July 15, 2006

விடை





இலையோ உண்டோவென இருதலைக்கொள்ளியாய்
உழன்று சிதைந்து உருகி மறுகி
உடைமைகள் உதறி கடமைகள் மறந்து
உருவமும் மாறி பருவமும் தொலைந்தாலும்
உயிர் மட்டும் உனையே மாறாது நினைத்திருக்க
இருதயமும் வலுவிழந்து இறக்கும் முன்பேனும்
இருக்கிறேன் என்றே எனைக்காண வருவாயோ?
இறுதி வரையில் இல்லாமலே போவாயோ!

***

July 08, 2006

காதல் நினைவுகள்




இது போன்றதொரு காலை வேளையில்
உன் தெளிவான கேள்விக்கு
என் திமிரான பதில்.
உனக்கு நினைவிருக்கிறதா?

உன் சில்மிஷப் பார்வைகளில்
நான் எனை மறந்த பொழுதுகள்
உனக்கு நினைவிருக்கிறதா?

பாராமல் பார்த்த கணங்களில்
தொக்கி நின்ற வினாக்களும்..
விடையறியாமலே நாம்
விடைபெற்ற பொழுதுகளும்..
நினைவிருக்கிறதா?

வினாவுக்கான விடையாகவோ
தேடலுக்கான முடிவாகவோ
வலிக்கும் நினைவுகளின்
வலுக்கும் பாரங்கள்.

நினைவுகள் நிஜங்களாகும் வரை...
நீ சுவாசித்த காற்றை
நானும் ஸ்பரிசித்து,
நீ கூறிய வார்த்தைகளை
அலுக்காமல் அசைபோட்டு,
கனவுத் தொழிற்சாலையில்
கதை வசனம் எழுதியபடி..
தனியாக நான்.
***

பூவும் பெண்ணும்

பெண்ணுக்கு பூவை என்று பெயர். பூவைப் போல் அழகானவர்க்ள். பூவைப் போல் மென்மையாவர்கள். இப்படியெல்லாம் பழங்காலத்தில் வர்ணித்து வைத்துவிட்டார்கள் என்பதால், பெண்ணை மிருதுவான மல்லிகைக்கும், அழகான தாமரைக்கும், ரோஜாவுக்கும் ஒப்பிட்டுப் பேசுவது பொதுவான ஒன்றாகிவிட்டது. பூவுக்கும் பெண்ணுக்கும் இன்னொரு ஒற்றுமை உண்டு. சரியான கவனிப்பு இல்லாத பொழுது துவளும். தலைவன் தலை எதிர்பட்டதும் மலரும். பூவையும் பெண்ணையும் வைத்து கவிதைகள் நிறைய படித்துண்டு. படிப்பதுண்டு. பிடிப்பதுமுண்டு. நிலாவையும் பெண்ணையும் ஒப்பிடுவதை விட பூவையும் பெண்ணையும் ஒப்பிடுவது மேலும் மணமான, ரசனையான ஒன்று.

சில பெண்கள் மல்லிகைப் போன்றவர்கள் என்ற பார்த்தும் தோன்றும். வெள்ளைச் சிரிப்பல்ல காரணம். அவர்களால் மெதுவாய் ம்ருதுவாய் மணம் பரப்ப மட்டும் தெரியும். இவர்களால் தான் இல்லத்தின் மணமும் குணமும் மெருகும் இன்னும் எல்லாமும். சிலர் ரோஜாவைப் போன்றவர்கள். பார்த்தவுடன் வசீகரிக்கும் திறன். சுண்டியிழுக்கும் பேச்சு. கிட்டே நெருங்கினால் குத்திக் கிழிக்கும் முட்கள். சிலரோ வெறும் காகிதப் பூக்கள்.

எனக்கு காட்டுப் பூவை போன்ற பெண்கள் மிகவும் பிடிக்கும். அவர்களை இன்னதென்று பிரித்து கூறி விட இயலாது. கிட்டே சென்றாலும் புரியாமலே போய்விடுபவர்கள். ஆபத்தானவர்கள். குழப்பமானவர்கள். வசீகரமானவர்கள். ஆயிரம் நிறங்கள் கொண்டவர்கள்.
என்னிடம் ரோஜாப்பூக்களும் காகிதப்பூக்களுமே அதிகமாய் சினேகம் கொள்ளும். ஆனாலும் எனக்குக் காட்டுப்பூக்கள் தான் பிடிக்கும். அவர்களின் அநாயாசமான வாழ்வின் தத்துவங்கள் பிடிக்கும். அவர்களின் கவலையில்லா நோக்குப் பிடிக்கும். எத்தனை பழகியும் தன்னுள் இன்னும் இன்னும் புதையச் செய்யும் அவர்களின் ஆழம் பிரமிக்க வைக்கும்.
பூவையரின் பல வண்ணத்தைப் போல் பூவின் பல தோற்றமும் குணமும் என்னைக் கவர்ந்திருக்கிறது.

