December 29, 2008

திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -2)

ரமணாஸ்ரமம்


சற்றே ஊரெல்லையில், செங்கம் சாலையில், அமைதியின் இருப்பிடமாய் அமைந்திருக்கிறது ரமணாஸ்ரமம். நாங்கள் சென்றடைந்த பொழுது மணி நன்பகல் பன்னிரெண்டை தாண்டியிருந்ததால், அலுவலகம் மூடும் நேரம். அவசரமாய் அனுமதிக் கடிதத்தின் பிரதியைக் காண்பித்து அறை சாவியை வாங்கிக் கொள்ள நேர்ந்தது. ரமணாஸ்ரமத்தில் தங்க வேண்டும் என்றால் ஆஸ்ரமத்திற்குள்ளேயே காட்டேஜஸ் போன்று அமைத்திருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். அவ்வாறல்லாமல் தனி குவார்டர்ஸ்க்கு செல்ல நேர்ந்தது. நிரந்தரமாகத் தங்குவோருக்கு காட்டெஜும் எங்களைப் போல் அவ்வப்பொழுது செல்பவர்களுக்காக குவார்டர்ஸும் அமைத்திருக்கிறார்கள். நடக்கும் தூரத்தில் இருந்த இந்த குவார்டர்ஸ் என்று அழைக்கப்படும் அடுக்கு மாடிக் கட்டிடம், ஆளரவம் கம்மியான இடத்தில் அடுத்த வீட்டின் நெடிய அடர்ந்த மாந்தோப்பை நோக்கியவாறு அமைந்திருந்தது.
சற்றுநேர ஓய்விற்குப்பின் ஆஸ்ரமம் சென்றடைந்தோம். முதலில் ரமணரின் தாயார் சமாதியும், அதைத் தொடர்ந்து ரமணர் சமாதியும் இருக்கிறது. ரமணர் தவநிலையில் அமர்ந்திருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். இதைச் சுற்றி தியான மண்டபம் சற்று பெரியதாகவே கட்டப்பட்டுள்ளது. சுமார் 100 பேர் நெரிசலின்றி உட்காரலாம். ரமணரின் சமாதியிலும் அவர் தாயார் சமாதியிலும் நிதமும் பூஜை, ஜபம், வேத பாராயணம் முதலியன நடைபெறுகிறது. எங்கும் செடிகளும், பூக்களும் சொறிந்திருக்கிறது. சிவலிங்கப்பூ, மரத்திலிருந்து நொடிக்கு ஒன்று தரையில் விழுந்து ஆசிரமத்தையும், ரமணரையும் வணங்கிக் கொண்டிருக்கிறது. அதையும் மீறி அம்மரம் முழுதும் சிவலிங்கப்பூ. முகர்ந்துப் பார்த்தால் பன்னீர் வாசம் வருகிறது. இம்மரத்தைச் சுற்றி ஐந்தாறு மயில்கள் இருக்கின்றன। ஆஸ்ரமத்தைச் சுற்றிலும் நிறைய மயில்கள் நம்முடன் அந்நியோன்யமாய் உலா வருகின்றன. வலதுபக்கத்தில் அலுவலகத்தை ஒட்டியபடி, ஆஸ்ரமத்திற்குச் சொந்தமான புத்தகக்கூடம் ஒன்று உள்ளது। இதில் தொண்ணூறு சதவிகிதம் ரமணரின் எழுத்துகள், அல்லது அவரைப் பற்றி பக்தர்கள் எழுதியது, அல்லது அவரின் போதனைப் பற்றிய புத்தகங்கள் இருக்கின்றன.


