September 16, 2009

தென்கச்சி கோ சுவாமிநாதனுக்கு இதயபூர்வ அஞ்சலிஅதிகாலை மணம் பரப்பும் மலரின் மென்மையோடு, நம்பிக்கையூட்டும் காலைக் கதிரின் நட்பினைப் போல், இளம் தளிர்கள் துளிர்விடும் அழகோடு மெல்ல வருடும் குரல். 'தினம் ஒரு தகவலாக' பல வருடங்கள் பல தகவல்கள் பரிமாறிய, பதப்பட்ட குரல். தென்கச்சி சுவாமிநாதன் என்றாலே என் மனதில் இனம் புரியாத சந்தோஷம் குதிக்கும், நம்பிக்கை பிறக்கும். ஏறக்குறைய அன்றைய வானொலியிலும், இன்றைய தொலைக்காட்சியிலும் இவர் குரல் கேட்ட அத்தனை உள்ளங்களுக்கும் இந்த அனுபவம் புரியும்.


மிகையான நாடகத்தன்மையோடு ஒலிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கிடையே,நம்மில் ஒருவரைப் போல், அக்கம் பக்கத்து திண்ணையில் அமர்ந்து பேசப்படும் இயல்பான நடையில், தினம் ஒரு தகவல். தினம் ஒரு படிப்பினை. தினம் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் நிறைந்த குட்டிக் கதை.

"வந்தே மாதரம்" என்று துவங்கும் எங்கள் வானொலிப் பெட்டியில், தொடர்ந்து செய்திகளும் தகவல்களும் ஒலித்தவண்ணமிருக்கும்.அத்தனைக்கும் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி "இன்று ஒரு தகவல்" . பள்ளி புறப்படும் முன் கடைசியாக நான் கேட்பதும் சென்னை வானொலியின் "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சி. அவசரமாக இரண்டே இரண்டு கவளம் உணவை அள்ளி அடைத்துப் புறப்படும் போதும் கூட என் கவனம் மட்டும் இவர் குரலில் அமிழ்ந்திருக்கும்.

அடடா இன்றைக்கு கணிதப் பரீட்சையாயிற்றே என்று பதறும் நாட்களில் எனக்கு புன்னகையூட்டியவர். வீட்டுப்பாடம் முடிக்கவில்லையே என்று கவலைப்படும் தினங்களில் கூட தைரியம் கொடுத்து வழி அனுப்பிவைத்தவர். குதூகலித்து பள்ளிசெல்ல ஆயுத்தமாகும் பல தினங்களில் இவர் கதைகளும், குரலும் மேலும் உற்சாகத்தை வழங்கி விடையளிக்கும்.


காலை ஆறு மணிக்கே புறப்பட்டுவிடும் அப்பா. சமையலில் மும்முரமாக இருக்கும் அம்மாவுக்கு பேச ஏது நேரம்! காலை வேளையில் என்னை ஊக்கப்படுத்திப் பேசியதெல்லாம் தென்கச்சி கோ சுவாமிநாதன். தினமும் பேசினார். விதவிதமான கதைகள் மூலம் பேசினார்.


கதைகளை விட, கதைகளின் முடிவு எப்பேற்பட்டதாய் இருக்கும் என்று கவனிப்பதில் எனக்கு ஆர்வம். சடாரென திருப்பம் கொணர்ந்து நம் கவனம் ஈர்க்கும் ஒவ்வொரு கதையும் . அதன் பிறகு, இவருக்கே உரிய தனி பாணியில், வித்தியாசமான ஹாஸ்யத்தை புகுத்தி, புன்னகையுடன் முடிக்கப்படும் கடைசி அத்தியாயம். கதை முடிந்தவுடன், நானும் என் அம்மாவும் புன்னகை பரிமாறிக்கொள்வோம். ரசனைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தின் ஊடே வார்த்தைகளுக்கு இடமேது!