சின்ன வயதில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் சூரியகாந்தி செடி வைத்திருந்தோம். அது மலரும் தினமெல்லாம் வீடே அழகாய் நிமிர்ந்து நிற்பது போல் இருக்கும். ஒரே ஒரு செடி. அதில் ஒரு பூ பூக்கும். அந்த ஒரு சூரியகாந்திப் பூ பல மல்லிகைகளையும், ரோஜாக்களையும் விரிட்சிப் பூக்களையும் தூக்கி சாப்பிட்டுவிடும். சூரியகாந்திக்கு அப்படி ஒரு கவனத்தை திருப்பும் பண்பு. சூரியகாந்தி என்றாலே எனக்கு அன்னை தெரஸா தான் நினைவுக்கு வருவார்.


வில்லியம் வர்ட்ஸ்வர்த்தின் 'த டா·பிடல்ஸ்' படித்த பொழுது, டா·பிடல்ஸ், ட்யூலிப்ஸ் முதலிய வேற்று நாட்டுப் பூக்களிடம் காதல் பிறந்தது. நகர மையத்தில் இல்லாமல், எங்கோ கிராமத்தின் அருகில் வீடு இருந்து, சுற்றிலும் டா·பிடல்ஸ¤ம், ட்யூலிப்ஸ¤ம், ரோஜாத்தோட்டமும் இருந்தால் சொர்கமென்று தனியே ஏதேனும் இருக்குமா?

பாட்டி விட்டில் அரளிப் பூ இருக்கும். நல்ல இளஞ்சிவப்பின் நடுவே பச்சை இலைகள். இறைவன் தான் எத்தனை அழகான கலைஞன். அரளிப்பூ உதிர்ந்தால் தரையும் அழகாய் இருக்கும். அரளிப்பூவின் காதல் ரொம்ப நாள் தொடரவில்லை. அரளிப் பூ என்றாலே 'பக்திப் பழப் பூ' என்று மரியாதையாய் நோக்கிக் கொண்டிருந்த நான், அதை உண்டு உயிர் துறக்கலாம் என்ற பொழுது, சற்றே பயம் கலந்த மரியாதை பிறந்தது. அதனால் அரளி என்றும் அந்தரங்கத் தோழியாகவில்லை.

என் முதல் பூவின் நினைவே மூன்று வயதில் துவங்கியது. எங்கள் வீட்டின் இருபக்கமும் மகிழம் மரங்கள். மல்லிப்பூவைப் போல் அடிக்கும் வெள்ளை அல்ல. முத்து போன்ற வெண்மை. அதில் அழகாய் நீண்டிருக்கும் ஆரஞ்சு காம்பு. மகிழம்பூவுக்கும் புன்னகைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. வெள்ளைப் பற்களுடன் ஆரஞ்சு உதடுகள் கொண்டு நிறைய பேர் உலாவருவார்கள். மகிழம்பூவின் ஆயுள் ரொம்ப குறைவு. காலையில் பளீரென சிரித்திருக்கும் பூ சற்றேறக்குறைய இரண்டு மணிநேரம் பின்பு புருஷன் வீட்டில் சண்டை போட்டுக் கொண்ட பெண்ணின் முகம் போல் சுருங்கிவிடும்.

பக்திப்பூக்கள் என்றாலே அரளியும் மகிழமும் மட்டுமா? சாமந்தி, செம்பருத்தி என எங்கள் தொட்டதில் வலம் வந்த நிறைய செடிகள் நினைவுக்கு வருகிறது. பெங்களூர் வந்த பின்பு சாமந்தி பூவில் அர்ச்சனை நிறைய குறைந்துவிட்டது. zeenia இங்கு அதிகம். சாமந்திப் பூக்களை அப்பா உதிர்ககாமல், காம்பை மட்டும் நீக்கி பூவை முழுதாய் அழகாய் அர்ச்சனை செய்வார். மஞ்சள் சாமந்தி அழகு தான். மணம் அதிகம். என்றாலும் வெள்ளை இன்னும் அழகு என்பதை மறுக்க முடியாது. சாமந்திப்பூக்களை தலையில் வைத்துக் கொள்பவர்கள் கடைந்தெடுத்த கிராமத்து ஜனங்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கையாய் இருந்தது.