எனக்கு மிகவும் பிடித்திருந்த இடங்கள் புத்தகக்கூடமும் தியான மண்டபமும். முதலில் அவரின் அன்னை சமாதிக்குச் சென்றேன். அங்கே சுவற்றில் 'My death experiences' என்று தலைப்பிட்டு, ரமணரின் பதினாறாவது வயதில் நடந்த சம்பவத்தின் தாக்கமும், திடீரென சாவின் மேல் அவருக்கு வந்த பயமும், அதனால் தொடர்ந்த தேடலும், பயனும் பற்றி எழுதியிருந்தனர். அங்கே, திருமூலரின் தமிழ்ப் படைப்பு ஒன்றை ஒருவர் வாசித்தபடி இருக்க, ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு சன்யாசினி, அதைத் தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். 'எம பயம் நீங்க' என்ற தலைப்பில் அந்த நபர் திருமூலரின் செய்யுளைப் படிக்க அந்த அம்மையார் அதை ராகமாகப் பாடிக் காட்டினார்."எல்லாம் தெரிந்திருந்தாலும், சாவு கிட்ட வரும்பொழுது பயமாத் தாங்க இருக்கு" என்றார் அந்த அம்மையார். சற்று நேரம் நானும் அருகமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன. எனக்கு வலியின் மீது இருக்கும் அபரீமிதமான பயம் நினைவு வந்தது. என்றாவது இதை வென்று விட வேண்டும், என்ற தீவிர எண்ணத்துடன், சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து, பின் ரமணரின் தியான மண்டபத்துக்குச் சென்றேன்.
பிற்பகல் இரண்டு மணியிருக்கும்। தியான மண்டபத்தில் என்னைத் தவிர, எண்ணி பத்து பேர் இருந்தால் அதிகம. அவரவர் வெவ்வேறு உலகில் தியானம் செய்து கொண்டிருந்தனர். அங்கு சூழ்ந்திருந்த நிசப்தத்திலேயே A-U-M என்ற மந்திரத்தின் அடக்கம் விளங்கியது போல் இருந்தது. ஒட்டு மொத்த தத்துவமே ஓம் என்ற மூலமும் முடிவுமே என்று தோன்றியது. தியானித்துக் கொண்டிருந்த பத்து பேரில் குறைந்தது ஆறு பேர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியான மண்டபத்தில் அரை மணியிருந்து விட்டு, பக்கத்தில் இருக்கும் ரமணாஸ்ரமத்திற்குச் சொந்தமான லைப்ரரியில் மீத இரண்டு மணிநேரத்தைக் கழித்தேன். ஆஸ்ரமத்திற்கு இரு கட்டிடம் தள்ளி, வேறொரு இடத்தில் லைப்ரரி அமைந்துள்ளத. ஆஸ்ரம விருந்தினர், ஆஸ்ரமவாசிகளைத் தவிர, ஊரிலுள்ள ஏனையோரும் உறுப்பினர் ஆகலாம. இரண்டு மாடிகளில் ஏகப்பட்ட புத்தகத் தொகுப்பு வைத்திருக்கின்றனர். பக்தி இதழ்களில் துவங்கி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ என்று பலரின் தத்துவப் புத்தகங்கள் காணக் கிடைக்கும். முதல் மாடியில் தமிழ் புத்தகங்களும், இரண்டாம் மாடியில் ஆங்கில புத்தகங்களுக்குமாகப் பிரித்து வைத்திருக்கின்றனர். எழுபது சதவிகிதம் தத்துவம் சார்ந்த அல்லது ஆன்ம-விளக்கம் தரும் புத்தகங்கள் இருக்கின்றன. நாவல்கள், பயணப்புத்தங்கள், வானவியல், ஜோதிடம் என்று மற்றவை சிறிதே இடம் வகிக்கின்றன. பலரின் தத்துவப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஓரிரு புத்தகங்கள் முன்பே சிறிது படித்திருந்தாலும், அவரின் கேள்வி-பதில் புத்தகம் ஒன்றைப் புரட்ட நேர்ந்தது எல்லா கேள்விகளுக்கும் எதிர் கேள்வியிலேயே தொடங்கி விடையளிக்க முயன்றிருக்கிறார். உதாரணத்திற்கு: "பிரம்மம் என்றால் என்ன?" என்றால் "பிரம்மம் என்றால் எதுவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?" என்று விடை துவங்குகிறார். படிப்பது சுவாரஸ்யமாக இருந்தது.
"எல்லார் தத்துவமும் படித்து, இருக்கின்ற தெளிவைக் குழப்பிக் கொள்" என்ற என் கணவரின் குற்றச்சாட்டு உண்மை என்று உறுத்தினாலும், ஓஷோ, ஜே।கிருஷ்ணமூர்த்தி, வாஸ்வானி, காஸ்பெல் ஆஃப் ராமகிருஷ்ணா, வேதாத்ரி மஹரிஷி, சிறிது Zoroastrianism என்று என்னால் குழப்பிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அத்தனையும் மேம்போக்காய் புரட்டுவதற்கு ஏதேனும் ஒன்றை முழுமையாய் படித்தால் என்னுள் இருக்கும் பல வினாக்களுக்கு விடை கிடைத்திருக்கலாம்!!!
ரமணாஸ்ரமத்தின் புத்தகக்கூடத்தில் கிட்டத்தட்ட ரமணரின் 10 புத்தகங்களை வாங்கினோம். இரவு மூன்று நாளும் அதில் இருந்த ஒரு பத்தியை நானோ ஸ்ரீதரோ படித்து, புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சாயும் காலம் வரை ரமணீயமாக இருந்த மாந்தோப்பு, இரவு நேரத்தின் அமைதியில் வெகுவாய் என்னை பயமுறுத்தியது. பகலில் ரம்யமாய் தோன்றும் ஒன்றே இரவில் பயங்கரமாய் மாறக் காரணமாகும் மனம் எத்தனை விந்தைக்குரியது!
"என்னைத் தனிமையில் விட்டுவிடுங்கள்" என்று ஒன்றுமில்லா வெத்து அலட்டல் அலட்டிக் கொண்டு நான் இத்தனை அமர்க்களப் படுத்துகையில், என் நான்கு வயது பெண்ணையும் சமாளித்து, அவளுடனேயே ஆஸ்ரமம் முழுக்க சுற்றி, இடையிடையே தியானமும் செய்து, பின், இரவின் அமைதியிலும் பயத்தின் சாயலேயின்றி அறையில் தியானிக்கும் என் கணவரிடம் நான் நிறைய கற்கவேண்டியிருக்கிறது என்று எண்ணியபடி தூங்கிப் போனேன்.

