October 22, 2009

தீவிரவாதத்தின் மரண ஓலங்கள்




சீற்றம் கொண்டெழுந்த இயற்கை உயிர்களின் காவு வாங்கும் பொழுதெல்லாம் பூமியெங்கும் மரண ஓலங்கள். பேரிழப்பு நிகழும் தருணங்களில், இறந்த, இறக்கின்ற, மீட்கப்படாத உயிர்களை எண்ணி இறப்பின் கொடும் தன்மையை சகித்துக்கொள்ள முடியாமல், ரத்த சம்பந்தமின்றியே கண்ணீர் சிந்தியோர் பலர். தீயினாற் சுட்ட புண் ஆறிய பிறகும் வடுவை விட்டுச் செல்வது போல், நேரடி மரணங்கள் நிகழ்ந்த குடும்பங்களைத் தவிர, கணக்கற்ற பொருட்களையும் நம்பிக்கையையும் தொலைத்து பரிதாபமாய்ப் பலர் வாடி நின்றனர்। இவ்விழப்புக்கள் சில நாட்களிலோ மாதங்களிலோ ஈடுகட்டக் கூடியவை அல்ல. வருடங்கள் உருண்டாலும் வெவ்வேறு வடிவில், வெறுமையையும் எண்ணற்ற துன்பத்தை பரிசாய் அளிக்கக் கூடியவை. இந்நிகழ்வுகள் ஆழ்ந்து உறங்குகின்ற பரோபகார உணர்வை தட்டி எழுப்பக்கூடியவை. அவரவர் தங்களால் முடிந்த பண, பொருள் உதவிகளும் சேவைகளும் செய்து தங்கள் அஞ்சலியை செலுத்தி, உள்ளே கசியும் மனிதநேயத்திற்கு பால் வார்த்துக கொண்டனர்.

அசம்பாவிதங்கள் நேரும் போதெல்லாம் கடவுள் ஏனோ மாட்டிக்கொண்டுவிடுகிறார். இறை என்ற ஒரு வஸ்துவை தலைக்குத் தலை நாறடிக்கின்றனர். இரக்கமற்ற அந்த வஸ்துவிற்கு கருணாமயி என்று எவ்வாறு பெயர் வந்திருக்கக்கூடும் என ஆராய்கின்றனர். மரணங்கள் நிகழ்ந்த சில நாட்கள் வரை, கடவுளுக்கு கொலைகாரப் பட்டம் கட்டி, தூற்றுகின்றனர். மரணங்களில் இயற்கை தருவிக்கும் மரணங்களுக்கு அதிக முக்கியத்துவமும் ஆராய்ச்சியும் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ஒரு பூகம்பம் இல்லாவிட்டால் எரிமலைகளோ, வெள்ளமோ சூறாவளியோ பூமியின் பாரத்தை சமன்படுத்திய வண்ணம் உள்ளது. இவைகளின் தீவிரங்களை அளக்க ரிக்டர்களையும், காற்றழுத்த எண்களையும் பற்றிக் கேட்டறியாதவர்கள் கூட, இது போன்ற சம்பவங்கள் நடந்த ஓரிரு நாட்களுக்கு, சரளமாய்ப் பயன்படுத்தி வருந்திக் கொண்டிருப்பார்கள்.

முரணான விஷயம் இங்கே ஒன்றே ஒன்று தான். இத்தனை வருத்தப்படும் மனிதர்கள், இயற்கைச் சீரழிவுக்காகக் கண்ணீர் சிந்தியபடி பெயரில்லா எதையோ கரித்துக் கொட்டும் நம்மால் எப்படி தீவிரவாதத்தை அங்கீகரிக்க முடிகிறது? அங்கீகரிக்கவில்லையெனில், மதத்தின் பெயரிலும், ஜாதியின் பெயரிலும் மொழியின் பெயராலும் சரமாரியான கொலைகளை ஏன் யாரும் முயற்சியெடுத்து தட்டிக்கேட்பதில்லை? உள்ளாடும் உயிர் அனைவருக்கும் பொது. அது பறிக்கப்படும் போது ஜாதி மதங்களைத் கடந்து வலியென்ற ஒரே பொது மொழி மட்டும் புரியும். இயற்கை மரணங்களைப் பழிக்கும் நாம், மனிதனே மனிதனைக் கொல்லும் காட்டுமிராண்டித் தனத்தை வளர்க்கும் தீவிரவாத்திற்கு சோறூட்டிக்கொண்டிருக்கிறோம். இயற்கையின் சீற்றத்தைத் தடுக்க எத்தனித்து தோற்கும் நாம், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாவதைத் தடுத்து நிறுத்த முனைகிறோமா?