யோசித்துப் பார்க்கும் போது, எங்கள் வீட்டில் ஏறக்குறைய எல்லா பூக்களும் அம்மா சீசன் மாற்றி நட்டுக் கொண்டே இருப்பார். சேலத்திலிருந்து முல்லை. zeenia தான் அப்போதைய நாகரீகம் என்றதும், zeenia கூட நட்டு பூப்பூக்க வைத்து மகிழ்ந்தோம். குட்டித் தோட்டம் தான். இருபதிலிருந்து முப்பது செடிகள் வைக்கலாம். அடுக்குச் செம்பருத்தி, ஒத்தை செம்பருத்தி என வகைக்கு ஒன்றாய் செம்பருத்திச்செடிகளும் உண்டு. வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு கலர்களில் பூத்துக் குலுங்கும். பூக்களில் என்னைக் கவராத பூ என்று ஒன்றுமே இல்லையென்றாலும், மெனெக்கெட்டு யோசித்தால் செம்பருத்திப் பூவைத் தான் அதிகம் ரசித்ததில்லை. காரணங்கள் பலவாய் இருக்கலாம். எல்லோர் விட்டிலும் ஒன்று அல்லது இரண்டு செம்பருத்திச் செடிகள் இருந்தே தீரும், அதனால் செம்பருத்திக்கு மவுசு இல்லை. அதையும் தாண்டிய இன்னொரு காரணம் உண்டு. பூவலிருந்து மிக நீண்டு நிற்கும் செம்பருத்தியின் காம்பு எனக்கு பிடித்ததில்லை.

நவராத்திரிகளில் அம்மாவும் நானும் பூக்கோலம் போடுவோம். வீட்டுக்கு வீடு சென்று வேறு வேறு நிறங்களில் நானும் என் தோழியும் பறித்து வருவோம். யாரும் விரட்டியதில்லை. வீட்டினுள் செல்லாமல் காம்பௌண்டுக்கு வெளியே ஏறி குதித்து பறிப்போம். யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். எதிர் தெருவின் இரண்டாம் வீட்டு பாட்டியைத் தவிர. அவருக்கும் தோடத்துப் பூவை வேறு யார் பறித்தாலும் பிடிக்காது. காலை வேளைகளில் குளித்து விபூதி இட்டு, சில பாட்டி தாத்தாக்கள் வாக்கிங் ஸ்டிக்கால் பூக்களை பறிப்பார்கள். எதிர் வீட்டு பாட்டி வெகுண்டுவிடுவார்.

தினம் காலை ஆறரை மணிக்கு ஒரு தாத்தா எங்கள் வீட்டு விரிட்சியை நீட்டிப் பறிப்பார். எனக்கும் அவருக்கும் புன்னகைச் சினேகம் உண்டு. பாட்டி இருக்கும் நேரத்தில் வேண்டுமென்றே குரலுயர்த்தி "எடுத்துக்கோங்க தாத்தா சாமிக்குத் தானே பூ! உங்க வீட்டு சாமி என்ன எங்க வீட்டு சாமி என்ன. எடுத்துக்கோங்க" என்றேன் மேதாவித்தனமாய். பிறகு நக்கலாய் பாட்டியைப் பார்த்து புன்னகைத்து உள்ளே சென்றேன். தாத்தா 'ஙே' என விழித்தபடி படித்து சென்றார். "என்ன ஆயிற்று இந்த பெண்ணுக்கு" ந்னு நினைத்திருப்பார். அந்த பாட்டியை அப்படி பதிலடி கொடுத்து ஆக வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை. இப்போது நினைத்தால் சிறுபிள்ளைத் தனமாய் தோன்றுகிறது.

