October 25, 2010

சாபம்-பாபம்-கர்மா - (சோவின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)

"போன ஜன்மத்து பாவம் / கர்மா" போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துபவர்கள் அறிவிலிகள். இவற்றில் நம்பிக்கைகள் உடையவர்ளாக நாம் இருக்கும் பட்சத்தில் நம்மை பத்தாம்பசலிகளாக பாவிக்கும் நிலைமையே பெரும்பாலும் இன்றைய விஞ்ஞான சமுதாயத்தின் மேதாவிலாசத்தில் மிளிர்கிறது. இவை ஒரு புறமிருக்க, அவரவர் கர்மவினையின் பேரிலே கூட பலருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை, இதில் முன்னோர்கள் செய்த பாவம் நம்மை தாக்கும் என்பதெல்லாம் ஆதாரமற்றவை என்று புறம் தள்ளிவிடுகிறார்கள்.

கர்மவினை என்பதன் பேரில் நம்பிக்கை வைத்தாலும் கூட அவனவன் செய்த கர்மவினை (நம்பினோருக்கு) அவனை மட்டுமல்லவா பாதிக்க வல்லது? இதில் முன்னோருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

கர்ம பலாபலன்களில் ஓரளவு நம்பிக்கை கொண்ட பலராலும் நம்பப்படும் விஷயம் ஒன்றுள்ளது. ஒருவன் வீட்டு உப்பைத் தின்றால் (உணவு உண்டால்) அவனுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை. கர்மா என்பதே கொடுக்கல்-வாங்கல் கணக்கு தான். முன்னோர்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், அவர்களின் உதிரம், உடல், மரபணுக்கள் அத்தனையும் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் தம் உதிரத்தில், பங்கு கொடுத்திருக்கிறார்கள். (அல்லது நாம், நம் கர்மாவினால் அதில் பங்கு எடுத்துக்கொண்டோம்) அவர்கள் வளர்த்து விட்ட அன்னை தந்தை நமக்கு சோறூட்டுகிறார்கள். அவர்கள் அசையும் அசையா சொத்துக்களில் பங்கு கேட்கிறோம். அவற்றை ஆண்டு அனுபவிக்கிறோம். அதே போல் அவர்கள் சம்பாதித்த வினைகளிலும் நமக்கு பங்கு உண்டு.

முன்னோர்களின் சாபம் நம்மை பாதிக்க வல்லது. முன்னோர்களுக்கு கொடுக்கபட்ட சாபமும் அவர்களின் காலத்தில் பலிதம் பெறவில்லையென்றால் நம்மை வந்தடையும் சாத்தியக் கூறுகள் உண்டு. சாபங்களோ வாழ்த்துக்களோ பலித்து விடுவதும் கூட "எவர் வாயினிலிருந்து அது புறப்படுகிறது" என்பதை பொருத்து அமையும். சாதாரண மனிதன் சொல்லும் பயனற்ற சொற்களுக்கு வலிமை அதிகம் இராது. சற்றே மேன்மையுடைவனோ, அல்லது சுத்தமான ஆன்மாவின் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு இன்னும் வலிமை அதிகம். இறைவனுக்கு ஒப்பானவர்களோ ரிஷிகளோ, தபஸ்விகளோ சொல்லும் சொற்களுக்கு அதிர்வுகளும் அடர்த்தியும் அதிகம்.

தபஸ்விகளோ, பரிசுத்தமானவர்களோ சொற்களை உதிர்த்துத் தான் சாபம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேன்மையானவர்கள் பலரும் மன்னிக்கும் மறக்கும் தன்மை படைத்தவர்கள். எனினும், அவர்கள் சற்றே மனவேதனை அடைந்தாலும் அவர்களின் எண்ண அலைகளுக்கு அதற்கு அதீத ஷக்தி உண்டு.

ரிஷிகளும் தபஸ்விகளும் சதா சாபம் கொடுப்பதே வேலையாக்கிக் கொண்டு கொந்தளிக்கும் மனதுடன் இருப்பவர்கள் அல்ல. பல நேரங்களிலும் பலரும் அமைதியும் ஷாந்தமும், மன்னிக்கும் கருணை உள்ளமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். சமீகரின் மன இயல்பு இதற்கு சிறந்த சான்று. பரிஷீத் மஹராஜாவின் ஆட்சி காலத்திலே கலியுகம் துவங்கியதாக பேசப்படுகிறது. பரிஷித், பன்றி வேட்டையாடி அதனை துரத்தியபடியே காட்டினுள் சமீகர் என்ற மஹரிஷியின் குடிலுக்குள் செல்கிறார். சமீகர் சிறந்த தபஸ்வி. அன்றைய தினம் அவர் மௌன விரதம் அனுஷ்த்திருந்தார். பேச்சு கொடுக்கும் தன்னிடம் பதிலுரைக்காதிருந்த மஹரிஷியின் மௌனத்தை அஹங்காரமாக தவறாக எண்ணி வெம்புகிறார் ராஜா. பல முறை பேசியும் முனிவரோ அமைதியாய் இருக்கவே, கோபம் மேலிட்ட பரிஷித், செத்த பாம்பு ஒன்றை சமீகரின் கழுத்தில் மாலையாய் தொங்க விட்டு விட்டு தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இதனை அரிந்த சமீகரின் மகன் கடும் கோபம் கொண்டு பாம்பினால் தீண்டபட்டு மன்னர் இறக்க வேண்டும் என்று சாபம் இட்டுவிடுகிறான்.

ரிஷியின் மௌனத்தின் காரணத்தை தெரிந்து கொண்ட ராஜா, மிகவும் மனம் வருந்தி, தனக்கு இச்சாபம் சரியானதே என்று பலவாறு மனம் வெம்புகிறான். நல்ல குணம் நிரம்பப் பெற்ற அப்பேர்பட்ட மஹராஜாவும் கடும் கோபம் கொண்ட க்ஷண நேரத்தில் தவறிழைத்து விடுகிறான். முனிவரோ இவருக்கும் ஒருபடி மேல் அல்லவா! தபஸ்வி ஆயிற்றே! சமீகரோ தம் மகனை கூப்பிட்டு பலவாறு கடிந்து கொள்கிறார். ராஜா என்பவனின் இறப்பு பிரஜைகளை பாதிக்கும். பரிஷித்தைப் போல் மிகவும் நல்ல அரசனாக இருந்து விட்டால் அவன் இழப்பு பலருக்கும் ஈடுசெய்ய முடியாதது. தபஸ்வியாகப் பெற்றவர்கள் கோபத்தை அடக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் தபஸ்வி என்று சொல்லிக்கொள்வதிலோ ரிஷி, ஞானி என்று சொல்லிக்கொள்வதிலோ ஒரு பயனும் இல்லை. மன்னிக்கும் குணம் அற்றவனும், முன் கோபம் கொள்பவனும் செய்யும் தபஸ் வீணாய் போவது கண்கூடு.

விஸ்வாமித்ரர் தம் கோபத்தால் பல முறை தபஸின் பலனை இழந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ராஜஸ குணம் நிரம்பப் பெற்றவர். ஒவ்வொரு முறை அவரின் அஹங்காரம் தலைதூக்கும் போதெல்லாம் சபித்து விடுகிறார். இதனால் அவர் பலவருடம் சேமித்து வைத்த ஷ்ரேயஸும் தபஸும் அதன் பலனும் வீணாய் போக, மீண்டும் கடும்தவம் இயற்றும்படி ஆகிறது. வலிமைக் கூடிய தபஸ்விகளின் சாபத்திற்கும் மன வருத்தத்திற்கும் மிக அதிக வீர்யம் உண்டு.

