August 10, 2015

ஆழ்வார்கள் - பகுதி 4 (பூதத்தாழ்வார்)


முதல் மூன்று ஆழ்வார்களுள் இரண்டாம் ஆழ்வாராக போற்றப்படுபவர் பூதத்தாழ்வார். இவரும் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான். மூன்று ஆழ்வார்களும் ஒரே காலத்தவர். ஒருவரை ஒருவர் பாராமலே, திருக்கோவிலூரில் ஒன்றாகப் இறைவனின் வடிவழகைக் கண்டு பாடல்கள் பாடி, முறையே திருவந்தாதிகளாக அருளிச் சென்றனர். 
.

அவிட்ட நட்சட்திரத்தில், பல்லவ ராஜ்ஜியத்திலன் பகுதியான மாமல்லபுரத்தில் பிறந்த பூதத்தாழ்வார், கௌமோதகி என்னும் கதையின் பிறப்பம்சமாக வணங்கப்படுகிறார். ஸ்தலசயனப் பெருமாள் கோவிலின் அருகில் குருக்கத்தி என்னும் மாதவி மலரில் அவதரித்தாக சான்றுகள் கூறுகின்றன. கடல்மல்லை என்று குறிப்பிடப்படும் தொண்டைநாட்டு நகரம் இவரது அவதாரப் பெருமையை சுமந்துரைக்கிறது. 
.

பூதத்தாழ்வார் அருளியது இரண்டாம் திருவந்தாதி ஏறக்குறைய நூறு பாடல்கள் நிரம்பப்பெற்றது. திருக்கோவிலூரில் எம்பெருமான் அழகில் மயங்கி பக்திப் பெருக்கில் வெளிப்படுகிறது. பொய்கை ஆழ்வாரைத் தொடர்ந்து, இவரது பாசுரம். 
.
அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் 
.
எனப் பாடிப் போற்றுகிறார்.
.
.அன்பையே விளக்காக்கினும் போதவில்லை போலும். அன்பை அகழியாக்கிவிடுகிறார். பெரும் அன்பை அகழியில் வழியவிட்டு இறைவன் பால் உள்ள ஆர்வத்தையே நெய்யாய் உருக்கி, அவர்பால் இன்புற்று உருகும் அறிவை-சிந்தையை, திரியாக்கி, ஞானம் எனும் சுடர் விளக்கை நாரணனுக்கு ஞானத் தமிழின் துணை கொண்டு ஏற்றுகிறார்.
.
.
(மேலும் பார்ப்போம்)
.

August 02, 2015

ஆழ்வார்கள் - பகுதி 3

பொய்கை ஆழ்வார் அந்தாதி வடிவில் பாடிய 100 பாசுரங்களில் திருவரங்கத்து பெருமானைக் குறித்தும் பாடியுள்ளார்.

அரங்கனுக்கும் ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. கர்ப்ப காலம் தொட்டே இருந்திருக்கிறது. அதற்கு முன்பும் இருந்திருக்கிறது. தாயின் கர்ப்பத்தில் தோன்றிய சான்றுகள் இல்லாத பொய்கையில் பிறந்தவருக்கு ஏது கர்ப்ப காலம்?!

கர்ப்ப காலம் என்பது காலத்தின் முன்னோடியாக படைத்தலுக்கு முன் இருந்த ஒடுக்க காலத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் போலும்.

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான்
இன்றுமறப்பனோ ஏழைகாள் -அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கணடேன்
திருவரங்கமேயான் திசை 

என்பது ஆழ்வாரின் பாசுரம்.


ஒன்றுமே மறக்கவில்லை. எப்பொழுதும் அவர் மறக்கவில்லை என்ற உறுதிகூறுகிறார். கர்ப்பகாலம் தொட்டே இருந்த சம்பந்தம். காலத்தின் சக்கர சுழற்சிக்கும் அப்பாற்பட்டு நிற்கும் உறவு.


என்னால் இந்த அழகனை எப்படி மறக்க முடியும்! எப்படிப் பட்ட அழகனை? ஓத நீர்வண்ணன்- ஆழியில் வெள்ளப்பெருக்கெடுக்க ஏற்படும் குளிர்வண்ணம் கொண்டவனை ஒரு போதும் மறந்து அறியேன். கர்ப்பத்தில் இருக்கும் காலத்தேயே மறந்தறியாதவன், இன்று மறப்பேனோ! 