எங்கள் பள்ளியில் பூவை தலையில் வைப்பது விதிக்கு புறம்பானது. பூவை தலையில் வைப்பது எனக்கும் பிடிக்காமலே போய்விட்டது. செடியில் நான்கு மணிநேரம் உயிர்வாழும் பூவை தலையில் வைத்து சாகடிக்க வேணுமா? எப்பொழுதானும் விழாக்களுக்கு மல்லிப்பூ மட்டும் தலையில் வைத்துக் கொள்ள உகந்த பூ. அப்புறம் இன்னொரு பூ ஒன்று உண்டு. கிண்டி இரயில் நிலையத்தில் ஏறும் ஒரு பெண் ரயிலில் பூ விற்பாள். அதுவும் தலையில் வைக்க உகந்தது. சம்பகப் பூ என்று நினைக்கிறேன். பச்சையான இதழுடன் உள்ளே கொஞ்சமே கொஞ்சம் மஞ்சளாய் இருக்கும் சம்பகப்பூ சின்ன சின்ன மாலைகளாய் கச்சிதமாய் கோர்க்கப்பட்டிருக்கும். மணம் அபாரம். டிசம்பர் சீசனில் போட்டுக் கொண்டிருக்கும் உடைக்கு சரியான கலரில் சில நேரம் டிசம்பர் பூ வைத்திருக்கிறேன். ஆனாலும் டிசம்பர் பூ பழம்பஞ்சாங்கத்தனம் தான்.

மல்லிப்பூவை தொடுப்பதை விட, கோர்த்து அடர்த்தியாய் வைத்துக் கொள்ள பிடிக்கும். இரண்டு மணிநேரம் கழித்து பழுப்பு நிறத்தில் மல்லிப் பூ(சென்னை வெய்யிலில்) தலையில் உட்கார்ந்திருந்தால் எரிச்சல் வரும். அதனால் ஒரு மணி கழித்து எடுத்து விடுவேன். இதனாலெல்லாம் சித்தப்பா, தாத்தா மாமாக்களிடம் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். தாழம்பூவை வைத்து அம்மா பூப்பின்னல் தைப்பாள். அழகாய்த் தான் இருந்தது, தாழபூவும் பாம்புக்கும் தோழமை என்று தெரியும் வரை. அன்றையிலிருந்து தாழம்பூவை வைத்துக் கொள்வது கொஞ்சம் பயமாய் போனது. என் தலையில் ஏறியிருக்கும் பூக்களின் விதங்கள் மிகக் குறைவு. அதை தலையில் வைத்த தருணங்கள் அதைவிடக் குறைவு.

சென்ற முறை என் கணவரின் தோழர் வீட்டிற்கு சென்ற பொழுது, சுகந்திப் புஷ்பம் வைத்திருந்ததைப் பார்த்தேன். முகர்ந்தால் நம் 'ponds dreamflower' மணம்! இதை உபயோகத்துத் தான் தயாரிக்கின்றனர் என்று நினைக்கிறேன். சுகந்திப் பூ காட்டுப் பூ. சுண்டியிழுக்கும் மணம். சில பெண்களைப் போல். அம்மாவும், அன்னை தெரசாவும் இன்னும் சிலரும் சம்மந்தமில்லாமல் வந்து போயினர்.

அடுத்த முறை சென்னை சென்ற பொழுது, எங்கள் வீட்டுத் தோட்ட்தை ஆராய்ந்தேன். அம்மா பூக்களுக்கு பதிலாய் கீரைகள் நட்டிருந்தார். "அப்பாக்கும் எனக்கும் ஃப்ரெஷ்ஷா சமைச்சு சாப்பிடறதுக்கு இதுதான் பெட்டர் இல்லையா" என்றாள் அம்மா. 'ஆமாம்' என்று சொல்ல மனம்வரவில்லை. இரவுக் கனவில் எல்லா நிறத்திலும் பூக்கள் நடனமாடின. என்னை ஏன் மறந்தாய் என்று பொய்க்கோபங்கொண்டன.

அடுத்த முறை நண்பரின் வீட்டுக்கு சென்று சுகந்தி புஷ்பத்தை வேர் எடுத்து என் வீட்டில் நட்டேன். என்னுடையது அடுக்கு மாடி என்பதால் தொட்டியில் தான் நட முடியும். வெறி பிடித்தாற் போல் இன்னும் சில பூச்செடிகள் வாங்கி வைத்தேன். எல்லாம் இப்போது பூக்கின்றன. வரலக்ஷ்மி விரதமன்று மட்டுமல்லாமல் மற்ற நாளிலும் இறைவனை துதிக்க, வெறும் ஸ்தோத்திரத்துடன் நிறுத்திக் கொள்வேன். "மாங்கு மாங்குன்னு பூ நட்டு சாமிக்கு வெக்க மாட்டியோ" என்று கணவர் இன்னும் என்னை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். சின்னதாய் பூக்கும் சிவப்பு ரோஜா எப்பொழுதானும் என் மகள் தலையில் ஏறும்.

பூ ரொம்ப அழகு..செடியில் இருந்தால் மட்டுமே


***