உயர்ந்த ஆன்மாக்களை பணிந்து அவர்களை மரியாதை செய்து தம் வாழ்நாளைக் கழிக்கும் ஒருவனுக்கு அதன் அருமை பெருமை தெரியாத மனையாளோ மக்களோ வாய்த்தால் அவன் பாடு வருந்தற்குறியது. ராமானுஜரின் சரித்திரம் ஒரு பாடமாய் அமைகிறது. திருக்கச்சி நம்பி என்ற ஒருவரை தம் குருவாய் ஏற்க ராமானுஜரின் மனம் வெகுவாக விரும்பியது. அவரோ ராமானுஜருக்கென வேறு ஒரு குரு வாய்ப்பார் என்று சொல்லிவிடுகிறார். நம்பியின் அருளுக்காக ஏங்கும் ராமானுஜர், அவரை வீட்டுக்கு உணவு உண்ண அழைத்து, அவர் உண்ட மீதத்தை உண்டு அதன் பலனைப் பெற எண்ணுகிறார். ராமானுஜர் கோவிலுக்கு சென்று வருவதற்குள் நம்பி வீடு வந்து உணவும் உண்டு வேறு காரியமாக விடைபெற்று சென்று விடுகிறார். வீட்டில் ராமானுஜரின் மனைவி, நம்பி உண்ட இலையை தீண்டத் தகாத ஒருவனுக்கு கொடுக்கப்படும் மரியாதையுடன் கழியை கொண்டு தள்ளிவிடுகிறாள். மனம் மிகவும் வருந்திய ராமானுஜர் மனைவிக்கு அறிவு புகட்டி இனிமேலும் அப்படி செய்யல் ஆகாது என்று கேட்டுக் கொள்கிறாள். குரங்கு புத்தி மனதை அவ்வளவு எளிதில் அறிவுரையின் பேரில் மாற்ற முடியுமா? அவரவர்கள் உதிரத்தில் இருக்கும் அஹங்காரமும், குணநலனும் தொடர்ந்து வந்தபாடாகவே இருக்கும். மனதை அடக்க சாமான்யன் வாழ்கை வாழும் ஒருவனுக்கு சாத்தியம் அல்ல. மீண்டும் ஒரு முறை ஏழை விஷ்ணு பக்தனை உணவு இல்லை என்று விரட்டியடிக்கிறாள். மறுபடியும் ராமானுஜர் புத்தி கூறி இப்படி செய்யாதே என்று வேண்டிக்கொள்கிறார். அதன் பின் பெரியநம்பி என்பவரை தம் குருவாக ஏற்கிறார். அவரும் அவர் பத்தினியுமாய் இராமானுஜர் வீட்டிலேயே தங்கியிருக்கின்றனர். இதற்கெல்லாம் பெரிதும் உடன்படாவிட்டாலும் வேறு வழியின்றி வாழ்ந்து வந்த ராமானுஜரின் மனைவிக்கு, சிறு சம்பவம் கூட எரியும் கொள்ளியை மேலும் சீண்டி சண்டையில் முடித்து விடும்படி வாய்க்கிறது. பெரியநம்பியின் மனைவி சண்டையை வலுக்காமல் பதிலேதும் கூறாமல் இருக்கிறாள். பெரியநம்பியும் அவர் மனைவியும் மௌனமாய் வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். காரணம் அறிந்த ராமானுஜரின் மனம் மிகவும் பாடுபடுகிறது. அவர் மனைவியை ஏதோ ஒரு காரணம் சொல்லியோ சொல்லாமலோ பிறந்தகம் அனுப்பிவிட்டு நேரே கோவிலுக்குச் சென்று சன்யாசம் ஏற்கிறார். "கூறாமல் சன்னியாசம் கொள்" என்பது இது தான் போலும். ஒத்த கருத்துள்ள தம்பதியாக இராவிட்டால், இருவரின் குறிக்கோளும் வெவ்வேறாக இருந்தால், குணநலன் பொருந்தாமல் இருந்தால், இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதே நல்லது.


மனிதர்களும் தேவர்களும் ஒருவருக்கு ஒருவர் திருப்தி செய்து வாழ்கையை வாழ்வது இயற்கை அமைத்த நியதி. யக்ஞங்கள் மூலம் தேவர்களை மனிதன் திருப்தி செய்வதும், அவர்கள் சுபீக்ஷம், மழை மூலமாக பூமியை குளிர்வித்து மனிதனை திருப்தி செய்வதும் பொருந்தும். இது செய்யாத போது தேவர்களின் சாபம் பூமியைப் பீடித்து இயற்கை வளம் அற்றுப் போகிறது. இப்படியெல்லாம் செய்தும் கூட தொடர்ந்து தர்மம் தோற்றும் அதர்மம் தழைத்திருக்கும்படியும் நேரிட்டால் பூமியின் அதர்மத்தின் பாரம் தாங்காது அழிவு ஏற்படுகிறது. அவ்வப்பொழுதெல்லாம் இறைவன் அவதரிக்கிறான் என்பது ஹிந்து மதம் அல்லாது வேறு பல மதங்களின் நம்பிக்கையும் கூட. 'அதர்மம் அழித்து தர்மத்தை காக்க நான் யுகம் தோறும் தோன்றுவேன்' என்று இறைவன் கூறுகிறான். சில அவதாரங்களுக்கு வேறு பல காரணமும் உண்டு. விஷ்ணுவை பிருகு முனிவர் சபித்து விடுகிறார். சாபம் மனிதனை மட்டும் பீடிக்கும் விஷயம் அல்ல. சாபம் என்றால் "கோபத்தில் உதிர்த்த சொல்". எவர் வாயிலிருந்து புறப்படுகிறது என்பதைப் பொருத்து சாபத்தின் மகத்துவம் மாறுபடும். பெரிய முனிவரின் சாபம், பிரபஞ்சத்தில் பலரும் உணரும்படியான பெரிய அதிர்வூட்டி, இராம அவதாரமாக உருவெடுத்தது. தேவாசுர போரின் போது அசுரர்களுக்கு பிருகு மஹரிஷியின் மனைவி தம் தபஸின் பலனால் ஷக்தி வழங்குகிறாள். அதனால் கோபமுற்ற விஷ்ணு அவளை சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்து விடுகிறார். இதனால் துணுகுற்ற பிருகு மஹரிஷி, பூமியில் பிறந்து மனைவியின் பிரிவால் அவதியுறுமாறு கோபத்தில் சொற்களை உதிர்த்து விடுகிறார். பெரிய மஹரிஷியின் சாபதிற்கும் கட்டுப்பட்டு அதர்மம் அழித்து தர்மம் தழைக்கவுமாய் இராமாவதாரம் தோன்றியது.

October 22, 2010

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியை வழிபடும் நவராத்திரி நாள்களில், முதல் மூன்று நாள்கள் துர்கைக்கும், நடு மூன்று நாள்கள் லக்ஷ்மிக்கும், கடை மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் விசேஷமாய் கொள்கிறார்கள்.


