January 22, 2019

தொண்டரடிப்பொடியாழ்வார்

ஸ்ரீவிஷ்ணு அலங்காரப் பிரியன் அல்லவா! மாலை தொடுத்து சேவித்திருப்போருக்கு மாலவனின் மனதில் தனியிடமுண்டு. விப்ர நாரயணர் எனும் பக்தரும் அப்படியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர். வேத விசாரதர் எனும் விஷ்ணு பக்தருக்கு மகனாகப் பிறந்தார். பக்தியில் தந்தையையும் மிஞ்சிய மகனாக, அரங்கனுக்கு பூமாலையுடன் தமிழ்ப் பாமாலையும் நித்தம் சூட்டி சேவை புரிந்து வந்தார். இதற்கெனவே நந்தவனம் அமைத்து புத்தம்புது நறுமலர்கள் அன்றாடம் சேகரித்து வண்ண மாலைகள் தொடுத்து வழிபட்டு வந்தார்.
இறைவனை பாடித் துதிப்பதே தம் பணியென்றிருந்தவர். திருமாலைத் தவிர மாதொருத்தியை மனம் நாடாது என்றுரைத்தவர், விதி வசத்தால் அழகிய ஆடலரசியிடம் தன் மனதை பறிகொடுத்தார். அவளுக்கெனவும் அவள் குடும்பத்தாரின் திருப்திக்கும் செல்வத்தை எல்லாம் இழந்தார். தமை மறந்தார். சிற்றின்பத்தில் நாட்டம் திரும்பும் பொழுதே தமை இழந்து விடும் பக்தர்களையும், ஆட்கொள்ளும் தயாளனல்லவா அரங்கன்! இழந்த விவேகத்தை மீட்டருளும் பொருட்டு, தமது சொத்தான பொற்கிழியொன்றை விப்ரநாராயணருக்காக கொடுத்துதவினான் அரங்கன். அப்பொற்கிண்ணம் அரங்கன் சொத்து. அதை களவாடியவர் விப்ர நாரயணரே என்ற பெரும்பழி ஏற்று தண்டனை பெற இருந்தவரை, குற்றமற்றவர் என்று மன்னர் கனவில் உண்மையுரைத்து அடியவர் பெருமையை உலகறியச் செய்து காத்தருளினார்.
ஊனக்கண் மறைந்து ஞானக்கண் தோன்றுங்கால், பணிவும், தம்மை சிறுமைபடுத்திக் கொண்டு பிறரை உயர்த்திப் பிடிக்கும் குணமும் தன்னால் வந்து சேருமல்லவா! தொடர் தம் அடியின் துகளையும் உவந்து திருமண்காப்பின் புனிதமென இட்டு உவப்பவரை, தொண்டரடிப்பொடியாழ்வார் என்று உலகமே கொண்டாடியது.
இறையருளால் நீண்ட பெருவாழ்வு வாழ்ந்து, அரங்கனைப் பாடித் துதித்து, ஆயுள் முடியுங்கால் வைகுந்தம் சென்றடைந்தார்.
'திருமாலை' மற்றும் 'திருப்பள்ளியெழுச்சி' இவர் படைப்புகள். அரங்கன் மீது தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருப்பள்ளி எழுச்சியே இன்றும் அனைத்து வைணவ ஆலயங்களில் பாடப்பட்டு வருகிறது.
சோழ நாட்டுத் திருமண்டங்குடியில் எட்டாம் நூற்றாண்டு பிறந்த இவரை வனமாலையின் அம்சத் தோன்றலாக போற்றுகின்றனர்.

குறுகிப் போனவை
நின்று நிதானிக்க பொழுதில்லை..
கவிதைகள் ஹைக்கூகளாக
குறுநகை பதித்து விரைந்தோடுகிறது.
குறுங்கதைகள்: குறும்படங்கள்: குறுநாடகங்கள்:
காலம் போன்சாய் வடிவில்
வலைக்குள் குறுகிக் கொண்டது .
நேசிக்க நேரமில்லை...
அன்பை அரைநொடிக் குறுஞ்செய்தியாக்கிய
பிழையால் பிறழும் குறுங்காதல் .
ஒரு வரியில் அறம் போதித்த ஆத்திச்சூடியும்
ஒன்றரை அடியில் உலகை அளந்த குறளும்
தீர்க்கதரிசனத்தில் விளைந்த குறுமுத்துக்கள்

January 18, 2019

ஆண்டாள்

ஆண்டாளைப் பற்றி சிறு-குறிப்பு வரைதலும் சாத்தியமா? அவள் பெருமைகளை பேசவும் வார்த்தைகளுக்கு திறன் போதுமோ! ஸ்ரீவல்லிப்புத்தூர் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட ரத்தினம் அவள். இறைவனால் பிரசாதமாக வழங்கப்பட்ட திருக்குழந்தை என்று தோன்றியதாலோ என்னவோ பெரியாழ்வார் தம் ரத்தத்திலும் ஆன்மாவிலும் பெருக்கெடுத்தோடும் அத்தனை பக்தியும் ஆண்டாளுக்கு போதித்தே வளர்த்தார்.