அன்று தொட்டே கைதொழுதேன், கண்டேன். திருவரங்கத்து உறை கொண்டிருக்கும் அவனை நோக்கி கை கூப்பித் தொழுதேன்.

திருவரங்கத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆழிமேல் பள்ளி கொண்ட பெருமானை, கருவரங்கத்து உள்ளே ஏறக்குறைய அதே போல் சயனித்த நிலையில் கைகூப்பி நின்று பக்தன், குழந்தையாய் தன்னை பாவித்து பாடுவது பாசுரத்தின் அழகு.


(இனி பூதத்தாழ்வாரைப் பற்றி சிறுகுறிப்புகள் பகிர்வோம்)


July 24, 2015

ஆழ்வார்கள் - பகுதி 2திருக்கோவிலூரில் பொய்கையாழ்வார் பெருமாளின் தரிசனம் பெற்றது உன்னத நிகழ்வாகும். பக்தவத்ஸலனான விஷ்ணு, தம் அடியவர்க்கு அருளும் பொருட்டு, நிகழ்த்திய இத்திருவிளையாடல் பெரும் நெகிழ்ச்சிக்குறிய சம்பவமாக குறிக்கப்பட்டுள்ளது.  க்ஷேத்திரங்கள் பல தரிசித்து கொண்டே வந்து திருக்கோவிலூர் வந்தடைகிறார் பொய்கையாழ்வார். திருக்கோவிலூரில் உலகளந்த பெருமானாய் விஷ்ணு கோவில் கொண்டுள்ளார். 

பெருக்கெடுத்தோடும் தென்பண்ணை ஆற்றைக் கண்டதும் பெருமானின் பாற்கடலுடன் ஒப்பிட்டார் ஆழ்வார். பெருமாளின் திருவுருவம் நினைந்து பக்திப் பெருக்கெடுக்க உருகுகிறார். உடனே பச்சைமாமலை போல் மேனியுடன் மணிமாலைகள் அணிந்த மார்புடன் எழிலுருவாய் திருமாலை தரிசிக்கிறார். அவர் பரவசத்தில் உருகி நேரம் கடப்பதறியாமல் அங்கேயே நின்று விடுகிறார். 

பின்னர் தன் இயல்புக்கு திரும்பிய ஆழ்வார், இரவாகிப் போனதை உணர்கிறார். பலத்த காற்றும் பெருமழையும் சூழ, அருகே தென்பட்ட ஆசிரமத்துக்கு செல்கிறார். மிருகண்டு முனிவரால் அமைக்கப்பட்டிருந்த அவ்வாசிரமத்தில் யாரும் தென்படவில்லை.  

ஒருவருக்கு படுக்க இடம் அளவெடுத்தாற்ப் போல் இருந்தமையால் களைப்பாறி சற்றே ஓய்வெடுக்க முற்பட்டார். அங்கே திருமாலின் திருவுளப்படி, பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். மழைக்கு இடம் வேண்டி ஆசிரமக்  கதவைத் தட்ட,  இருவருக்கு உட்கார இடமிருப்பதால், இருவருமாக அமர்ந்தபடி பரந்தாமன் பாடல்களில் லயித்திருந்தனர். 

மீண்டும் கதவு தட்டப்பட்டு, பேயாழ்வாரும் அங்கு வந்து இணைகிறார். மூவருக்கு நிற்க மட்டுமே இடம்.  ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்ள முடியாத காரிருள். மூப்பெரும் ஆழ்வார்களை ஒருங்கே இணைத்த இறைவன், தம் திருவிளையாடலைத் தொடர்ந்தார். 

நிற்க தாராளமாய் இடமிருந்தும், மூவரும் நெருசலுக்கு உட்பட, தம்முடன் இன்னும் ஒரு நபர் இருப்பதை உணர்ந்தனர். மூன்று பேர் மட்டுமே நிற்க முடிந்த இடத்தில் எப்படியோ நான்காமவரும்  இருக்கக் கண்டார். மின்னலொளியில், நான்காம் நபரின் திருமுகம்..

