில் அழிந்து போக சாபமிடுகிறான். பனிரெண்டு வருடம் அவன் மாளிகையில் சேவகனாகப் பணியேற்று தக்க சமயம் பார்த்து அவனுள் புகுந்து அழிவை ஏற்படுத்த செயல்படுகிறான் கலிபுருஷன். அதன் பின் அவன் சூதாட்டில் தோற்பதும், தன் மனைவியை பிரியவும் நேருகிறது. வெகு சிரமங்களுக்கும் துன்பத்திற்கும் பிறகு நளனுக்கு தமயந்தி மீண்டும் கிடைக்கிறாள். நளனின் சமையல் பக்குவத்தை உண்ட உடனேயே உருமாறியிருப்பினும் நளனை தமயந்திக்கு அடையாளம் தெரிகிறது.


சமையல் கலை இரு அன்புள்ளங்களை ஒன்று சேர்த்துள்ளது என்பதற்கு இவர்களின் கதையே சிறந்த சாட்சி. The way to man's heart is through his stomach" இவர்கள் கதையைக் கேடு பின்னால் எழுதப்பட்டதோ?



பி.கு: சிங்காரவேலு முதலியார் என்பவர "அபிதான சிந்தாமணி" எனும் புத்தகத்தில் சமையல் உட்பட அறுபத்தி நான்கு கலைகளைப் பற்றி மட்டுமின்றி விஞ்ஞானம், புராணம், மதம், என அனைத்து துறைகளுக்கும் விளங்கங்கள் எழுதியிருக்கிறார். ஏறக்குறைய எந்க்ய்க்லொபெஅடிஅ விற்காக செய்யக்கூடிய வேலையை தனியொரு மனிதனாக பத்து வருடப் உழைப்பின் பலனாக புத்தகத்தைஎழுதி, மிகுந்த சிரமங்களுக்கு உட்பட்டு பிரசுரித்தார் என்று சோ கூறுகிறார்.


இதைப் பற்றிய விக்கிப்பீடியா குறிப்பு இதோ:
http://en.wikipedia.org/wiki/Abithana_Chintamani