பூங்குழந்தையவளை பூங்கோதையென்று பெயரிட்டு சிராட்டி வளர்த்தார். பாலுடன், தேனுடன், தினம் உண்ணும் அமுதுடன் ஸ்ரீ ஹரியின் நாமமும் புகட்டினார். நல்பக்தி கொண்ட திருக்குழந்தை, பெருமானை தன் உற்ற தோழனாகக் கொண்டாடினாள். தன்னையே அம்மாயவனின் மனையாளாக பாவித்து, அவன் சூடும் மாலை தான் சூடினால் பேரிழில் கூடிவிடுமோ என்று தினம் இறைவனுக்கு பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையை தான் ஒரு முறை சூடி அழகு பார்த்து வந்தாள். 


இதனை கண்ணுற்ற ஆழ்வார் பதறினார். பக்திக்கு களங்கமெனத் துடித்துக் கதறினார். சிறு பேதையின் தவறை மன்னித்தருளும்படி பெருமானிடம் வேண்டி வேறு மாலை தொடுத்து அழகு பார்த்தார். கோதையின் காதலை ஏற்ற கண்ணனோ அவள் சூடிய மாலையை அல்லாது வேறு மாலை தனக்கு வேண்டாமென கனவில் வந்து ஓதினான். ஆண்டவனையே ஆண்ட அவளே ஆண்டாள் அன்றோ!

ஆண்டாள் அருளிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பற்றி அறியாத ஸ்ரீக்ருஷ்ண பக்தர்களைக் காண்பது அரிது. பக்தியும் காதலும் ஒன்றை ஒன்று விஞ்சும் இப்பாடல்கள் இறைவனை இப்படியும் சென்றடையலாம் என்று நமக்குணர்த்தும் முன்னோடி. கோபிகையாக தன்னை வரித்து உருகிய பாடல்கள். இதனை செவியுற்ற பெருமானும் உருகாதிருப்பானோ! ஆண்டாளுக்கு தக்க பருவம் வந்த பொழுது, கண்ணனையே திருமணம் கொள்ளும் எண்ணத்தில் தளராதிருப்பதை அறிந்த பெரியாழ்வார் கலக்கமுற்றார். அவர் கனவில் தோன்றிய கண்ணன், ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாளை திருமணக்கோலத்தில் அழைத்து வர ஆணையிட்டான். திருமணக்கோலத்தில் அரங்கன் கருவறைக்குள் புகுந்தவள் அவனுள் ஒன்றெனக் கலந்தாள் என்ற கண்டவர்கள் சான்றுரைக்கின்றனர் .

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத மதுசூதனன் அவள் கைத்தலம் பற்றி தன்னுடனே அழைத்துக் சென்று விட்டான்.

எப்படிப்பட்ட வாழ்கை வாழ்வதென்று சொல்லாமல் சொல்லிய ஆண்டாள் நம் மனதையும் ஆண்டாள் அன்றோ!


January 16, 2019

பெரியாழ்வார்
மல்லிநாடு என்றழைக்கப்பட்ட ஸ்ரீவல்லிப்புத்தூரில், முகுந்தபட்டருக்கும் பதுமவல்லிக்கும் பிறந்தவருக்கு விஷ்ணுசித்தர் என்று பெயர் சூட்டினர்.

ஸ்ரீவல்லிப்புத்தூரில் கோவில் கொண்டுள்ள வடபத்ரசாயிக்கு அன்றலர்ந்த நறுமலர்கள் சேகரித்து, பூமாலையாக்கி சூட்டுவதை பெரும்பணியென்று ஏற்றிருந்தார் விஷ்ணுசித்தர்.

மதுரை நகர் மன்னவன் திருவீதியுலா வருங்கால், ஒரு வேதியரை நல்வார்த்தை கூறக்கேட்க, அவரும், இரவுக்கு பகலிலும், முதுமைக்கு இளமையிலும், மறுமைக்கு இம்மையிலும் நிதி திரட்டவேண்டும் என்று திருவாய் மொழிந்தார். இதன் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் அவை அமைச்சர், பரத்திலுருக்கும் தலைவனுக்கே வாழ்வை அர்பணித்திருக்க வேண்டுமென்று அறிவுறுத்தியதாக உரைத்தார். இறைவன் கனவில் வந்து ஆணையிட்டபடி, மன்னனை அணுகிய விஷ்ணு சித்தர், பரத்திலுருக்கும் முதல்வன், ஸ்ரீ நாராயணனே என்று நிரூபித்து பொற்கிழி வென்று வந்தார் .