(இன்னும் வரும்)

December 18, 2008

திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -1)

முன் குறிப்பு: இரண்டு வருடங்களுக்கு முன் நான் குழுமம் ஒன்றில் உறுப்பினராகியிருந்தேன். பல இடுகைகளை படித்து, மறுமொழி இடுவதே எனக்கு பிடித்தமான வேலை என்றாலும், அவ்வப்பொழுது கிறுக்கியவற்றையும் ஒரே கூரையின் கீழ் இதே வலைப்பதிவில் கோர்த்துவிட எண்ணியிருக்கிறேன். "பழைய கள்ளு" என்று தலைப்பினுள் இந்த பதிவுகளை அடைத்து வைக்க முற்பட்டிருக்கிறேன். முன்பே இதை படித்திருப்பவர்கள் தயை கூர்ந்து மன்னிக்க.
*************************************************************************************

முன்னுரை

முன்னுரை என்றாலே தலைப்பைப் பற்றியதாக இருக்கவேண்டும் என்ற தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள. உதாரணத்திற்கு என்னுடைய முன்னுரை, எங்கள் வீட்டு தச்சனிடமிருந்தும் துவங்கலாம. துவங்குகிறது. திருவண்ணாமலைக்கும் தச்சனுக்கும் என்ன சம்மந்தம்? 'முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் என்ன சம்மந்தம்' என்ற பழங்கால வழக்குமொழி உங்கள் நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறது. வழக்குமொழிக்கு பதிலளிக்க முடியாவிட்டாலும், தச்சனுக்கும் திருவண்ணாமலைக்கும் என்ன சம்மந்தம் என்று இன்னும் சில வரிகளைப் படித்தால் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்கென்ன கவலை, வளவளவென்று கழுத்தறுக்காமல் திருவண்ணாமலையைப் பற்றி என்ன கூற விரும்புகிறாயோ அதை மட்டும் சொல், என்று தீவிர பிடிவாதத்துடன் இருப்பவர்கள், முன்னுரையை தாண்டிக் குதித்து, அடுத்துவரும் 'பயணம்' பத்தியை ஓரமாய் ஒதுக்கி, 'திருவண்ணாமலை' என்ற தலைப்புக்கு, ட்ரிபிள் பிரமோஷன் வாங்கிக்கொண்டு நுழைந்துவிடுங்கள்.

படிப்படியாக, என்னுடன் கூட வரவிரும்புபவர்களுக்கு சில முக்கிய விளக்கங்க. அடிக்கடி 'ஸ்ரீதர்' என்று இந்தக் கட்டுரையில் வரும் நபருடனும், அவரின் புதல்வியுடனும் நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். ஸ்ரீதருடன் நீ ஏன் தனியாகப் பயணம் மேற்கொண்டாய் என்ற வீண் மன உளைச்சலுக்கு உள்ளாகாதீர்கள். ஏனெனில், இக்கட்டுரை எழுதும் நான் ஸ்ரீதரின் தர்மபத்தினி.

