March 23, 2010

சோவின் எங்கே பிராமணன் - 2 (யோக முயற்சி)

யோக முயற்சி
_____________


உலகில் ஒருவனைப்போல் இன்னொருவன் இருப்பதில்லை, ஒவ்வொருவரின் நம்பிக்கை, இலக்கு, ஆசை அபிலாஷைகளும் தனித்துவம் வாய்ந்தவை. இலக்குகள் வேறாக இருப்பதாலேயே அவரவர்களின் தனிப்பட்ட முயற்சியும் வெவ்வேறானவை. அதற்கென அவர்கள் மெனகெடும் விதமும் சிரத்தையும் வித்தியாசப்படும். ஒரே ஒரு அப்துல் கலாம், ஒரே ஒரு பில்கேட்ஸ் என முயற்சிப் படிகளில் ஏறி பதக்கம் பெற்றோரை சுட்டிக் காட்டிவிட முடியும். கோடானகோடி ஜனத்தொகையில் வெகு சொற்பம் மனிதர்கள் பெரிய இலட்சியத்திற்காக செயல்படுகின்றனர். அவற்றுள் வெகு செலரே லக்ஷியத்தை எட்டிப் பிடிக்கின்றனர். அவர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே லக்ஷியத்தின் உச்சிக் கொம்பை எட்டிப் பிடிக்கிறார்கள். சாமான்ய நடப்புகளுக்கே இப்படியெனில், வாழ்வில் மிகப்பெரிய, உயர்ந்த லக்ஷியமாம், இறையை உணர்தல் என்பது எவ்வளவு கடினம் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்கு முயற்சிப்பவர்களே சொற்பம், வைராக்கியத்துடன் மேல் நடந்து செல்பவர்கள் மிகக் குறைவு அப்படி தொடர்ந்து தேடுபவர்களிலும் எவனோ ஒருவனே எட்டிப் பிடிக்கிறான். இதனை பகவான் க்ருஷ்ணன் கீதையில் குறிப்பிடுகிறான்.

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கஸ்சித் யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத:


ஆயிரக்கணக்கான மனிதர்களில் எவனோ ஒருவன் முயல்கிறான். அப்படி சித்தி அல்லது முழுமையைப் பெற முயற்சிப்பவர்களுள் எவனோ ஒருவனே என்னைப் பற்றிய உண்மை உணர்ந்தவன் ஆகிறான்.

எல்லோருக்கும் எல்லாமும் சித்தியடைவதில்லை. அதன் பொருட்டு உழைக்க, ஈடுபட மன/உடல் முதிர்ச்சியும் இடம் கொடுப்பதில்லை. ஒரு துறைகளில் வல்லுனர்களாய் இருப்பவர்கள், இன்னொன்றின் மேதாவிலாசத்திற்காக, சிரத்தையுடன் உழைப்பதும் வெகு அபூர்வம். ஆயிரமாயிரம் மனிதர்களில் இறைவனை நாடும் பாதை எவனோ ஒருவனே தேர்ந்தெடுக்கிறான். அப்படிப்பட்ட கடினமான பாதையில் ஒருவன் மனம் ஒன்றி ஈடுபடுவானேயானால், அவன் இலட்சியத்தை எட்டிப் பிடித்தாலும், அல்லது கை நழுவவிட்டாலும் கூட "முயற்சித்த" ஒரு காரணத்திற்காகவே உயர்வு பெறுவான். முயல்வதே வெற்றியின் முதல் படி, வெற்றிக்கு அடையாளம், தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், இவ்வாறெல்லாம் நடைமுறை வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சிறிய லக்ஷியங்களுக்கே சொல்லப்படுகிற விஷயம். இதுவே இறைவனைத் தேடும் மாபெரும் முயற்சிக்கும் உரித்தாகுகிறது.

கீதையில் அர்ஜுனைன் சந்தேகமும் இதுவே. 'ஒருவன் யோக முயற்சியில் ஈடுபடுகிறான். கர்மம் அல்லாமல் யோகம் பாதையை அவன் மனம் நாடுகிறது. அவன் சிரத்தையோடு துவங்குகிறான். அப்படி ஈடுபடுபவனுக்கு, யோகம் சித்திக்காமல் ஆகிவிடுமேயானால், அவன் யோக மார்கத்திலும் நில்லாமல், கர்ம மார்கத்தை விட்டும் விலகி இருக்க நேரிடுகிறது. அப்படிப்பட்டவனுக்கு என்ன கதி ஏற்படும்? சிதறிய மேகம் போல் சிதறுண்டு போகுமோ அவன் கதி?' என்று வினவுகிறான்.

கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நச்யதி।
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி॥


என்கிறது ஸ்லோகம்.

அதற்கு பகவான்,

பார்த்த நைவேஹநாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே
நஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி
ப்ராப்ய புண்யக்ருதம் லோகானுஷித்வா சாஸ்வதீ: ஸமா:
சுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே


நல்லது செய்யும் அவன் துன்பம் அடையவதில்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுக்கு அழிவில்லை. யோகத்தினின்று தவறியவன் நல்ல உலகத்தை அடைந்து பின் நல்ல அறம் வாழும் மனிதர்களின் குலத்தில் பிறப்பெடுப்பான். என்று தெளிவிக்கிறார். முயன்றாலே அதற்கு அப்பேர்ப்ட்ட கதி உண்டாம். முயற்சியில் வெற்றியோ தோல்வியோ பற்றி சிந்திக்காது, சிரத்தையுடன் முயன்றாலே போதுமானது என திருவாய்மொழிகிறார்.

சிரத்தையுடன் எதையுமே செய்ய வேண்டுமென்றால் அலைபாயும் மனதை கட்டுக்குள் வைக்க வேண்டும். இந்திரியங்களை குதிரைகளுடன் ஒப்பிட்டால் அங்கு மனதையே கடிவாளாமிட்டு இந்திரியங்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். நசிகேதஸிடம் யமன் கூறும் உபதேசத்தில், உடம்பைக் தேருக்கு ஒப்பிடுகிறார். அதை புத்தி எனும் தேரோட்டி, மனம் என்ற கடிவாளம் கொண்டு, இந்தியங்களாகிய குதிரைகளை, உலக நடைமுறை விஷயங்கள் நிறைந்துள்ள பாதையில் சரிவர இயக்க வேண்டும். கடிவாளாமில்லாத குதிரை எப்படி தறிகெட்டு ஓடுமோ, அப்படி ஓடக்கூடிய சுபாவம் வாய்ந்தது இந்திரயங்கள். இந்திரியங்கள் அலையும் போதெல்லாம் புத்தி எனும் தேரோட்டி இயக்க வேண்டும். சிந்தனை சரியாக அமைந்துவிட்டாலே பாதி வெற்றி. சுயமாக ஆர்வம் இருந்தாலேயொழிய, கேட்டும், பார்த்தும், பிறர் கூறும் நல்லுரையாலும் வந்துவிடக்கூடியதல்ல ஆன்மவிசாரம். ஆன்மதேடல் மட்டுமன்றி, மனிதனின் தனிபட்ட முயற்சி, அபிப்ராய பேதங்கள், வெற்றி-தோல்விகள், நல்ல சிந்தனைகள், நல்லன அல்லாத செயல்கள் என பலவற்றிற்கும் மனிதனின் தனிப்பட்ட குணாதிசயங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. தனக்குத் தானே நண்பன் தனக்குத் தானே அவன் பகைவனும் ஆகிறான். இன்னொருவனுக்கு நல்லதும் கெட்டதும், அறிவுரைகளின் பேரில் சொல்லி வருவதில்லை. பெரும்பாலும் சுயமாய் அமைவதே அனைத்தும்.

தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாய்ச் செய்வானும் தானே தான் தன்னைச்
சிறுவனா செய்வானும் தான்


தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்த்தலால்
தானே தனக்கு கரி


திருமூலரின் திருமந்திரம்.

March 08, 2010

இறை வழிபாடு - ஹிந்து மதம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2)

இப்படி இருக்க்க வேண்டும் இப்படி இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் நம் மதத்தில் (எல்லா மதங்களிலும்) நிறைய உண்டு. அவற்றையெல்லாம் கடை பிடிக்கிறோமா எனபதே கேள்விக்குறி. விஞ்ஞானத்தின அடிப்படையில் மட்டுமே நம்பிக்கை வளர்கிறது. மற்ற புரியாத அல்லது புரிந்து கொள்ள இஷ்டப்படாத விஷயங்களை புறம் தள்ளிவிடுகிறோம். அவற்றை பைத்தியக்காரத்தனம் என்றோ மூட நம்பிக்கை என்றோ முத்திரைக் குத்தி மூலையில் அமரச் செய்துவிடுகிறோம். அவற்றுக்கென சில புராணக் கதைகளும், சான்றுகளும், குறிப்புகளும் ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றன.