ஆதிபராஷக்தியே க்ரியாஷக்தி (துர்கை), இச்சாஷக்தி (லக்ஷ்மி), ஞானஷக்தியாய் (சரஸ்வதி) விளங்குகிறாள். துர்கை தனது அம்சமான அம்பா, காத்யாயினி, பார்வதி என எண்ணற்ற வடிவங்கள் கொண்டவளாய் நம்மை ஆட்கொள்ள வருபவள். அதில் ஒன்று தான் 'காளிகாதேவி'யின் அம்சம். இவளின் புறத்தோற்றம் மிகுந்த சர்ச்சைக்குறியதாகவும், அதிர்ச்சியூட்டுவதாயும் அமைந்திருக்கிறது. அண்டசராசரங்களையே ஆடையாய் அணிந்திருக்கும் இவள், 'திகம்பரி'யாய் வலம் வருகிறாள். 'ஷாக்தம்' அல்லது ஷக்தி வழிபாட்டின் முறையில் வந்தவர்களுக்கு காளி குலதெய்வமாக விளங்குகிறாள். ஐம்பது மண்டையோடுகளின் மாலைகளை அணிந்து, ரத்தவெறியுடன் மயானப் பிரதேசங்களில் உலா வருகிறாள். தலைமுடி கட்டுக்கடங்காமல் விரிந்து இருக்க, அழிவின் பிரதிபிம்பமாய் புனையப்படுகிறாள்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், போர் மூண்டபோது, துர்கை தனது அதீத ஷக்தியான காளிகாதேவிக்கு உயிர் கொடுத்ததாய் சொல்லப்படுகிறது. காளிகாதேவி, அசுர வடிவங்களை சம்ஹாரம் செய்து, மாலையாக்கி கோர தாண்டவம் புரிகிறாள். பிரளயத்தில் ஒரு யுகமே முடிந்த அறிகுறியுடன், கோர தாண்டவம் ஆடுகிறாள். தன் பணி முடிந்ததும் தெரியாமல் அவள் அழிவில் மூழ்கியிருக்கும் போது, சிவன் ஒரு குழந்தை உரு கொண்டு மயானத்தில் தோன்றுகிறார். குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அவள் வெறியும் கோபமும் அடங்கி, இறப்பின் நடுவில் பிறப்பின் தத்துவத்தை உணர்த்துபவளாய் அதைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுவதாய் புராணம் கூறுகிறது.

காளியே பின்பு 'பத்ரகாளி'யாக சாந்த உருப்பெற்று அருள்பாலிக்கிறாள். 'பத்ர' என்றால் சௌபாக்யம் அருள்பவள் என்று பொருள் கொள்ளலாம். கோப வடிவமாக இருக்கும் அன்னையை ப்ரீதி செய்தால் உடனே இளகி அருள்பாலிக்கிறாள். இதனால் காளிகாதேவிக்கு ஷக்தி அதிகம்.

கல்கத்தா காளியைத் தவிர, தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஒரு காளி கோவில் இருக்கிறது. திருச்சியைத் தாண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற ஸ்தலத்தில், 'மதுரகாளியம்மன்' கோவில் இன்றும் பல பக்தர்களின் வழிபாட்டுடன் சிறந்து விளங்குகிறது.

பல பக்தர்களுக்கு குலதெய்வமாய் விளங்கும் அன்னையின் திருக்கோவில், திங்கள் வெள்ளிகளில் மட்டுமே திறந்திருக்கிறது. மாவிளக்கு போட வருவோரின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. அங்கிருக்கும் கிணற்றடியில் குளித்து, அங்கேயே மாவிளக்கு இடித்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். குளிக்க, மாவிடிக்க என எல்லாவற்றிற்கும் வசதி கோவிலிலேயே இருக்கிறது. தற்போது இன்னும் விஸ்தாரமாய் உடை மாற்ற சுற்று மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கள் பெற்றோருக்கும் இவளே குலதெய்வமாகையால், நானும் சில முறை இத்திருக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை சிறப்பு பூஜை செய்ததால் கர்ப்பக்ரஹத்திற்கு அருகில் அமரும் பேறு கிட்டியது. உடுக்கை ஒலிக்க அம்மனை பூஜை செய்து அழைக்கும் பொழுது சிலிர்ப்பு உண்டானது நிஜம்.

மதுரகாளியின் ஸ்தல வரலாறு, சுவாரஸ்யமாகவும், மூன்று வித்தியாசமான கதைகள் கொண்டதாகவும் இருக்கிறது. சிலர், மதுரையை கண்ணகி எரித்த பிறகு, மதுரையில் வாழ் காளிதேவி, மதுரையை விட்டு, சிறுவாச்சூரில் கோவில் கொண்டாள் எனக் கூறுகின்றனர்.

வேறொரு கதைப்படி, ஐந்து ரிஷிகள் மலையில் தவமியற்றிக் கொண்டிருந்தனர். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காளிகாதேவியை வணங்கி வந்தனர். அவளும் மனமிரங்கி இவர்களுக்கு அருள் பாலிக்க, அங்கிருக்கும் ஒரு மரத்தடியில் குடிகொண்டு தாங்களின் பூஜையை ஏற்கவேண்டுமென காளிதேவியை வணங்கி கேட்டுக்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் பூஜிக்கும் போது, மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்த தேன், ரிஷிகள் வாயில் விழுந்ததாகவும், அதனால் 'மதுர' காளி என்ற பெயர் வழங்கப்பட்டதாய் இன்னொரு கதை கூறுகிறது.

பலரால் நம்பப்படுவதாக இருக்கும் வேறொரு புராணக்கதைப்படி, செல்லியம்மன் என்ற தெய்வம் முன்பு இக்கோவிலில் குடிகொண்டிருந்தாள். ஒரு சமயம், மந்திரவாதியின் மாயத்தில் சிக்கி அவனுக்கு அதிக வரம் கொடுத்துவிட்டதால், அவனிடம் அவதியுற்று அடிமையாய் இருந்து வர நேரிட்டது. மதுரையை எரித்து கால்போன போக்கில் சுற்றிக்கொண்டிருந்த கண்ணகிக்கு, சிறுவாச்சூரில் அவள் தேடிய நிம்மதி கிடைத்தது. செல்லியம்மனின் இந்த நிலையைக் கண்டதும், காளியிடம் முறையிட்டு, செல்லியம்மனை வேறு இடத்திற்குத் தாற்காலிகமாய் சென்றுவிடுமாறு கூறிகிறாள். செல்லியம்மனும் சம்மதித்து, பெரியசாமி மலையில் கண்ணகியுடன் இருக்க, அத்திருக்கோவிலில், அன்று காளி குடிகொள்கிறாள். அன்றிரவு காளி, மந்திரவாதியை சம்ஹாரித்து அருள்பாலித்த பிறகு, செல்லியம்மன், காளியை அங்கேயே தங்குமாறு பணித்து, தான் மீண்டும் பெரியசாமி மலைக்கே சென்று விட்டதாய்க் கூறுகின்றனர். இன்றும் வரும் பக்தர்கள், மலையில் இருக்கும் செல்லியம்மனையும் தரிசித்துவிட்டுத் தான் செல்கின்றனர்.

காளி என்பவள் கொடுமைகளையும், அரக்க குணங்களையும் ஈவு இரக்கமின்றி அழிப்பவள். கேட்டினை அழிக்கும் வடிவத்தின் உருவகமே காளிகாதேவி. உக்ர தெய்வங்களிடம் பக்தியுடன் முறையிட்டால், அவர்கள் விரைவில் அருள்பாலிப்பார்கள் என்று கூறப்படுகிறது. காளிகாதேவியின் கோர வடிவத்தின் ஆழத்தில் இருக்கும் அன்பு அன்னையைக் கண்டு, அவளின் அருளுக்குப் பாத்திரமாவோம்.

யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் - நிந்தன்
செயல்கள் அன்றி இல்லை.

-மஹாகவி பாரதி.

October 20, 2010

தவலை அடை / தவலை தோசை

தவலை தோசை
________________
1. அரிசி, து.பருப்பு, மிளகு(optional), முதலியவற்றை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.

2. தேங்காய்த் துருவல், தயிர், ஜீரகம், பச்சை மிளகாய்(பொடியாய் நறுக்கியது) முதலியவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

3. வாணலியில்(குழிவு வாணலி) சிறிதே எண்ணை விட்டு, ஒரே ஒரு தோசை வார்த்து, அதை மூடி வேக விடவும்(திருப்பிப் போடுதல் வேண்டாம்).

