February 01, 2017

வேடிக்கை மனிதர்கள்

இருவரின் சம்பாஷணை  மூன்றாம் மனிதர்  பார்வைக்கு சுவாரஸ்யம். வெறும் பார்வையாளனாக ரசிக்கும் வரையில் சத்தம் கூட இனிமை தான்.

அன்றாடம் நடைபழகும் பூங்காவில் விதவிதமான சட்டை சுமந்த மனிதர்கள்.
சட்டையினுள்  ஒளிந்திருக்கும் மனித இயல்புகள் இன்னும் விசித்திரமானவை.

பெசியபடியே நடைபயின்று கொண்டிருந்த இருவரில் ஒருவர் மட்டும் நாட்டு நடப்பு, பொருளாதாரம், சமூகம் தொடங்கி ட்ரம்ப் முதல் சசிகலா  வரை அலசிக் கொண்டிருந்தார். மற்றொருவர் தலை நிமிராமல்  நடை தொடர்ந்து  கொண்டிருந்தார்.

"என்ன சார் சொல்லறீங்க, நான் சொல்றது சரி தானே" - அதிரவைக்கும் உயர் தொனியில் கேள்வி எழுப்பியவருக்கு பதிலுக்கு காத்திருக்க விருப்பமில்லை. "இல்லை! தவறு" எனச் சொல்வதற்கான சுதந்திரம் அளிக்க முன்வரவில்லை. சொல்லியிருந்தால் ஏற்கும் பக்குவத்திலும் இல்லை. தன் கருத்தை மற்றவர் அங்கீகரித்தாரா என கவனிக்கவுமில்லை.  மற்ற நண்பருக்கு இந்த விவாதத்தில் கருத்து வேறுபாடு இருந்தது  எளிதில் கணிக்க முடிந்தது.

பெண்கள் பகிரும் அலுவலக பிரச்சனைகள், மாமியார் மருமகள் அண்ணி ஒரகத்தி வேறுபாடுகள் எல்லாமே ஏறக்குறைய இதே வகை உரையாடல். ஒருவர் உணர்ச்சி மிகுதியில் பேசுவதும் மற்றொருவர் மௌனமாக தொடர்வதும் காலை நேர (காட்சிப்பிழைகள்) சுவாரஸ்யங்கள்.  

குறைந்த பட்சம் மற்றவர் கருத்தை காதில் வாங்கவும் பொறுமை, விருப்பம் இல்லாத வேடிக்கை மனிதர்கள்.


January 14, 2017

கோழியின் புலம்பல்
ஏர் உழும் மாட்டுக்கு
பொட்டும் பூவும் வச்சு
பொங்கல் படைச்சு
மறு நாள் பாலுக்கு
விட்டு வச்ச மனுசன்
முட்டையை முழுங்கியதும்
மிச்சமிருக்கும் எங்கள
கூறு போட்டு  பிரியாணியாக்கும்
வன்முறையிலிருந்து மீளவாவது
குட்டியிட்டு பால் சுரந்திருக்கலாம்.

மாரீசம்
________

உழவுக்கு பெயரளவில் வந்தனை செய்து
ஊரெங்கும் குப்பைக்கூளங்களை தூவி
விலையுயர்ந்த 'மால்களில்'
இடைத்தரகர்ளின் பணப்பை நிரப்பி
அரிசிப் பருப்பை அலுங்காமல் அள்ளி செல்லும் நமக்கு
கடைநிலை  விவசாயியைப் பற்றி
கவலை  கொள்ள நேரமில்லை.
()
ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை காப்பாற்ற துடித்தாலும்
குடும்பத்துடன் கிராமத்துக்கு குடிபெயர
கிடிக்கிப்பிடியாய் பல பிரச்சனைகள்.
()
பொங்கலிடும் ஒரு நாள் கூத்திற்கு
தெய்வமாய் பரிமளிக்கும் மாக்கள்.
()
இயற்கை உரமூற்றி
சோறும் நீரும் அள்ளி வழங்கும் ஆதவனுக்கு
நன்றி கூறும் பாசாங்கில்
பட்டையும் பகட்டையும் பறைசாற்றி
பொங்கிய அரிசியுடன் வெல்லம் திணித்து
நெய்வழிய பதமாய் உண்டு
செல்ஃபியுடன் கும்மியடிக்கும் மற்றுமொரு நாளை.....
நட்புறவுகளுடன் நேசங்கள் பரிமாறி
அளவளாவும் ஆறுதலுக்காக பொங்கி மகிழ்வோம்

September 20, 2016

இருபது மழைக்காலங்கள்ஒரு மழைக்காலத்துக் குடையின் கீழ்
பூத்த முதல் புன்னகை
வசந்த கால வரவேற்பறையில்
சிந்திய கனவுக் கோலங்கள்
வலிகளை கடந்து விட்டதாய்
இறுமாந்த நேரத்தில்
நீர்வீழ்ச்சியென நினைவுகள்
நிரம்பித் தெரித்தோடும்.
அன்று நீர்த்தூவி வாழ்த்திய மழை
பிரிந்த போது பெய்யவில்லை.
பிரிந்தவர் கூடுவதும்; கூடுபவர் பிரிவதுமாய்
சுழலும் வாழ்க்கை.
இருபது மழைக்காலங்கள்
வந்து சென்றன.
மறுபடியும் சந்தித்தால்
மழை பெய்யும்.
.
.
அதன் பின் ஓயாது.

