November 21, 2010

சின்ன பெண்ணின் புத்திமதி (ஆசிரியர்கள் பகுதி -4)


எத்தனையோ முறை தலை கசக்கி யோசித்தாகிவிட்டது. சில நேரம் நான் மூன்றாம் வகுப்பு படிக்காமலேயே நான்காம் வகுப்பு போயிக்கிறேனோ என்று தோன்றும் (அப்பொழுதெல்லாம் டபுள் ப்ரமோஷன் என்கிற கான்செப்ட் உண்டு). மூன்றாம் வகுப்பின் முகப்பு, வகுப்பு, ஆசிரியைகள், நான் அமர்ந்த இடம், அதை ஒட்டிய எதுவுமே செலெக்டிவ் அம்னீஷியா போல் மறந்தே விட்டது.


ஒரு பெரிய ஹாலில் தடுப்பு உயர பலகைகள் போட்டு நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கள் இருக்கும். ஷாந்தி மிஸ் வகுப்பே எடுத்ததில்லை. பின் எதற்கு வகுப்பருகே சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்ற புதிருக்கு நெடு நாள் கழித்துதான் விடை தெரிந்தது. ·ப்ராக் ரேஸ், லெமன் அண்ட் ஸ்பூன், என பல போட்டிகள் இருந்தாலும் எதிலும் நான் முதலாவதாக வந்ததாய் சரித்திரமே இல்லை. எனக்கும் விளையாட்டிற்கும் காத தூரம். ஷாந்தி மிஸ் ப்ளே க்ரவுண்டில் விசில் ஊதுவதும், பின் போட்டி ஆரம்பிப்பதுமாய் ஸ்போர்ட்ஸ் டேக்கு பயிற்சியில் தீவிரமாய் ஈடுபடுவார். 'ரன்னிங் ரேஸ்' மட்டும் எனக்குப் பிடிக்கும். 'எல்லாரும் எனக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும்' என்று கண்மூடித்தனமான வெறியுடன் ஓடுவேன். பல நேரம் நான் முதல் மூன்று இடங்களைப் பிடித்ததில்லை. என்றாவது ஒரு நாள் இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்தால் கலர் கொடி பிடித்து ரேங்க் பலகைகளில் நிற்க வைப்பது பெருமையாய் இருக்கும். ஒரே ஒரு முறை முதலாய் வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இல்லை மூன்றாவதாகவும் இருக்கலாம். கலர் கொடி பிடித்து நின்றது பெருமையாய் இருந்தது. இதுவெல்லாம் பயிற்சியின் பொழுது தான். ஸ்போர்ட்ஸ் டேயின் பொழுது, நான் வேகமாக ஓடுவதாய் எனக்குத் தோன்றினாலும், எனக்கு முன் நான்கு பேர் ஓடினார்கள், என்று அவர்கள் வெற்றி பெறும் பொழுது தான் தெரியவரும்.

'போட்டேட்டோ ரேஸ்' என ஒரு விளையாட்டு உண்டு. 'பொட்டேட்டோ கேதரிங்' என்றும் கூறுவர். அந்த ரேஸ் எனக்குப் பிடிக்காத ஒன்று. எத்தனை வேகமாய் ஓடினாலும், என்னிடம் இருக்கும் உருளைக்கிழங்கு அப்படியே இருக்கும். பத்து பேர் ஓடினால் நான்கு அல்லது ஐந்தாவதாய்த் தான் வந்திருக்கிறேன். என் கிழங்கை எடுக்கையில் நைசாக, அடுத்தவர்கள் எத்தனை எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதிலேயே நேரத்தை கோட்டை விட்டு விடுவேன். ஒரு வேளை ஷாந்தி மிஸ் சதி செய்து எனக்கு இரண்டு கிழங்கு அதிகம் வைத்திருப்பார்கள் என நானே வழியின்றி என்னைத் தேற்றிக் கொள்வேன்.

