September 16, 2009

தென்கச்சி கோ சுவாமிநாதனுக்கு இதயபூர்வ அஞ்சலி



அதிகாலை மணம் பரப்பும் மலரின் மென்மையோடு, நம்பிக்கையூட்டும் காலைக் கதிரின் நட்பினைப் போல், இளம் தளிர்கள் துளிர்விடும் அழகோடு மெல்ல வருடும் குரல். 'தினம் ஒரு தகவலாக' பல வருடங்கள் பல தகவல்கள் பரிமாறிய, பதப்பட்ட குரல். தென்கச்சி சுவாமிநாதன் என்றாலே என் மனதில் இனம் புரியாத சந்தோஷம் குதிக்கும், நம்பிக்கை பிறக்கும். ஏறக்குறைய அன்றைய வானொலியிலும், இன்றைய தொலைக்காட்சியிலும் இவர் குரல் கேட்ட அத்தனை உள்ளங்களுக்கும் இந்த அனுபவம் புரியும்.


மிகையான நாடகத்தன்மையோடு ஒலிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கிடையே,நம்மில் ஒருவரைப் போல், அக்கம் பக்கத்து திண்ணையில் அமர்ந்து பேசப்படும் இயல்பான நடையில், தினம் ஒரு தகவல். தினம் ஒரு படிப்பினை. தினம் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் நிறைந்த குட்டிக் கதை.

"வந்தே மாதரம்" என்று துவங்கும் எங்கள் வானொலிப் பெட்டியில், தொடர்ந்து செய்திகளும் தகவல்களும் ஒலித்தவண்ணமிருக்கும்.அத்தனைக்கும் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி "இன்று ஒரு தகவல்" . பள்ளி புறப்படும் முன் கடைசியாக நான் கேட்பதும் சென்னை வானொலியின் "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சி. அவசரமாக இரண்டே இரண்டு கவளம் உணவை அள்ளி அடைத்துப் புறப்படும் போதும் கூட என் கவனம் மட்டும் இவர் குரலில் அமிழ்ந்திருக்கும்.

அடடா இன்றைக்கு கணிதப் பரீட்சையாயிற்றே என்று பதறும் நாட்களில் எனக்கு புன்னகையூட்டியவர். வீட்டுப்பாடம் முடிக்கவில்லையே என்று கவலைப்படும் தினங்களில் கூட தைரியம் கொடுத்து வழி அனுப்பிவைத்தவர். குதூகலித்து பள்ளிசெல்ல ஆயுத்தமாகும் பல தினங்களில் இவர் கதைகளும், குரலும் மேலும் உற்சாகத்தை வழங்கி விடையளிக்கும்.


காலை ஆறு மணிக்கே புறப்பட்டுவிடும் அப்பா. சமையலில் மும்முரமாக இருக்கும் அம்மாவுக்கு பேச ஏது நேரம்! காலை வேளையில் என்னை ஊக்கப்படுத்திப் பேசியதெல்லாம் தென்கச்சி கோ சுவாமிநாதன். தினமும் பேசினார். விதவிதமான கதைகள் மூலம் பேசினார்.


கதைகளை விட, கதைகளின் முடிவு எப்பேற்பட்டதாய் இருக்கும் என்று கவனிப்பதில் எனக்கு ஆர்வம். சடாரென திருப்பம் கொணர்ந்து நம் கவனம் ஈர்க்கும் ஒவ்வொரு கதையும் . அதன் பிறகு, இவருக்கே உரிய தனி பாணியில், வித்தியாசமான ஹாஸ்யத்தை புகுத்தி, புன்னகையுடன் முடிக்கப்படும் கடைசி அத்தியாயம். கதை முடிந்தவுடன், நானும் என் அம்மாவும் புன்னகை பரிமாறிக்கொள்வோம். ரசனைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தின் ஊடே வார்த்தைகளுக்கு இடமேது!

தோழனாய், ஆசிரியனாய் இருந்து வருடிக்கொடுத்த குரல். என் பள்ளிப்பருவத்தின் ஒரு அங்கமாகி விட்ட குரல். இன்றைக்கும் இவர் குரலைக் கேட்கும் போதெல்லாம் தொலைந்த பள்ளிப் பருவம், தோழர்கள், தோழிகள், பல நினைவுகள், காலை நேரத்து அவசரங்கள் எல்லாம் தொய்ந்த கலவையான உணர்வு எழுவதுண்டு.