தோழனாய், ஆசிரியனாய் இருந்து வருடிக்கொடுத்த குரல். என் பள்ளிப்பருவத்தின் ஒரு அங்கமாகி விட்ட குரல். இன்றைக்கும் இவர் குரலைக் கேட்கும் போதெல்லாம் தொலைந்த பள்ளிப் பருவம், தோழர்கள், தோழிகள், பல நினைவுகள், காலை நேரத்து அவசரங்கள் எல்லாம் தொய்ந்த கலவையான உணர்வு எழுவதுண்டு.

அதெல்லாம் நேற்றுடன் முடிந்து விட்டது. இன்று நம்மிடையே இவரின் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. "சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி. கோ. சுவாமிநாதன் காலமானார்" என்ற செய்தி கண்கள் பனிக்கச் செய்தது. என்னுடைய பால்ய பருவ உணர்வுகளில் சிலவற்றை தன்னுடனேயே பிய்த்து எடுத்துச் சென்று விட்டார் . தொலைந்த கல்லூரி பருவம், தொலைந்த தோழர்களைப் போல், இன்று இவரும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு சென்று விட்டார்.


இவர் குரல் மட்டும் என்றும் சுப்ரபாதமாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

September 06, 2009

சந்திரமுகி - A pheonix( படம் வெளியானவுடனேயே, சுடச்சுட திரையரங்குகளில் பார்த்த அனுபவம் மிகக் குறைவு. அப்படிப் பார்த்த ஒரு சில படங்களுள் இதுவும் ஒன்று. ப்ளாகர்கள் ஷை, ஜீவ்ஸ், மரவண்டு உட்பட பல நண்பர்களுடன் சேர்ந்து ரசித்த படம். பயந்தாங்கொள்ளியான என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, ஜீவ்ஸ்-ஐயும் பயமுறுத்திய புண்ணியம் என்னைச் சாரும். அவனுக்கு தனியே நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். )


'பேய்ப் படம்' என்ற முன்னறிவிப்பு யாரும் தரவே தராததால், சவுண்ட் இ·பெக்ட் அதிகமாய் இருக்கும் இடமாய்த் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் பெரும் பாக்கியம் கிட்டியது. 'பாபா படம் முழுசாய் ஊத்திக்கிச்சு' என்று பரபரப்பாய் பேசப்பட்டதால் இதில் சிரமம் எடுத்து ஏதேனும் செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது. ரஜினி கதாபாத்திரத்தின் அறிமுகத்தின் பொழுது, ஜிகினா பேப்பர்கள் தியேட்டரில் (அதுவும் பெங்களூரில்!) பறந்தன. (யாரும் எழுந்து வீசியதாய் தெரியவில்லை) இதெல்லாம், ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்த, படச்சுருளிலேயே இணைத்து எடுத்துவிடுவார்களா எனப் புரியவில்லை.


தமிழ்ப் பட டைரக்டர்களுக்கு, 'பேய்ப் படங்களோ', 'த்ரில்லர்'களோ, 'டிடெக்டிவ்' படங்களோ 'சஸ்பென்ஸ் படங்களோ' எடுக்கத் தெரியும்...ஆனால் எடுக்க மாட்டார்கள்.
அப்படியே இது போல் எதேனும் கதை இருந்தால், அதில் நாலு சண்டை, இரண்டு டூயட், சலிப்பூட்டும் காமெடி என்று கலவையாய் ஒரு விருந்திட்டு, திகட்ட வைப்பதில் மன்னர்கள். இந்தப் படமும் அதில் விதிவிலக்கல்ல.