ஷாந்தி மிஸ் மேல் தாங்க முடியாத ஒரு பயபக்தி இருந்தது. ஸ்போர்ட்ஸ் டேக்கு ஓடி ஓடி உழைக்கும் ஒரே மிஸ் என்பதால் இருக்கலாம். பள்ளியில் ஐந்தே வகுப்புகள் இருந்ததால், இன்னும் இரண்டு வருடத்தில் படிப்பு முடிந்து விடும் அதன் பின் நாமும் ஷாந்தி மிஸ் போல் ஆகிவிடலாம் என்று நினைப்பேன். ஷாந்தி மிஸ் அட்டைக்கரி கலர். சிரிப்பும் முகமும் படு வசீகரம். அடிக்கடி நாலாம் வகுப்பு மீனாட்சி மிஸ்ஸிடமோ இல்லை வேறு யாராவது டீச்சரிடம் அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள். ஷாந்தி மிஸ்ஸுக்கு கல்யாணம் என்று அரசல் புரசலாய் பேச்சும் இருந்தது. ஐந்தாம் வகுப்பு முடித்ததும் நானும் ஷாந்தி மிஸ்ஸைப் போல் அழகாகி விடுவேன், அப்புறம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கற்பனைக் கோட்டை கட்டியிருந்தேன். ஷாந்தி மிஸ் -நான் முதன் முதலில் ஹீரோயின் வர்ஷிப் செய்த பெண்.

ரேகா என்று ஒரு வகுப்புத் தோழி இருந்தாள். ரொம்ப நெருங்கிய தோழியெல்லாம் கிடையாது. சுமாரான நட்பு. நன்றாகப் படிப்பாள். அவளும் நானும் சில நேரம் ஒன்றாக மதிய உணவு உண்போம். இன்னாருடன் இன்னார் தான் மதிய உணவு உண்ணவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. யாருடன் யார் வேண்டுமானாலும் செட் சேர்ந்து கொள்வோம். ரேகாவும் நானும் சில நாள் ஒன்றாய் உணவு சாப்பிடுவோம். 'அம்மா நான் வளர்கிறேனே, எனவே பள்ளிக்கு உணவு கொண்டு வந்து மானத்தை வாங்காதே ' என்று கட்டளை இட்டதால், அம்மா பள்ளி வருவது நின்றுவிட்டது.


ரேகா எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்குவாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனக்கு அறிவுரை வழங்கவே உலகில் பலர் உருவெடுத்துப் பிறந்திருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்து, இன்றுவரை நண்பர்கள், உறவினர்கள், பால்காரி, தயிர்காரி என இன்னாரென்று இல்லாமல் எல்லாருமே அவரவர் பங்குக்கு அறிவுரை வழங்கிச் செல்வர். திரும்ப எதிர்த்துப் பேசாமல், முப்பத்திரண்டு பல்லையும் காட்டி சிரித்திருப்பதாலேயே எல்லோருக்குமே எனக்கு அறிவுரை வழங்குவது பிடிக்கும்.

'நீ கணக்கு நன்றாய் போட வேண்டும்' (கணக்கு, பிணக்கு, ஆமணக்கு... கட்சி நான்) என்பதில் துவங்கி, 'கௌஷிக், ஷ்யாம் எல்லாம் கெட்ட பசங்க.. அவாளோட சேராத, எதுக்கு பாய்ஸோடலாம் பேசற?' வரை எல்லாம் எனக்கு சொல்லித் தெளிய வைப்பாள்!

இப்படி இருக்கும் ஒரு காலகட்டத்தில் தான் பள்ளி விழா (annual day) வந்தது. அப்பொழுது எல்லார் வாயிலும் முணுமுணுத்தபடி இருந்த பாட்டு

"கடலின கரெ போனோரே
காணா பொன்னென போனோரே
போய் வரும்போ எந்த கொண்டுவரு
கை நிறைய....."

ஷாந்தி மிஸ் இந்தப் பாட்டுக்கு டான்ஸ் செய்ய என்னைத் தான் முதல் சாய்ஸாகத் தேர்ந்தெடுத்தார். 'இவளுக்கு இந்த ட்ரெஸ் போட்டு ஆட வெச்சா ஜோரா இருக்கும்' என்று ஐஸ் வைத்து, முதலில் க்ரூப் டான்ஸில் நடு ஆளாய் ஆட, எனக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள்... ம்ஹூம்! உடம்போ கையோ வளையவே இல்லை. முக பாவம் மட்டும் ரொம்ப நன்றாய் செய்தேன். இருந்தும் சளைக்காமல் ஷாந்தி மிஸ் டான்ஸிலிருந்து நீக்காமல், என்னை கும்பலோடு சைட் டான்ஸ் பண்ணவதற்கு அடுத்து தயார் செய்தார். இன்னும் மூன்று நாள் வேஸ்டானது. எனக்கு நடனம் வரவில்லை என்பது என்னை விட ஷாந்தி மிஸ்ஸுக்கு வருத்தமாய் இருந்தது. மற்ற மிஸ்ஸையெல்லாம் கூப்பிட்டு என்னை ஆடச் சொல்லி காண்பித்தார். எல்லோரும் பரிதாபமாய்ப் பார்த்தனர். ஆங்கில நாவல்களில் "if the earth could open up and swallow me NOW..." என்று வரும். அது போல் இருந்தது என் மன நிலையும்.