September 17, 2016

புரட்டாசி சனிக்கிழமையும் - பெருமாளும்
பெரும்பாலும் இறைவனை சாக்கிட்டு, நாம் கும்மி அடித்து குதூகலிக்க ஒரு சந்தர்ப்பமாகவே,  திருவிழாவும், கோவிலுக்கு செல்லும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. அதற்கப்பால் கோவிகளில் இறை உணர்வு மேலிட ஜபம் தபத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை சற்று மெலிந்து காணப்படும்.

இன்றைக்கும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால்  கோவிலில் எள் சிந்த இடமில்லை. அடிக்கடி கோவிலில் வந்து குசலம் விசாரித்தால் தான் அன்பு என்று அர்த்தமில்லை. இறைவனை அகத்திலேயே இன்னும் சொல்லப்போனால் நம் அகமெனும் மனத்துள் தரிசிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இருந்தாலும், எண்ணை, திரி, பூ பழம் சகிதம் வந்திருந்து, ஆரத்தி காண்பிக்கும் அரை க்ஷணத்தில் கன்னத்தில் போட்டுக் கொண்டதும், பக்கத்திலிருப்பவரிடம் வாய் நோக, விட்டு விஷயங்கள், தெரு சமாச்சாரங்கள், சமுகத்தின் சீர் கேடு அங்கலாய்ப்புகள் தொடங்கி, நடுவில் இரண்டு  நொடி தீர்த்தம் வாங்கி சேவித்து, இடையே என்ன பிரசாதம் என்று கண்களை மேய விட்டு, மீண்டும் தொடரும் கதைகள்.

நம் வீட்டுக்கு வந்த ஒருவன், நம்மை கண்டுகொள்ளாமல் இருந்தால் அஹங்காரம் தலைக்கேறி தாம் தூம் என்று குதிக்கும் நம்மை நினைத்து வெட்கப்படவேண்டும்.  இவ்வளவு உதாசீனத்தை புன்னகையுடன் ரசித்து கடாட்சித்து கொண்டிருக்கும் பெருமாளின் கருணைக்கு இணையே இல்லை.... 

இது போன்ற சந்தர்ப்பங்களில் வேறு சில வழக்கு முறைகளில் உள்ளபடி ஆலயங்களில் பேச்சு சுதந்திரத்தை வலுக்கட்டாயமாக குறைப்பது நல்லதோ என்று தோன்றுகிறது. 

இவ்வளவு ரணகளத்திலும் யாரையும் கண்டுகொள்ளாமல் ஹனுமான் சாலிஸா-வை உச்சஸ்தாயியில்  தப்பும் தவறுமாய்  சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

உபன்யாச சிடி ப்ரஹல்லாதனின் பக்தியை எடுத்துரைத்து கொண்டிருந்தது, இத்தனை ஜன அலறலில் கரைந்தே போனது.

September 14, 2016

குருவே பொன்னடி போற்றிவேடிக்கையிலும்
கேளிக்கையிலும்
விவேகமின்றி உழன்றக்கால்- எம்
கேள்விக்கு பதிலாய்
ஐயம் அகற்றும் பேரொளியாய்
மிக்க கருணையுடன்
தேடி இல்லம் புகுந்து
தடுத்தென்னை ஆட்கொண்ட
சங்கரனே சிவனே
நீயே  தாயுமானாய்
தந்தையுமானாய்
நீயே மாலுமானாய்  - எம்
மாதவனுமானாய்
ஏழேழ் பிறவிக்கும்
அதன் அப்பாலும்
உன் பொன்னடி தொடர்ந்தே
பூஜித்திருப்பேனே
உன் சொற்படி நடந்தே
சேவித்திருப்பேனே

July 07, 2016

உடையார் ராஜராஜசோழன் - (பாலகுமாரன்)

நேற்றோடு மூன்று மாதங்களாக என்னுடனே ஒட்டி உறவாடிய உடையாருக்கு தற்காலிக விடைகொடுத்து அனுப்பியிருக்கிறேன் .