திவ்யமான பேரழகுடன் விளங்கியதைக் கண்டனர். உடனே இறைவனை உணர்ந்து பாடல்கள் பல பாடி துதித்தனர். 

தம்முடன் தங்கியிருந்த இறைவனைக் காண,  இருள் விலகி, கதிரவனின் வெளிச்சம் விளங்க வேண்டி, உடனே பொய்கை ஆழ்வார் இவ்வுலகை திருவிளக்க்காகவும், ஆழ்கடலை நெய்யாகவும், கதிரவனின் ஒளியை திரி கொண்ட தீபமாக பாவித்து 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று

எனப் பாடி துதித்தார்.

(இருளை நம் அறியாமைக்கும், பந்த பாசத்திற்கும், சுடரை முக்திக்கும் பக்திக்கும் ஒப்பிட்டு விளக்கலாம். )

(தொடர்வோம்) 

July 20, 2015

ஆழ்வார்கள் - பகுதி 1 (பொய்கை ஆழ்வார்)பெருமாளை பக்தியின் பால் துதி செய்து, வைணவத் தூண்களாய்த் திகழுபவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். ஆழ்வார் பெருமக்கள் நித்யசூரிகளின் அவதாரங்களாகக் கருதப்படுகின்றனர்.

எம்பெருமான் நினைந்து கண்ணீர் உகுத்து காதல் மேலிட்டு பக்தியின் பால் உருகும் பலர் இருப்பினும் தமிழகத்தில் இப்பன்னிரு ஆழ்வார்களும் அவர்களின் திவ்யப்ரபந்தமும் என்றும் பக்திக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவன. அவற்றை நமக்கு வழங்கி அருளிய நாதமுனிகளையும் நினைவு கூறி நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆழ்வார்கள் என்றால் ஆன்மவிசாரத்தில், இறைவனின் ஈடுபாட்டில், பரம்பிரம்மத்தில் திளைத்து ஆழ்ந்திருப்பவர்கள் என்று பொருள் கொள்ளலாம். 

முதல் மூன்று ஆழ்வார்களுள் ஒருவரான பொய்கையாழ்வார், 'அயோநிஜர்' என்று விளிக்கபடுகிறார். அஃதாவது, இவரின்  பிறப்பின் ரகசியம் தெரிந்திருக்கவில்லை. இவர் கண்டெடுக்க பட்டிருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் த்வாபர யுகத்தவர்கள் (குறைந்தது 5000 வருடங்களுக்கு முன்)  என தகவல்கள் கூறுகின்றன,

பொய்கையாரின் பிறப்பு ஏழாம் நூற்றாண்டு நிகழ்ந்துள்ளது. பன்னிருவரில் முதன்மையானவராக அடையாளாம் காட்டப்படுகிறார். காஞ்சியிலுள்ள திருவெக்காவில் பொய்கையில் அவதரித்ததால் பொய்கை என்றே அழைக்கபட்டார். பெருமானின் பாஞ்சஜன்யத்தின் அம்சமாக கருதப்படுகிறார். 

நூறு பாடல்கள் கொண்ட 'முதல் திருவந்தாதி' எனும் தொகுப்பு அந்தாதியாக பாடப்பட்ட தனிச்சிறப்பை பெற்றது 

பொய்கைஆழ்வார் இறையை புலன்கள்கொண்டு துதிக்கிறார். தம் காது என்றும் பெருமானின் புகழை கேட்க பிரியப்படுகின்றன. கண்கள் அவனையே மட்டுமே காண விழைகின்றன, நாசி அவனுக்கு இட்ட துளசியை மட்டும் நுகர துடிக்கின்றன, கால்கள் அவன் கோவில் கொண்டுள்ள இடத்திற்க்கே செல்ல விருப்பம் கொள்கிறது, நாவானது இறையின் பெயரை மட்டுமே பாடி மகிழ வேண்டுவன, எனப் புலன்கள் அனைத்தும் இறைச்சேவைக்கே உள்ளதென துதிக்கிறார்

ஐம்பூதங்களின் வடிவாகவும், மெய்ஞானமாகவும், அறமாகவும் ஞானத்தின் வேள்வியாகவும் பரம்பொருளை உணர்நது போற்றுகிறார். 


"புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் 
அந்தியால் - ஆம்பயன் அங்கென்?"

என்று வலியுறுத்துகிறார். 

அதாவது சிந்தனையாலும், ஆழ்நோக்குடன் உள்முகமாய் பெருமாளை துதி செய்து உருவேற்றுவதை விடுத்து,  மந்திரத்தால் உருவேற்றி சந்தியாவந்தனம் முதலிய சடங்குகளைச் செய்வதால் என்ன பயன்?! என்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்க மறுத்து, மனத்தால் இறைவனை நினைக்கும் குணத்தை முன்னிறுத்துகிறார்.

(இன்னும் பார்ப்போம்) 

July 06, 2015

கோளறு பதிகம் - விளக்கத்துடன்.

கோளறு பதிகம் திருஞான சம்பந்தரால் அருளப்பட்டது. ஜைன மதம் தழைத்தோங்கிய காலகட்டத்தில், பாண்டிய நாட்டில் அழைப்பிற்கிணங்கி, சைவ மதக் கோட்பாடுகளை தழைக்க விருப்பம் கொள்கிறார் சம்பந்தர். உடன் இருக்கும் அப்பர் ஜைன மதத்தவர்களால் ஏதேனும் தீங்கு நேரிடுமோ என அஞ்சுகையில், இறைவன் ஈசனின் துணை இருப்பின், சமணரும், பௌத்தரும், நாளும் கோளும் இன்ன பிறவும் என் செய்யும்! அவை நல்லனவையே செய்யும் என்று பொருள்படும் "கோளறு பதிகத்தை அருளிச் செய்தார். 

கோளறு பதிகம் படிப்பதால், நவகிரஹத்தால் உண்டாகும்  தோஷங்களும், தீவினைப்பயன்கள் குறையும் என்பது திண்ணம். 

கோளறு பதிகத்துடன், என்னால் இயன்ற அதன் விளக்கமும் இணைத்துள்ளேன். 

***************************
கோளறு பதிகம் 
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


மூங்கில் தோளுடையாளை தன் பாகத்தின் வைத்திருப்பவனும், ஆலகால விஷம் அருந்திய கழுத்தில் கொண்டவனும் மிக நல்ல வீணையிசையை எழுப்புபவனும் குறைவில்லா திங்களையும் கங்கா தேவியையும் தன் முடி மேல் அணிந்தவனும் ஆகிய எம்பெருமான் என் உள்ளம் புகுந்ததால்......

பாம்புடன் சேர்த்த நவக்ரஹங்களும் ஆசு/குற்றம் அறுப்பவையாகி சிவனின் அடியவர்க்கு அவை நல்லதே செய்யும்.என்போடு கொம்போ டாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


எலும்பும் பன்றிக்கொம்பும், ஆமையோடும் மாலைகளாய் மார்ப்பை அலங்கரிக்க, பொன்னைப்போல் மின்னும் ஊமத்தமலரின் மாலை சூடி, புனித கங்கையை முடிமேல் கொண்டு, எருதேறும் அருள்பவனான ஈசன், என் உள்ளத்தில் எழுந்தருளியிருப்பதனால்....நட்சத்திர வரிசைகளில் சுப பலன்களை எளிதில் வழங்காத சிலவும், இன்ன பிற நாட்களும் கூட அன்போடு இயைந்து மிக நல்லனவற்றையே செய்பவயாக அடியவர்க்கு திகழும்.உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் களைய தூர்தி செயமாது பூமி
திசைதெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேபவளத்தை ஒத்த ஒளிர் திருமேனியுடைய எம்பெருமான், ஒளிபொருந்திய நீரணிந்து, கொன்றை மலர்களும், மதியும் சூடி, உமையயுடன் வெள்ளை எருதின் மேலேறி என் உள்ளம் புகுந்ததனால்.....முப்பெரும் தேவியராம், கலைமளும், திருமகளும் துர்கையும், அஷ்ட திசைகளை காக்கும் தெய்வங்களும், இன்ன பிற தெய்வங்களும், சிவனடியார்களுக்கு மிக மிக நல்லனவற்றையே வழங்கும்.


மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேபிறைநிலாவை ஒத்த நெற்றியையுடைய அன்னை ஷக்தியோடு வடப்பக்கமாய் அமர்ந்து (தென் திசையை நோக்கியவாறு) வேதங்கள் ஓதும் எங்கள் பரமன் (தட்சிணாமூர்த்தி வடிவில் ஈசன் தென்திசை நோக்கி அமர்ந்து மௌன மொழியில் ஞான உபதேசம் செய்கிறார்), கங்கையும் கொன்றை மாலையும் தன் சடைமுடிமேல் அணிந்து என் உள்ளம் புகுந்ததனால்.....
கொடு நோய்க்கொண்டு வருத்தி, உயிர்பறிக்கும் யமனும், யமதூதர்களும், நெருப்பும், உடலைப் பீடிக்கும் இன்னபிற நோய்களும் கூட அதி நல்ல குணம் கொண்டவையாய் ஈசனின் அடியவர்க்கு விளங்கும்.


நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேதேவாசுரர்களை ரக்‌ஷித்து பாற்கடல் நஞ்சை கருணையின் பால் உண்டு, நஞ்சை கழுத்தில் ஒரு அணிகலன் போல் அணிந்த எம் தந்தை, அருளையும் அன்பையும் பொழியும் அழகிய பார்வதியோடு எருதின் மேல் ஏறி வரும் எங்கள் இறைவன், உறங்கும் நேரத்து இருளிளையொத்த நிறங்கொண்ட வன்னி மலரையும் கொன்றையையும் தம் முடிமேல் அணிந்து என் உள்ளம் புகுந்ததனால்......
வெம்மையும், கடுங்குணமும் கொண்ட அசுரரும், உருமும் இடியும், மின்னலும், இன்னும் சக்தி பொருந்திய பூதங்களும் அஞ்சி, அவை நல்லனவற்றையே வழங்கும் தன்மையுடையதாக சிவனடியார்க்கு விளங்கும்.
(குறிப்பு: இங்கு பூதங்கள் ஐம்பூதத்தை குறிப்பிடுபவை)வாள்வரி அதல தாடை வரிகோவணத்தார்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேகூர்வாள் போன்ற வரிகளைக் கொண்ட புலித்தோலையை தன் இடையாடையாகவும் மேலாடையாகவும் அணிந்து, அன்பு கொண்ட உமையுடன், தாமரை, வன்னி கொன்ற மலர்களையும் கங்கையையும் திருமுடி மேல் சூடி என் உள்ளம் குடிகொண்டதனால்...
கொடுங்குணம் கொண்ட புலியும், காட்டு யானையும், பன்றியும், கொடு நாகமும், கரடியும் ஆளை கொல்லத் துணியும் சிங்கமும் கூட கேடு எதுவும் செய்யாத மிக நல்லவைகளாகவே அடியவர்க்கு திகழும்.

செப்பில முலைநன் மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேவர்ணிப்பதற்கு இயலாத அழகிய மார்பகத்தை உடைய மங்கையான உமையவள் திருமேனியின் ஒரு பாகத்தில் எழுந்தருளியிருக்க எருதில் ஏறுகின்றவரும், பக்தர்களை தம் செல்வமாய் உடையவரும், ஒப்புமையில்லாத வெண்மதியும், கங்கை ஜலமும் (அப்பு = நீர்) தன் திருமுடி மேல் தாங்கியபடி என் உள்ளம் புகுந்ததனால்....
வெப்பத்தினாலும் குளிராலும் வரும் காய்ச்சல், வாதம், பித்தம், முதலிய எவ்வித நோய்களும் வினைபயனாக வந்து வருத்தாமல், அவ்வினைகளும் கூட நல்லவைகளாக (அடியார்களை விட்டகன்று) அடியவர்களுக்கு விளங்கும்.


வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து 
மடவாள் தனோடும் உடனாய் 
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால் 
ஏழ்கடல் சூழிலங்கை அரயன் றனோடும்
இடரான வந்து நலியா 
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவேகாமத்தை தூண்டுபவனாகிய மன்மதனை தன் யோகவலிமையால் நெற்றிக் கண் திறந்து சாம்பலாக்கிய பார்வதி மணாளன், அழகிய அன்னையுடன் வெள்ளெருதின் மேல் அமர்ந்து, வான்மதியும் வன்னி மலரும், கொன்றையும் சூடி, என் உள்ளம் புகுந்துவிட்டான்....
ஆகையால், ஏழ்கடல் சூழும் லங்காபுரியின் மன்னன் இராவணன் முதலிய அரக்கர்கள் நம்மை வருத்தாதிருப்பர். ஆழ்கடலும், அவற்றுள் வாழ் ஜீவன்களும் சிவனைத் துதிப்போர்க்கு கேடு செய்யாதிருந்து, மிக நல்லனவையாய் விளங்கும்.


பலபல வேடமாகும் பரன் நாரி பாகன் 
பசுவேறும் எங்கள் பரமன் 
சலமாளோடெருக்கு முடிமேல் அணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் 
வருகால மான பலவும் 
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவேபக்தர்களைக் காக்க பலவடிவில்(வேடத்தில்) தோன்றி அருள் பாலிக்கும் பரம்பொருள், மங்கையை தன் பாகத்தில் கொண்டவன், பசு(எருது) ஏறும் பரமன், ஜல மகளான ங்கையையும், எருக்கம் மலரும், முடிமேல் அணிந்து என் உள்ளம் புகுந்தனன்... ஆகையால்
மலர்மீதமர்ந்த பிரம்மனு, திருமாலும், வேதங்களும், தேவர்களும், காலமும், இன்னும் பலரும், அலைகடலுள் உரையும் மேருமலையைப் போல் நற்பலன்ங்களை வழங்கி
நல்லவர்களாகவே சிவனடியர்க்கு விளங்குவர்.


கொத்தலர் குழலி யோடு விசயற்கு நல்கு 
குணமாய வேடவிகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் 
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேமணம் கொண்ட கொத்தான மலர்களை எழில் கூந்தலில் கொண்ட தேவியுடன், அர்ஜுனனுக்கு அருள் பாலிக்க தன் இறைநிலை கொண்ட உருவை விடுத்து, வேடன் உருவில் தோன்றியருளியவன், ஊமத்தமும், வெண்மதியையும் நாகத்தையும் முடிமேல் சூடி, என் உள்ளம் புகுந்தனன், ஆகையால்....
பௌத்தமதத்தை தழுவிய துறவிகளும், சமணர்களும், வாதப்போரில் வென்று தம்மை நிலைநாட்ட இறைவனின் திருநீற்றின் பெருமையே போதுமானது. உறுதியானது. அது போன்ற எதிர்ப்பும் வாதமும் அவர்களுக்கு நல்லவையாகவே முடியும்.


தேனமர் பொழில்கொள் ஆளை விளை செந்நெல் துன்னி 
வளர்செம்பொன் எங்கும் நிகழ 
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் 
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய் 
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் 
அரசாள்வர் ஆணை நமதே


தென் கொண்ட மலர்களை உடைய சொலைகள், கரும்பு விளைந்த பூமியில் ஆலைகளைஉம், செம்மையான நெல் எங்கும் விளைந்து குதிர்ந்துள்ளதால் பொன்னைப் போல் திகழ்ந்திருக்கும் இப்பூமி, பிரம்மதேவன் முதல் பல தேவர்களும் தங்கும் இந்த செழித்த பூமியான சீர்காழியில்....
வேதஞானமும் இறையருளும் நிரம்பப் பெற்ற திருஞான சம்பந்தர், வினைப் பயனை நல்கும் கோள்கள் நாட்களும் இன்ன பிறவும், அடியவர்களை வருத்தாதிருப்பர். இந்த சொல்மாலையை ஓதுகின்றோர் வானுலகம் அடைந்து உயர்கதி அடைவது திண்ணம்.

July 04, 2015

ஃபினிக்ஸ் பறவை


எஞ்சி இருக்கும்
உன் உடைமைகளை
களைய முற்படும்போதெல்லாம்
கவிதையெனப் பரிமளித்து
காதலை  ஆழ வேறூன்றி
விடுகிறாய் 


--ஷக்திப்ரபா 

June 16, 2015

குரு வந்தனம் - மஹாபெரியவா சரணம்.1993 ஆண்டு பெரியவாளைப் பார்க்கவும் என் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வாங்கவும் நான் என் பெற்றொருடன் சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து அன்று தான் அவரை அருகில் காணும் பாக்கியம் கிடைத்தது. சிறுமியாய் இருந்த பொழுது இரு முறை கண்டிருக்கிறேன். பெரிதாக எதுவும் பேசியதில்லை. பேசும் பக்குவமும் இல்லை. 