'ப்ரபாக்கு டான்ஸ் வராது போல ஷாந்தி. அவளை டான்ஸிலிருந்து எடுத்துடு' என்று ஏகோபித்த வோட் பெற்று, கடைசியில் துரத்தப் பட்டேன். ஷாந்தி மிஸ்ஸுக்கு எப்படியானும் ஒரு டான்ஸில் நான் இருந்தே ஆகவேண்டும் என்ற தீரா ஆசையில், முகபாவம் (பாவம்!!) நன்றாக இருப்பதாய் மீண்டும் வோட்டெடுத்து, அஷ்டலக்ஷ்மி டான்ஸிக்கு, குழந்தையை மடியில் வைத்து உட்கார்ந்திருக்கும் 'சந்தான லக்ஷ்மி' வேடம் தந்தார்கள். ஏதோ வந்ததே லாபம் என்று கடைசியில் புன்னகைத்தபடி சந்தான லக்ஷ்மியாக டான்ஸ் ஏதும் செய்யாமல் பொம்மை போல் வலம் வந்தேன். கடைசியில் மலர் மழை என் மேல் பொழியும். இவ்வளவு அவமானப்பட்டதற்கு இதாவது கிடைத்ததே என்ற சந்தோஷம். மலர் சொரிந்தால் எவ்வளவு இன்பம் என்பது நிஜமாகவே அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

பள்ளி தினத்தன்று சந்தோஷமாகவே சந்தான லக்ஷ்மியாய் இருந்தேன். என் மடியில் உமா மிஸ்ஸின் மூன்று வயதுக் குழந்தை. அலுங்காமல் அவனும், சிரித்தபடி நானும். நன்றாய் இருந்ததாய் பாராட்டும் கிடைத்தது. உமா மிஸ் கூட தன் பையனை மடியில் அமர்த்தியதற்கு சினேகப் புன்னகை பூத்தார்கள்.

கடலினக்கரே விட இது பெட்டர் என்ற 'சீச்சீ இந்த பழம்' தத்துவம் கடை பிடித்தேன் என்றாலும் உள்ளூர ரொம்ப வருத்தமாய் இருந்தது நிஜம். எனக்கு ஏன் நடனம் வரவில்லை என்று நொந்து போயிருந்தேன். சொல் பேச்சு கேட்டு வளையும் படி உடம்பு வைக்காமல் நடனம் ஆடும் ஆசையை மட்டும் வைத்துக்கொண்டு தவியாய் தவித்தேன்.

பிறிதொரு நாள் மீண்டும் நானும் ரேகாவும். "இதுக்கெல்லாம் ஏண்டி வருத்தபடற.. இப்போ நானோ ரவியோ இதமாதிரி மேடைல அழகா பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி நிக்க முடியுமா?" என்றாள்.

ரவியும் ரேகாவும் ஒரே மாதிரியே இல்லை. ரவி நன்றாகப் படிக்க மாட்டான். அதிகம் யாருடனும் பேச மாட்டான். ரேகா நன்றாகப் படிப்பாள். எல்லாருடனும் பேசுவாள். குறைகளை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பாள்.

இருவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை தான். இருவரும் போலியோவினால் பாதிக்கப் பட்டவர்கள்.

சந்தானலஷ்மி ஏதோ ஒரு வகையில் அன்று பாடம் பெற்றாள்!

(இன்னும் வரும்)

November 15, 2010

சிறந்த பதிவர் விருது - மிக்க நன்றி.

என் படைப்புக்காக 'சிறந்த பதிவர்' வழங்கிய திரு. வி. ராதாக்ருஷ்ணனுக்கு என் பணிவான நன்றி. இதுவே வலை உலகில் எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்.

என் இறைவன் க்ருஷ்ணனுக்கே இந்த மகிழ்ச்சியை சமர்ப்பிக்கிறேன்.

வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

November 09, 2010

திருவிளக்கு வழிபாடு - ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து)


திருவிளக்கு மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது. நல்ல காரியங்கள் எது நடந்தாலும் விளக்கு ஏற்றுவதை நல்ல சகுனமாக பாவிக்கிறோம். விளக்கை அகமாக பாவித்து அங்கு ஞான ஒளி ஏற்படுவதை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். விளக்கு சுற்றுபுறத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அகத்தில் இருள் அகற்றி, ஞானத்தை, விவேகத்தை வழங்கும் விளக்கை வழிபட்டு ஸ்தோத்திரம் பல உண்டு. விளக்கேற்ற கற்பூரத்தை திருத்தி திரியாய் செய்து உபயோகிக்கலாம். வெறும் துணியை திரியாக்கியும், உபயோகிக்கலாம் அல்லது துணியில் சந்தனம் தடவி திரியாய் உபயோகப்படுத்தலாம். பஞ்சுத் திரியில் ஏற்றிய விளக்கும் விசேஷம். விளக்கை எந்த நேய் கொண்டு ஏற்றினால் சிறப்பு என்று மறை நூல்கள் குறிப்பிடுகின்றன.


காரம்பசுவின் நெய் கொண்டு ஏற்றும் விளக்கே மிகச் சிறப்புடையகும். உடல் கருப்பாகவும் மடி வெளுப்பாகவும் இருக்கும் பசுவை காரம்பசு என்று கண்டுணரலாம். அதற்கடுத்தபடியாக பசுநெய் கொண்டு விளக்கேற்றலாம். ஆட்டு நெய் கொண்டு விளக்கேற்றுவதும் சிறப்பு. இறுதியாக நல்லெண்ணை விளக்கு சிறப்பிக்கப்படுகிறது. வெப்பம் எண்ணையோ ஆமணக்கு எண்ணையோ எருமை நெய்யிலோ ஏற்றுவது உசிதம் அல்ல. ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெவ்வேறு நெய்/எண்ணை உசிதம்.

தினசரி வீட்டு வழிபாடுகள் முதல் கோவில் வழிபாடு வரை, விளக்கு இல்லாமல் துவங்குவதில்லை, விளக்கு இல்லாமல் முற்றுபெறுவதும் இல்லை. மின் விளக்கெல்லாம் வந்த பிற்பாடும் பசு நெய், எண்ணை விளக்குகள் ஏற்றினால் தான் திருவிழாக்களும் மங்கல நிகழ்ச்சிகளும் நிறைவு பெறுகிறது. தீபாவளி, கார்த்திகை தீபம் என்று தீபத்திற்கு சிறப்பாய் திருநாளின் பேரில் போற்றிக் கொண்டாடுகிறோம். தீபம் மேல் நோக்கியே இருப்பதால், நம் வாழ்வின் நோக்கமும் உயர்வும் லக்ஷியமும் கூட மேல் நோக்கி உயர்ந்த எண்ணங்களால் இருக்க வேண்டும் என்று பாடம் புகட்டுகிறது திருவிளக்கு.

திருமூலரின் திருமந்திரம், ஐம்புலன்களை வென்றோர் அப்புலன்களையே விளக்காக்கி வழிபடுவதை உணர்த்துகிறது. நம் உடம்பே ஆலயம் என்றால், அங்கு புலனடக்கம் செய்த ஞானி அப்புலன்களையே விளக்காக்கி இறைவனை வழிபடுகிறான். புலன்களை இவ்வாறு ஞானத்தால் எரித்து விடுகிறான் (not in literal sense) என்றும் கொள்ளலாம்.

உள்ளம் பெருங்கோவில்
ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காலா மணிவிளக்கு

விளக்கு பூஜைகளிலும் தினம் வீடுகளிலும் படிக்கப்படும் திருவிளக்கு அகவல் /ஸ்லோகம் படிக்க : சுட்டுக

November 01, 2010

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)

போதுமென்ற மனமே பொன் மனம். போதும் என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக போராடிக் கொண்டே இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் திருப்தி பெறுவதில்லை. இன்னும் இன்னும்...இன்னும் இன்னும்... பெயரா? புகழா? பணமா? அந்தஸ்தா? இன்னும் சிந்தையை குளிர்விக்கும் அத்தனை வஸ்துவும் போதும் என்று நாம் நினைக்காத வரை நீண்டு கொண்டே போகிறது. எங்கே முற்று புள்ளி வைக்க வேண்டும்? அடி முடி காணாது நீளும் ஆசைகளுக்கு போதும் என்ற மனம் எப்பொழுதுமே வராது, நாமாக அதை அடக்காத வரை. அளவான இருவேளை சோறு, உடுக்க இரு துணி. படுக்க இடம். இவை போதும் சாதகனுக்கு.

