January 22, 2019

தொண்டரடிப்பொடியாழ்வார்





ஸ்ரீவிஷ்ணு அலங்காரப் பிரியன் அல்லவா! மாலை தொடுத்து சேவித்திருப்போருக்கு மாலவனின் மனதில் தனியிடமுண்டு. விப்ர நாரயணர் எனும் பக்தரும் அப்படியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர். வேத விசாரதர் எனும் விஷ்ணு பக்தருக்கு மகனாகப் பிறந்தார். பக்தியில் தந்தையையும் மிஞ்சிய மகனாக, அரங்கனுக்கு பூமாலையுடன் தமிழ்ப் பாமாலையும் நித்தம் சூட்டி சேவை புரிந்து வந்தார். இதற்கெனவே நந்தவனம் அமைத்து புத்தம்புது நறுமலர்கள் அன்றாடம் சேகரித்து வண்ண மாலைகள் தொடுத்து வழிபட்டு வந்தார்.
இறைவனை பாடித் துதிப்பதே தம் பணியென்றிருந்தவர். திருமாலைத் தவிர மாதொருத்தியை மனம் நாடாது என்றுரைத்தவர், விதி வசத்தால் அழகிய ஆடலரசியிடம் தன் மனதை பறிகொடுத்தார். அவளுக்கெனவும் அவள் குடும்பத்தாரின் திருப்திக்கும் செல்வத்தை எல்லாம் இழந்தார். தமை மறந்தார். சிற்றின்பத்தில் நாட்டம் திரும்பும் பொழுதே தமை இழந்து விடும் பக்தர்களையும், ஆட்கொள்ளும் தயாளனல்லவா அரங்கன்! இழந்த விவேகத்தை மீட்டருளும் பொருட்டு, தமது சொத்தான பொற்கிழியொன்றை விப்ரநாராயணருக்காக கொடுத்துதவினான் அரங்கன். அப்பொற்கிண்ணம் அரங்கன் சொத்து. அதை களவாடியவர் விப்ர நாரயணரே என்ற பெரும்பழி ஏற்று தண்டனை பெற இருந்தவரை, குற்றமற்றவர் என்று மன்னர் கனவில் உண்மையுரைத்து அடியவர் பெருமையை உலகறியச் செய்து காத்தருளினார்.
ஊனக்கண் மறைந்து ஞானக்கண் தோன்றுங்கால், பணிவும், தம்மை சிறுமைபடுத்திக் கொண்டு பிறரை உயர்த்திப் பிடிக்கும் குணமும் தன்னால் வந்து சேருமல்லவா! தொடர் தம் அடியின் துகளையும் உவந்து திருமண்காப்பின் புனிதமென இட்டு உவப்பவரை, தொண்டரடிப்பொடியாழ்வார் என்று உலகமே கொண்டாடியது.
இறையருளால் நீண்ட பெருவாழ்வு வாழ்ந்து, அரங்கனைப் பாடித் துதித்து, ஆயுள் முடியுங்கால் வைகுந்தம் சென்றடைந்தார்.
'திருமாலை' மற்றும் 'திருப்பள்ளியெழுச்சி' இவர் படைப்புகள். அரங்கன் மீது தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருப்பள்ளி எழுச்சியே இன்றும் அனைத்து வைணவ ஆலயங்களில் பாடப்பட்டு வருகிறது.
சோழ நாட்டுத் திருமண்டங்குடியில் எட்டாம் நூற்றாண்டு பிறந்த இவரை வனமாலையின் அம்சத் தோன்றலாக போற்றுகின்றனர்.

2 comments:

  1. வந்து வாசித்தால் என்ன கருத்திடுவது என்று புரியாத சப்ஜெக்ட்

    ReplyDelete
  2. Its ok if you dont comment sir, I understand there woudl be nothing to comment for lot of posts like these.... If you are interested in reading please do read. (y) :) I am happy you are following :)

    ReplyDelete