ஒரு சுபயோக சுபதினத்தில், ஸ்ரீதர் தன் வீட்டை, சிறிதே மாற்றியமைக்கத் தீர்மானித்தார். இதனால் வந்தது வினை. முழு வீட்டையும் தச்சன் தன்னுடைய ஆட்களுடன் ஆக்ரமித்துக் கொண்டு, விடாபிடியாய், வேலையைத் தொடர்ந்தார். ஒரே வாரத்தில் முடிந்து விடுவதாய் வாக்களித்த வேலை பதினைந்து நாட்களாகியும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீதருக்கு, தான் இளிச்சவாயனா என்ற எண்ணம் நாளுக்கு நாள் மேலிட, தச்சனை ஒரு நாள் தைரியமாய் எதிர்த்துக் கேட்டுவிட்டார். தச்சனும் மனதிற்குள் சிரித்துக் கொண்டாலும், புறத்தே சாதுவாய் வேடமிட்டு, மன்னிப்புக் கோரினார்। பின் மஹா உத்தமமான யோசனை ஒன்றையும் கூறினார்। "ஐயா, நீங்கள் உங்கள் குடும்ப சகிதம் எங்காவது வெளியூர் சென்று வந்தால் ஒரு மூன்றே நாளில் ராப்பகலாய் உழைத்து வேலையை முடித்துக் கொடுத்துவிடுகிறோம்। உங்கள் துணைவிக்கோ, மகளுக்கோ தூசியால் ஊறும் விளையாது" என்று திருவாய்மொழிந்தார்।வெளியூர் செல்லும் அளவுக்கு விடுப்பெடுக்க நான் ப்யூன் வேலையில் இல்லை, என்று ஸ்ரீதர் அலட்டிக்கொண்டாலும், என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டதால், சதித்திட்டம் தீட்டி, இரண்டு வருடமாய் பெங்களூரை விட்டகலாத ஸ்ரீதரை, எப்படியேனும் விடுப்பு எடுக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். இரவு தூங்கப் போகும் முன், சாதுவாய் முகத்தை முயற்சி செய்து மாற்றியமைத்துக் கொண்டு, "உங்களின் வேலையோ நாளுக்கு நாள் மிகுந்த மனஉளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது. இதில் மாட்டிக்கொண்டு, தூண்டில் மீன் போல் தவிக்கிறீர்கள், சற்றே ஓய்வைத் தேடி புறப்படுவோம்" என்றெல்லாம் வார்த்தை ஜாலத்தால் அவரை சம்மதிக்க வைத்தேன். "எங்கு செல்லலாம் என்ற கேள்விக்கு இடமே இல்லை. தற்போதைய சூழ்நிலையில் உங்களால் சுற்றுப் பயணம் செய்ய இயலாது, மிகவும் சோர்ந்திருக்கிறீர்கள். புத்துணர்ச்சியூட்டும் ஆன்மீகப் பயணமே சிறந்தது" என நெடுநாள் ஆசையை நிறைவேற்றும் பணியில் தீவிரமாய் இறங்கினேன்.திருவண்ணாமலைக்கு, நினைத்தவுடன் செல்ல முடியாது. கடவுளே கூப்பிட்டால் தான் நம்மால் அங்கு செல்ல இயலும் என்று யாரோ ஆத்திகர் சொன்னது நினைவில் வந்தது. என்னைப் பொருத்த வரை நான் இன்னும் முழுமையான ஆத்திகவாதி இல்லை என்று சொன்னால் அது பொய்யில்லை. இதனால் அக்கூற்றின் மீது பெருமதிப்பேதும் வைத்திருக்கவில்லை. எனினும் மஹான்கள், சித்தர்கள் பலர் வாழ்ந்த இடம். வாழும் இடம். ரமணாஸ்ரமத்தில் தங்க வேண்டும் என்பது நீண்ட நாள் அவா. பயணம் செல்ல ஒருவழியாய் முடிவானது. இது தான் தச்சன் எங்களை திருவண்ணாமலைக்கு துரத்திய கதையின் சுருக்கம்.