இந்தப் படத்தின் கதைப்படி, ரஜினிக்கு சண்டைக்காட்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எங்கே ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்து ஓடிவிடுவார்களோ என்று பயந்து, சின்னக் குழந்தைகளுக்கு சொல்லும் காக்கைக் கதையையே சும்மா ஒப்புக்கென்று சில மசாலாக்களை சேர்ப்பது போல், சண்டை என்று ஓரிரண்டு காட்சிகளை சேர்த்து, உணர்ச்சி வசப்படும் ரசிகர்களை முதலில், லாலிபாப் கொடுத்து உட்கார்த்தி வைத்து விடுகிறார்கள்.

கொஞ்சமே கொஞ்சம் கதையும் எதிர்பார்க்கும் சிலர், தேவையில்லாத சண்டைக்காக முகம் சுளிக்கும் சமயம், தடாலென்று 'வேட்டையபுரம் அரண்மணை', 'அகிலாண்டேஸ்வரி' என்று பில்ட் அப் கொடுத்து, நம்மை சற்றே நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டு, கே.ஆர்.விஜயா காணாமல் போய் விடுகிறார்.

அதுக்கப்புறம், நடக்கும் கதை எல்லாமே வேட்டையபுர அரண்மனையும், அதைச் சுற்றியிருக்கும் கிராமத்திலும் நடப்பது. தன் மனைவிக்காகத் துடிக்கும் பிரபு, நெகிழ வைக்கிறார். செம்மின் ஷீலாவிலிருந்து, மாளவிகா வரை, நாசரைலிருந்து பிரபு வரை, எல்லோரும் தன் பாத்திரத்தை மிகைப்படுத்தாமல் நன்றாகவே செய்ய....

காமெடி என்றாலே, தொண்டை கிழிய கத்துவது என்று, கவுண்டமணி காலத்திலிருந்து வந்த பாரம்பர்யத்தை விடாமல் கைப்பற்றி, மிகவும் மிகையாய் நடித்து, எரிச்சலூட்டுகிறார் வடிவேலு. வடிவேலு கேரக்டர், 'ஒரு வரிக்கதையை எப்படி மூன்று மணிநேரம் ஓட்டுவது' என்ற பயத்தில், காமெடிக்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறது. முகமும் உடலும் சேறு அப்பிக்கொண்டு, வண்டியில் ஏற மறுப்பதும், உடனே ரஜினி 'அப்போ நான் ஊருக்கு போகமாட்டேன்' என்றவுடன், அதே 'வரட்டு ஜம்ப' முகத்துடன்.... "என்ன வில்லத்தனம்!!" என்று மனதுள் பொருமுவது மட்டும் புன்னகைக்க வைக்கிறது.

வடிவேலுவின் காமெடியிலும், கதை இம்மி அளவும் நகராத அலுப்பிலும் நாம் சீட்டில் கடுப்புடன் நெளிகையில், மணிமணியாய் பாடல்கள் சற்றே சாந்தப்படுத்துகின்றன. "அத்திந்தோம்" பாடல் நாட்டுப்புற மெட்டை நன்றாய் நினைவூட்டி, தாளமிட வைக்கிறது என்றால், "கொக்கு பற பற" பாட்டு, அதன் குரல் வளத்திற்கும், இசைக்கும் ரசிக்க வைக்கிறது.

"·பாசில்'-ன் 'மணிச்சித்ரதாழு' கதையின் தழுவல் இல்லவே இல்லை என்று பி.வாசு முழங்கிக் கொண்டிருக்க, பார்த்த அத்தனை பேருக்கும், ஏனோ 'மணிச்சித்ரதாழு'வும், கன்னடத்தின் 'ஆப்த-மித்ர' வும் நினைவிற்கு வராமல் தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை இவ்விரு படங்களையும் பி.வாசு சரியாய் பார்க்கவில்லையோ?

இந்தப் படத்தில் இன்னொரு கவனிக்கத் தக்க விஷயம், ரஜினியின் புதுமையான தோற்றம். குறைந்தது பத்து வயது இளமையாய்த் தெரிகிறார். போடும் உடைகளில் நவீனத்துவம் எட்டிப் பார்ப்பதற்கு அவர் மகள் ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளார். இது தவிர, ஃபேஸ் லி·ப்டிங் செய்துள்ளார் என்றும் சிலர் அரசல் புரசலாய் பேசுகிறார்கள். எது எப்படியிருப்பினும் அவர் உடையும், முகமும் "பளிச்".

