Showing posts with label பொய்கை ஆழ்வார். Show all posts
Showing posts with label பொய்கை ஆழ்வார். Show all posts

August 02, 2015

ஆழ்வார்கள் - பகுதி 3

பொய்கை ஆழ்வார் அந்தாதி வடிவில் பாடிய 100 பாசுரங்களில் திருவரங்கத்து பெருமானைக் குறித்தும் பாடியுள்ளார்.

அரங்கனுக்கும் ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. கர்ப்ப காலம் தொட்டே இருந்திருக்கிறது. அதற்கு முன்பும் இருந்திருக்கிறது. தாயின் கர்ப்பத்தில் தோன்றிய சான்றுகள் இல்லாத பொய்கையில் பிறந்தவருக்கு ஏது கர்ப்ப காலம்?!

கர்ப்ப காலம் என்பது காலத்தின் முன்னோடியாக படைத்தலுக்கு முன் இருந்த ஒடுக்க காலத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் போலும்.

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான்
இன்றுமறப்பனோ ஏழைகாள் -அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கணடேன்
திருவரங்கமேயான் திசை 

என்பது ஆழ்வாரின் பாசுரம்.


ஒன்றுமே மறக்கவில்லை. எப்பொழுதும் அவர் மறக்கவில்லை என்ற உறுதிகூறுகிறார். கர்ப்பகாலம் தொட்டே இருந்த சம்பந்தம். காலத்தின் சக்கர சுழற்சிக்கும் அப்பாற்பட்டு நிற்கும் உறவு.






என்னால் இந்த அழகனை எப்படி மறக்க முடியும்! எப்படிப் பட்ட அழகனை? ஓத நீர்வண்ணன்- ஆழியில் வெள்ளப்பெருக்கெடுக்க ஏற்படும் குளிர்வண்ணம் கொண்டவனை ஒரு போதும் மறந்து அறியேன். கர்ப்பத்தில் இருக்கும் காலத்தேயே மறந்தறியாதவன், இன்று மறப்பேனோ! 

அன்று தொட்டே கைதொழுதேன், கண்டேன். திருவரங்கத்து உறை கொண்டிருக்கும் அவனை நோக்கி கை கூப்பித் தொழுதேன்.

திருவரங்கத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆழிமேல் பள்ளி கொண்ட பெருமானை, கருவரங்கத்து உள்ளே ஏறக்குறைய அதே போல் சயனித்த நிலையில் கைகூப்பி நின்று பக்தன், குழந்தையாய் தன்னை பாவித்து பாடுவது பாசுரத்தின் அழகு.


(இனி பூதத்தாழ்வாரைப் பற்றி சிறுகுறிப்புகள் பகிர்வோம்)


July 24, 2015

ஆழ்வார்கள் - பகுதி 2



திருக்கோவிலூரில் பொய்கையாழ்வார் பெருமாளின் தரிசனம் பெற்றது உன்னத நிகழ்வாகும். பக்தவத்ஸலனான விஷ்ணு, தம் அடியவர்க்கு அருளும் பொருட்டு, நிகழ்த்திய இத்திருவிளையாடல் பெரும் நெகிழ்ச்சிக்குறிய சம்பவமாக குறிக்கப்பட்டுள்ளது.  க்ஷேத்திரங்கள் பல தரிசித்து கொண்டே வந்து திருக்கோவிலூர் வந்தடைகிறார் பொய்கையாழ்வார். திருக்கோவிலூரில் உலகளந்த பெருமானாய் விஷ்ணு கோவில் கொண்டுள்ளார். 

பெருக்கெடுத்தோடும் தென்பண்ணை ஆற்றைக் கண்டதும் பெருமானின் பாற்கடலுடன் ஒப்பிட்டார் ஆழ்வார். பெருமாளின் திருவுருவம் நினைந்து பக்திப் பெருக்கெடுக்க உருகுகிறார். உடனே பச்சைமாமலை போல் மேனியுடன் மணிமாலைகள் அணிந்த மார்புடன் எழிலுருவாய் திருமாலை தரிசிக்கிறார். அவர் பரவசத்தில் உருகி நேரம் கடப்பதறியாமல் அங்கேயே நின்று விடுகிறார். 

பின்னர் தன் இயல்புக்கு திரும்பிய ஆழ்வார், இரவாகிப் போனதை உணர்கிறார். பலத்த காற்றும் பெருமழையும் சூழ, அருகே தென்பட்ட ஆசிரமத்துக்கு செல்கிறார். மிருகண்டு முனிவரால் அமைக்கப்பட்டிருந்த அவ்வாசிரமத்தில் யாரும் தென்படவில்லை.  

ஒருவருக்கு படுக்க இடம் அளவெடுத்தாற்ப் போல் இருந்தமையால் களைப்பாறி சற்றே ஓய்வெடுக்க முற்பட்டார். அங்கே திருமாலின் திருவுளப்படி, பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். மழைக்கு இடம் வேண்டி ஆசிரமக்  கதவைத் தட்ட,  இருவருக்கு உட்கார இடமிருப்பதால், இருவருமாக அமர்ந்தபடி பரந்தாமன் பாடல்களில் லயித்திருந்தனர். 

மீண்டும் கதவு தட்டப்பட்டு, பேயாழ்வாரும் அங்கு வந்து இணைகிறார். மூவருக்கு நிற்க மட்டுமே இடம்.  ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்ள முடியாத காரிருள். மூப்பெரும் ஆழ்வார்களை ஒருங்கே இணைத்த இறைவன், தம் திருவிளையாடலைத் தொடர்ந்தார். 