பயணம்

அதென்னவோ பயணத்திற்கு முன்பு எப்பொழுதுமே ஒரு இனம்புரியா ஆனந்தம் சூழ்வதுண்டு. இது என்னைப் போல், பயண வெறியர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. பலரும் அனுபவித்திருப்பது. அன்று காலையிலிருந்து நான் சாத்வீக மனநிலையில் சாந்தமாய் இருந்தேன் என்றால் அது மிகையில்லை. பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை கிட்டத்தட்ட 180 கிமி என்பதால் ஸ்ரீதர் குடும்ப சகிதமாய் காரிலேயே பயணிக்க தீர்மானித்திருந்தார். பயணத்தின் போது பாட்டுக் கேட்டுக்கொண்டு போவதும், கூடவே சேர்ந்து உரத்த குரலில் பாடிக்கொண்டு போவதற்கும் ஈடு இணை உலகில் இல்லை. ராஜ்கபூரின் பாடல்கள், சென்ற ஆண்டின் சிறந்த இருபது ஹிந்திப் பாடல்கள், அலைப்பாயுதே, இளையராஜா ஹிட்ஸ், இவற்றுடன், சுவாமி சுகபோதாநந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!'. இவற்றிற்கெல்லாம் ஒரு தனிப்பையே வேண்டியிருந்தது. 'சுகராகம் சோகந்தானே' என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. 'தர்த் பரி கீத்' என்ற தொகுப்பே நான் எல்லா பயணத்திற்கும் எடுத்துச் செல்வேன். இம்முறை, ஆஸ்ரமத்திற்கு செல்வதால், மூக்கை சிந்தியபடி அழாமல் செல்ல வேண்டுமே, என்று பிரயத்தனப்பட்டு, அந்தத் தொகுப்பை விலக்கி வைத்தேன்.என் பெண்ணும் நானுமாய் ஸ்ரீதர் அலுவலகத்திற்கு சுமார் நாலு மணிக்குச் சென்றோம். நான் அலுவலகத்தினுள் நுழைந்து குறுக்கும் நெடுக்கும் நடந்தபடியிருந்ததால், வேறு வழியின்றி எல்லோருமாய் ஸ்ரீதரை அரைமணி முன்பே விரட்டிவிட்டனர். என் பெண்ணும் 'அப்பா வேணும்' என்று அழுது, என் பரிபூரண ஆசி பெற்றாள்.நாலரை மணிநேரம் பிடிக்கலாம் என்று நண்பர்கள் கூறியிருந்தனர். இணையத்தின் வழியே ரமணாஸ்ரமத்தில் அறைக்கு ஏற்பாடு செய்திருந்தேன். மறுநாளே அனுமதி கிடைத்திருந்தபடியால் முதல் ஒரு நாள் ஏதேனும் ஹோட்டலில் தங்கிவிட தீர்மானித்திருந்தோம்.