பொன்னியின் செல்வனாக விளையாட்டாய் விடலைப் பருவத்தில் வந்தமர்தவன், இன்று ராஜராஜத்தேவனாக உயர்ந்து, உடையாராக உள்ளமதில் நிரந்தரமாய் குடிகொண்டுவிட்டான்.

கல்கி அவர்களின் எழுத்து வண்ணத்தில் வர்ணமேறியவன், இன்று எழுத்துச் சித்தரின் உளிபட்டு செதுக்கிய சிற்பமாய் உயர்ந்து நிற்கிறான்.

சரித்திர சான்றுகளின் துணை கொண்டு, ஆங்காங்கே கற்பனைக் கோடுகள் விரிய, புதினமாக பரிசளித்திருக்கிறார் பாலகுமாரன் அவர்கள்.

தன்னை சிவபாதசேகரனாக உணர்ந்து சிவ வழிபாட்டின் உன்னதங்களை, சிவதரிசனத்தை உணர்தவனாக காட்சியளிக்கிறான். பாலகனாக, வாலிபனாக, மன்னனாக இருந்தவன், தன்னில் சிவனைக் காணும் சிவபக்தனாக நீங்காத காதல் ஏற்படுத்துகிறான். சோழ சாம்ராஜ்யத்தையும், நாகரீகத்தையும்  உலகறியச் செய்து, ஒவ்வொருவரின் பங்களிப்பை சிரசில் தூக்கி வைத்து, அவர்களின் எளிய பங்களிப்பைப் பொறித்திருக்கிறான்.  எப்பேர்பட்ட மன்னன் என நம்மை வியக்க  வைக்கிறான். சோழ மண்ணின் மீது மாறா பக்தி கொள்ள காரணமாகிறான்.

பஞ்சவன்மாதேவியின் பாத்திரப்படைப்பு அற்புதமாக வெளிவந்திருக்கிறது. ஏறக்குறைய நம் மனதில் வானதியின் இடத்தை பிடித்து விட எத்தனிக்கிறார். இன்றும் பழையாறையில் இவருக்கான பள்ளிப்படை தனது தாய்க்காக ராஜேந்திரன் கட்டிய கோவில் என்ற சான்றுடன் திகழ்கிறது. சுமக்காத தாய்க்கு பள்ளிப்படை கட்டும் அளவு அவளது வாழ்வும், பெருங்குணமும் கண்டிப்பாக அமைந்திருக்கலாம்.

இன்றுடன் பஞ்சவன்மாதேவியும், வானதியும், ராஜேந்திரனும், பிரம்மராயரும், வைணவதாசனும், உமையாளும், சீராளனும், கோவிலின் செங்கல் சுமந்தவரும், கல்வெட்டுக்களில் இருக்கும் ஆயிரமாயிரம் மாந்தர்களும் அவர்களைப் பற்றிய என் சிந்தனைகளும் தற்காலிகமாக என்னுடன் விடைபெற்றுக் கொண்டாலும், என்றும் என் சோழ காதலில் சுமந்து நிற்பேன்.
போர்காலங்களின் அவலங்கள், பயங்கள், வெற்றிக் களிப்புகள் அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்திவிட்டார் ஆசிரியர். அரசப் பதவியில் இருப்பவர்கள் அவர்களின் சேனாபதிகளின் அன்றாட பிரச்சனைகளும் உணர்வு பூர்வமாய் அலசப்பட்டிருக்கின்றன.  அன்றைய நாகரீகம் சரித்திர சான்று கலந்த கற்பனையுடன் அழகாய் படம் விரிகிறது.

வணிகர்கள் அந்தணர்கள் மறவர்கள் பஞ்சமர்கள் கருமார்கள் இவர்கள் இடையே நடைபெறும் ஜாதிக்கலவரங்களுக்கும் பஞ்சமில்லை.  மனிதன் என்னும் மாறவில்லை, என்றும் அவனது இயல்பு குணம் தொடரும் என்பதற்கு சான்று.  

இவர்களை எல்லாம் தாண்டி ராஜராஜன் தற்காலிகமாகக் கூட விடைபெற மறுத்து என்னுள் உறைந்துவிட்டான்.

இனி பெரியகோவிலில் பரமசிவனார் மட்டுமல்ல, ராஜராஜனும், பஞ்சவன்மாதேவியும், பிரம்மராயர் கிருஷ்ணன் ராமனும், நித்த வினோதனும், குஞ்சரமல்லரும் இலத்திசடையனும் கதை சொல்வதை தடவிப் பார்க்கலாம். உணர்ந்து கண்ணீர் உகுக்கலாம். 

எழுத்துச்சித்தருக்கும், கல்கி அவர்களுக்கும் என் மண்ணின் சரித்திரத்தை, பெருமையை உணர்த்தியமைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.