March 23, 2010

சோவின் எங்கே பிராமணன் - 2 (யோக முயற்சி)

யோக முயற்சி
_____________


உலகில் ஒருவனைப்போல் இன்னொருவன் இருப்பதில்லை, ஒவ்வொருவரின் நம்பிக்கை, இலக்கு, ஆசை அபிலாஷைகளும் தனித்துவம் வாய்ந்தவை. இலக்குகள் வேறாக இருப்பதாலேயே அவரவர்களின் தனிப்பட்ட முயற்சியும் வெவ்வேறானவை. அதற்கென அவர்கள் மெனகெடும் விதமும் சிரத்தையும் வித்தியாசப்படும். ஒரே ஒரு அப்துல் கலாம், ஒரே ஒரு பில்கேட்ஸ் என முயற்சிப் படிகளில் ஏறி பதக்கம் பெற்றோரை சுட்டிக் காட்டிவிட முடியும். கோடானகோடி ஜனத்தொகையில் வெகு சொற்பம் மனிதர்கள் பெரிய இலட்சியத்திற்காக செயல்படுகின்றனர். அவற்றுள் வெகு செலரே லக்ஷியத்தை எட்டிப் பிடிக்கின்றனர். அவர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே லக்ஷியத்தின் உச்சிக் கொம்பை எட்டிப் பிடிக்கிறார்கள். சாமான்ய நடப்புகளுக்கே இப்படியெனில், வாழ்வில் மிகப்பெரிய, உயர்ந்த லக்ஷியமாம், இறையை உணர்தல் என்பது எவ்வளவு கடினம் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்கு முயற்சிப்பவர்களே சொற்பம், வைராக்கியத்துடன் மேல் நடந்து செல்பவர்கள் மிகக் குறைவு அப்படி தொடர்ந்து தேடுபவர்களிலும் எவனோ ஒருவனே எட்டிப் பிடிக்கிறான். இதனை பகவான் க்ருஷ்ணன் கீதையில் குறிப்பிடுகிறான்.

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கஸ்சித் யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத:


ஆயிரக்கணக்கான மனிதர்களில் எவனோ ஒருவன் முயல்கிறான். அப்படி சித்தி அல்லது முழுமையைப் பெற முயற்சிப்பவர்களுள் எவனோ ஒருவனே என்னைப் பற்றிய உண்மை உணர்ந்தவன் ஆகிறான்.

எல்லோருக்கும் எல்லாமும் சித்தியடைவதில்லை. அதன் பொருட்டு உழைக்க, ஈடுபட மன/உடல் முதிர்ச்சியும் இடம் கொடுப்பதில்லை. ஒரு துறைகளில் வல்லுனர்களாய் இருப்பவர்கள், இன்னொன்றின் மேதாவிலாசத்திற்காக, சிரத்தையுடன் உழைப்பதும் வெகு அபூர்வம். ஆயிரமாயிரம் மனிதர்களில் இறைவனை நாடும் பாதை எவனோ ஒருவனே தேர்ந்தெடுக்கிறான். அப்படிப்பட்ட கடினமான பாதையில் ஒருவன் மனம் ஒன்றி ஈடுபடுவானேயானால், அவன் இலட்சியத்தை எட்டிப் பிடித்தாலும், அல்லது கை நழுவவிட்டாலும் கூட "முயற்சித்த" ஒரு காரணத்திற்காகவே உயர்வு பெறுவான். முயல்வதே வெற்றியின் முதல் படி, வெற்றிக்கு அடையாளம், தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், இவ்வாறெல்லாம் நடைமுறை வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சிறிய லக்ஷியங்களுக்கே சொல்லப்படுகிற விஷயம். இதுவே இறைவனைத் தேடும் மாபெரும் முயற்சிக்கும் உரித்தாகுகிறது.

கீதையில் அர்ஜுனைன் சந்தேகமும் இதுவே. 'ஒருவன் யோக முயற்சியில் ஈடுபடுகிறான். கர்மம் அல்லாமல் யோகம் பாதையை அவன் மனம் நாடுகிறது. அவன் சிரத்தையோடு துவங்குகிறான். அப்படி ஈடுபடுபவனுக்கு, யோகம் சித்திக்காமல் ஆகிவிடுமேயானால், அவன் யோக மார்கத்திலும் நில்லாமல், கர்ம மார்கத்தை விட்டும் விலகி இருக்க நேரிடுகிறது. அப்படிப்பட்டவனுக்கு என்ன கதி ஏற்படும்? சிதறிய மேகம் போல் சிதறுண்டு போகுமோ அவன் கதி?' என்று வினவுகிறான்.

கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நச்யதி।
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி॥


என்கிறது ஸ்லோகம்.