எத்தனையோ பேர் பாதையின் அழகை எழுதியே பயணக் கட்டுரையை அழகாய் வரைந்துவிடுகின்றனர். இதே சரக்கை வைத்தே நாமும் ஒப்பேற்றக் கூடாது என்று தீர்மானித்திருந்தாலும், சிறிதேனும் இதைப் பற்றி எழுதாமல் இருக்க முடிவதில்லை। பெங்களூரிலிருந்து ஓசூர் க்ருஷ்ணகிரி வழியே உத்தாங்கரை, செங்கம் என்று தொடர்ந்து, இறுதியில் திருவண்ணாமலை அடையலாம்। பெங்களூரிலிருந்து க்ருஷ்ணகிரி வரை தமிழ் நாடு அரசு பாதையை நன்கு அமைத்திருக்கிறது। நான்குவழிப் பாதையாய் குண்டு குழியின்றி சுகமாய் பயணிக்கலாம்। இந்தப் பாதை வழியே சில இடங்களில் ஏற்ற இறக்கங்களுடன் செல்லும் பொழுது, இருபக்கமும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை, வயல்களும், தோப்பும், சிறிய மடுக்களும் தென்பட, நடுவில் நீண்டு அகண்ட நான்கு வழிப் பாதை ஏறி இறங்குவது ஓவியக் காட்சி போல் இருந்தது। இயற்கை நடுவே, மனிதனின் கைவண்ணத்தைப் பார்ப்பது, இயற்கையை மனிதன் எத்தனை வென்றிருக்கிறான், அல்லது வெல்ல முயன்றிருக்கிறான் என்று எண்ணம் மேலிடச் செய்கிறது, இதனாலேயே சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறதே என்ற வருத்தமும் வரச் செய்கிறது। கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை।க்ருஷ்ணகிரிக்குப் பிறகு, ஊத்தாங்கரை, செங்கம் பாதைகள் காட்டுவழிப்பாதைகள். எனினும் பாதைகள் சிறப்பாக அமைக்கபட்டிருப்பதால், பயண சிரமமோ, ஓட்டும் சிரமமோ தெரியவில்லை. காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கையில் நானே காற்றாகி, மேலே பறப்பது போன்ற பிரமை. காட்டுவழிகளில் செதுக்கப்பட்ட மலைகளில் பக்கவாட்டு தரிசனம், எகிப்து நாட்டின் பிரமிட்டையும் அதில் வரைந்த முக வெட்டுக்களையும் நினைவூட்டியது.சுகபோதாநந்தாவை கேட்கலாம் என்ற ஆசை எனக்கு மேலிட்டாலும், 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரியும் வரம் கொடுக்க வேணும்' என்பது போல், ஸ்ரீதர், வண்டி ஓட்டும் பொழுது 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' என்றால் மனம் கேட்காது என்று வாதிட்டு இறுதியில் பாட்டு கேட்டுக்கொண்டு பயணித்தோம். கூடவே நிறைய இடங்களில் சுற்றி யாரும் இல்லாததால் தொண்டை கிழிய கத்திப் பாடி, உலகம் மறந்த நிலையில் இன்பத்தில் துய்த்தேன்.