4. சூடான தக்காளி-வெங்காய சட்னி, அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பறிமாறவும்.

5. பாராட்டைப் பெறவும். (hehe)

தவலை அடை
_____________

செய்முறை ஒன்று
~~~~~~~~~~~~~~
1. அரிசி உப்புமா அல்லது பிடி கொழுக்கட்டைக்கு உள்ள சாமான்களை அரைவேக்காட்டில் வேக வைக்கவும்.

2. குழிவு வாணலியில், சிறிதே எண்ணை விட்டு, வடைபோல் தட்டி, மேல் புறம் மூடி வேக விடவும்.

3. பொட்டுப் பொட்டாய் நீர் மேல் இருந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். முறுகலான அடிபாகத்துடனும், மெதுவான மேல்பாகத்துடனும், தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.

செய்முறை இரண்டு
~~~~~~~~~~~~~~~
1. அரிசி உப்புமா மாவை, உப்புமா செய்வதற்கு முன்பே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

2. அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கடுகு, பெருங்காயம், ஜீரகம் முதலியவை தாளிதம் செய்யவும்.

3. நீர் சேர்த்து சற்றே கரகரப்பாய் கலந்து வைத்துக்கொள்ளவும்

4. குழிவு வாணலியில் ஒன்றொன்றாய் விட்டு, இருபுறமும் *நிறைய எண்ணை விட்டு* shallow fry செய்து எடுக்கவும்.

5. எதையாவது தொட்டுக் கொண்டு சாப்பிடவும். :D

சின்ன சின்ன எனக்குத் தெரிந்த சமையல் டிப்ஸ்


குறிப்புகள்

1. நிறையவே பேச்சுத் தமிழ்ல எழுதிருக்கேன். அப்போ தான் ரெசிபி எழுத வரும்.
2. எனக்கும் சமைக்கத் தெரியும் என்று நினைவு படுத்திக் கொள்ள இப்பதிவு...
3. மங்கையர் மலர், தோழி, சினேகிதி ன்னு தமிழ் பத்திரிகைகள் நியாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.
4. ஏறக்குறைய தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு நான் எழுதிய டிப்ஸ் தெரிந்திருக்கும் :))))) சும்மா பொஸ்ட் கணக்குக்கு எழுதியதாக எண்ணி மன்னித்துவிடுங்கள்.

******கொழுக்கட்டை செய்ய வரவில்லையா?

கவலையை விடுங்கள். அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக(தோசைமாவு பதத்துக்கு) அரைத்து, கிளறிப்பாருங்கள். பந்து போல் உருண்டு வரும். அப்புறம் சொப்பு செய்வது நம் கைவண்ணம் தான். குயவனின் ஆர்வத்தோடு மாவை எடுத்து மெல்லியதாய் செய்யுங்கள். வாயில் போட்டால் கரையும் கொழுக்கட்டை தயார்.

******பாகற்க்காய் செய்தால் குழந்தைகள் ஓடுகிறார்களா?

பாகலை பாதியாய் வெட்டி, கொட்டை எடுத்து அதில் வெங்காயம் தக்காளி ஸ்ட·பிங் வைத்து நூல் போட்டு கட்டி, பின் வதக்குங்கள். சுவையான பாகல் தயார். 'அம்மா எனக்கு தினமும் பாகல் தான் வேணும்ன்னு அடம் பிடிப்பாங்க குழந்தைகள்'

******குடைமிளகாய் ஸ்ட·பிங்க்கு,

முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்ட·ப் செய்து சமையுங்கள். குண்டு குண்டாய் குடைமிளகாய் சமைத்த பின்பும் கண்கவரும்(நாக்கையும் கவரும்)

******வட இந்திய சமையல் செய்யும் பொழுது(ஒரு பஞ்சாபி தோழி கூறியது)சிறிதே சிட்டிகை(அரை ஸ்பூன்) சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும்.

******முருங்கைக்காயில் ரசமும் வைக்கலாம்.

தக்காளியுடன் ஐந்து பீஸ் பிஞ்சு முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும் ருசியும் ஊரைக்கூட்டும்.

******பரோட்டா செய்யும் பொழுது ( உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிஃபளவர் எதுவாக இருந்தாலும்)

ஸ்ட·பிங் dry ஆக இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மூள்ளங்கி பரோட்டாவுக்கு, அதன் தண்ணீரைப் பிழிந்து அதிலேயே மாவு பிசையலாம். தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்ட·பிங் செய்து பரோட்டா செய்தால், எல்லோரும் பாராட்டுவர். நிமிடத்தில் காலியாகிவிடும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்.

******வெங்காயம் நறுக்கினால் அழுகை வருகிறதா?

இனி வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். oxidize ஆவதால் நிகழும் அழுகை குறையும்.


********ஆரோக்கியத்தை வரவேற்கலாமே!**********

!!!!வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அதில் சத்து அடங்கியிருக்கிறது. முடிந்தால் வேறெதிலாவது சேருங்கள். இல்லையெனில் குடித்துவிடுங்கள்.

!!!!கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பே உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

!!!!முடிந்தவரை, artificial drinks(coke etc), preservatives இருக்கும் packed foods போன்றவற்றை வாங்காதீர்கள். வாங்கும் முன், கலரோ, ப்ரிசர்வேடிவோ இருக்கா எனப் பார்த்து வாங்குங்கள்.

!!!! தினம் இரு பல் பூண்டு, முழுங்கி வாருங்கள், fatal முதல் சாதாரண வியாதி வரை எதுவுமே அண்டாது(பி.பி கூட ;))

October 13, 2010

பிடிக்காமல் பொன நவராத்திரி


நவராத்திரி என்றாலே அலங்காரங்கள், பூக்கோலங்கள் ரங்கோலிகள் என்று கண்முன் பல காட்சிகள் விரியும். சிறு வயது முதல் எனக்கு நவராத்திரி என்றாலே பிடிக்காது. என்ன பெண்பிள்ளை, இப்படிப் பேசுகிறாளே என்று நீங்கள் எண்ணலாம்.


நவராத்திரியில் அவரவர் திறமைகளைக் காண்பிப்பதில் பெண்கள் போட்டி போட்டுப் பெருமிதம் கொள்வர். எங்கள் வீட்டில் ஏழு படிகள் கட்டி கொலு வைக்கும் வழக்கம் உண்டு. தினம் ஒரு சுண்டல். வெள்ளிக்கிழமைகளில் அம்மா புட்டு செய்வாள். முதல் நான்கு நாட்கள் பூக்கோலம், அடுத்த மூன்று நாள்கள் கலர் கோலம், என அம்மாவும் நானும் பெரிய பெரிய கோலங்கள் போடுவோம். கிட்டத்தட்ட பனிரெண்டு வயது வரை, ராதை வேடம், 'மாமி' வேடம், வனதேவதை வேடம் என எனக்கு விதவிதமாய் வேடம் புனைந்து விடுவாள் அம்மா. இரவு ஒன்பது மணிக்கு மேல் பத்து சிறுவர்கள் குடிசைப்பக்கதிலிருந்து 'மாமி சுண்டல் மாமி' என்று மணியடிப்பார்கள். அவர்களுக்கென நிறையவே சுண்டல் செய்து தினமும் கொடுப்போம். எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது பின் ஏன் நவராத்திரி பிடிக்கவில்லை என்று நானே யோசித்த பொழுது நவராத்திரியில் பிடிக்காதவைகளைப் பட்டியலிடத் துவங்கினேன்.

