May 10, 2009

சோ-வின் எங்கே பிராமணன் - (உடலும் உடையும்)


சோ-வின் 'எங்கே பிராமணன்' எனும் தொடரில் அவர்கள் விவாதிக்கும் கருத்துக்கள் உபநிஷத்துக்கள் வேதங்களையொட்டி அமைந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். தொலைக்காட்சி தொடர் என்றாலே விருப்பமில்லாது இருந்த நான், நல்ல கருத்துக்களுக்கு செவி சாய்ப்போமே என்ற எண்ணத்தில் பார்க்கத்துவங்கினேன்.

பல அறிய தகவல்கள், கதைகள் பறிமாறியிருக்கிறார் சோ அவர்கள். சமயம் சார்ந்த விஷயங்களை விட ஆன்மீக விஷயங்களை அதிக ஆவலுடன் கவனித்து வருகிறேன். அவற்றுள் என்னைக் கவர்ந்த சில கருத்துக்களை விவாதங்களை எழுத்தாய் பத்திரப்படுத்தி வைக்க ஆவலின் பேரில், என்னுடைய சில பதிவுகள்.

"எங்கே பிராமணன்" என்றவுடனேயே நாம் ஜாதியை முதலில் மனத்தில் நிறுத்திவிடுகிறோம். பிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணீயத்தை ஏற்றுக்கொண்டவன் அல்ல. 'பிரம்மம்' என்பது பரம்பொருளைக் குறிக்கும் சொல். பரப்பிரம்மத்தை குறிக்கும் சொல். எவன் ஒருவன் பிரம்மத்தின் தியானத்தில் ஈடுபடுகிறானோ அவனே பிரம்மணீயத்தைத் தழுவியவன். பிரம்மணீயம் என்பது ஜாதியல்ல. அது ஒரு "நிலை". இறையானுபவத்தில் ஈடுபடும் எவரும் அந்த நிலைக்கு தங்களை கொண்டு செல்ல பிரயத்தனப்படுபவர்கள் ஆவார்கள். அதனால் இத்தொடரில் கூறப்படும் செய்திகள், தகவல்கள் கருத்துக்களை ஜாதி நினைவுகளற்று இறை நினைவுடன் கேட்டுத் தெரிந்து கொள்வது சிறந்தது.


இத்தொடரில் அஷோக் என்ற வாலிபன், சுயத்தின் தேடலில் ஈடுபடுகிறான். இளம் வயதிலேயே ஆன்ம வெளிபாட்டைத் தாண்டிய வேதாந்த தேடலில் ஈடுபடுகிறான். அவன் பிறந்தநாளையொட்டி அவன் பெற்றோர் புதுத் துணி வாங்கி வருகிறார்கள்.

"நீங்கள் குடுத்த இந்த உடம்பு எனும் சட்டை இருக்கையில் எனக்கென் புதுச்சட்டை" என்று மறுத்துவிடுகிறான் அஷோக். "பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த கணம் முதலே மரணத்தை நோக்கி தம் பயணத்தை தொடங்கிவிடுகின்றனர். இதில் கொண்டாட என்ன இருக்கிறது. பிறந்த நாள் என்பது வெறும் மயில்கல்" என்கிறான்.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ அபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான்
யன்யானி சம்யாதி நவானி தேஹீ

(கீதை: 2:22)

என்கிறது கீதை. பழைய கிழிந்து போல உடைகளை களைந்து எவ்வாறு புது உடை அணிகின்றோமோ, அவ்வாறே நைந்து போன உடல்களை களைந்து ஆன்மாவும் புது உடல் புகுகின்றது என்பது இதன் விளக்கம். இதை பல முறை படித்தபின்பும் மரண பயம் அற்றுவிடுவதில்லை. மறுபடி மனம் மயங்கி அதன் பாதையில் எண்ண ஓட்டத்தை தொடர்கிறது. நம்பிக்கை என்பது அடிப்படை விஷயம். நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயத்தின் பேரில் நம்பிக்கை அற்று இருப்பது, பயத்தின் முதல் காரணம்.

உடைகளைக் களைவது உடல்களைக் களைவதைப் போல் என்றால், ஏன் பயமும், கண்ணீரும் தயக்கமும்? உடைகளைக் களைந்த பின்பும், வேறு உடை அணியும் பின்பும், நம் identity தனித்துவம் அழிவதில்லை. அதே மனிதர்கள், முகங்கள், பாசங்கள், பிணைப்புகள். உடலைக் களைந்தால் பின் நேர்வதைப் பற்றி நமக்கு புலப்படுவதில்லை. மறுப்பிறவிகளில் நம்பிக்கை இருப்பினும் கூட, இப்பிறவியில் இந்த உறவுகளை விட்டு மறந்து, பறந்து போகிறோம் என்ற எண்ணமே கண்ணீருக்கும் கவலைக்கும் காரணம். நம்மைப் பிரிவுத் துயரம் ஆட்கொள்கிறது.

எல்லா உயிரும் வேவ்வேறு உரு தாங்கிய ஒரே சாராம்சம் என்ற எண்ணம் வேறூன்றிய உயர்நிலை மக்களுக்கு இந்த அஞ்ஞானம் இல்லாததால், அவர்களை பயமோ சந்தேகமோ ஆட்கொள்வதில்லை.

உடல் என்பது சட்டையைப் போன்று தான்....யோகிகளுக்கும், ஞானிகளுக்கும்.