ஒரு வழியாய், கதையை இடைவெளை வரை படாத பாடு பட்டு நகர்த்தி,

"இனி...சந்திரமுகி"

என்று ஸ்டில் போடும் போது, மீண்டும் நமக்கு லேசாய் நம்பிக்கை பிறக்கிறது.

பிறகு தான் புரிந்தது, இது ரஜினி படமே அல்ல! இது சந்திரமுகியின் படம்; படத்தை தூக்கி நிறுத்துவது சந்திரமுகி. படத்தின், நாயகன், நாயகி, ஆதாரம் எல்லாமே "சந்திரமுகி". சந்திரமுகியின் படத்தை சிறுவன் ஒருவன் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பும், சந்திரமுகியின் படமும், வேட்டைய ராஜாவின் படமும் காண்பிக்கும் பொழுது, 'அமானுஷ்ய' உணர்வு ஏற்படுகிறது. "சிறந்த கவிதையோ கதையோ தன்னைத் தானே எழுதிக் கொள்ள வேண்டும்" என்று கூறுவது போல், சந்திரமுகி தன்னைத் தானே எழுதிக் கொள்கிறாள். கதையில் அவள் வரும் அத்தியாயங்கள், நம்மை அவளின் உள்ளுணர்வுகளுடன் ஒன்ற வைக்கிறது.

சந்திரமுகி தன்னை மறந்து ஆடும் நேரம், ஒலிக்கும் வீணையிசை உயிரோடு ஒலிக்கிறது. மற்றோர் உலகத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் விமானம் போல், அவ்வீணை ஒலி, நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்கிறது. இங்கு ஏனோ, வித்யாசாகரின் நிழலில் என்னால் இளையராஜாவைத் தான் காண முடிகிறது. குறைந்த பட்சம் 'ரா...ரா...' பாடலிலேனும் இளையராஜாவின் சாயை இருக்கிறது என்று அவர் இசையைக் கேட்ட எல்லோராலும் அடித்துக் கூற முடியும்.

நூறு வருடத்திற்கு முன் அமைந்த நாகரிகம், நம் கண்முன் விரிகிறது. சந்திரமுகியின் அறை என்று காட்டப்படும் அறையின் interiors பிரமிக்க வைக்கிறது.

எல்லோரும் குறிப்பிட்டது போல் நிறைய விடையில்லா 'எப்படி?'க்களும் 'ஏன்?'களும் மண்டியிருக்கின்றன. இக்கதையில், ஸ்ப்லிட் பர்சனாலிடியை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்றால், பாம்பு எதற்காய் வருகிறது? இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்குத் தோன்றிய விடை அளித்துக் கொள்ள ஏதுவாய், இயக்குனர் முடிவை நம்மிடம் விட்டு விட்டார்.

கதைகளைப் படித்து, அல்லது படங்களைப் பார்த்து, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய கதாபாத்திரமாய் தன்னையே பாவித்துக் கொள்பவர்கள் பலர் உண்டு (நான் உட்பட). அவர்களுக்கெல்லாம் இப்படிப் பட்ட வியாதி இருப்பதாய் கூறிவிட முடியாது. இம்மனோபாவத்தையும் தாண்டிய பலமான மன-பாதிப்புகள் இருக்க வேண்டும். அந்த பின்னணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்கு ஒரு காரணம், 'யார் சந்திரமுகி' என்ற விறுவிறுப்பை தக்கவைத்துக் கொள்வதற்காய் இருக்கலாம். யாரென்று தெரியச் செய்யாமலே, பின்னணிக் கதைக்கும் குழந்தைப் பருவத்திற்கும் அதிக கவனத்தைத் திருப்பியிருக்கலாம். தேவையற்ற காமெடிக்கு பதில் இத்தகைய காட்சிகள், மேலும் கதைக்கு வலுவூட்டியிருக்கும்.