நிற்க தாராளமாய் இடமிருந்தும், மூவரும் நெருசலுக்கு உட்பட, தம்முடன் இன்னும் ஒரு நபர் இருப்பதை உணர்ந்தனர். மூன்று பேர் மட்டுமே நிற்க முடிந்த இடத்தில் எப்படியோ நான்காமவரும்  இருக்கக் கண்டார். மின்னலொளியில், நான்காம் நபரின் திருமுகம்..

திவ்யமான பேரழகுடன் விளங்கியதைக் கண்டனர். உடனே இறைவனை உணர்ந்து பாடல்கள் பல பாடி துதித்தனர். 

தம்முடன் தங்கியிருந்த இறைவனைக் காண,  இருள் விலகி, கதிரவனின் வெளிச்சம் விளங்க வேண்டி, உடனே பொய்கை ஆழ்வார் இவ்வுலகை திருவிளக்க்காகவும், ஆழ்கடலை நெய்யாகவும், கதிரவனின் ஒளியை திரி கொண்ட தீபமாக பாவித்து 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று

எனப் பாடி துதித்தார்.

(இருளை நம் அறியாமைக்கும், பந்த பாசத்திற்கும், சுடரை முக்திக்கும் பக்திக்கும் ஒப்பிட்டு விளக்கலாம். )

(தொடர்வோம்) 

July 20, 2015

ஆழ்வார்கள் - பகுதி 1 (பொய்கை ஆழ்வார்)



பெருமாளை பக்தியின் பால் துதி செய்து, வைணவத் தூண்களாய்த் திகழுபவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். ஆழ்வார் பெருமக்கள் நித்யசூரிகளின் அவதாரங்களாகக் கருதப்படுகின்றனர்.

எம்பெருமான் நினைந்து கண்ணீர் உகுத்து காதல் மேலிட்டு பக்தியின் பால் உருகும் பலர் இருப்பினும் தமிழகத்தில் இப்பன்னிரு ஆழ்வார்களும் அவர்களின் திவ்யப்ரபந்தமும் என்றும் பக்திக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவன. அவற்றை நமக்கு வழங்கி அருளிய நாதமுனிகளையும் நினைவு கூறி நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆழ்வார்கள் என்றால் ஆன்மவிசாரத்தில், இறைவனின் ஈடுபாட்டில், பரம்பிரம்மத்தில் திளைத்து ஆழ்ந்திருப்பவர்கள் என்று பொருள் கொள்ளலாம். 

முதல் மூன்று ஆழ்வார்களுள் ஒருவரான பொய்கையாழ்வார், 'அயோநிஜர்' என்று விளிக்கபடுகிறார். அஃதாவது, இவரின்  பிறப்பின் ரகசியம் தெரிந்திருக்கவில்லை. இவர் கண்டெடுக்க பட்டிருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் த்வாபர யுகத்தவர்கள் (குறைந்தது 5000 வருடங்களுக்கு முன்)  என தகவல்கள் கூறுகின்றன,

பொய்கையாரின் பிறப்பு ஏழாம் நூற்றாண்டு நிகழ்ந்துள்ளது. பன்னிருவரில் முதன்மையானவராக அடையாளாம் காட்டப்படுகிறார். காஞ்சியிலுள்ள திருவெக்காவில் பொய்கையில் அவதரித்ததால் பொய்கை என்றே அழைக்கபட்டார். பெருமானின் பாஞ்சஜன்யத்தின் அம்சமாக கருதப்படுகிறார். 

நூறு பாடல்கள் கொண்ட 'முதல் திருவந்தாதி' எனும் தொகுப்பு அந்தாதியாக பாடப்பட்ட தனிச்சிறப்பை பெற்றது 

பொய்கைஆழ்வார் இறையை புலன்கள்கொண்டு துதிக்கிறார். தம் காது என்றும் பெருமானின் புகழை கேட்க பிரியப்படுகின்றன. கண்கள் அவனையே மட்டுமே காண விழைகின்றன, நாசி அவனுக்கு இட்ட துளசியை மட்டும் நுகர துடிக்கின்றன, கால்கள் அவன் கோவில் கொண்டுள்ள இடத்திற்க்கே செல்ல விருப்பம் கொள்கிறது, நாவானது இறையின் பெயரை மட்டுமே பாடி மகிழ வேண்டுவன, எனப் புலன்கள் அனைத்தும் இறைச்சேவைக்கே உள்ளதென துதிக்கிறார்

ஐம்பூதங்களின் வடிவாகவும், மெய்ஞானமாகவும், அறமாகவும் ஞானத்தின் வேள்வியாகவும் பரம்பொருளை உணர்நது போற்றுகிறார். 


"புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் 
அந்தியால் - ஆம்பயன் அங்கென்?"

என்று வலியுறுத்துகிறார். 

அதாவது சிந்தனையாலும், ஆழ்நோக்குடன் உள்முகமாய் பெருமாளை துதி செய்து உருவேற்றுவதை விடுத்து,  மந்திரத்தால் உருவேற்றி சந்தியாவந்தனம் முதலிய சடங்குகளைச் செய்வதால் என்ன பயன்?! என்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்க மறுத்து, மனத்தால் இறைவனை நினைக்கும் குணத்தை முன்னிறுத்துகிறார்.

(இன்னும் பார்ப்போம்)