March 08, 2016

சத்தமின்றி செய்யப்படும் சாதனைகள்

பெண்ணின் அடையாளம் அவள் சிறகுகளின் எழுச்சி. எப்பொழுதெல்லாம் சிறகை விரித்து பறக்க அனுமதிக்கப்படுகிறாளோ அப்பொழுதெல்லாம் பெண் சுவாசிக்கிறாள்.



சாதனை என்பது பெரியதாய் இமாலயமாய் இருக்க வேண்டியதில்லை. வண்ணச் சிறகை விரித்து, நல்லதை நுகர்ந்து,  தீமைக்கு எதிராய் குரல் கொடுக்கும் பெண் சாதிக்கிறாள். அவள், அக்கம் பக்கத்திலுள்ள அடுக்களைகளில் புகுந்து கொண்டிருந்தாலும், சாதிக்கிறாள்.   நல்ல குடிமக்களைப் பெற்று, பேணி நற்கருத்தூட்டி ஆக்கபூர்வமான உயிரை உலகுக்கு அளிக்கிறாள். 


பெண்ணை சுவாசிக்க விடுங்கள். அவள் அடிப்படைத் தேவைகளுக்குத் தடை போடாதீர்கள். புணர்ச்சிப் பொருளாய் மட்டும் பார்க்கும் மிருகங்களிடமிருந்து பெண்களை மீட்க, ஒவ்வொரு பெண்ணும் ஆணும் சேர்ந்து போரிடுவோம். 

பெண் சுதந்திரம் பாலுணர்ச்சிகளை தூண்டும் எழுத்துக்களிலோ, போதைப் பொருட்களிலோ, ஏட்டிக்கு போட்டியாய் சுற்றித் திரிவதிலோ முடங்கிவிடுவது அல்ல. 


எங்கெல்லாம் பெண்ணின் சுய உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் பூட்டு பூட்டபடுவதில்லையோ எங்கெல்லாம் அவள்  வாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப் படுகிறதோ  அங்கெல்லாம் அவள் உயிர்த்தெழுகிறாள். அவள் குடும்பம் சுகிக்கிறது. சுற்றமும்  நாடும். உலகமும் சம நோக்குச் சமுதாயமாய் பரிமளிக்கிறது. 

பெண்ணுக்கென்று தனி ஒரு தினத்தின் தேவையின்றி, ஒவ்வொரு தினமும் நல்-மனிதர்க்குறிய தினமாய் மாறட்டும்.

March 02, 2016

ரயில் சினேகம்

(முன்னறிவிப்பு: இது தொலைகாட்சித் தொடரைப் பற்றிய பதிவு அல்ல) 



பூமித்தாயின் மடியில் ஏறக்குறைய பல நேரங்களில் தனித்து விடப்பட்ட குழந்தையைப் போல்   நீங்கள் உணர்ந்ததுண்டா? 

நூற்றுக்கணக்கான மனிதர்களின் மத்தியிலும் சிரித்து பேசியபடியே தனிமையை தழுவியிருக்கிறீர்களா? நண்பர்களையும் உறவுகளையும் கொண்டாடியபடியே தனித்து நின்றிருக்கிறீர்களா? அப்படியெனில் இப்பதிவு நம்மைப் போல் சிலரைப் பற்றிய பதிவு. 

பதின்ம வயதிற்கும் முன்பே, குழந்தைப் பருவம் தொட்டே எனக்கு பேச தெரிந்ததில்லை என்பதே உண்மை.  ஒருவேளை எழுதும் திறன் அதிகரித்திருந்தால் என் மனதில் எங்கோ மூலையில் ஒளிந்திருக்கும் சில எண்ணங்களை எழுத்துருவில் வார்த்திருப்பேன்.

அறிவியல் கண்டுபிடிப்புக்களைப் பற்றி ஆராயலாம். அத்தனை அறிவு இருப்பவர்கள் என்னிடம் சிக்கினாலும் அவர்களிடம் திறமையாய் கேள்வி கேட்கவும் அவர்களின்  கருத்தை உள்வாங்கும் திறனும் எனக்கு அதிகம் இருப்பதாய்  நினைத்ததில்லை.

நமக்குத் தெரிந்த சொற்ப ஞானத்தைக் கொண்டு இசை, இலக்கியம் சார்ந்த பேச்சுக்களில் சற்றே மூழ்கி எழலாம். இருப்பினும், இசை-இலக்கியக் கடலின் 
ஆழத்தில்,  நாம் சிறு துளியென மௌனமாய் கலந்து விடுவதே உத்தமம். கலை இசை இலக்கியத்தின் ரசிகையென என்னைக் கற்பித்துக் கொண்டால், ரசிகைக்கு பேச ஒன்றுமே இல்லை. 

சமையல் சிந்தனை, ஆடை அணிகலன், அன்றாட அலுவல்கள் இது குறித்துப் பேச பெரும் ஈடுபாடு எழுந்ததில்லை. 

அன்பையோ பரிவையோ பகிரவேண்டியது கண்டிப்பாக அவசியம். அத்தகைய குசல விசாரிப்புக்கள் இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் முடிந்து விடுகிறது. 

கடந்து வந்த பாதையில் அறிமுகமான ஏறக்குறைய எல்லா முகங்களின் தோழமையை, உறவை, சுவைத்த படியே விட்டு விலகிக் கொண்டே இருக்கிறேன். 

பெரும் கும்பல்களின் மத்தியில் ஆரவார சந்தோஷங்களில் பங்கேற்றுக் கொண்டே தனித்து  நின்றிருக்கிறேன்.

பள்ளி கல்லூரி  நாட்களிலுருந்து தற்போதைய பயணம்  வரை நூற்றுக்கணகான உறவுகளின் அறிமுகம் உண்டு.  ஆழ்ந்த நட்புக்கும் - ஆரம்ப பரிச்சியத்திற்குமான  நடுத்திர கயிற்றிலேயே பலர் நின்றுவிடுவார்கள். அதைத் தாண்டி உள்ளே வர நான் அனுமதித்ததில்லையா என்று குழம்பியிருக்கிறேன். 

ஏன் எவரிடமும் அதிதீவிர நட்போ உறவோ பாராட்ட என்னால் முடிந்ததில்லை என பல முறை யோசித்ததுண்டு. 

என்னுள் ஆழ்ந்து மூடப்பட்டு உறங்கிக் கிடக்கும் ஒரிரு சிந்தனைகளும் கருத்துக்களும் அதிகம் பரிமாறப்படுவதற்கு ஏதுவாய் இருப்பதில்லை. 

எப்படிப்பட்ட வார்த்தைகள் பரிசீலித்து பின் தேர்வு செய்து வாயினின்று உதிர்க்க வேண்டும் என்று புத்தர் சொல்லியிருப்பதைப் பாருங்களேன்! 'அட! என்னமா யோசிச்சு நமக்காவே சொல்லிவிட்டு பொயிருக்கிறார் ! 





"Rolling stone gathers no moss" என்ற கூற்றின் படி, சுழன்றோடிய படியே எத்தனையோ மனிதர்களிடம், பேசிக்கொண்டிருக்கும் வேகத்திலேயே விடைபெற்று சென்று கொண்டே இருக்கிறது என் பயணம். 

எதையும் சுமந்ததில்லை. எவரையும் சுமந்ததில்லை. 

சுமந்த மிகச் சிலரை இழக்கும் பொழுது  - இன்னும் ஆழ்ந்த தனிமையில் மறுபடியும் மௌனமாகிப் போகிறேன். 



ஷக்திப்ரபா