முதல் முக்கிய காரணம் எனக்குத் தாவணியோ பாவாடையோ அணிவது பிடிக்காது. வற்புறுத்தலின் பேரில் அணிந்து கடுப்புடன் வெளியே வந்தால், 'அட! தாவணி போட்டுருக்கியே! நவராத்திரின்னா தான் தாவணி போட்டுப்பியா' என பக்கத்து விட்டு மாமி கமெண்ட் அடித்து இன்னும் வெறுப்பேற்றுவார்.

வீட்டிற்கு வரும் மாமிகள்(அம்மாவின் தோழிகள்) 'கொலு' பார்த்துவிட்டு சும்மா போக மாட்டார்கள். 'இது எங்க வாங்கினீங்க?' 'புடவை என்ன விலை' 'என் மாமியார் தொல்லை தாங்கலை' என்று கோவிலில் வம்படிப்பது போல், கொலுவில் கொலுவிருக்கும் அம்மனைத்தவிர வேறு எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்கள்.

இரண்டு வாண்டுகள் கூட வரும். அவர்களைப் பாடச் சொல்வார்கள். அது மிரண்டு விழிக்க, அம்மாக்கள் விழியாலேயே மிரட்டி, 'இப்போ பாடலைன்னா வீட்டுக்கு வந்தா மொத்து தான்' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்ப்பார்கள். பரிதாபமாய் இரண்டும் பாடும். அதில் ஒரு குழந்தையின் குரலோ திறமையோ அதிகமிருப்பின் அடுத்த அம்மாளுக்கு முகம் சுருங்கிவிடும். 'என் பொண்ணும் பாடுவா, இன்னிக்கு மூட் இல்லை' என்று பெண்ணிற்கு ஆதரவாய்ப் பேசுவார். (வீட்டுக்குப் போனால் செமர்த்தியாய்த் திட்டு இருக்கும்).

நவராத்திரியின் போது அறிந்த அறியாத உறவினர் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் கொடுப்பது வழக்கம். நானும் என் தோழியும் பக்கத்து வீடுகளுக்கு அழைக்கச் செல்வோம். நவராத்திரி வருவதற்கு முன்பே பாட்டு டென்ஷன் வந்து விடும். குறைந்தது பத்து பாட்டு பாடிப் பார்த்துக்கொள்வோம். கோடி விட்டில் ஒரு மாமி இருப்பார். அவர் வீட்டிற்கு தினமும் செல்லவில்லை என்றால் கோபம் வரும். அதனால் ஒன்பது விதமான பாட்டுடன் தயாராய் இருப்போம். 'பாடு' என்று சொல்வதற்கு முன், நாங்களே சாவி கொடுத்த பொம்மை மாதிரி பாடிவிட்டு, பயபக்தியோடு அந்த மாமியைப் பார்ப்போம். நாங்கள் பாடும் போதே இன்னும் இரண்டு குட்டிகள் வரும். அவற்றையும் பாடச் சொல்லி மாமி படுத்துவார். அந்த குட்டிகள் நெளிய, மாமியோ 'பாடினால் தான் சுண்டல்' என்று கறாராகப் பேசுவார். வேடிக்கைக்குச் சொன்னாலும் கூட, சுண்டலுக்குப் பாட வந்த லெவலுக்கு எங்களைத் தள்ளி விட்டாரே என்று கோபம் வரும். பாட்டு தெரியாது என்று சொல்லும் குழந்தைகளையும் குறைந்தது 'ஜனகனமன' பாட வைக்காமல் அனுப்ப மாட்டார். ஒரு முறை, பாடச் சொன்னவுடன் ஒரு குட்டி, 'சுண்டல் வேண்டாம் மாமி, நாங்க பாடலை' என்று சொல்ல, நாங்கள் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துவிட்டோம். மாமி எங்கள் வீட்டில் வந்து கோள்மூட்டி விட, அம்மாவுக்கு என் பேரில் வருத்தம். அவர்கள் வீட்டைத் தாண்டி செல்லும் பொழுது, நாங்களும் தப்பித்து ஓடி விடவேண்டும், என்று அடிமேல் அடி வைத்து, சத்தமிடமால், குனிந்து கொண்டே நடப்போம். அப்படியும் மாமி கண்ணில் பட்டுவிடாமல் தப்ப இயலாது. வேறு யாராவது அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும், மொத்த கும்பலாக வெளியே நின்று, அழைக்க வந்த நபரை மட்டும் உள்ளே அனுப்பி, சில நாள் தப்பித்ததுண்டு.

ஒரு நாளுக்கு ஒரு பாடல் என்று ஒன்பது பாடல் பழகிக்கொண்டிருப்போம். ஒரே நாளில் ஐந்து வீடு அழைக்கச் சென்றால், ஐந்து வீட்டிலும் அதே பாட்டு! தப்பித் தவறி, அந்த வீடுகளில் தென்பட்ட முகங்கள் வேறு வீடுகளிலும் அன்றே தென்பட்டால், அதே பாட்டை நாங்கள் பாட, அவர்கள் கேலியாய் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, ரொம்ப அவமானமாய் இருக்கும். ஒரு வாண்டு ஒரு முறை 'அக்கா சுதா மாமி ஆத்துலையும் இதே பாட்டு தானே பாடின' என்று பகிரங்கமாகவே மானத்தை வாங்கிவிட்டது.

என்னுடைய சித்தி பெண்ணை ஒரு முறை அடுத்த தெருவில் உள்ள வீட்டிற்கு நவராத்திரிக்கு அழைத்து செல்ல நேரிட்டது. அந்த வீட்டில் என் வயதொத்த ஒருவன் இருப்பான். தெருவில் போகும் போதும் வரும் போதும் பாட்டுப் பாடி வம்பிழுக்கும் 'ரௌடி' என்று நான் அவனைப் பற்றி கருவிக்கொண்டாலும், அவர்கள் வீட்டிற்கு, கொலுவிற்காக அழைக்கச் செல்வதிலிருந்து தப்ப முடியாது. என் சித்திப் பெண்ணை அழைத்து சென்ற அன்று, அவனுடைய அம்மா, "கொழந்தை பாடுவாளா?" என்று சித்திப் பெண்ணைப் பற்றிகேட்டார். அவளும் இல்லை என்று தலையாட்ட, நான் மட்டும் வழக்கம் போல் பாட அரம்பித்தேன். அடுத்த அறையிலிருந்து அவனும் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது எனக்குத் தெரியும். அவசரமாய் முடித்து ஓடிவிடலாம் என்று நினைத்து, நான் பாடி முடித்து கிளம்பிக் கொண்டிருக்க, என் சித்திப் பெண்ணோ, "மாமி! நான் டான்ஸ் ஆடுவேன், ஆனா அக்கா பாடணம்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். 'நீ பாடினாத்தான் உண்டு, உன் பாட்டை யாரு கேட்டா, கொழந்தை ஆட்டத்துகாக பாடு' என்று மாமி கட்டளையிட மீண்டும் நான் பாடி அவள் ஆட்டம் தொடர்ந்தது. என் நிலையை நினைத்து எனக்கே பரிதாபமாய் இருந்தது. தெருவில் இறங்கி நடக்கையில் 'ஏய், உன் பாட்டைவிட அவ டான்ஸ் நல்லா இருந்தது' என்று ஜன்னலில் இருந்து அந்த 'ரௌடி' கிண்டலுடன் கத்தினான்.