திருவண்ணாமலையை அடைந்த பொழுது இரவு மணி எட்டரை. திருவண்ணாமலை ஒரு பெரிய டவுன் என்று நினைப்பவர்கள் ஏமாறலாம். 'மினி-டவுன்' 'செமி-டவுன்' என்ற சில வார்த்தைகள் இதற்குப் பொருந்தலாம். சுமாரான ஹோட்டலைத் தேடி அலைந்தே அரைமணியைக் கழித்தோம். 'பெரிய தெரு' என்ற பெயர் பூண்டு, அண்ணாமலை கோவிலின் பின்புறச் சுவற்றைத் தாங்கியிருந்த தெருவில் கூட எத்தனை தேடியும் தங்கக்கூடிய வகையில் ஒரு ஹோட்டலும் தென்படவில்லை. என்னிடமுள்ள மிகப்பெரிய குறை, அசுத்த இடங்கள் என்று நானே சிலதை கற்பனை செய்து கொண்டு முகம் சுளித்துவிடுவேன். சுத்தமும், அசுத்தமும் வெளி அழகில் இல்லை. எளிமையான தோற்றம் கொண்ட சுத்தமான இடங்களும் உண்டு என்று உள்மனதிற்கு தெரிந்திருந்தாலும் இந்த பழக்கத்தை இன்னும் விட முடியவில்லை. சுமாராகத் தெரிந்த ஒரு ஹோட்டலில் சென்று அறையை பார்வையிட்டோம். சுண்ணாம்பு பூசாத அழுக்குச் சுவர்களும், துவைத்து பலநாளான தலையணை, மெத்தையும் எங்களை வரவேற்றன. ரொம்ப கவனமாகப் பார்த்தால் கீழே பூச்சி கூட ஓடலாம் என்று தோன்றியது. இதைத் தாண்டி கழிப்பிடத்தின் சுத்தத்தை சென்று பார்வையிட எனக்கு திராணியில்லாது போகவே, காரிலேயே தங்கிக் கொண்டு, நாளை ஆசிரமத்துக்கு போகலாம் என்று கூறினேன்.செய்வதறியாது திருவண்ணாமலையையின் சிலத் தெருக்களை காரிலேயே சுற்றினோம். பிறகு தென்பட்டது 'ஹோட்டல் ராமகிருஷ்ணா' என்ற மின்னி மறையும் பலகை. நினைத்ததை விட நன்றாகவே இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. கட்டணமும், முன்னூறு ரூபாய் முதல் நானூறு ரூபாய் வாங்கினால் அதிகம். அங்கிருந்த பணியாட்களில் சிலர், நாங்களே தமிழில் பேசினாலும், எங்களிடம் ஆங்கிலம் பேசுவதையே குறிக்கோளாய்க் கொண்டிருந்தனர். என் பெண்ணிடம், 'நீ தமிழ் யார்கிட்ட பேசுவ பாப்பா' என்று ஒருவர் கேள்வி கேட்டார்.குத்துக்கல்லாய் நான் தமிழ் பேசிக் கொண்டிருக்க, என்னமாய் இப்படி ஒரு கேள்வி கேட்டார் அந்த மனிதர் என்று எரிச்சலடைந்தேன். 'என் ·ப்ரெண்ட் தாமரை கிட்ட' என்று சொல்லி என் பெண் மேலும் பால் வார்த்தாள்.தமிழ் நாட்டில் கிடைக்கும் தோசை இட்லிக்கு ஈடு இணை எங்குமே இல்லை. இட்லி உதிர்த்தால் உப்புமா போல் உதிராமல் பஞ்சு போன்று மிருதுவாய் இருந்தது. மறுநாள் அண்ணாமலை கோவிலுக்கு செல்லும் திட்டத்துடன் உறங்கிப் போனோம்.திருவண்ணாமலை

"பிறக்க முக்தி திருவாரூர்

தரிசிக்க முக்தி சிதம்பரம்

இறக்க முக்தி காசி

நினைக்க முக்தி திருவண்ணாமலை"

