March 26, 2009

தேகம் யாவும் தீயின் தாகம்உடலோடு உறவாடும் உனக்குத் தினம் தினம் மோகமுள்
உணர்வுகளால் உறவாட முயலும் எனக்கு தேகமெங்கும் முள்
பழுதுபட்ட தராசுகளால் முடித்துவைக்கப்பட்ட உறவுகள்
தவறான தீர்ப்புக்கு பலியான தூக்குக்கைதிகள்


உன் இதயம் நொறுங்கும் போதெல்லாம்
காதுகளை அறுத்துக்கொள்ளத் துடிக்கிறேன்
என்னையே உயிராய் உடலாய் உணர்வாய் சிந்தித்து
உன்னையே உருகுலைத்துக் கொள்ளும் பக்திக்கு
என்றேனும் நான் இரங்கக்கூடும்


இரங்கி இசைந்து இச்சைக்கு இணங்கி
உடலில் உயிரை நிறுத்தும் அந்த ஒரு கணம்
நொடிப்பொழுது தேகம் பூக்கப்போகும் அந்த ஒரு கணம்
நீ சிந்தப்போகும் புன்னகைக்கு விலையாக
என்னைத் துறக்கப்போகும் அந்த ஒரு கணம்
உனக்கும் எனக்குமான கணக்கு சரிசெய்யப்படலாம்
அதிவேகமாய் மேலும் கீழும் ஆடிய தராசு,
நியாயத்தை அன்று நிலை நிறுத்தும்.
அதுவரை...பொறுத்திரு.

March 20, 2009

copyright vs bloggers

நண்பர்களே
மகளிர் தினத்தையொட்டி ஷைலஜா என்னை எழுதத் தூண்ட விகடனின் நான் எழுதிய கட்டுரை இதோ (படங்கள் : உபயம் விகடன்)
http://www.vikatan.com/vc/2009/wmalar/shakthiprabha040309.asp

இதை அப்படியே வரிக்கு வரி எடுத்து tamilskynews என்ற தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். சுட்டி இங்கே:
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2593:2009-03-06-05-31-28&catid=57:2009-03-06-05-28-32&Itemid=124#JOSC_TOP

என்னுடைய படைப்பில் 'நன்றி: விகடன்' என்ற குறைந்தபட்ச acknowlegement கூட இல்லை। எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை.What do u call this? Plagiarism?

இதே போல் அதே பகுதியில் படைக்கப்பட்டிருக்கும் இன்னும் சிலரது படைப்புகளும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன, few with credits and few without due credits to vikatan and / or information to the writer।

இதைப் பற்றி கேட்டெழுதி "blogger- jeeves" தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார்। Thanks jeeva।

I condemn this.

March 02, 2009

திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -3)

திருவண்ணாமலையின் தனித்துவம்


என் கவனத்தை ஈர்த்த மற்றொன்று, திருவண்ணாமலையைச் சுற்றி பல நபர்களின் (அல்லது பல சுவாமிகளின்) ஆசிரமங்கள் இருப்பது. இதைப் பற்றி ஏதும் அறியாமலே சென்ற நான், இனிய அதிர்ச்சிக்கு உள்ளானேன. 'நினைக்க முக்தி திருவண்ணாமலை' என்று இதற்குத் தான் சொல்லியிருக்கக் கூடும். ஆசிரமம் என்றால் நமக்கு உடன் நினைவிற்கு வருவது சித்தர்கள். திருவண்ணாமலையைச் சித்தர் பூமி என்கிறார்கள். இன்றும், பல சித்தர்கள் கிரிவலம் வரும் மலையிலும், மலையைச் சுற்றியும், திருவண்ணாமலையிலும் வாழ்வதாய்ச் சொல்கின்றனர்.இவர்கள் பார்ப்பதற்கு விசேஷமாய்த் தெரியாததால், நம்மால் பாகுபடுத்த முடியவில்லை.


