July 06, 2015

கோளறு பதிகம் - விளக்கத்துடன்.

கோளறு பதிகம் திருஞான சம்பந்தரால் அருளப்பட்டது. ஜைன மதம் தழைத்தோங்கிய காலகட்டத்தில், பாண்டிய நாட்டில் அழைப்பிற்கிணங்கி, சைவ மதக் கோட்பாடுகளை தழைக்க விருப்பம் கொள்கிறார் சம்பந்தர். உடன் இருக்கும் அப்பர் ஜைன மதத்தவர்களால் ஏதேனும் தீங்கு நேரிடுமோ என அஞ்சுகையில், இறைவன் ஈசனின் துணை இருப்பின், சமணரும், பௌத்தரும், நாளும் கோளும் இன்ன பிறவும் என் செய்யும்! அவை நல்லனவையே செய்யும் என்று பொருள்படும் "கோளறு பதிகத்தை அருளிச் செய்தார். 

கோளறு பதிகம் படிப்பதால், நவகிரஹத்தால் உண்டாகும்  தோஷங்களும், தீவினைப்பயன்கள் குறையும் என்பது திண்ணம். 

கோளறு பதிகத்துடன், என்னால் இயன்ற அதன் விளக்கமும் இணைத்துள்ளேன். 

***************************
கோளறு பதிகம் 
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


மூங்கில் தோளுடையாளை தன் பாகத்தின் வைத்திருப்பவனும், ஆலகால விஷம் அருந்திய கழுத்தில் கொண்டவனும் மிக நல்ல வீணையிசையை எழுப்புபவனும் குறைவில்லா திங்களையும் கங்கா தேவியையும் தன் முடி மேல் அணிந்தவனும் ஆகிய எம்பெருமான் என் உள்ளம் புகுந்ததால்......

பாம்புடன் சேர்த்த நவக்ரஹங்களும் ஆசு/குற்றம் அறுப்பவையாகி சிவனின் அடியவர்க்கு அவை நல்லதே செய்யும்.என்போடு கொம்போ டாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


எலும்பும் பன்றிக்கொம்பும், ஆமையோடும் மாலைகளாய் மார்ப்பை அலங்கரிக்க, பொன்னைப்போல் மின்னும் ஊமத்தமலரின் மாலை சூடி, புனித கங்கையை முடிமேல் கொண்டு, எருதேறும் அருள்பவனான ஈசன், என் உள்ளத்தில் எழுந்தருளியிருப்பதனால்....நட்சத்திர வரிசைகளில் சுப பலன்களை எளிதில் வழங்காத சிலவும், இன்ன பிற நாட்களும் கூட அன்போடு இயைந்து மிக நல்லனவற்றையே செய்பவயாக அடியவர்க்கு திகழும்.உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் களைய தூர்தி செயமாது பூமி
திசைதெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேபவளத்தை ஒத்த ஒளிர் திருமேனியுடைய எம்பெருமான், ஒளிபொருந்திய நீரணிந்து, கொன்றை மலர்களும், மதியும் சூடி, உமையயுடன் வெள்ளை எருதின் மேலேறி என் உள்ளம் புகுந்ததனால்.....முப்பெரும் தேவியராம், கலைமளும், திருமகளும் துர்கையும், அஷ்ட திசைகளை காக்கும் தெய்வங்களும், இன்ன பிற தெய்வங்களும், சிவனடியார்களுக்கு மிக மிக நல்லனவற்றையே வழங்கும்.


மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேபிறைநிலாவை ஒத்த நெற்றியையுடைய அன்னை ஷக்தியோடு வடப்பக்கமாய் அமர்ந்து (தென் திசையை நோக்கியவாறு) வேதங்கள் ஓதும் எங்கள் பரமன் (தட்சிணாமூர்த்தி வடிவில் ஈசன் தென்திசை நோக்கி அமர்ந்து மௌன மொழியில் ஞான உபதேசம் செய்கிறார்), கங்கையும் கொன்றை மாலையும் தன் சடைமுடிமேல் அணிந்து என் உள்ளம் புகுந்ததனால்.....
கொடு நோய்க்கொண்டு வருத்தி, உயிர்பறிக்கும் யமனும், யமதூதர்களும், நெருப்பும், உடலைப் பீடிக்கும் இன்னபிற நோய்களும் கூட அதி நல்ல குணம் கொண்டவையாய் ஈசனின் அடியவர்க்கு விளங்கும்.


நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேதேவாசுரர்களை ரக்‌ஷித்து பாற்கடல் நஞ்சை கருணையின் பால் உண்டு, நஞ்சை கழுத்தில் ஒரு அணிகலன் போல் அணிந்த எம் தந்தை, அருளையும் அன்பையும் பொழியும் அழகிய பார்வதியோடு எருதின் மேல் ஏறி வரும் எங்கள் இறைவன், உறங்கும் நேரத்து இருளிளையொத்த நிறங்கொண்ட வன்னி மலரையும் கொன்றையையும் தம் முடிமேல் அணிந்து என் உள்ளம் புகுந்ததனால்......
வெம்மையும், கடுங்குணமும் கொண்ட அசுரரும், உருமும் இடியும், மின்னலும், இன்னும் சக்தி பொருந்திய பூதங்களும் அஞ்சி, அவை நல்லனவற்றையே வழங்கும் தன்மையுடையதாக சிவனடியார்க்கு விளங்கும்.
(குறிப்பு: இங்கு பூதங்கள் ஐம்பூதத்தை குறிப்பிடுபவை)வாள்வரி அதல தாடை வரிகோவணத்தார்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேகூர்வாள் போன்ற வரிகளைக் கொண்ட புலித்தோலையை தன் இடையாடையாகவும் மேலாடையாகவும் அணிந்து, அன்பு கொண்ட உமையுடன், தாமரை, வன்னி கொன்ற மலர்களையும் கங்கையையும் திருமுடி மேல் சூடி என் உள்ளம் குடிகொண்டதனால்...
கொடுங்குணம் கொண்ட புலியும், காட்டு யானையும், பன்றியும், கொடு நாகமும், கரடியும் ஆளை கொல்லத் துணியும் சிங்கமும் கூட கேடு எதுவும் செய்யாத மிக நல்லவைகளாகவே அடியவர்க்கு திகழும்.