எங்கோ குறிப்பிட்ட ஜாதிக்காரன் இறந்ததற்கு சம்பந்தமில்லா ஒரு தனி மனிதனிடம் அந்த வெறியைத் தீர்த்துக் கொள்ளுதல் எவ்வகையில் நியாயம்? தேசப்பற்று என்று போற்றி, வேற்று தேசத்தவனைச் சுட்டுக்கொல்கிறோம். அது கொலையாகாது. அங்கு இறப்பு போற்றப்படுகிறது. கொச்சையாய்க் கூறினால் எதிரியின் இறப்பில் கூத்தாடுகிறோம். மனிதர்களே எழுதிய சட்டங்கள். உயிர் பறிக்கப்படுவது எல்லாவற்றிலும் அடித்தளமாய் அமைந்தாலும், கொலை, நாட்டுப்பற்று, தீவிரவாதம் என்று அதற்கு வண்ணம் தந்து அதற்கேற்றாற் போல் போற்றவோ தூற்றவோ செய்கின்றனர்.

உங்களுக்கு இப்பொழுது குழப்பம் வரலாம். அப்படியெனில் நாட்டுப்பற்று தவறா? போர் வீரர்கள் முதல் தரமான தியாகிகள் அல்லவா என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். நாட்டுப்பற்று தேவை. தற்காப்புக்காக உருவாக்கப் பட்ட உணர்வு. என் இடத்தில் நீ நுழைந்து அபகரித்தால் நான் எதுவுமின்றி இழந்து நிற்பேன். அதனால் நீ திமிறும் போது நானும் திமிறுவேன். நீ எல்லைமீறும் போது நானும் எல்லை மீறுவேன். நீ என்னைக் கொன்றால் நானும் உன்னைக் கொல்வேன். பலரின் நன்மைக்காக ஒரு போர்வீரன் இன்னொருவனை கொன்று ஒரு பிரிவினரிடம் தியாகப் பட்டத்தை வெல்கிறான். அப்படியெனில், இரான் இராக் போர், இதுவரை நடந்த உலகப் போர்கள் முதல் இதிகாசப் புராணங்களில் வரும் பாரதப் போர் வரை எல்லாமே தியாகத்தின் பிரிவில் வருகிறதா என்றால் இல்லை.

தற்காப்பிற்காக இன்றி, மற்ற எந்த காரணத்திற்காகவும் போர் எனும் பெயரில் உயிர்கள் பறிக்கப் பட்டால் அது தியாகம் ஆகாது. வாழ்வை எளிமைப்படுத்தவும், இயற்கை வளங்களை முறையோடு தடையின்றி அனுபவிக்கவும், வரையறுக்கப் பட்ட கோடுகளே நாடுகள். இதே எண்ணத்துடன் இக்கோடுகள் பார்க்கப்படும் வரையில் நாடு என்ற ஒன்று வரவேற்கத்தக்கது. கண்ணுக்குப் புலப்படாத இந்த பாகப் பிரிவினைகளினால் பிறகு படிப்படியாய் மொழி, இனம் பழக்க வழக்கங்கள் என உட்பிரிவுகளுக்கு உட்பட்டு, எதுவெல்லாம் நம் வாழ்வை எளிமையாக்கி வழி நடத்திச் செல்ல வேண்டுமோ அவையே வில்லங்கமாய் விளங்கிவருகிறது.