'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பதை மனிதர்கள் சமயத்தில் மிகச் சாமர்த்தியமாக பயன்படுத்துகின்றனர். திருவண்ணாமலையைச் சுற்றி ஏகப்பட்ட பேர், காவியுடை அணிந்த சித்தர்களைப் போல் தோற்றமளிக்கும் சாமியார்கள். சடாமுடியுடன், சடாமுடியில்லாமல், திருநீரணிந்து, திருநீரணியாமல், உத்திராட்ஷம் அணிந்து, உத்திராட்ஷம் அணியாமல், இப்படிப் பல விதத்தில் உலா வருகின்றனர். ஒவ்வொரு ஆசிரமம், ஆசிரமம் போன்ற குடில் அல்லது கோவில்கள் வாசலிலும் குறைந்தது இருபது சாமியார்கள், 'சிவனே' என்று உட்கார்ந்திருக்கிறார்கள். சரியாக ஆசிரமச் சாப்பாட்டு நேரத்திற்கு உணவு தட்டைத் தூக்கிக் கொண்டு, உணவு வாங்கி உண்கிறார்கள். அதே வாசலில் மீண்டும் தஞ்சம் அடைகின்றனர். இதில் சிலர், எந்நேரத்திலும் யாரிடமும் யாசகமும் பெறுவதற்குத் தயங்குவதில்லை. 'சிவனே' என்று உட்கார்ந்திருக்கும் காவியுடை அணிந்த சாமியார்களில் யார் நிஜமாகவே 'சுயத்தை' நினைத்து நிஷ்டையில் அமர்ந்திருக்கின்றனர் அல்லது அமர முயற்சிக்கின்றனர் என்பது கேள்விக்குறியே. ஆசிரமத்திற்கு வருவோர் போவோரிடமும் யாசகம் கேட்கத் யாருமே தயங்குவதில்லை.யாசகம் கேட்பதற்கு இந்த ஸ்தலத்தில் இதுவே சரியான உடை என்று தேர்ந்தெடுத்து, அதன் மதிப்பு தெரியாது அணிந்து, யாசகம் பெறும் சாமான்யர்களும் இக்கணக்கில் இருக்கலாம்.


இதே போல் உடையணிந்து பிள்ளையார்கோவில் முன் ஒரு சாமியார் அமர்ந்திருந்தார். தெரியாத்தனமாய் நாங்கள் காரிலிருந்து இறங்கி, சாமி கும்பிடச் சென்றோம. செருப்பை பார்த்துக் கொள்கிறேன் என்று தானே வலிய வந்து எங்கள் காலணிகளின் அருகே அமர்ந்து கொண்டார்.பிரார்த்தனை முடித்து வெளியே வந்ததும், தானே காலணி அணியச் சென்ற என் பெண்ணை, தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக, அவளை ஒரு முரட்டுப் பிடி பிடித்து, இவர் காலணி அணிய உதவினார். அவள் மிரண்டே விட்டாள். உருட்டி, மிரட்டி, அவளைக் காலணி அணியச் செய்தவுடன், எங்களிடம் சில்லறை கேட்டார். நியாயமானது தான். ஏதேனும் ஒரு தொழில் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட நினைக்கும் அவரை மனதில் பாராட்டிய படி, மூன்று ரூபாய் கொடுத்தோம் (அதுவே அதிகம் என்றெண்ணி). அவர் உடனே 'இதெல்லாம் பத்தாது சாமி, ஒரு செட் இட்லியே ஏழு ருபாய் ஆகிறது. இன்னும் ரெண்டுரூபா தா" என்றதும் பதில் பேசாது என் கணவர் இன்னும் இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு நகர்ந்தாலும், எங்களுக்கு ஏனோ இச்சம்பவம் கசப்பாய் நினைவில் தங்கி விட்டது. பொதுவாகவே தெருவில் யாசகம் கேட்போர் மீது என் கணவருக்கு நம்பிக்கையில்லை. கையும் காலும் மற்ற உறுப்புகளும் சரியாய் இயங்கும்போது எதற்கு யாசகம் என்று, கொடுக்கப் போகும் என்னையும் தடுத்து விடுவார். திருவண்ணாமலையில் தங்கிய மூன்று நாளும் எத்தனையோ காவியுடை மனிதர்கள் யாசகம் பெற வருவதும், அதில் வெகு சிலருக்கே யாசகம் வழங்குவதுமாய் பொழுது போயிற்று. எனினும் நிஜ சித்தர் யாராவது நம்மிடம் கேட்டு, இல்லையென்று மறுத்துவிட்டோமோ என்ற ஒரு தவிப்பு என்னிடம் இருந்தது.