அடுத்த நாளோ 'மாமி' வேடமிட்டு அந்தப் பையன் வசிக்கும் தெருவிலேயே இன்னொரு வீட்டுக்கு அழைக்கச் செல்ல வேண்டியிருந்தது. வாசலில் நின்று கொண்டு, 'ஓ மாமி வேஷமா.. மாமி, கண்ணாடி போடாத மாமி! உன் ஜோடியக் காமி!' என்று பாடிக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான். ரொம்ப அழுகையாய் வந்தது. மறுநாள் அடம் பிடித்து ராதை வேடம் போட மாட்டேன் என்று மறுத்து எனக்கு பனிரெண்டு வயதாகிறது என்பதை என் அம்மாவுக்கு நினைவூட்டினேன். ஒரு வழியாக நவராத்திரிக்கு வேடம் புனைவது நின்றது.

தினம் குறைந்தது பத்து விதமான சுண்டல் பொட்டலம் கிடைக்கும். எது யார் வீட்டு சுண்டல் என்பது மறந்துவிடும். குத்து மதிப்பாய் இந்த சுண்டல் இந்த மாமி தான் செய்திருப்பார் என்று நாங்களே தீர்மானித்து விடுவோம். கொலுவின் ஹைலைட்டே "தேங்காய் மூடிப்பைகள்" தாம். பத்து வீட்டுக்கு கலெக்ஷன் செல்வதால் தேங்காய் சுண்டலுக்காக வலுக்கட்டாயமாய், ஒரு பை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். தெருவில் போகும் பசங்களெல்லாம் 'வந்துட்டாங்கப்பா கலெக்ஷனுக்கு' என்று சிறுமைப்படுத்திவிடுவர்.

இப்படி பல சோதனைகளுக்கு உள்ளாகி, ஒன்பது நாள் தேவி வழிபாடு செய்தால், ஒன்பதாம் நாள் அன்று அவள் அருள் பாலித்து படிக்க முடியாமல் செய்து விடுவாள். அதாவது சரஸ்வதி பூஜை. ஒரே குஷியாக இருக்கும். அப்பாடா! இன்று, புத்தகத்தைத் தொடவேண்டாம்! படிக்க யாரும் வற்புறுத்தவும் முடியாது.

மறு நாள் விஜயதசமியன்று, ஒவ்வொரு புத்தகத்திலிருந்து இரண்டு பக்கம் படிக்கச் செய்து, ஈடு செய்து விடுவாள் அம்மா. அன்று பாட்டு வகுப்புக்கு ஒரு மணி முன்பே சென்று பாட்டு மாமி வீட்டை அலங்கரித்து, மூன்று மணி நேரம் சந்தோஷமாக பாடுவோம். நாங்கள் சீனியர் என்பதால், ஜூனியர் குழந்தைகளை அதட்டி வேலை வாங்குவது சந்தோஷமாக இருக்கும்.

இப்பொழுதெல்லாம், நவராத்திரி என்றால் நண்பர்கள் கூடும் நல்ல பண்டிகை என்ற நினைப்பு மேலிடுகிறது. அம்பாளுக்கு தினம் ஒரு பாடல் நானே பாடி, இங்கு வரும் தோழிகளுடன் பேசும் போது, அட இப்படித் தானே அம்மாவும் பேசியிருக்கிறார்கள் என்று புரிகிறது. ஆசையாய் தைத்த பாவாடையை வலுக்கட்டாயமாய் இன்று என் பெண்ணுக்கு அணிவிக்கும் போது, அம்மா அணியச் சொல்லிய தாவணி நினைவு வருகிறது. வீட்டிற்கு வரும் குட்டிப் பெண்களைப் பாடச் சொல்லும்போது இப்படித் தானே அந்த மாமியும் என்னை பாடச் சொன்னார்கள் என்ற நினைப்புடன் புன்னகைக்க முடிகிறது. எனக்கு சிறு வயதில் பிடிக்காத நவராத்திரியை வேறு கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொண்டு விட்டேன். வேடமிட்டு வீடுவீடாய் சென்ற நாங்கள் இப்பொழுது ஆளுக்கொரு மூலையில் இருக்கிறோம். எங்களைக் கிண்டல் செய்தவர்களெல்லாம் குடியும் குடித்தனமுமாக அதே ஊரில் வசிக்கிறார்கள். ஊருக்குச் சென்றால் மரியாதையான புன்னகையை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு நகர்கிறோம். எங்களைப் பாடச் சொல்லி வற்புறுத்திய மாமி மட்டும் நிரந்தரமாய், காண முடியாத இடத்திற்குச் சென்று விட்டார்.

இப்பொழுது நினைத்தாலும் கிட்டாது, அந்த இனிய நவராத்திரி நாள்கள்!

(மேலே உள்ள படம் எங்கள் வீட்டு கொலுவின் ஒரு பகுதி)

October 05, 2010

நின்றால் - நடந்தால் - பேசினால் குத்தப்படும் ஜாதி முத்திரை (ஆசிரியர்கள் - பகுதி 3)

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெங்கும் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

என்று பாடினார் பாரதி. அதன் அர்த்தத்தை, பாட்டின் இன்னிசையிலே புகுத்தி ஊட்டியவர்கள் என் பெற்றோர்கள். எனக்கு ஜாதி பார்க்கத்தெரியாது. ஏனெனில் ஜாதி என்று ஒன்று இருக்கிறது என்பதே என் மனதில் வெகு நாள் வரை பதிந்ததில்லை. அப்படி ஒன்று இருப்பதாக தெரிந்த பிறகும் யாரிடமும், ஜாதியைப் பற்றி பேசுவதும் இல்லை. அதன் அவசியமும் இருந்ததாக தோன்றியதில்லை.

சோனியாவும், மிதாவும், பினு ஃபெர்னான்ண்டஸும் பள்ளியில் என்னருகேதான் மீன் உண்பார்கள். எனக்குக் குமட்டியதில்லை. அது தீட்டு என்று தோன்றியதில்லை. அவர்கள் மீன் உண்ண, அவர்கள் அருகில் தோள் உரசிய படி நானும் புளியோதரையை எந்த விதக் காழ்ப்புணர்ச்சியும் இன்றி உண்டிருக்கிறேன்.


எங்களுடன் ஹேமா என்ற வகுப்புத் தோழியும் அவ்வப்பொழுது உணவு உண்ண வருவாள். மற்றவர்கள் கொண்டு வரும் உணவை வெளிப்படையாக முகம் சுளித்துப் பழிப்பாள். ஒரு நாள், மிதா ஆம்லெட் கொண்டு வந்ததை தோசை என்று ஏமாற்றி, ஹேமாவை உண்ணச் சொன்னாள். அவளும் தோசை என்றே நம்பி, அதை ரசித்து, சப்புக் கொட்டிப் பாராட்டினாள். இந்த அநாகரீகத்தைக் கண்டித்து நான் நன்றாக திட்டினேன். அதற்கு அவர்கள் தந்த பதிலோ, 'எங்கள் அருகே அமர்ந்து எங்கள் சாப்பாட்டை மட்டம் தட்டிப் பேசுகிறாளே எங்கள் மனது புண்பட்டிருக்காதா?' நியாயம்தான். நியாயம் இவர்கள் பக்கம் இருந்ததாகத் தோன்றியதால், அது பற்றிய பேச்சைப் பிறகு எடுக்கவில்லை. அதன் பின்னரும், அவள் எங்களுடன் ஒருநாளும் உண்ண வரவில்லை. புலால் உண்ணாததும், உண்பதும் ஜாதியையொட்டி பார்ப்பது மிக வினோதமானது. புலால் உண்பதற்கும் அல்லது உண்ணாமல் இருப்பதற்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம்?