நாட்டுப்பற்று போற்றக்கூடியது. மொழிப்பற்றும் மதப்பற்றும், இனப்பற்றும் ஜாதிப்பற்றும் தனிமனிதப்பற்றும் அவ்வாறே. பற்றாக மட்டும் இருக்கும் வரை எல்லாமே போற்றக்கூடியது. பற்று என்பது என்று வெறியாய் மாறுகிறதோ, அன்று அதற்கு தீவிரவாதத்தின் வண்ணம் பூசப்படுகிறது. இயற்கையிலேயே மனிதனுக்கு ஆள்காட்டி விரலை உபயோகித்து இன்னொன்றை காரணம் காட்டுவது பிடித்தமான விஷயம். அழிவு என்றில்லை, பொது வாழ்வில் நமக்கு பிடிக்காத ஒவ்வாத ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் முதலில் ஆள் காட்டி விரல் உயர்ந்து வேறு ஒருவரை சுட்டிக் காட்டும் வரை தூக்கம் வராது. நூறு பேர் ஜாதிவெறியால் பலியா? தீவிரவாதம் ஒழிய வேண்டும். எல்லாம் கட்சிகள் செய்யும் வினை. பள்ளிக் குழந்தைகள் பலியா? பொறுப்பற்ற அரசாங்க ஊழியர்களை வேலை நீக்கம் செய். இரு நாடுகளிடையே போரின் துவக்கமா? பதவியிலிருக்கும் வெறியர்களே காரணம். இங்கு தனி மனிதனால் என்ன செய்ய இயலும்? கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்கப் புறப்படலாம். அதுவும் இல்லையெனில் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் செய்திகள் படித்து அலசலாம். நானும் தர்மம் செய்தேன் என்று ஒரு பர்சண்ட் மாதவருமானத்தை நிதி நிவாரணங்களுக்கு வழங்கலாம். அது யாரிடம் போய் சேருகிறது என்று கவலைப்பட்டே அடுத்த ஒரு வருடத்தைக் கழிக்கலாம். கொஞ்சம் திறமையுள்ளவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, கவிதை, கட்டுரை, கதை, ஜோக் என்று எழுதி பெயர் வாங்கக்கூடும்.

யாருமில்லையெனில் 'கடவுளே எனக்கு இந்தச் சோதனையா? உனக்குக் கண்ணில்லையா' என்ற புலம்பல்களில் மாட்டிக் கொண்டு விழிப்பது மறுபடியும் இறைவன். இயற்கைச் சீற்றத்தால் அழிவா? இருக்கவே இருக்கிறான் இறைவன். எந்த மொழியில் எத்தனை அசிங்கமாய் கத்தினாலும் கேட்டுக் கொண்டிருப்பான். இறைவன் என்றாவது சீற்றம் கொண்டு பழிச்சண்டை போட கிளம்பி வரும் வரையில் கவலையின்றி அவனைக் குறை சொல்லலாம்.

ஒவ்வொரு தனிமனிதனும் யோசிக்க வேண்டிய ஒன்றுள்ளது. மரணங்களும் துக்கங்களும் தவிர்க்கமுடியாதவை. பூமி நகரும் போதும் புயற்காற்று சீறும் போதும், எரிமலை வெடிக்கும் போதும் நம்மால் அதைத் தடுக்க இயலாது. வருமுன் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒன்றே வழி. மனிதனும் மரணத்துடன் போராடிக்கொண்டே இருக்கிறான். புதுப்புது மருந்துகள் கண்டறிகிறான். முதுமையை மூப்பை ஒழிக்கப் பாடுபடுகிறான். பத்து வியாதிகளுக்கு மருந்துகளும் மாற்று மருந்துகளும் கண்டு பிடித்து சந்தோஷ ஆரவாரம் பெருகும் போது, பதினோராவது வியாதி உருவெடுக்கிறது. அதைக் கண்டறிய குறைந்தது அரை நூற்றாண்டாகிறது. அதை வெல்ல இன்னும் பல ஆண்டுகள். இதில் வேதனைக்குர்¢ய எதிர்மறையாய், வாழப் பாடுபடும் மனிதனே, அழிக்க வல்ல விஷயங்களையும் கண்டறிந்து அதைச் சரியாக உபயோகப் படுத்த எத்தனிக்காமல், சுற்றுப்புறத்தையும், பிற ஜீவராசிகளையும் அழிவின் பாதையிலே தள்ளுகிறான்.

