பொய்கை ஆழ்வார் அந்தாதி வடிவில் பாடிய 100 பாசுரங்களில் திருவரங்கத்து பெருமானைக் குறித்தும் பாடியுள்ளார்.
அரங்கனுக்கும் ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. கர்ப்ப காலம் தொட்டே இருந்திருக்கிறது. அதற்கு முன்பும் இருந்திருக்கிறது. தாயின் கர்ப்பத்தில் தோன்றிய சான்றுகள் இல்லாத பொய்கையில் பிறந்தவருக்கு ஏது கர்ப்ப காலம்?!
கர்ப்ப காலம் என்பது காலத்தின் முன்னோடியாக படைத்தலுக்கு முன் இருந்த ஒடுக்க காலத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் போலும்.
இன்றுமறப்பனோ ஏழைகாள் -அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கணடேன்
திருவரங்கமேயான் திசை
என்பது ஆழ்வாரின் பாசுரம்.
ஒன்றுமே மறக்கவில்லை. எப்பொழுதும் அவர் மறக்கவில்லை என்ற உறுதிகூறுகிறார். கர்ப்பகாலம் தொட்டே இருந்த சம்பந்தம். காலத்தின் சக்கர சுழற்சிக்கும் அப்பாற்பட்டு நிற்கும் உறவு.
என்னால் இந்த அழகனை எப்படி மறக்க முடியும்! எப்படிப் பட்ட அழகனை? ஓத நீர்வண்ணன்- ஆழியில் வெள்ளப்பெருக்கெடுக்க ஏற்படும் குளிர்வண்ணம் கொண்டவனை ஒரு போதும் மறந்து அறியேன். கர்ப்பத்தில் இருக்கும் காலத்தேயே மறந்தறியாதவன், இன்று மறப்பேனோ!
அன்று தொட்டே கைதொழுதேன், கண்டேன். திருவரங்கத்து உறை கொண்டிருக்கும் அவனை நோக்கி கை கூப்பித் தொழுதேன்.
திருவரங்கத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆழிமேல் பள்ளி கொண்ட பெருமானை, கருவரங்கத்து உள்ளே ஏறக்குறைய அதே போல் சயனித்த நிலையில் கைகூப்பி நின்று பக்தன், குழந்தையாய் தன்னை பாவித்து பாடுவது பாசுரத்தின் அழகு.
(இனி பூதத்தாழ்வாரைப் பற்றி சிறுகுறிப்புகள் பகிர்வோம்)
No comments:
Post a Comment