ஜோதிகாவின் நடிப்பிற்கு பக்கபலமாய் இருப்பது அவர் கண்கள், அப்புறம், அதிக இஃபெக்டிற்காக கண்களில் அடிக்கும் 'டார்ச் லைட்'. ஷோபனாவிற்கு 'மணிச்சித்ரதாழு' வின் சிறந்த நடிகை விருது கிடைத்தது என்றால், ஜோதிகாவிற்கு குறைந்து நம்மூர் ·பில்ம்-·பேர் அவார்ட் நிச்சயம் கிடைக்கும். சிரமம் எடுத்திருக்கிறார்.

சாடிஸ்டிக் பாத்திரம் வேட்டையராஜாவினுடையது. அவர் வரும் பொழுதே, அவையினர் ஒருவரின் தொப்பி கீழே விழுந்து விட, கைக்கொட்டி ஆர்பரித்து மகிழ்கிறார். ஒரே வெட்டாய் குணசேகரனை வெட்டிய வேட்டையராஜா, கீழே விழுந்திருக்கும் தோட்டை மெதுவாய், ஜதி பாடியபடி ஆர்ப்பாட்டமின்றி, முகத்தில் அதே வெறிகலந்த மௌன சிரிப்புடன், எடுத்து அணியும் இடம் மகுடம். சந்திரமுகி காணும், கற்பனைச்சூழலை, பாட்டுடன், கலந்து, நிஜத்திற்கும், நிழலுக்கும் தாவும் picturisation / choreography பாராட்டத்தக்கது.


சிக்கென்ற முகத்துடனும், ஆடையலங்காரத்துடனும், ரஜினி வேட்டைய ராஜாவாய் மனதில் நிற்கிறார். 'பதினாறு வயதினிலே', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', 'அவள் அப்படித்தான்'- இந்தப் படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும், ரஜினியின் வில்லத்தனம் என்னவென்று! அவர் செய்யும் ஹீரோயிஸத்தில், மனதைப் பறி கொடுத்த தமிழ் சினிமா, நிச்சயம் 'ரஜினி' என்ற ஒரு அருமையான 'வில்லன்' நடிகரை இழந்து விட்டது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு 'ரஜினி' என்ற நடிகர் படத்தில் மிளிர்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து இன்னும் அதிகமாய் மின்னுகிறார் ஜோதிகா.

படத்தின் மைன்ஸ் பாண்ட். டிரெக்ஷன், காமெடி.

ப்ளஸ் பாய்ண்ட். ரஜினி, ஜோதிகா எல்லோரையும் விழுங்கி விட்டு, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கும் "சந்திரமுகி". நடிகர்களையும் தாண்டி, கதையையும் தாண்டி, கதாபாத்திரமாய் வெற்றி பெறுகிறாள் சந்திரமுகி.

ஒரு முறை பார்க்கலாம். ரஜினி, ஜோதிகா, மற்றும் இசைக்காக!

இன்னொரு முறையும் பார்க்கலாம். 'சந்திரமுகி'க்காக!!

September 04, 2009

காதல் வந்துடுச்சா? வரப்போகுதா?