என்று கூறுவது வழக்கம. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருவண்ணாமலையில் உயர்ந்து திகழும் 'பெரிய கோவில்' என்று அழைக்கப்படும் அண்ணாமலையார்க் கோவில் நடுநாயகமாய்த் திகழ்கிறது। இதைத் தவிர தெருவுக்கு மூன்று கோவில் என்று கணக்கிலடங்காகோவில்கள். சிதம்பரம் கோவிலைப் போன்று வியாபார நோக்கம் இங்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. நிரம்ப பக்தி சிரத்தையுடனும் எளிமையுடனும் பூஜை நடைபெறுகிறது. செல்வி ஜெயலலிதா இக்கோவிலின் மேம்பாட்டுக்கும் அன்னதானத் திட்டத்திற்கும் பாடுபட்டிருப்பதாகப் பலகை ஒன்று குறிப்பிடுகிறது. அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் உச்சி கால அபிஷேகத்திற்கு கொடுத்திருந்தோம். இதனால் எங்களுக்குத் தனி வரவேற்பு. கால் கடுக்க பலர் வரிசையில் தரிசிக்கையில், அபிஷேகப் பணம் கொடுத்து, நான் கடவுளிடம் ஒரு மணிநேரத்திற்கு முக்கியத்துவம் எடுத்துக்கொண்டேன். எல்லோரையும் கடந்து கர்ப்பக்கிரஹத்திற்குள் நுழைகையில் எனக்கு மனம் கூசியது.பக்தி சிரத்தையுடன் பூஜைகள் நடைபெற்றது என்றாலும் என்னால் ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்ல. பெங்களூரில், கோவிலை, குறிப்பாக இறைவனின் கர்ப்பகிரஹத்தை தூய்மையாய் வைத்திருப்பார்கள்.தீபாராதனையின் பொழுது, விளக்குகளுக்கு எண்ணைவிட தனிக் கரண்டி, திரியை எடுக்க, எடுத்து அப்புறப்படுத்த, மருத்துவர்கள் உபயோகிப்பது போல் tong எனப்படும் நீண்ட ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கருவி என்று இயங்கி வருகிறது பெங்களூர் கோவில்கள்। 'Cleanliness is next to Godliness' என்பதில் நம்பிக்கைக் கொண்டவர்கள்। இந்த எண்ணம் தமிழ்நாட்டுக் கோவில்களில் அத்தனை முக்கியமாக கருதப்படுவதில்லை. ஆசாரமும், மடியும் கடைபிடிக்கும் அளவு ஏன் சுத்தத்தை கடைபிடிக்க மறுக்கிறோம்?இங்கு திருவண்ணாமலைக் கோவிலில், ஆசாரமாய் ஒருவர் அபிஷேகம் செய்தார். பக்தி அத்தனை பேர் முகத்திலும் இருந்தது. தமிழிலேயே பாசுரம் பாடினார்கள். புரிந்தது, அதனால் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தீபாராதனையின் போது, விளக்கிற்கு எண்ணையைக் கைவிரலால் எடுத்து விடுகின்றனர். அந்த விரலைத் துடைக்க தனித் துணி வைத்திருந்தது மட்டும் ஆறுதலாய் இருந்தது. உண்ணாமுலை அம்மனை தரிசித்து, அபிஷேகம் செய்து, மொத்தக் கோவிலையும் வலம் வந்தது இன்னும் இரண்டு மணிநேரத்தை முழுமையாய் விழுங்கியது. பிரசாதமாக வழங்கப்பட்ட உணவு கிட்டத்தட்ட ஐந்து பேர் முழுச்-சாப்பாடு சாப்பிடும் அளவு தாராளமாய் இருந்தது. அதனால் ஏனையோருக்கும் பிரசாதமாய் வழங்கி நாங்களும் சிறிது உண்டு அண்ணாமலையாரின் தரிசனத்தை முடித்து ஹோட்டல் திரும்பினோம். இன்னும் சிறிதே நேரத்தில் நான் பல நாள் செல்ல நினைத்திருந்த ரமணாஸ்ரமத்திற்குப் போகப் போகிறேன் என்ற எண்ணத்தில் அதுவரை இருந்த களைப்பும் வியர்வையும் பறந்து போனது.

(இன்னும் வரும்)