கோவில்களிக்குச் சென்றால் கூட இன்னென்ன முறையில் இப்படி நடக்க வேண்டும் என்ற நியதிகள் உண்டு. நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியெல்லாம் நமக்கு அடிப்படை அறிவை புகட்டியிருக்கிறார்கள்.


கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
________________________________________________


1. நீராடாமலும் கை கால்களை சுத்தி செய்யாமலும் சமயக்குறி இல்லாதும் செல்லக்கூடாது
2. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்
3. விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது
4. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக் கூடாது
5. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை பெருமாளுக்கு அர்பணிக்கக் கூடாது
6. நாராயண மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது
7. மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது
8. கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது
9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.
10. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.
11. தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.
12. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக் கூடாது.
13. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது.
14. ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும்.
15. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.


அதிர்ந்து நடத்தலே கூடாது என்று குறிப்பிட்டு, பிரதக்ஷணம் செய்து வலம் வரும் பொழுது எப்படி பவ்யமாக நடக்க வேண்டும் என்பதற்கு சான்றாக "நிறை மாத கர்பிணி ஒருத்தி தலையில் எண்ணைக் குடம் வைத்து, காலில் விலங்கு அணிந்திருந்தால்" எப்படி மெல்லமாக நடப்பாளோ அப்படி நடக்கவேண்டும் என்கின்றனர்। இவையெல்லாம் ஒருமித்த கருத்துடனும், மனத்துடனும் இறைவனை நினைவதற்காக சொல்லப்பட்டது. கடமையே என்று வேகமாக மனம் ஈடுபாடின்றி ஓடுவதால் பயனில்லை என்று எடுத்துக்காட்டவே இப்படிப்பட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கோவில் படியில் உட்கார்ந்த பிறகு வீடு திரும்ப வேண்டும் என்ற விதி முறை பலருக்கும் தெரிந்திருக்கும். சிவன் கோவிலுக்கு சென்றால், வழிபட்டு திரும்புகையில் சிறிது நேரம் உட்கார்ந்து வருவது ஏன்? மகாபலி போன்ற சிவ கணங்கள், கோவிலுக்கு வருபவர்களுக்கு துணையாக புறப்பட்டு வருகின்றனர். அவர்களை, கோவிலிலேயே இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அமர்வது; அத்துடன், சிவநாமம் சொல்ல வேண்டும் என்பதும் ஐதீகம். சிவ "ஆக்ஞ்ஜையை பரிபாலிப்பொராகிய நீங்கள் இனி சந்நிதி திரும்பலாம், நான் விடை பெற்றுக்கொள்கிறேன்" என்ற அர்த்தம் தொனிக்க மந்திரம் ஜபித்து பின் விடை பெற வேண்டும்.


கோவில்களின் ஸ்தல புராணம் அதன் பெருமையையும் சிறப்பையும் தனித்துவத்தையும் எடுத்துக்கூற வல்லது. புராதன கோவில்கள் பலவற்றிற்கும் சிறப்புமிக்க ஸ்தல புராணம் இருக்கிறது. ஸ்தல புராணம் உள்ள கோவில்களுக்கு விசேஷ பிரார்த்தனைக்காக செல்வதுண்டு. கிரஹ ஷாந்திக்கு சூர்யனார் கோவிலும் அந்தந்த க்ரஹங்களுக்கு தனிப்பட்ட கோவில்களும் நாம் கேள்விபட்டுள்ளோம். அவற்றில் சனிபகவானுக்காக ப்ரீதி ப்ரீதி செய்வதற்கு திருநள்ளாறு கோவில் பிரசித்தி பெற்றது. நள மஹராஜன் கலியினால் பீடிக்கப்பட்டு இங்கு வந்து வணங்கி நலம் கண்டதாய் சரித்திரம் உண்டு. இது சிவஸ்தலம் ஆகும். ஒரு முறை தேவேந்திரன் வாலாசுரனுடன் சண்டையிட்ட போது முசுகுந்தன் என்ற சக்கரவர்த்தியின் உதவியுடன் வாலாசுரனை வீழ்த்தி வெற்றியை நாடினான். அதற்குப் பரிசாக அவன் வணங்கும் சிவலிங்கத்தை கேட்கிறான் முசுகுந்தன். தேவேந்தரனும் தான் வணங்கும் சிவலிங்கத்தைப் போலவே ஆறு லிங்கம் தருவித்து கொடுத்துப் பார்க்கிறான். ஒவ்வொன்றை பரிசளிக்கும் போதும், இதுவல்ல நான் கேட்ட லிங்கம் என மறுத்துவிடுகிறான் முசுகுந்தன். வேறுவழியின்றி தேவேந்திரன் தான் வணங்கும் சிவலிங்கமே முசுகுந்தனுக்கு தரவேண்டியதாய்ப் போனது. அந்தச் சிவலிங்கம் இன்றும் திருவையாற்றில் உள்ளது. தருவித்து வழங்கிய மற்ற ஆறு லிங்கங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளது. அவற்றில் ஒன்று திருநள்ளாரில் உள்ளதாம்.