பினு ஃபெர்நாண்டஸ், க்ருஸ்மஸ் அன்று என்னை வீட்டிற்கு அழைத்திருந்தாள். எனக்காக அவள் ஒரு துண்டு கிருஸ்துமஸ் கேக் வைத்திருந்தாள். கொறிப்பதற்கு பாகற்காயை அவள் அம்மா வறுத்து வைத்திருந்தாள். 'இதில் முட்டை இல்லை. உனக்காக முட்டையின்றி கேக் செய்யச் சொன்னேன். சாப்பிடுவாயா?'' ரொம்பத் தயங்கி என்னிடம் தட்டை நீட்டியபடி கேட்டாள். என் உணர்வுகளை மதித்து, முட்டை இருப்பதால் கேக் சாப்பிட மாட்டேனோ என்ற எண்ணத்தால், எனக்காக தனியே செய்து வைத்திருந்த அவள் நட்பு என்னை நெகிழ்த்தியது. கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. 'கேக் மட்டும் கொடுத்து அனுப்பிவிடுவாயா என்ன? நான் உன் வீட்டில் தான் இன்று உண்ணப் போகிறேன்' என்றேன். ஆண்டி செய்த பாகல் வறுவல் போல், அம்மா என்ன, யாருமே அத்தனை ருசியாய் செய்ததில்லை. நான் வளர வளர ஜாதியற்ற சிந்தனையும் வளர்ந்தது. கூடவே நான் வித்தியாசமானவள் என்ற நினைப்பும்.

ஜாதி என்பதன் தாக்கம் சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் வரை செல்லும் என்பது கல்லூரி நாட்களில் நிறையவே தெரியவந்தது. வேதம் புதிது அருமையான படம். அதன் கருத்தும்நடிப்பும் பிடித்திருந்தது. குறிப்பாய் சிறுவனின் நடிப்பு. அவன் பிராமணச் சிறுவனாய் நடித்தான் என்பதால் இல்லை.ஒரு சிறுவன் நன்றாய் நடித்திருக்கிறான் எனும் பொதுவான எண்ணத்தால்.

"வேதம் புதிது படத்தில் அந்தப் பையன் நன்றாக செய்துள்ளான் இல்லையா" என்றேன் என் தோழியிடம். தோழிக்கோ சொல்லப்பட்ட சிந்தனையல்லாது, ஜாதி மட்டும் நன்றாகவே புரிந்திருந்தது. 'ஆமாமாம் உனக்கு அந்த சீன் புடிக்கத்தானே செய்யும். நீ பிராமின் இல்லையா' என்றாள் சிரித்தபடி. ஜாதியின் தீவிரம் எப்படி இளைஞர்களையும் யுவதிகளையும் விட்டுவைக்காமல் தாக்கியுள்ளது எனப்புரிந்தது. கள்ளமில்லாத குணத்திற்கு அன்று தான் கிடைத்தது முதல் சாட்டையடி. நான் பார்க்கத் தவறிய கோணத்தில் அவளால் பார்க்க முடிந்தது. நடிப்பை, திறமையை, செயலை, சொல்லவரும் எண்ணத்தையெல்லாம் தாண்டி அங்கு ஜாதியைத்தான் அவளால் பார்க்க முடிந்தது.

அப்பொழுது தான் எனக்கு முதன்முதலாய் கர்வம் தலை தூக்கியது. நான் மிகவும் வித்தியாசமானவள். என் சிந்தனை சிறந்தது எனும் லேசான கர்வம். என் மேல் எனக்கே நிரம்ப பெருமை. நான் பார்க்கும் கோணங்கள் மேலும், எண்ணங்கள் மேலும் எனக்குத் தாங்கொணாப் பெருமை. ஜாதியில்லை என்று சிந்திப்பதே 'மாண்புமிகு' செயல் என்று நினைப்பதால் வருவது. இதுவும் ஒரு வகையில் தவறுதான். இப்படிப் பட்ட எண்ணம், வேறூன்றியது என்றால் அதற்குக் காரணம் சுற்றுப்புறச்சூழலில் உள்ள மற்றோர்களின் சிறுமை எண்ணங்கள். இந்தக் கர்வம் பல வருடங்கள் தொடர்ந்தது.

திருமணமான புதிதில், எங்கள் அடுக்கு மாடியில் இருக்கும் சில தோழிகளிடம் நட்புப் பூண்டிருந்தேன். ஜாதியைப் பற்றி நான் என்றும் பேசியதில்லை. அவர்கள்தான் என்னிடம் கிண்டல் செய்வார்கள். 'உங்கள் பிராமணர்களுக்கு என்றுமே தலைகனம் உண்டு' என்பதில் துவங்கி பல விஷயங்களை சுட்டிக் காட்டுவார்கள். எல்லாவற்றிற்கும் சிறு புன்னகையைத் தவிர பதிலேதும் கூறியதில்லை. அவர்கள் புலால் உண்டால், என் வீட்டில் வந்து உண்டால் கூட, என் அருகிலேயே அமர்ந்து ஒட்டி உறவாடி உண்டால் கூட எனக்கு அதில் சங்கோஜமோ வெறுப்போ இருந்ததில்லை. பிராமணர்களின் சில பண்பை தவறு என்று நானே அவர்களிடம் ஒப்புக்கொண்டிருக்கிறேன். என் மேல் அவர்கள் நல்ல அன்பு வைத்திருந்தனர்.

அன்று என் வீட்டில் பண்டிகை. கோலமிட்டுக் காவியிட்டுருந்தேன். என் சிந்தித் தோழி ஒருத்தி சமைக்க மட்டன் வாங்கி வந்திருந்தாள். என்னை வம்பு செய்வதற்க்காக, வாசலில் கோலத்தின் அருகே, சற்று உட்புறமாய், மட்டனை கவருடன் வைத்துவிட்டு 'உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் பார்' எனக் கூவிச் சிரித்தாள். என்னெவெனப் புரிந்த பிறகு அதிராமல், கத்தாமல், எடுத்துப் போகும் படி, பொறுமையாய் கூறினேன். பின் எனக்குப் பண்டிகை, வாசல் முகப்பு என்பது எங்களைப் பொருத்த வரை மிக புனிதமான விஷயம், அதில் செத்த ஆட்டை கோலத்தின் அருகில் வைத்தது எனக்குப் பிடிக்கவில்லை என்று நிதானமாய்க் கூறினேன். இது ஜாதியைத் தாண்டிய நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம்.

அவளுக்குப் புரிந்தது. அப்படியே அதை கொண்டு வெளியில் ோட்டவள், என்னை நோகடித்ததற்கு இனி பத்து நாள் புலால் உண்ணப் போவதில்லை என்று தெரிவித்தாள். எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. இவ்வளவு தன்னை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று பத்துமுறை கூறியும் அவள் கேட்கவில்லை. இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தோழி என்னிடம் மெதுவாய் கேட்டாள். 'உனக்கு புலால் அவ்வளவு பிடிக்காது என்றால், எங்களையெல்லாமும் புடிக்காதா? நாங்கள் உன் நெருங்கிய தோழிகள் இல்லையா? எங்களை நீ தான் புண்படுத்திவிட்டாய்'

'உன்னை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள். என் வீட்டில் விசேஷ தினங்களில் புலால் வாசலில் இருப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை'. என்றேன். நானும் அவர்களைப் புண்படுத்தியிருக்கலாம். இன்றும் இவர்களெல்லாம் எனக்கு மிக மிக நெருங்கிய தோழிகள். பாசமும் அன்பும் பரிமாறிக்கொள்கிறோம். எங்கோ தவறு நிகழ்கிறது. ஜாதிகள் இல்லை என்று மனதால் நம்பி, சம மனப்பாங்கோடு பார்க்கும், என் போன்ற சிலருக்கும், சில நேரம் அவமதிப்பே ஏற்படுகிறது.

'ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்'


சரிதான். மறுக்கவில்லை. குல உயர்த்தி இருப்பதாக நினைத்துக்கொண்டு, உயர்ந்த குலத்தவர்களாய்ச் சிலரைக் கற்பித்துக் கொண்டு, அவர்களை மட்டம் தட்டுவோரை என்ன சொல்வது? விட்டுக்கொடுப்பதாலேயே, குட்டப்படவேண்டுமா என்ன?

பேசும், சிந்திக்கும் ஒவ்வொரு கோணத்திலும் ஜாதி தலை காட்ட வேண்டுமா? நெடு நாளானது புண் ஆற. பிறகு இன்னும் ஆழமாய்ச் சிந்தித்துப் பார்த்தேன். 'நான், எனது' என்ற எண்ணம் மறையவேண்டும். அதுதானே உயர்ந்த தத்துவம்? யார் எந்த ஜாதியை மட்டமாய் பேசினால்தான் என்ன? அதனால் எனக்கு ஏன் வருத்தம் ஏற்பட வேண்டும்?

பிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணன் ஆகமாட்டான். எவன் ஒருவன் பிரம்மத்தைத் தியானிக்கிறனோ அவனே பிராமணன்.பிராமணனாய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் தான் என்ன?

நமக்கென ஒரு கோட்டை வரைந்து வைத்திருப்பதில் தப்பில்லை. அதை மற்றோரை தாண்டச் சொல்லாமல் இருப்பதிலும் தப்பில்லை. அது தாண்டப்படும் பொழுது, அது மன்னிக்கப்பட வேண்டும். அன்றலர்ந்த தாமரையாய், முகம் கருகாமல் இருக்கவேண்டும். தன் வீடு, தன் மக்கள் தன் சாதி என்னும் தொன்னை உள்ளம் உடைய வேண்டும். சாதிப் பெருமை பேசாததாலும், சமத்துவமாய்ச் சிந்திப்பதாய் நினைத்துக் கொள்வதாலும், எனக்குள் எனக்கே தோன்றும் கர்வம் உடைய வேண்டும்.

'காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெங்கும் நாமன்றி வேறில்லை'


இன்னொரு கர்வமற்ற பரிமாணத்துக்கான முயற்சி.(இன்னும் வரும்)

October 04, 2010

வாஸ்து சாஸ்திரம்

(சோ-வின் எங்கே பிராமணன் பகுதி-2லிருந்து தொகுக்கப்பட்டது)


ஒவ்வொரு பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் சுவாரஸ்ய கதை, நிகழ்வு அல்லது நியதி கோர்க்கப்பட்டிருக்கும். ஜோதிட சாஸ்திரத்தைப் போலவே நம்பிக்கையுடன் பின்பற்றப்படுவது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து சாஸ்திர வல்லுனர்களை நாடி வீட்டிற்கு ஹோமமும் ஷாந்தியும் செய்த பின்னரே குடிபெயரும் பழக்கம் பலரிடம் நிலவி வருகிறது.

ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி வாஸ்தோத்வன் எனப்படும் வாஸ்து அதிபதி ஈஸ்வரனின் அம்சம். அவன் கருணா மூர்த்தி. நல்லன எல்லாம் நடத்திக்கொடுப்பவன். அவனை வேண்டியும் அவன் அருளை துதி பாடும் ஸ்தோத்திரங்கள் உள்ளன, எனினும், வாஸ்து புருஷனைப் பற்றி ஆகம சாஸ்திரத்தில் வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் கொடூரம் நிறைந்தவன், அவனுக்கு ஷாந்தி செய்து திருப்தி செய்யவிட்டால், நம்மை ஆட்டுவிக்கக் கூடியவன் என்பது இன்னொரு நம்பிக்கை.

அரக்கனை அழிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்க, அவரின் வியர்வை துளியிலிருந்து தோன்றியவன் வாஸ்து புருஷன் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. அரக்கனை அழித்த பின்பும் அவன் குரூரம் கட்டுக்குள் அடங்காமல் போக, சிவன் அவனை தன் காலடியில் அமிழ்த்தி, அஹம் அழிக்கிறான். வாஸ்து புருஷன் சிவனிடம் தஞ்சம் புகுந்த பிறகு, மனிதர்களுக்கு நிறைவும், செல்வமும் அருளி நிற்கும் வாஸ்து அதிபதியாக்கி பூமிக்கு அனுப்பப்படுகிறான். அவனை வணங்கி நிற்போருக்கு அருள் பாலிக்கிறான் என்று கூறுகிறது.

இன்னொரு சாராரின் கருத்து படி வாஸ்து புருஷன் கட்டுக்கடங்காமல் போன போது தேவர்கள் பலரும் அவனை அமுக்கி வீழ்த்தியதாகவும், அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு தேவன் அதிபதியாகி அமுக்கியதால் அந்தந்த பாங்கங்களை அந்த தேவதைகளைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். தன் தோல்வியை வேண்டி நின்ற அவனுக்கு வருடத்தில் எட்டு நாட்கள் முழித்திருக்கும் வரமும் அதிலும் பிரத்தியேகமாக சில மணிகளே அவன் முழித்திருப்பான் என்று வரமருள்கின்றனர். வாஸ்து புருஷனின் அருளை சம்பாதிக்காதவர்களை அவன் பலவாறாக சோதனைக்கு ஆட்படுத்துகிறான் என்பது நம்பிக்கை. வாஸ்து புருஷனின் தலை - கிழக்கு நோக்கி ஈசான்ய மூலையிலும், கால் - தென் மேற்கு மூலையிலும் அமைந்திருக்கிறது. இவனை திருப்தி படுத்திய பின்னரே கட்டிட வேலைகளைத் துவக்கி எந்தெந்த இடங்கள் எந்தெந்த திசை நோக்கி இருக்க வேண்டுமோ அப்படி அமைத்தால் சுபீஷம் நிலவுவதாக கருத்து.

தேவலோகத்தில் கட்டிட கலையில் நிபுணராக அதிபதியாக கருதப்படும் மயனே தேர்ந்த வாஸ்து சாஸ்திர நிபுணன் என்பதால் அவனே வாஸ்து புருஷனாக பாவிக்கப்படுகிறான் என்றும் வேறு கோணமும் உண்டு.

கட்டிடங்களின் கட்டமைப்புகளை சாஸ்திரமாக வழங்கி வருவது சைனாவிலும் feng shui என்ற பெயரில் கடைபிடிக்கபடுகிறது. விஞ்ஞான முறைப்படியான விளங்கங்களுடன், வானவியல் சாஸ்திரத்தின் தொடர்போடு அலசி ஆராய்ந்து, பாஸிடிவ் அதிர்வுகள் அலைகளை வரவேற்க வல்லதாய் அமைத்துக் கொள்கிறார்கள். சிரிக்கும் புத்தர் சிலையோ, மீன் தொட்டியோ சரியான் இடத்தில் வைக்கப்பட்டால் சுபீஷம் தரும் என்பதும் இவ்வழக்கத்தின் நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரமும், feng shui-ம் நிறைய இடங்களில் சற்றே வேறுபடுகிறது.சாஸ்திரம் எது எப்படியாயினும், நம் சுற்றுப்புற சுழலின் அமைதிக்காக சிறு பிரார்த்தனையுடன் கட்டிட வேலைகளைத் துவங்கி, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே எல்லா சாஸ்திரங்களிலும் அவற்றின் அதிபதியாகவும் விளங்குகிறான் என்ற தெளிந்த அறிவுடனும் பணிவுடனும், குடிபெயர்ந்த பின்பும், தினமும் கூட இறைவழிபாட்டை மேற்கொண்டால், இல்லமும், சுற்றுப்புறமும், இன்பமாய் அமைத்திட எளிது.