காவியுடையணிந்து ஆசிரம வாசலில் அமர்ந்திருந்த சிலர், நிலை குத்திய பார்வையுடன், ஆசிரம உணவு உண்டு, மீத நேரத்தில் வெறித்த பார்வையுடன், வெளியே, தெருவில் அமர்ந்திருக்கின்றனர். ஒருவேளை இவர்கள் சித்தராக இருக்கலாம் என்று நானே சொல்லிக்கொண்டேன். 'வாழ்வை வெறுத்துத் துறந்த அல்லது விரட்டியடிக்கப் பட்ட சாதாரண பிரஜையாகவும் இருக்கலாமே' என்று உடனே என்னுடைய குதர்க்க மூளை, தன் பணியை செவ்வனே நிறைவேற்றியது.


ஏனைய ஆசிரமங்கள்


அ. சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம்


முன்பே குறிப்பிட்டது போல், திருவண்ணாமலை முழுதும் நிறைய அசிரமங்கள் சூழ்ந்துள்ளன. அதில் குறிப்பிடும்படியாக உள்ள ஆசிரமம் 'சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம்'.செங்கம் சாலையிலேயே, ரமணாஸ்ரமத்திற்கு சற்று முன்பே அமைந்திருக்கிறது। இங்கு சமாதியில் சிவலிங்கத்தை நிர்மாணித்து வழிபாடு நடத்துகின்றனர்। ஆஸ்ரமத்தைச் சுற்றி பல சுவாமிகளின் சமாதிகள் இருக்கின்றன। ரம்யமான சூழ்நிலை। அன்னதான மண்டபம், மற்றும் தாமரை பீடத்துடன் கூடிய தியான மண்டபம் அமைத்திருக்கின்றனர். இதைத் தவிர, 'ஞானத்தாய் உமாதேவியார்' என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர் இரண்டு ( இக்கட்டுரை எழுதி இரண்டுவருடம் ஆகியபடியால், இப்பொழுது ஏறக்குறைய ஐந்து) வருடம் முன்பு இயற்கை எய்தியவர் என்றும், பல ரிஷிகள் தெய்வங்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவார் என அறிவிப்புப் பலகை கூறுகிறது. சேஷாத்ரி சுவாமிகள் இவர்கள் வாயிலாக அருள் வாக்கு சொன்னதாகவும் கூறப்படுகிறது.


1870 ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள், வழூர் கிராமத்தில் சேஷாத்ரி சுவாமிகள் பிறந்தார். பிறந்ததிலிருந்தே, தெய்வ கடாட்சம் மிகுந்து காணப்பட்டார். அவர் தொட்டது துலங்கியது। திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இம்மகான், பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர்। இவரை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், ஆதிசங்கரரின் அவதாரம் என்றும் சிலர் கூறுகின்றனர்। அவர் வாழ்ந்த காலத்தில் பலர் அவரை மனநிலை சரியில்லாதவர் என்று இகழ்ந்திருப்பதாகவும் செய்தி இருக்கிறது। எனினும், அவரின் ஆழ்ந்த செயல்களுக்குப் பின், பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ரமணர் இவரை பராசக்தியின் வடிவம் என்று குறிப்பிட்டதாகக் கேள்வி. இவர் 1929 ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள் இறையெய்தினார். இன்றும் கூட, இவர் நாமம் உச்சரித்தாலே, பக்தர்களுக்கு பல வகையில் துணை புரிந்து, கஷ்டங்களையும் சோதனைகளையும் நீக்குகிறார் என்று கூறுகின்றனர்.
(இன்னும் வரும்)