திருக்கோவிலூரில் பொய்கையாழ்வார் பெருமாளின் தரிசனம் பெற்றது உன்னத நிகழ்வாகும். பக்தவத்ஸலனான விஷ்ணு, தம் அடியவர்க்கு அருளும் பொருட்டு, நிகழ்த்திய இத்திருவிளையாடல் பெரும் நெகிழ்ச்சிக்குறிய சம்பவமாக குறிக்கப்பட்டுள்ளது. க்ஷேத்திரங்கள் பல தரிசித்து கொண்டே வந்து திருக்கோவிலூர் வந்தடைகிறார் பொய்கையாழ்வார். திருக்கோவிலூரில் உலகளந்த பெருமானாய் விஷ்ணு கோவில் கொண்டுள்ளார்.
பெருக்கெடுத்தோடும் தென்பண்ணை ஆற்றைக் கண்டதும் பெருமானின் பாற்கடலுடன் ஒப்பிட்டார் ஆழ்வார். பெருமாளின் திருவுருவம் நினைந்து பக்திப் பெருக்கெடுக்க உருகுகிறார். உடனே பச்சைமாமலை போல் மேனியுடன் மணிமாலைகள் அணிந்த மார்புடன் எழிலுருவாய் திருமாலை தரிசிக்கிறார். அவர் பரவசத்தில் உருகி நேரம் கடப்பதறியாமல் அங்கேயே நின்று விடுகிறார்.
பின்னர் தன் இயல்புக்கு திரும்பிய ஆழ்வார், இரவாகிப் போனதை உணர்கிறார். பலத்த காற்றும் பெருமழையும் சூழ, அருகே தென்பட்ட ஆசிரமத்துக்கு செல்கிறார். மிருகண்டு முனிவரால் அமைக்கப்பட்டிருந்த அவ்வாசிரமத்தில் யாரும் தென்படவில்லை.
ஒருவருக்கு படுக்க இடம் அளவெடுத்தாற்ப் போல் இருந்தமையால் களைப்பாறி சற்றே ஓய்வெடுக்க முற்பட்டார். அங்கே திருமாலின் திருவுளப்படி, பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். மழைக்கு இடம் வேண்டி ஆசிரமக் கதவைத் தட்ட, இருவருக்கு உட்கார இடமிருப்பதால், இருவருமாக அமர்ந்தபடி பரந்தாமன் பாடல்களில் லயித்திருந்தனர்.
மீண்டும் கதவு தட்டப்பட்டு, பேயாழ்வாரும் அங்கு வந்து இணைகிறார். மூவருக்கு நிற்க மட்டுமே இடம். ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்ள முடியாத காரிருள். மூப்பெரும் ஆழ்வார்களை ஒருங்கே இணைத்த இறைவன், தம் திருவிளையாடலைத் தொடர்ந்தார்.
நிற்க தாராளமாய் இடமிருந்தும், மூவரும் நெருசலுக்கு உட்பட, தம்முடன் இன்னும் ஒரு நபர் இருப்பதை உணர்ந்தனர். மூன்று பேர் மட்டுமே நிற்க முடிந்த இடத்தில் எப்படியோ நான்காமவரும் இருக்கக் கண்டார். மின்னலொளியில், நான்காம் நபரின் திருமுகம்..
திவ்யமான பேரழகுடன் விளங்கியதைக் கண்டனர். உடனே இறைவனை உணர்ந்து பாடல்கள் பல பாடி துதித்தனர்.
தம்முடன் தங்கியிருந்த இறைவனைக் காண, இருள் விலகி, கதிரவனின் வெளிச்சம் விளங்க வேண்டி, உடனே பொய்கை ஆழ்வார் இவ்வுலகை திருவிளக்க்காகவும், ஆழ்கடலை நெய்யாகவும், கதிரவனின் ஒளியை திரி கொண்ட தீபமாக பாவித்து
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று
எனப் பாடி துதித்தார்.
(இருளை நம் அறியாமைக்கும், பந்த பாசத்திற்கும், சுடரை முக்திக்கும் பக்திக்கும் ஒப்பிட்டு விளக்கலாம். )
(தொடர்வோம்)