கிட்டே வராதே
என் வாய் குழறி மனம் திறந்துவிட்டால்?
புன்னகை உதிர்க்காதே
உன் புன்னகையின் கிறக்கத்தில்
என் புன்னகை தொலைந்துவிட்டால்?
.
தூரமாய் நின்றும் என்னைப் பார்த்துத் தொலையாதே
பார்வைக் கிரணங்களின் தகிப்பில் என் பாதை மாறிவிட்டால்?
கனவின் நிழலில் சுருண்டுகொள்ளாதே
சுவாசம் திணறி தூக்கத்திலேயே இறக்க நேரிட்டால்?
.
விலகி ஓட ஓட என்னை விரட்டாதே
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை,
பயமாய் இருக்கிறது..
என்னைக் காதலிப்பதை நீயே துப்பிவிட்டால்?
.
அடடா!
என் எழுத்துக்குள் தஞ்சம் புகுந்து இம்சிக்காதே
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை,
பயமாய் இருக்கிறது..
உன்னைக் காதலிப்பதை நானே உளறிவிட்டால்?

ஒன்றானவன் - உருவில் இரண்டானவன்

'நீ' இல்லாத பொழுதுகளில்
'நான்' என்பதும் புலப்படாது ஒழிந்துவிட வேண்டும்
என் இயக்கங்கள் நொறுங்கிவிட வேண்டும்.

'நாம்' மட்டும் வெட்டவெளி எங்கெங்கும்
ஆதாமாய் ஏவளாய் பிரிந்து
பற்பலவாய் பெருகாமல் இரண்டாய் நின்றுவிட வேண்டும்
மூன்றென ஏதும் முளைக்காமல் முடங்கவிட வேண்டும்

எதேனுமொரு பரிமாணாத்தில்
'நீ' என ஒன்று உதிக்காமலிருக்குமானால்
'நான்' என வேறொன்றும் நிலைக்காமல் நசிந்துவிட வேண்டும்.

'நீ' மட்டுமே எங்கும் எதிலும் என்றென்றும்...
ஐம்புலன்களாக
மனமாக
ஆன்மாவாக
அதனினும் உயர்ந்த அறிவாக

'நீ' மட்டும் என்றென்றும் - என்
ஒட்டுமொத்த இருப்பாக
உணர்வாக உயிராக
காதலாக காமமாக
முதலாக
முடிவாக

ம்ஹூம்...அழ மாட்டேன்!பளீரென புன்னகை வரைந்து விடையளித்த பின்
இயல்பாய் இருக்க எத்தனித்து
இருபத்தி இரண்டாம் முறையாய் தோற்றுவிட்டேன்.
அதற்காகவெல்லாம் என்னால் அழமுடியாது.
.
இப்பொழுதெல்லாம் அழுவதில்லை தெரியுமா
மரத்துவிட்டது.
உன் நினைவுகளின் எச்சில் மிச்சமிருக்கிறது என்பதற்காக
அதைக் கண்ணீரிலா கரைக்க முடியும்?!
.
போதும் இன்னும் இம்சிக்காதே
விட்டுவிடு.
கடமைகள் காத்திருக்கிறது
அழ நேரமில்லை.
அய்யயோ... அழுவதில்லை என உனக்கு சத்தியம் வேறு செய்துள்ளேன்!
.
நல்லவேளை...
மனம் வரையும் ஓவியங்களை படம்பிடிக்கும் கருவியில்லை.
நல்லவேளை....
மனம் அழும் ஓசைகளை மொழிபெயர்க்க வழியில்லை.

September 02, 2009

நீங்களும் நானும் ஏன் வலை பின்னிக்கொள்கிறோம்?இரண்டு தலைமுறைக்கு முன்னோக்கிச் சென்றால் 'பிரபல்யம்' என்பது "விலையுயர்ந்த" சொல். அதனைப் பெற பல தியாகங்கள், தடாலடிகள் செய்யப்பட்டன. வியர்வை சிந்தப்பட்டது. அப்படி கிடைத்த பிரபல்யம் அன்றைய தரத்திற்கு ஏற்றதாய் இருந்தது. இன்றைக்கோ "அதிவேக" உலகத்தில், எல்லாவற்றிற்கும் மின்வேகத்தில் ஒப்புதல் கிடைத்துவிடுகிறது. அதிலும் கூட Quality vs quantity என்றாகி, தரம் குறைந்து வச-வச என எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