திருநள்ளாற்றுக் கோவிலின் குளத்தை மண்டைக் குளம் என்று கூறுகின்றனர். பொய்க் கணக்கு எழுதி பிடிப்பட்ட கணக்கன், பால் வினியோகிக்கும் எளிய இடையன் மேல் பழி சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறான். இடையனை சிறையில் அடைக்கின்றனர். அவன் கனவில் சிவபெருமான் தோன்றி, கணக்கனை கோவிலில் வந்து சத்தியம் செய்யச் சொல்கிறார். அவ்வண்ணமே கணக்கன் மறுதினம் பொய்யுரைத்ததும், சிவன் சூலாயுதத்தால் அவன் தலையை கொய்ய, மண்டை உருண்டோடுகிறது. அதற்கு வழிவிட்டு நந்தியே சற்றே விலகிக்கொள்கிறதாம். அந்த மண்டை விழுந்த இடம் மண்டைக் குளம் என்று வழங்கப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் சனிபகவானுக்கென தனி சந்நிதி இருக்கின்றது. வேறு கிரஹங்களுக்கு இல்லை. நளன் பூஜை செய்து தீபம் ஏற்றி வழிபட்ட இடமென சம்பந்தரும் தன் பாடலில் குறிப்பிட்டுள்ள பாடல் பெற்ற தளம்.

அந்தந்த க்ரஹங்களுக்கென நாயகர்களின் ப்ரீதி செய்தல் ஒருபுறம் இருந்தாலும், ஹனுமனை வேண்டினால் சனியின் பாதிப்பு மட்டுப்படும் என்ற கருத்தும் உண்டு. அவ்வாறே சங்கடம் நீங்க விநாயகனை வழிபடுதலும் பலர் செய்து வருகின்றனர். விக்னங்களை அறவே அறுப்பதால் விக்ன விநாயகன் என்று அவரை போற்றித் துதிக்கிறோம்.

ஒருமுறை விநாயகனின் பெருத்த வயிற்றை சந்திரன் கேலி செய்தான். கோபம் கொண்ட விநாயகன் அவன் மெருகும் அழகும் இனி தேய்ந்துப் போகக் கடவது என சபித்தார். மனம் வருந்தி சந்திரன் சதுர்த்தி அன்று விரதம் இருந்து தன் சங்கடத்தை போக்கிக்கொண்டதாகக் கூறுவர். சுக்லபட்ஷ சதுர்த்தியில் விரதம் இருந்து என்னை வழிபடுபவர்களின் கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கும் என திருவாய்மொழிந்தார்.இது நமக்குத் தெரிந்த சங்கட-ஹர (சங்கஷ்ட - ஹர) சதுர்த்தி கதை. கேள்விப்பட்ட கதையும் கூட.

சோ அவர்களின் விளக்கம் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. விநாயக சதுர்த்தி வளர்பிறை சதுர்த்தியில் வருவதால் தேய்பிறை சதுர்த்திக்குறிய தேவதை, தனது தினத்தையும் சிறப்புறச் செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொண்டதாம். விநாயகரும் இனி தேய்பிறை சதுர்த்தியில் முறையாய் பூஜை செய்து விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும் என்று அருள்மொழிந்தாராம்.

பல கதைகள் நமக்கு செவிவழிச் செல்வமாய் வந்தடைகிறது. சில கதைகள் புத்தகமார்கமாகவும் இன்றைக்கும் படித்து உணர்கிறோம். இனி வரும் நூற்றாண்டுகளில் எத்தனை பேர் இக்கதைகளை, மதக் கோட்பாடுகளை அதில் சொல்லப்பட்டிருக்கும் நன்மை தீமைகளை, ஏன் மந்திரங்களையும் கூட சரியாக ஒதப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. அதிக அளவில் வாழ்ந்துவந்த புரோஹிதர்கள் /சாஸ்த்ரிகள் குடும்பங்கள் இன்று க்ஷீணித்து விட்டது. இருக்கும் சிலரும் கூட தம் பிள்ளைகளை வேறு துறையில் முன்னேற விரும்பி அனுப்பிவைக்கிறார்கள். இத்துறையில் வருமானம் குறைந்து கொண்டே வருவதே அதற்குக் காரணம். வருமானம் மட்டுமின்றி மதிப்பும் மரியாதையும் கூட மட்டுப்பட்டுத் தான் வருகிறது. இத்தனை இக்கட்டுகளையும் தாண்டி இன்றைக்கும் இத்தொழிலை விட்டுவிடாமல் ஒரளவுக்கேனும் பராமரித்து வரும் புரோஹிதர்கள் பாராட்டுக்குறியவர்கள். கல்யாணம் முதல் கருமாதி வரை இவர்களின் சேவை தேவைப் படுகிறது.