யானை அம்பாரியில் வீற்றிருந்து பொற்கிழியுடன் உலா வருவதை களிக்க , நாராயணன் ஸ்ரீலக்ஷ்மியுடன் வானத்தே உதிக்க, அவன் பேரிழில் கண்டு, பெற்றோருக்குரிய கவலை தொற்றிக்கொள்ள, எங்கே அவனுக்கு கண்பட்டு விடுமோ என்று திருபல்லாண்டு பாடி வாழ்த்தியமையால், ஆழ்வார்களில் எல்லாம் பெரியோன் ஆகவே பெரியாழ்வார் என்று பெருமாளால் அன்புடன் அழைக்கப்பட்டு, பின்பு அதுவே அவர் திருப்பெயராகிப் போனது.

நாலாயிரப் பிரபந்தத்தில் இவர் பகவானை குழந்தையென பாவித்து பாடிய பல்லாண்டே முதல் பாடல்களாக அமைந்திருக்கிறது. ஆண்டாளை கண்டெடுத்து செவ்வன வளர்த்து, பெருமாளுக்கே அர்பணித்து, அவனை மருமகனாக ஏற்கும் பெறும் பேறு பெற்ற பெரியாழ்வார்.

January 09, 2019

மதுரகவியாழ்வார்


 ( நின்றிருப்பவர் மதுரகவியாழ்வார். அமர்ந்து திருவாய் மொழிந்தவர் நம்மாழ்வார்) 


பாண்டிய நாட்டின் திருக்கோளூர் எனுமிடத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு பிறந்தவர் மதுரகவியார். நம்மாழ்வாருக்கு முன் பிறந்தவர். பின்னரும் வாழ்ந்தவர். செவிக்கும் உள்ளத்துக்கும் இனிக்கும் கவிதைகள் படைத்தமையால் காரணப்பெயராக மதுரகவி என்றழைக்கபட்டார். உலக விஷயங்களில் நாட்டமில்லாதவராகவும், நாராயண பக்தி கொண்டவராகவும் சிறு வயது முதல் தம் பாதையை வகுத்துக் கொண்டார். வடமொழிப் புலமையும் கைவரப் பெற்றிருந்தார். வட நாட்டு யாத்திரைக்கு சென்றவரை பேரொளி ஒன்று ஈர்த்தது. ஒளியின் திசையை கண்டுணர்ந்து அதனைத் தொடர்ந்தவர் நம்மாழ்வாரை அடைந்தார். தமது ஆறாத் தாகத்தை கேள்வியாக்கினார். நம்மாழ்வாரின் திருவாய் மொழிந்த விடையே பெருந்திருப்தி அளித்து நம்மாழ்வாரை குருவாக ஏற்கப்பணித்தது. தத்துவங்கள் யோக ரகசியங்கள் அனைத்தும் குருவிடம் கற்றுத்தெளிந்தார். "கண்ணி நுண் சிறுத்தாம்பு" என்ற பதிகத்தை தம் குருவுக்கு பாமாலையாக்கினார். அதில் பதினொரு பாசுரங்கள் உள்ளன. இவை திவ்யப்ப்ரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன.

நம்மாழ்வாரின் முதன்மை சீடராக திகழ்ந்து அவர் புகழ்பரப்பினார். குருவின் மீது கொள்ளும் பெரும் பக்திக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். திருவாய்மொழியை நெறிப்படுத்தினார். நம்மாழ்வாரை உயர்த்திப் பிடிப்பது சிறப்பன்று- அவரும் பக்தரே அன்றி பகவான் அல்ல என்று சங்கப்புலவர்கள் ஆட்சேபிக்க, அவர்களின் செருக்கை நம்மாழ்வார் புகழ் பாடும் "கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்" பாசுரத்தின் முதலடியைக் கொண்டே வீழ்த்தினார்.

குருவுக்கு செய்யும் சேவையில் இறைவனைக் கண்டார். பாசுரங்களால் இறைவனைப் பாடி, குருவையும் துதித்தே இம்மையில் உய்ந்து மறுமையில் பரமனடி பற்றினார். பக்தர்கள் இவரை கருடனின் அம்சமாகக் கொண்டாடுகின்றனர்.