எழுத்தாளன் ஆக பாடுபட்டு பகல் இரவு முழித்து நீள காவியங்கள் எழுதிய காலங்கள் போய்விட்டன. (எழுதினாலும் எத்தனை பேர் இன்று படிக்கிறார்கள்?! இரண்டே பத்திகள் நீளமாய் எழுதினாலே படிக்க நேரம் இருப்பதில்லை.) பெரிய பத்திரிகையில், ஒருவன் பெயர் வெளிவராத வரை, தேர்ந்த எழுத்தாளானாய் அவனை உலகம் ஒப்புக்கொண்டதில்லை.(இன்றைக்கும் இந்நிலை தொடர்ந்தாலும் "எது பெரிய பத்திரிகை" என்னும் கண்ணோட்டம் சற்றே மாறுபட்டுவிட்டது) கணினி அறிமுகமாகாத காலம் வரை, ஒரு கல்கி, ஒரு சுஜாதா என, ஆங்காங்கே நல்-முத்துக்கள் தோன்றியவண்ணம் இருந்தன.

இன்றோ 'கம்பன் வீட்டுக் கட்டுத் தரி'யாக பெரிய எழுத்தாளர்களின் படைப்புக்களை படித்தவர்களின் கைகளும் துடியாய் துடித்து ஆளுக்கொரு கீ-போர்ட்-டுடன் 'காலையில் பல் துலக்கியது' முதல் 'தூங்கப்போகும் போது பாடிய ஆராரோ' பாடல் வரை எழுதிக் குவிக்கிறோம். இரண்டு வினாடிக்கு ஒரு முறை யாராவது முதுகில் 'ஷொட்டு' கொடுத்து பாராட்டியிருக்கிறார்களா என ஆவல் மீறிடுகிறது.

எழுத்திற்கு பைசா வசூலாகாத இணைய தளத்தில், சீரியலை தியாகம் செய்து இல்லத்தரசிகளும், இரவு தூங்குவதற்கு முன், கணினியைக் கொஞ்சி, அதில் தன் எழுத்தை பதித்த பின்பே படுக்கச் செல்லும் எழுத்துப் பிரியர்களும், ஆபீஸ் வேலைக்கு நடுவில் மேனேஜருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பின்னூட்டத்தை நோட்டமிடும் ஆர்வலர்களும் ஏன் வந்து போகின்றனர்?

"என் உளறல்கள்", "கிறுக்கல்கள், "இது கவிதை அல்ல", "கவுஜ", "கவிதை-மாதிரி" என்றெல்லாம் தலைப்பிட்டு நம் எண்ணங்களை போலி அடக்கத்துடன் பவனி வரச் செய்கிறோம். கவிதை இல்லைன்னா ஏன் பதிக்கிறோம்? உளறல் என்றால் ஏன் பத்து பேர் முன்பு தயங்காமல் உளறுகிறோம்? தமிழ் தெலுங்கு ஆங்கிலம் ஜெர்மன் உட்பட அனைத்து இந்திய அல்லது வேற்று மொழிகளிலும், இணையத்தின் செய்தி தளங்களிலும் பேசப்பட்ட செய்தியை எதற்காக மீண்டும் ஒரு முறை நம் கைவண்ணத்தில் பதிக்கிறோம்?

எழுதுவதை விடுங்கள் . வேறு சில கேள்விகளைப் பார்ப்போம் ஏன் கலைகள் கற்க முயல்கிறோம்? ஏன் காதலிக்கிறோம்? ஏன் பகைமை பாராட்டுகிறோம்? ஏன் சாவைக் கண்டு அஞ்சுகிறோம்? ஏன் உடமைகளைத் தனதாக்கிக் கொள்கிறோம்? இப்படி பல 'ஏன்'கள் இருந்தாலும்,

அடிப்படை காரணம் ஒன்று தான். Quenching of desires/wants.