March 04, 2010

சன்னியாசம் அவசியமா? (சோவின் - எங்கே பிராமணன் இரண்டாம் பாகம்)

பெற்றவர்களின் சம்மதம் பெற்று சன்னியாசம் கொள்வதே முறை என்றாலும், ஆதிஷங்கரரின் தாயார் உட்பட எவருமே மனம் விரும்பி, மகிழ்வுடன் விடைகொடுக்கவில்லை. பேருக்கு சம்மதம் சொன்னவர்களும், வற்புறுத்தலின் பேரில் சம்மதம் சொன்னவர்களுமே அதிகம். இவ்வண்ணம் பெற்றோரையெல்லாம் புண்படுத்தி, வருத்ததில் ஆழ்த்தியானும் ஞானத்தைப் பெற வேண்டுமா?

இக்கேள்வியை சற்றே வேறு விதமாய் ஆராயலாம். நம் பிள்ளைகளுக்கு ஒரு துறையில் பிடிப்போ, ஆர்வமோ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இன்றைக்கெல்லாம் அவர்களின் உரிமையை நாம் தடுக்கிறோமா? அல்லது வெளிநாடு சென்று படித்துத் திரும்பவோ, அங்கேயே வேற்றுநாட்டு பிரஜையாகிவிட்டு தம் வருமானத்தையும், வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ நாம் சுதந்திரத்தை பறிக்கிறோமா? குறிப்பிட்ட ஒருவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதன் படி செல்லுதல் அவனின் தனிப்பட்ட உரிமை. அதைத் தடுக்க பெற்றோரே இன்று முன்வருவதில்லை. உலகாய விஷயங்களுக்கும் கல்விக்குமே இப்படியென்றால், உயர்ந்த படிப்பை, ஞானத்தை தேடிப் போகிற ஒருவனுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறதல்லவா?

பெற்ற மனம் தவித்தாலும், அழுதாலும் கூட தனிப்பட்ட இன்னொருவனின் ஆன்ம தாகத்தை, பிறப்பின் நோக்கத்தை, அதன் தொடர்புடைய தேடலை தடை போடுவது என்பது பெரும்பாலோரும் செய்யமாட்டாத ஒன்று. பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதும் ஞானவழி முயல்வதும் உயர்ந்த கடமைகள். அவற்றை தடைபோடுவதோ ஆன்ம தாகத்திற்கு தடை விதிப்பதோ, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை கைகளால் தடுப்பது போல.

தான் கண்டுணர்ந்த ஞானத்தை யக்ஞவல்க்யரிடம் தெளிய முற்படும் போது, 'மாதா பிதா குரு'வின் ஆசியுடன் என் பதிலை கூறத்துவங்குகிறேன் என்கிறார் ஜனகர். ஆகவே மூவரின் ஆசியும் தேவையானது. மூவரின் ஆசியுடன் இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும். ஞானத்தின் தேடலுக்கு வீடோ, வீட்டிலிருக்கும் நபர்களோ, உறவுகளோ வழி-உபயம், விடை சொல்ல இயலாது. அதற்கு குரு வேண்டும்.

ஆன்ம வழி தொடரும் சீடனுக்கு பிக்ஷை கொடுப்பவர்கள் தாய்மார்கள். குரு தந்தை, சிஷ்யர்கள் பிள்ளைகள், அவன் அனுபவிக்கும் ஏகாந்த சுகமே இல்லறத் துணை. ஞானப் பாதையில் போகின்றவனுக்கு பந்தமும் சொந்தமும் பற்றும், பழுத்த பழம் மரத்தில் தங்காது நிலத்தில் விழுவது போல் அறுத்துக் கொண்டு விழுந்துவிடும். தேசிகனாகிய குருவே- திசையைக் காட்டுபவரே ஷரணம் எனச் செல்கிறான்.