குலசேகர ஆழ்வார்
ஒவ்வொரு ஆழ்வாரும் வெவ்வேறு தனித்துவத்துடன் விளங்கினாலும் நாராயண பக்தி ஒன்றெ அனைவரையும் ஓரிழையில் இழைத்து ஆழ்வார்கள் என்ற மாலையில் பூக்களாக திகழ்ச் செய்கிறது.
கேரளாவிலுள்ள கருவூரில் (கொல்லிநகர்) ஸ்ரீராமனின் அவதார நட்சத்திரமான புனர்பூசத்தில் அவதரித்தார். கௌஸ்துப மணியின் திருவம்சமாக கொண்டாடப்படுகிறார். வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு என நூலேடுகள் உரைக்கின்றன.
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்து முறையே ராமபக்தியே தம் பிறப்பின் இலக்காக வாழ்ந்தவர். சங்க கால சேரர் . சந்திர குலத்து அரச வம்சத்தவர். சிறந்த முறையில் நீதி வழுவாமல் ஆட்சி செலுத்தி தமது எல்லையையும் விரிவு படுத்தியவர். பகவானின் பக்தியுடன் அவர் அடியார்களிடமும் அளவிலா பணிவும் கொண்டிருந்து, உதவிகள் புரிந்து வந்தார். பொறாமையுற்ற அமைச்சர்கள் பாகவதர் மேல் திருட்டுப் பழியை சுமத்த, தானும் பாகவதன் என்பதால் தனக்கும் அப்பழி சேரும் என்றுரைத்து பக்தர்களின் பேரில் களங்கமில்லை என்பதை விஷப்பாம்புள்ள குடத்தில் தமது கையை தீண்டுதற்களித்து, துணிவுடன் பக்தர்களைக் காத்தார்.
இராமன் தனியே அரக்கர்களுடன் போரிட்ட கதையை கேட்டதும் எம்பிரானுக்கு என்ன நேருமோ என்று கலக்கம் கொண்டு தம் படையனைத்தையும் திரட்டி கடற்கரையில் முற்றுகையிட்டு "ராட்சசர்கள் எங்கே எங்கே" என்று முழக்கமிட்டு, ராமனுக்கு உதவி செய்ய நின்ற வேளையில், ஸ்ரீராமபிரான் சீதாதேவி, லக்ஷ்மணன் சஹிதம் குலசேகர ஆழ்வாருக்கு காட்சி அளித்து ஆட்கொண்டதாக வரலாறு.
இறைவன் காட்சி கிட்டியபின், அரச போகத்தை வெறுத்து துறவு பூண்டார். பெருமாளுக்கு தாசன் என்றதால் இவரையும் குலசேகர பெருமாள் என்று அழைக்கலாயினர். இவர் எழுதிய பிரபந்த மொழியும் 'பெருமாள் திருமொழி' என்றாயிற்று. தமிழ் மொழி மட்டுமின்றி வடமொழி நன்கு அறிந்தவர். வட மொழியில் 'முகுந்தமாலை' என்ற நூல் இவரால் இயற்றப்பட்டது. சேரகுலவல்லி என்ற தம் மகளையும் அரங்கனுக்கே மணமுடித்தார்.
பல க்ஷேத்திரங்களை தரிசித்தவர், மன்னார் கோவிலில் பெருமாளை தரிசித்து அங்கேயே முக்தி அடைந்தார்.

January 03, 2019

ஆழ்வார்கள் - நம்மாழ்வார்:

அனைவராலும் பிரியத்துடன் நம்மாழ்வார் என்றழைக்கபடும் இவரின் வரலாறு பல வைணவ பெருமக்களும் அறிந்ததே. பிறந்த குழந்தைகளுக்கு உச்சந்தலையில் பூமிக்காற்று பட்டவுடன் தம் ஜன்மாந்திர நினைவுகள், தொடர்புகள் அனைத்தும் மறந்து போகும். அக்காற்று தலையைத் தீண்டுவதாலேயே முதன்முதல் பிறந்த பச்சிளம் பிள்ளைகள் அழுவதாக சொல்லுவதுண்டு. பிறக்கும் க்ஷணத்திலேயே இக்காற்றை வலிமையுடன் வெற்றி கண்டு சடகோபன் என்ற பெயர் பெற்றார். அழுகை அறுத்து, பேச்சறுத்து, பாலுண்ணாமல் இயற்கை உந்துதல்கள் ஏதுமின்றி ஞானத்துடன் ஒளிர்ந்தார். இவர் தோன்றிய இடம் திருக்குருகூர். காரியார் மற்றும் உடைய நங்கைக்கு திருமகனாய் அவதரித்தத இவர் 'விஷ்வக்சேனரின்' அம்சம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருக்குருகூர் அருகேயுள்ள கோவிலில் பதினான்கு ஆண்டுகள் தவம் புரிந்தும் தாமே கற்றுத் தெளிந்தார். மதுரகவி என்பவர் தென்திசையிலிருந்து புறப்பட்ட பேரொளியை தேடி, இறுதியில் அது நம்மாழ்வாரின் ஞான ஒளி என்று தெளிந்தார்..