மனவியல் நிபுணரான ஏப்ரஹாம் மாஸ்லோவின் தத்துவம் படிப்படியாக மனிதனின் தேவைகளை வகைப் படுத்துகிறது.

முதலில் உடல் ரீதியான அடிப்படைத் தேவைகள். உண்ண உணவு-நீர், உடுக்க உடை, இருக்க இடம், புணர்ச்சி முதலியவை. இவை பூர்த்தியடையாத பொழுது, அடுத்த தேவைக்கு மனிதன் செல்வதில்லை.

அடுத்து அவனின் தேவை, பாதுகாப்பு. இதில் எல்லாவிதமான பாதுகாப்பும் அடங்கும். உடல்ரீதியாக பிற உயிரினிங்களிடமிருந்து, சக மனிதனிடமிருந்து, மிருகம், இயற்கை முதலான எல்லாவற்றின் தாக்குதலிலிருந்தும் பாதுகாப்பு தேவை. பின் மனரீதியாக, உறவுகளின் அன்பு வளைய பாதுகாப்பு, உத்தியோகத்தின் பாதுகாப்பு.

அதன் பின் அவனது தேவை அன்பு, புரிதல். சுற்றத்தின் அங்கீகாரம். சமூகத்தின் ஒத்துழைப்பு முதலியன.

கடைசியாய் வருவது அஹங்கார திருப்தி. இப்பொழுது அவன் வெல்ல முற்படுகிறான். சாதிக்க விழைகிறான். புகழுக்கு ஏங்குகிறான். முதன்மை நிலைத் தேவைகள் பூர்த்தியடையாத பொழுது, அடுத்த நிலைக்கு மனிதன் பொதுவாய் முயலுவதில்லை.

சாதாரணமாக பொழுது போக்கிற்காக, ஒரு communicationக்காக எழுதும் மனிதர்கள், தங்கள் மன உணர்ச்சிகளை வெளிக் கொணரவே எழுதுகிறார்கள். ஆழ் மன எண்ணங்கள் சில வக்ரமானவை. சில வித்தியாசமானவை. பல வினோதமானவை. எழுத்தாளனின் மன-நிலையைப் பொறுத்து அவை வடிவம் பெறுகிறது. அவனுக்கு புகழ் சிறுகச் சேரும் பட்சத்தில் உணர்வுகளைப் பகிரும் முதல் நிலையைத் தாண்டி பதப்படாத அவன் மனத்தில், 'நான் உசத்தி/மேதை' என்ற எண்ணம் மேலோங்க, கடை நிலையான "அஹ்ங்கார திருப்தி" க்கு விழைகிறான். அவன் எழுத்து வடிவமும் படிப்படியாய் மாறுகிறது.

அதன் பின் அவன் "அகத்தின் பெருமைக்காக" எழுதத் துவங்குகிறான்.

இவையெல்லாம் தாண்டி பிரதிபலன் எதிர்பார்க்காமல் எழுதுவோர் சிலரும் உண்டு. நல்ல விஷயங்களை நல்லனவற்றை பிறருடன் பகிரவேண்டும் என்ற ஆவலால் எழுதுவோர்கள். அவர்கள் மனோ தத்துவப்படி, கடைநிலையான "ego-satisfaction"-த் தாண்டி, "தன்னை அறிதல்" என்ற பவ்ய நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ளும் படியில் மெல்ல தவழ்பவர்கள் ஆவார்கள். இவர்களின் எழுத்து மட்டுமின்றி செயல்கள் பலவும் "அங்கீகரத்தை" எதிர்பார்த்து நிற்பதில்லை.

இந்நிலை அடையும் வரை அடிப்படை தேவைகள் நிரம்ப பெற்றிருக்கும் பலரின் "ஏன்" களுக்கும் ஒரே விடை தான் - "அங்கீகாரம்".