January 16, 2019

பெரியாழ்வார்




மல்லிநாடு என்றழைக்கப்பட்ட ஸ்ரீவல்லிப்புத்தூரில், முகுந்தபட்டருக்கும் பதுமவல்லிக்கும் பிறந்தவருக்கு விஷ்ணுசித்தர் என்று பெயர் சூட்டினர்.

ஸ்ரீவல்லிப்புத்தூரில் கோவில் கொண்டுள்ள வடபத்ரசாயிக்கு அன்றலர்ந்த நறுமலர்கள் சேகரித்து, பூமாலையாக்கி சூட்டுவதை பெரும்பணியென்று ஏற்றிருந்தார் விஷ்ணுசித்தர்.

மதுரை நகர் மன்னவன் திருவீதியுலா வருங்கால், ஒரு வேதியரை நல்வார்த்தை கூறக்கேட்க, அவரும், இரவுக்கு பகலிலும், முதுமைக்கு இளமையிலும், மறுமைக்கு இம்மையிலும் நிதி திரட்டவேண்டும் என்று திருவாய் மொழிந்தார். இதன் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் அவை அமைச்சர், பரத்திலுருக்கும் தலைவனுக்கே வாழ்வை அர்பணித்திருக்க வேண்டுமென்று அறிவுறுத்தியதாக உரைத்தார். இறைவன் கனவில் வந்து ஆணையிட்டபடி, மன்னனை அணுகிய விஷ்ணு சித்தர், பரத்திலுருக்கும் முதல்வன், ஸ்ரீ நாராயணனே என்று நிரூபித்து பொற்கிழி வென்று வந்தார் .

யானை அம்பாரியில் வீற்றிருந்து பொற்கிழியுடன் உலா வருவதை களிக்க , நாராயணன் ஸ்ரீலக்ஷ்மியுடன் வானத்தே உதிக்க, அவன் பேரிழில் கண்டு, பெற்றோருக்குரிய கவலை தொற்றிக்கொள்ள, எங்கே அவனுக்கு கண்பட்டு விடுமோ என்று திருபல்லாண்டு பாடி வாழ்த்தியமையால், ஆழ்வார்களில் எல்லாம் பெரியோன் ஆகவே பெரியாழ்வார் என்று பெருமாளால் அன்புடன் அழைக்கப்பட்டு, பின்பு அதுவே அவர் திருப்பெயராகிப் போனது.

நாலாயிரப் பிரபந்தத்தில் இவர் பகவானை குழந்தையென பாவித்து பாடிய பல்லாண்டே முதல் பாடல்களாக அமைந்திருக்கிறது. ஆண்டாளை கண்டெடுத்து செவ்வன வளர்த்து, பெருமாளுக்கே அர்பணித்து, அவனை மருமகனாக ஏற்கும் பெறும் பேறு பெற்ற பெரியாழ்வார்.

No comments:

Post a Comment