மனிதன் மனிதனாய் இல்லாத வரை, வாழ முயலாத வரை இயற்கையை வெல்ல எத்தனை முறை முயன்றாலும், அது முடியாமல் நழுவிக்கொண்டே செல்லும். எவ்வகையில் அழிக்கப்பட்டாலும் அழிவு ஒன்று தான். எந்தப் பெயரில் கொல்லப்பட்டாலும் கொலை ஒன்று தான். அன்பையும், கருணையையும் அள்ளி வழங்கும் மஹாத்மாவாய் ஒவ்வொருவரும் உருவெடுக்க வேண்டாம். அரக்க குணங்களை அழித்து, கலவரங்களிலும் இரத்த சேதங்களிலும் ஈடுபடாமல், வன்முறை பழகாமல், குறைந்த பட்சம் மனிதனாய் இருக்க முயல்வதில் சிரமம் ஏதும் இருப்பதில்லை. முயன்று பார்க்கலாம்.

7 comments:

  1. அரக்க குணங்களை அழித்து, கலவரங்களிலும் இரத்த சேதங்களிலும் ஈடுபடாமல், வன்முறை பழகாமல், குறைந்த பட்சம் மனிதனாய் இருக்க முயல்வதில் சிரமம் ஏதும் இருப்பதில்லை. முயன்று பார்க்கலாம்.

    ReplyDelete
  2. மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
    http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.html

    http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post.html


    இந்தக் கவிதைகளில் நானும் இது போன்ற கருத்துக்கள் சிலவற்றை முன் வைத்திருந்தாலும், தேசம் தாண்டிய மனிதநேயத்துக்காக ஆணித்தரமாக நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post_26.html

    இதையும் பாருங்கள் நேரம் கிடைத்தால்.

    ReplyDelete
  4. நன்றி வெங்கட்,

    இராமலக்ஷ்மி.

    இங்கு நான் நீட்டி முழக்கு சொல்லியிருப்பதை நம் பாவேந்தர் "உலக ஒற்றுமை" என்ற பாடலில் அழகாய் சொல்லியிருக்கிறார்.

    _______________


    தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
    சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
    சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
    தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
    கன்னலடா என் சிற்றூர் என்போ னுள்ளம்
    கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்
    தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
    சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!

    ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
    அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க
    வாயடியும் கையடியும் வளரச் செய்வார்!
    மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்!
    தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
    தொல்லுலக மக்களெலாம் 'ஓன்றே' என்னும்
    தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
    சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே.

    _________________

    தொன்னை உள்ளத்தைத் தாண்டிய தூய உள்ளமே பரிசுத்தம்.

    ReplyDelete
  5. //நம் பாவேந்தர் "உலக ஒற்றுமை" என்ற பாடலில் அழகாய் சொல்லியிருக்கிறார்.//

    உண்மைதான் ஷக்தி. எவ்வளவு அழகாய் சொல்லி விட்டிருக்கிறார்! பாடலைப் பகிர்ந்து கொண்டிருப்பதற்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  6. நல்ல வழிகாட்டிகள் இன்று இல்லை!! கிருஷ்ணர், நபிகள், இயேசு, எலோரும் அன்று ஆடுகைளும், மாடுகளையும் நல்லவிதமாய் மேய்த்தார்கள்... இன்று நல்ல மேய்ப்பன் இன்று திரிகின்றோம்... விவேகானந்தர் கேட்டபோதே 100 இளைஞர்களை கொடுத்திருந்தால் இன்று நாம் விவேகானந்தரை தேடிகொண்டிருக்கவேண்டாம்... இன்று நமால் இயல்வது, நம்ம குழந்தைகளை சத்தியவானாக, யோக்கியனாக வளர்த்துவது...

    ReplyDelete
  7. உண்மை தான் 'எவனோ-ஒருவன்' கருத்துக்கு நன்றி.

    தீமை ஒடுங்கி நன்மை தழைக்க வேண்டும்போதெல்லாம், இயேசுவும், க்ருஷ்ணனும், விவேகானந்தரும் வருவார்கள். அதுவரை பொருத்திருக்க வேண்டுமோ? நீங்கள் சொல்வது போல் நல்ல தலைமுறைகளை உருவாக்கிக் கொடுப்பதில் ஒரு சிறு பங்கு நமக்கு உண்டு. அந்த பணியை செவ்வனே செய்ய முனைவோம்.

    ReplyDelete