ஆனால் பிள்ளை குட்டி ஆகிறது. பாதுகாப்பு, வீடு கட்ட வேண்டும். படிக்க வைக்க வேண்டும். பணம் வேண்டும். பணம் என்று வந்தவுடன் போதும் என்ற எண்ணம் என்றுமே வருவதில்லை. அவனை விட நான் பணபலம் பெற வேண்டும். அவனுக்கு இரண்டு என்றால் எனக்கு நான்கு... நீண்டு கொண்டே போகிறது. பணத்தோடு புகழ் / படை பலமும் வேண்டும். ஆள் அந்தஸ்து அவனுக்கு கௌரவத்தைக் கொடுக்கிறது. எப்படிப்பட்ட அந்தஸ்து என்பது ஆளவிட முடியாதது. சாதாரணமானவனுக்கு ஜில்லா பணக்காரன் ஆகவேண்டும் என்பது லக்ஷியம். அப்புறம் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. கடைசியில் ஹிட்லரைப் போல் உலகை ஆட்டுவிக்க எண்ணுகிறான். தரணையை ஆண்டவன் அண்ட சராசரத்தையும் ஆள எண்ணுகிறான்.

* ராஜாக்கள் ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டதெல்லாம் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.

* சாதரணர்கள் ஆகிய நாம் இன்னும் இரண்டு வீடு கட்டிக்கொண்டு பிள்ளைகளுக்காக சேர்த்து, அவர்கள் சௌகரியம்.... பேரன் பேத்திகளுக்காக மீண்டும் பணம்....இதுவும் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.

* ஒவ்வொரு இலக்கும் லக்ஷியமும் கூட நம்மை உயர்த்திக்கொள்ள நாம் பிரயத்தனப்படுவது. நம் புகழுக்காக, பேருக்காக, உயர்வுக்காக. அந்தஸ்துக்காக.

* இதையும் தாண்டி ஒருவன் உலக நன்மைக்காக வாழ்கிறான் என்றால் (அப்படி வாழ்பவர்கள் மிக மிக குறைந்து வருகிறது) அங்கும் அவர்களின் மனதில் மூலையில் ஒரு இடம் "அங்கீகாரம்" எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறது.
"போதும்" என்பது "எவ்வளவு பெரிய நிலை எய்தினாலும்" சாத்தியப்படுவதில்லை. போதும் என்ற மனம் உண்மையான ஞானிக்கு சித்திக்கிறது. எனக்கு இது போதும். இவ்வளவு இருக்கும் போது கிடைக்கும் திருப்தி தான் மிக அதிக அளவில் கிட்டிய போதும் கிடைக்கிறது. ஆக மகிழ்ச்சி மனத்தில் இருக்கிறது. "போதும்" என்ற நிறைகின்ற மனத்தில். இப்படிப்பட்டவனின் மனம் கட்டுக்குள் நிற்கிறது. அவன் உதிர்க்கும் சொற்களும் கூட கட்டுக்குள் நிற்கிறது.

ஒரு கலந்துரையாடலில் இருவகையானோர் பேசாது மௌனம் காப்பார். ஒன்று, தனக்கு எதுவுமே தெரியாத புரியாத மூடன், இன்னொன்று, எல்லாம் அறிந்ததால், அங்கு பேச எதுவுமே இல்லை என்ற நிலையில் ஞானி. இருவரும் பார்வைக்கு ஒன்று. செயலில் ஒன்று. ஆனால் அறிவில் இருவேறு துருவங்கள்.

போதும் என்ற நிறைந்த மனத்தின் தன்மையை எடுத்திருக்கும் பட்டினத்தார் பாடல்:


உடை கோவணம் உண்டு
உறங்கப் புறந்திண்ணையுண்டு
உணவிங்கு அடைகாய் இலையுண்டு
அருந்த தண்ணீர் உண்டு
அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு
இந்த மேதினியில்,
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?