"செத்தது வயிற்றில் சிறியது தோன்றின் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என்று மதுரகவி ஆழ்வார் கேட்க முதன் முறையாய் திருவாய் மலர்ந்து

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதிலுறைத்த நம்மாழ்வாரில் தம் குருவைக் கண்டார் மதுரகவி ஆழ்வார்.

இவர் இயற்றியவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரியதிருவாய்மொழி ஆகியன. இப்பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பாசுரங்கள் உள்ளன. பெருமாள் கோவிலில் சாதிக்கப்படும் சடாரியை இவரின் திருவருளாக இன்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

செத்தது என்பது ஜட உடலைக் குறிக்கும். அவ்வுடலில் சூலுற்று பிறக்கும் ஜீவன் சிறியது. அந்த ஜீவனாகப் பட்டது எதை உண்டு (எதனால் இங்கு ஜீவிக்கிறது என்பது பொருள்) எங்கே இருக்கும், என்பதை கேள்வியாக்கியவருக்கு,

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதிலுறுத்தார். அதை (அத்தை) என்பது அவரவர் செய்த வினையைக் குறிக்கும். வினையை உண்டு வினைப்பயனாய் பிறந்து அது தீரும் வரை இப்பூவுலகில் ( அங்க்கே கிடைக்கும்) இருக்கும் என்பது பொருள்.

January 02, 2019

நட்சத்திரங்கள் (மொழியாக்கம் 2 ) Source: Listen by Vladimir Mayakovskyசற்றே கவனி... நட்சத்திரங்கள் மின்னுவது எங்கோ ஒருவனின் அவசியத்திற்காக;
உமிழ்ந்த முத்துக்களே ஊன்றுகோலென்று உணர்ந்தவன் வீசும் சூறைக்காற்றில் நெடுமூச்செறிந்து ஆண்டவனை நாடினான்...
அவர் காலச்-சுருக்கத்தை கருத்தில் கொண்டு காற்றென கடுகிச் சென்று, கடவுளின் வலிய கரங்களை முத்தமிட்டான்... தேம்பினான்... நட்சத்திர ஒளி இன்றியமையாதது - கெஞ்சினான்; ஒளிராத நொடிப்பொழுதுகள் மரணத்தை தழுவுமென இரைஞ்சினான்;
காலங்கள் கரைந்தோடின. கால்போன போக்கில் கவலையுடன் திரிந்தாலும், உணர்ச்சிகளை உள்ளடக்கி தெளிந்த மனதுடன் திடமாக இன்னொருவனை தேற்றிக் கொண்டிருக்கிறான்.... "" எல்லாம் சீராகி விட்டது இனி அஞ்சுதற்கு ஏதுமில்லை ... "

சற்றே கேள்... எவனோ ஒருவனின் தேவைக்காக நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொரு இரவிலும் வானிறங்கி கூரை-உச்சியில் ஒரு நட்சத்திரமேனும் மின்னுவது மிக அத்தியாவசியம்""
மூலம்: Vladimir Mayakovsky தமிழாக்கம்: ஷக்திப்ரபா

Listen! (English Version)

Listen! if the stars are lit, then someone must need them, of course? then someone must want them to be there, calling those droplets of spittle pearls? And wheezing, in the blizzards of midday dust, he rushes to God, fearing he’s out of time and sobbing, he kisses God’s sinewy hands, tells Him that it’s important, pleads to Him that the star must shine! vowing that he won’t survive the starless torment! And later, he wanders, worried, though seemingly calm and fit, and tells somebody: “Finally, nothing can frighten you, right?!” Listen! if the stars are lit, then someone must really need them? then it is essential that at least one star alights over the rooftops each night?!

Poet: Vladimir Mayakovsky a renowned Russian poet and social reformer. His multifarious talent won him recognition as poet, script writer, actor, artist, director, public speaker, there by making him a very influential person in Russian literature and politics.

Poetry talks on hope, that mankind sustains. Hope is the most beautiful gleaming pearl that lights even the darkest nights. He beseeches god to keep the hope alive but for which existence becomes impossible. He lights the lamp of hope in every mind suffering in despair.