ஆனால் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வாங்க சென்ற பொழுது, அவரைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது உண்மை.  இத்துனை வயதாகி விட்டதே இவருக்கு. நினைவு இருக்குமோ தெரியவில்லை. அவர் பார்ப்பதும் ஆசீர்வதிப்பதும் அவருக்கு உணர முடியுமோ புரியவில்லை. 'உடல் தளர்ச்சி-மூப்பு' போன்ற விஷயம் எத்தனை பெரிய மனிதரையும் பொம்மையாக்கிவிடுகிறதே என்று நினைத்து வருந்தினேன்.

ஆசீர்வாதம் செய்து பொழுதும் கூட அவர் 'தன்- நினைவில்' பூர்ணமாய் இருப்பாரோ இல்லையோ என்றே என் மனம் பரிதவித்தது. 

இத்தனை வருடங்கள் கழித்து இந்த மரமண்டைக்கு உரைக்கிறது, அவர் வயதையும் மூப்பையும் கடந்தவர் என்று. வெளித் தோற்றத்தை மட்டுமே கண்டு ஒரு ஞானியை உணர முடியாத முட்டாளாகவே என் மதிப்பிற்குறிய குரு முன் இறுதியாக நின்றிருந்தேன். 

அவரைப் பற்றி பெரிய குரு பக்தி கூட இருந்ததில்லை. அப்பாவும் தாத்தாவும் எங்கள் வீட்டில் ஆச்சார்யரின் படம் வைத்திருந்தனர். அதை எல்லாம் பக்தியுடன் பார்த்ததும் இல்லை. 

அவரே என்னை ஆட்கொண்ட சம்பவம் நடந்த வரை...இப்படித் தான் இருந்திருக்கிறேன். 

என்னையும் ஒரு பொருட்டாய்க் கருதி அவர் தம் கடைக் கண் பார்வை செலுத்தி, அருள் சுரந்து என் மனதுள் குருவாய் உயர்ந்த என் ஆச்சார்யருக்கு கோடி வந்தனங்கள். 


April 05, 2015

நிரந்தர வரம்கதைகளில்
கவிதைகளில்
வார்த்தைகளில்
வசனங்களில்
சொற்களில்
சொல்லாமலே சென்ற
முட்களில்
பாடல்களில்
ராகங்களில்
உணர்வுகளைத்
தேடித் திரிந்து
தேகம் நலிந்து
வருடங்கள் தொலைந்து
வருத்தங்கள் மெலிந்து விட்ட போதிலும்
மலிந்து விடவில்லை நம் காதல்
உன் நினைவுக் கிடங்குகளில்
புன்னகைத்து
பன்னீர்ப் பூச்சொரிகிறேன்
பிரார்த்தனைகளால்
பாலமிட்டு மிளிரும்
தெய்வீகக் காதல்

-ஷக்திப்ரபா


March 18, 2015

பிம்பங்கள்

நிலையாமையின் நிஜம்தன்னை
அறிவிக்கும் நிலைக்கண்ணடித்
தருணங்கள்.
^
நயமாய் உரைத்து
நிகழும்
உடல் பரிணாமத்தை
உரித்தே காட்டிடும்.
^
சுருக்கமாய் உணர்த்தும்,
உடலின் நிலைதன்னை...
நாளும் பலகிளைகள்
தாவிப் பரிதவிக்கும் மனம்தன்னை,
அகத்தின் எழில்தன்னை.
^
சேர்த்தே சேமித்து
ஒளியூட்டி கொக்கரிக்கும்
வண்ணத்தின் தொலைந்த
ஸ்ருங்காரங்கள்
எண்ணத்தின் சுருங்கிய
பிரதிபலிப்புகள்
அல்லது மலரென மலர்ந்த
முதிர்ச்சிக் கோடுகள்.


-ஷக்திப்ரபா-