அதெல்லாம் நேற்றுடன் முடிந்து விட்டது. இன்று நம்மிடையே இவரின் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. "சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி. கோ. சுவாமிநாதன் காலமானார்" என்ற செய்தி கண்கள் பனிக்கச் செய்தது. என்னுடைய பால்ய பருவ உணர்வுகளில் சிலவற்றை தன்னுடனேயே பிய்த்து எடுத்துச் சென்று விட்டார் . தொலைந்த கல்லூரி பருவம், தொலைந்த தோழர்களைப் போல், இன்று இவரும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு சென்று விட்டார்.


இவர் குரல் மட்டும் என்றும் சுப்ரபாதமாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

11 comments:

  1. நல்ல உரை நடை நன்றி.

    ReplyDelete
  2. தென்கச்சி சுவாமிநாதன் தமிழ், இனிமையும் எளிமையும் நிறைந்த தமிழ். இங்கு (மலேசியாவில்) அவரைத் தொலைக்காட்சியில் கண்டும் அவர் தமிழைக் கேட்டும் மயங்காதவர்கள் இருப்பார்களா என்பது ஐயமே.

    நல்ல மனிதர்; அவர்தம் பெயர் என்றும் நின்று நிலைக்கும்.

    ReplyDelete
  3. //”தென்கச்சி கோ சுவாமிநாதனுக்கு
    இதயபூர்வ அஞ்சலி”//

    அவர் சிரிக்காமல் நம்மை சிரிக்க வைப்பார்,சிந்திக்கவும் வைப்பார்.

    நீங்கள் சொல்வதுபோல் அவர் குரல்
    நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே
    இருக்கும்.

    ReplyDelete
  4. //இவர் குரல் மட்டும் என்றும் சுப்ரபாதமாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.//

    மறக்கவே முடியாத குரலுக்குச் சொந்தக்காரர் தென்கச்சியார்.
    அத்தனை பேரின் உணர்வும், அவர்
    வானொலியில் பேசிக்கேட்கையில் எப்படியிருக்குமோ அதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்.

    ஒரு பேட்டியில் நடிகர்திலகம் சொல்லியிருந்தார்: "எந்த வேலையிருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு, தென்கச்சியாரின் காலை உரையைக் கேட்க வானொலி அருகே காத்திருப்பேன். என்றாவது கேட்க தவறிவிட்டேனென்றால், அன்று பூராவும் எந்த வேலையும் ஓடாது.
    நான் அவரின் ரசிகன். அவரை இதுவரை நேரில் சந்தித்ததில்லை.
    ஒருநாள் நேரில் பார்க்கவேண்டும்."

    தென்கச்சி சுவாமிநாதன் அவர்களுக்கு நமது அஞ்சலிகள். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  5. //ஒரு பேட்டியில் நடிகர்திலகம் சொல்லியிருந்தார்: "எந்த வேலையிருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு, தென்கச்சியாரின் காலை உரையைக் கேட்க வானொலி அருகே காத்திருப்பேன். //

    அப்பேற்பட்ட நடிகர் திலகமே இவருக்கு விசிறி என்றால் வேறென்ன சொல்ல.

    ReplyDelete
  6. 1990 -1995 களில் இவரின் இன்று ஒரு தகவலை கேட்பதற்காக, பாடசாலைக்கு காலம் தாழ்த்தி சென்று தண்டனை பெற்ற நினைவுகளும் அவருடைய கதைகளை நினைத்து சிரித்த காலங்களும் அசைமீட்க கூடியதாக உள்ளது.

    ReplyDelete
  7. தென்கச்சி சுவாமிநாதன் மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலி... அவரை இழந்து துடிக்கும் அவர் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை...

    நல்ல பல விஷயங்களை நாளும் போதித்த அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  8. தென்கச்சி சுவாமிநாதன் மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலி.அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  9. I have written an obituary for TS in my English blog:

    www.myownquiver.blogspot.com

    ReplyDelete
  10. இனி அப்படி ஒரு நகைச்சுவை கலந்த தமிழை கேட்க முடியாது என்பதில் வருத்தம்....

    ReplyDelete