அதற்கு பகவான்,

பார்த்த நைவேஹநாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே
நஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி
ப்ராப்ய புண்யக்ருதம் லோகானுஷித்வா சாஸ்வதீ: ஸமா:
சுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே


நல்லது செய்யும் அவன் துன்பம் அடையவதில்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுக்கு அழிவில்லை. யோகத்தினின்று தவறியவன் நல்ல உலகத்தை அடைந்து பின் நல்ல அறம் வாழும் மனிதர்களின் குலத்தில் பிறப்பெடுப்பான். என்று தெளிவிக்கிறார். முயன்றாலே அதற்கு அப்பேர்ப்ட்ட கதி உண்டாம். முயற்சியில் வெற்றியோ தோல்வியோ பற்றி சிந்திக்காது, சிரத்தையுடன் முயன்றாலே போதுமானது என திருவாய்மொழிகிறார்.

சிரத்தையுடன் எதையுமே செய்ய வேண்டுமென்றால் அலைபாயும் மனதை கட்டுக்குள் வைக்க வேண்டும். இந்திரியங்களை குதிரைகளுடன் ஒப்பிட்டால் அங்கு மனதையே கடிவாளாமிட்டு இந்திரியங்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். நசிகேதஸிடம் யமன் கூறும் உபதேசத்தில், உடம்பைக் தேருக்கு ஒப்பிடுகிறார். அதை புத்தி எனும் தேரோட்டி, மனம் என்ற கடிவாளம் கொண்டு, இந்தியங்களாகிய குதிரைகளை, உலக நடைமுறை விஷயங்கள் நிறைந்துள்ள பாதையில் சரிவர இயக்க வேண்டும். கடிவாளாமில்லாத குதிரை எப்படி தறிகெட்டு ஓடுமோ, அப்படி ஓடக்கூடிய சுபாவம் வாய்ந்தது இந்திரயங்கள். இந்திரியங்கள் அலையும் போதெல்லாம் புத்தி எனும் தேரோட்டி இயக்க வேண்டும். சிந்தனை சரியாக அமைந்துவிட்டாலே பாதி வெற்றி. சுயமாக ஆர்வம் இருந்தாலேயொழிய, கேட்டும், பார்த்தும், பிறர் கூறும் நல்லுரையாலும் வந்துவிடக்கூடியதல்ல ஆன்மவிசாரம். ஆன்மதேடல் மட்டுமன்றி, மனிதனின் தனிபட்ட முயற்சி, அபிப்ராய பேதங்கள், வெற்றி-தோல்விகள், நல்ல சிந்தனைகள், நல்லன அல்லாத செயல்கள் என பலவற்றிற்கும் மனிதனின் தனிப்பட்ட குணாதிசயங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. தனக்குத் தானே நண்பன் தனக்குத் தானே அவன் பகைவனும் ஆகிறான். இன்னொருவனுக்கு நல்லதும் கெட்டதும், அறிவுரைகளின் பேரில் சொல்லி வருவதில்லை. பெரும்பாலும் சுயமாய் அமைவதே அனைத்தும்.

தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாய்ச் செய்வானும் தானே தான் தன்னைச்
சிறுவனா செய்வானும் தான்


தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்த்தலால்
தானே தனக்கு கரி


திருமூலரின் திருமந்திரம்.

7 comments:

 1. அந்த ஆயிரத்தில ஒருவன் ஒரு வேளை அஷோக்கா இருக்குமோ...?

  ReplyDelete
 2. :D ashok....இருக்கலாம் யாரு கண்டா :D

  ReplyDelete
 3. //தனக்குத் தானே நண்பன் தனக்குத் தானே அவன் பகைவனும் ஆகிறான். இன்னொருவனுக்கு நல்லதும் கெட்டதும், அறிவுரைகளின் பேரில் சொல்லி வருவதில்லை. பெரும்பாலும் சுயமாய் அமைவதே அனைத்தும்.//

  ********

  திருமூலரின் திருமந்திரம் மிக மிக நன்று...

  நன்றி ஷக்திப்ரபா...

  ReplyDelete
 4. இந்தப் பகுதி, குறிப்பாக திருமந்திரப் பாக்களை இறுதியில் கொண்டு நிறைவு செய்திருந்தமை, ஒரு முழுமையைக் கொடுத்த நிறைவைக் கொடுத்தது.
  சோவையும் விட்டு விடாமல், உங்கள் கருத்துக்களையும் சொல்லி, ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் சொல்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். எடுத்துக்கொண்ட பணியைச் சிறப்பாகச் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. // முயன்றாலே அதற்கு அப்பேர்ப்ட்ட கதி உண்டாம். முயற்சியில் வெற்றியோ தோல்வியோ பற்றி சிந்திக்காது, சிரத்தையுடன் முயன்றாலே போதுமானது // என்ன ஒரு தெளிவான கருத்து ஸ்ரீ க்ருஷ்ணரால் போதிக்கப்பட்டிருக்கிறது இல்லையா! கண்ணன் உலகின் முதல் தத்துவ ஞானி. கண்ணன் உலகின் தலை சிறந்த மனோவியல் நிபுணன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  anbudan
  ram

  www.hayyram.blogspot.com

  ReplyDelete
 6. நன்றி ராம் :)

  ReplyDelete