உணவுண்டு. உடையுண்டு. உறங்க திண்ணையுண்டு. நீர் உண்டு. வாயால் உரைப்பதற்கு தித்திக்கும் இறைவன் திருநாமம் உண்டு. வேறு என்ன வேண்டும்!! என்கிறார்.

அப்படியே ஒருவன் போதுமென்ற மனம் கொண்ட ஞானியாய் வாழ்ந்தாலும் அவனை பாடாய் படுத்த எத்தனை பேர்! ஆபுத்திரனுக்கு வராத சோதனையா? இறைவனை அடைய முற்படுவோர், முதலில் இறைவனை "அன்னமயமாய்" பார்கிறார். அன்னத்திலிருந்தே யக்ஞம். அதனின்று மழை. மழை கொணருவது பயிர். பயிரால் உயிர். ஆக உயிர்க்கு ஜீவ நாடி அன்னம். முதலில் பிரம்மத்தை ஜீவ நாடியான அன்னமாய் பார்க்கிறான். உணர்கிறான்.

அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்,
அஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னாத:

நானே அன்னம். அன்னத்தை நுகர்பவன் நானே. என்கிறது ஸ்லோகம்.

அன்னத்தை த்வேஷிக்காதே என்று உபதேசித்தலில் துவங்கி, அன்னம் வழங்கும் இறைவனை லக்ஷ்மி ரூபமாய் காண்கிறோம். அன்னத்தை தனியே உண்பது சிறப்பன்று. பிறருக்கும் வழங்கி பின் உண்ண வேண்டும். பக்தர்கள் பலர் முன்னாளில் அடியார் ஒருவருக்கேனும் அன்னம் வழங்கிவிட்டே உணவு உண்பதை வழக்கமாகக் கொணடிருந்தனர். ஆபுத்திரனும் அப்படித்தான். யாரிந்த ஆபுத்திரன் ? பெற்றோர் நிர்கதியாக்கிவிட ஆவினால் (பசுவினால்) காக்கபட்டவர் வளர்க்கபட்டவர். அதனால் ஆபுத்திரன் என்று பெயர் வந்தது. அவர் பிக்ஷை எடுத்து ஜீவனம் நடத்துகிறார். கிடைத்த பிக்ஷையில் பசியையும் பொருட்படுத்தாது ஊனமுற்றவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வழங்குகிறார். இதனால் மனம் மகிழ்ந்து சரஸ்வதி தேவி அவருக்கு அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை வழங்குகிறாள். இது கிடைத்ததும் அவர் மிகவும் மகிழ்ந்து வாரி வாரி வழங்கிறார். தேவேந்திரன் இவரின் மனப்பக்குவத்தைக் கண்டு வரம் கொடுக்க எண்ணுகிறான்.

"தன்னிடம் இருப்பதே போதும், வேறென்ன வரம் வேண்டும்" என போதுமென்ற மனதோடு வரத்தையும் மறுத்துவிடுகிறார். இந்திரனுக்கு அஹங்காரம் குட்டுப்படுகிறது. உடனே அவர் கோபம் கொண்டு அந்நாடெங்கும் சுபீஷம் உண்டாக்குகிறார். ஆபுத்திரனுக்கு கொடுப்பதற்கு இருந்தாலும், எங்கும் சுபீஷம் நிலவுவதால் வாங்குவதற்கு யாருமே இல்லாமல் ஆகிவிடுகின்றது. இன்னொருவருக்கு கொடுக்க முடியாததால் அவரும் அன்னம் உண்ணாமலேயே இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று கப்பலில் வந்த பிரயாணிகள் கூற அவர்களுக்கு உணவளிக்க பிரயாணிகளுடன் அந்நாடு நொக்கி புறப்படுகிறார். நடுவே ஒரு தீவில் களைப்பாற மீண்டும் பிரயாணிகள் கப்பலேறிய போது ஆபுத்திரனை மறந்துவிட்டு கப்பல் புறப்படுகிறது. தன்னந்தனி தீவில் மக்கள் யாருமின்றி, அன்னம் கொடுக்க ஒருவரும் இல்லாததால், அக்ஷய பாத்திரத்தை ஜலத்தில் விட்டு விட்டு, தானும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அமுதசுரபி என்று பெயர்பெற்ற இப்பாத்திரமே மணிமேகலையில் கையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. போதும் என்ற உயர்ந்த குணம் உடையவனுக்கும் கூட எப்பேர்பட்ட சோதனை!