October 27, 2011

ஹரிஸ்சந்திரன் கதை



('எங்கே பிராமணன்' தொடரை தழுவியது)







வழிவழியாய் வந்த சரித்திர அல்ல்து புராணக் கதைகளில் கற்பனைக்கு இடம்கொடுத்து மாறி வந்த சம்பவங்கள் பல. ஆதாரம் அற்றோ அல்லது தகுந்த ஆதாரமின்றி பின்னப்பட்ட கதைகள் மூலக்கதையுடன் ஒன்றுவிடுவதால், நாளாவட்டத்தில் உண்மை சம்பவம் என்றே நம்பப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் ஹரிஸ்சந்திரன் மனைவியின் தாலி அவன் கண்களுக்கு மட்டுமேயன்றி பிறர்க்கு தென்படாதென்பது.

சுவைபட சித்தரித்திருக்கும் திரைக்காவியங்களிலும் உபன்யாசங்களிலும் அப்படி கூறப்பட்டு வந்தாலும், தொன்று தொட்டு வழங்கி வரும் புராணக் கதையில் இவ்வாறு கூடப்படவில்லை.

ஹரிஸ்சந்திரனின் கதையில் நமக்கு தெரியாத சம்பவங்களும் உண்டு. குழந்தையில்லா குறையை போக்க, பிள்ளை வரம் வேண்டி வருணனை துதிக்கச் சொல்கிறார் வசிஷ்டர். ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் வருணனின் வரம் அளிக்கிறார், பிள்ளை பிறந்ததும் தனக்கே அப்பிள்ளையை பலி கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை. பிள்ளை பிறந்ததும் பலி கேட்கும் வருணனை, பல் முளைத்ததும் பலியிட்டுவிடுகிறேன் என்கிறான் ஹரிஸ்சந்திரன். பல் முளைத்ததும் மீண்டும் வந்து பலி கேட்கிறார் வருணன். பால்பற்கள் விழுந்து வேறு பற்கள் முளைத்ததும் தருவதாகச் சொல்கிறான், அதன் பின் வந்து கேட்கும் போது மீண்டும் தட்டிக் கழிக்கிறான். உபநயனம் நடந்த பாலகனை பலியிட்டால் மேலும் விசேஷம் எனவே பொறுக்குமாறு வேண்டுகிறான். பிள்ளைக்கு விவரம் அறியும் பருவமாதலால், தனக்கு ஏறபட்ட நிலைமையை புரிந்து ஓடி ஒளிந்து விடுகிறான். ஏழை ஒருவனின் பிள்ளையை விலைக்கு சுவீகாரம் எடுத்து பலி கொடுக்க எத்தனிக்கிறான். தன் நிலைமையை உணர்ந்த பாலகன் பயம் கொள்கிறான். இதையறிந்த விஸ்வாமிதரர் அப்பாலகனுக்கு வருண மந்திரம் உபதேசிக்கிறார். தலையை பீடத்தில் வைத்த மாத்திரத்தில் மந்திரம் உச்சரிக்கிறான். வருணனும் மகிழ்ந்து நிபந்தனையை விலக்கு அந்த பாலகனை அருளிச் செல்கிறார். ஹரிஸ்சந்திரனுக்கும், அவன் உண்மைப் புதல்வனைக்கும் அருள் பாலிக்கிறார்.

இதுவும் புராணக் கதை ஆனால் அதிகம் கேள்விப்படாத கதை. விஸ்வாமித்ரர் வசிஷ்டரிடம் "ஹரிஸ்சந்திரன் பொய் பேசுவான்" என்று சபதம் செய்து அவனை பரிட்சிக்கிறார். மேற்கொண்டு நடந்த கதை அனைவரும் அறிந்ததே. அக்கதையின் படி, ஹரிஸ்சந்திரனும் சந்திரமதியும் ஒருவரை ஒருவர் தாம் யார் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஆனால் தம் மகனை கண்டு கொள்கிறான் ஹரிஸ்சந்திரன். மற்றபடி புராணக் கதையில் தாலியைப் பற்றி குறிப்பு ஒன்றும் இல்லை.

இக்கதையின் படி ஹரிஸ்சந்திரன் தாலி விஷயம் என்னவாயிற்றோ என்னவோ, ஆனால் வருணனை "இன்று போய் நாளை வா" என்று பிள்ளைப் பாசத்தால் அனுப்பி வைக்கிறான். சொன்ன சொல்லை காப்பாற்றுபவன் என்ற கூற்று சற்றே மழுங்குகிறது.

லக்ஷ்மணன் கோடு, சந்திரமதி தாலி, வாலி சண்டையில் எதிராளிக்கு பாதி பலம் தத்தம் ஆகிவிடும், இன்னும் என்னென்ன கட்டுக்கதைகள் புராணத்துடன் பின்னியிருக்கின்றனவோ!