செப்பில முலைநன் மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேவர்ணிப்பதற்கு இயலாத அழகிய மார்பகத்தை உடைய மங்கையான உமையவள் திருமேனியின் ஒரு பாகத்தில் எழுந்தருளியிருக்க எருதில் ஏறுகின்றவரும், பக்தர்களை தம் செல்வமாய் உடையவரும், ஒப்புமையில்லாத வெண்மதியும், கங்கை ஜலமும் (அப்பு = நீர்) தன் திருமுடி மேல் தாங்கியபடி என் உள்ளம் புகுந்ததனால்....
வெப்பத்தினாலும் குளிராலும் வரும் காய்ச்சல், வாதம், பித்தம், முதலிய எவ்வித நோய்களும் வினைபயனாக வந்து வருத்தாமல், அவ்வினைகளும் கூட நல்லவைகளாக (அடியார்களை விட்டகன்று) அடியவர்களுக்கு விளங்கும்.


வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து 
மடவாள் தனோடும் உடனாய் 
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால் 
ஏழ்கடல் சூழிலங்கை அரயன் றனோடும்
இடரான வந்து நலியா 
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவேகாமத்தை தூண்டுபவனாகிய மன்மதனை தன் யோகவலிமையால் நெற்றிக் கண் திறந்து சாம்பலாக்கிய பார்வதி மணாளன், அழகிய அன்னையுடன் வெள்ளெருதின் மேல் அமர்ந்து, வான்மதியும் வன்னி மலரும், கொன்றையும் சூடி, என் உள்ளம் புகுந்துவிட்டான்....
ஆகையால், ஏழ்கடல் சூழும் லங்காபுரியின் மன்னன் இராவணன் முதலிய அரக்கர்கள் நம்மை வருத்தாதிருப்பர். ஆழ்கடலும், அவற்றுள் வாழ் ஜீவன்களும் சிவனைத் துதிப்போர்க்கு கேடு செய்யாதிருந்து, மிக நல்லனவையாய் விளங்கும்.


பலபல வேடமாகும் பரன் நாரி பாகன் 
பசுவேறும் எங்கள் பரமன் 
சலமாளோடெருக்கு முடிமேல் அணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் 
வருகால மான பலவும் 
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவேபக்தர்களைக் காக்க பலவடிவில்(வேடத்தில்) தோன்றி அருள் பாலிக்கும் பரம்பொருள், மங்கையை தன் பாகத்தில் கொண்டவன், பசு(எருது) ஏறும் பரமன், ஜல மகளான ங்கையையும், எருக்கம் மலரும், முடிமேல் அணிந்து என் உள்ளம் புகுந்தனன்... ஆகையால்
மலர்மீதமர்ந்த பிரம்மனு, திருமாலும், வேதங்களும், தேவர்களும், காலமும், இன்னும் பலரும், அலைகடலுள் உரையும் மேருமலையைப் போல் நற்பலன்ங்களை வழங்கி
நல்லவர்களாகவே சிவனடியர்க்கு விளங்குவர்.


கொத்தலர் குழலி யோடு விசயற்கு நல்கு 
குணமாய வேடவிகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் 
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவேமணம் கொண்ட கொத்தான மலர்களை எழில் கூந்தலில் கொண்ட தேவியுடன், அர்ஜுனனுக்கு அருள் பாலிக்க தன் இறைநிலை கொண்ட உருவை விடுத்து, வேடன் உருவில் தோன்றியருளியவன், ஊமத்தமும், வெண்மதியையும் நாகத்தையும் முடிமேல் சூடி, என் உள்ளம் புகுந்தனன், ஆகையால்....
பௌத்தமதத்தை தழுவிய துறவிகளும், சமணர்களும், வாதப்போரில் வென்று தம்மை நிலைநாட்ட இறைவனின் திருநீற்றின் பெருமையே போதுமானது. உறுதியானது. அது போன்ற எதிர்ப்பும் வாதமும் அவர்களுக்கு நல்லவையாகவே முடியும்.


தேனமர் பொழில்கொள் ஆளை விளை செந்நெல் துன்னி 
வளர்செம்பொன் எங்கும் நிகழ 
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் 
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய் 
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் 
அரசாள்வர் ஆணை நமதே


தென் கொண்ட மலர்களை உடைய சொலைகள், கரும்பு விளைந்த பூமியில் ஆலைகளைஉம், செம்மையான நெல் எங்கும் விளைந்து குதிர்ந்துள்ளதால் பொன்னைப் போல் திகழ்ந்திருக்கும் இப்பூமி, பிரம்மதேவன் முதல் பல தேவர்களும் தங்கும் இந்த செழித்த பூமியான சீர்காழியில்....
வேதஞானமும் இறையருளும் நிரம்பப் பெற்ற திருஞான சம்பந்தர், வினைப் பயனை நல்கும் கோள்கள் நாட்களும் இன்ன பிறவும், அடியவர்களை வருத்தாதிருப்பர். இந்த சொல்மாலையை ஓதுகின்றோர் வானுலகம் அடைந்து உயர்கதி அடைவது திண்ணம்.

2 comments:

  1. பொருளோடு விளக்கி இருப்பது பாராட்டுக்குரியது. மயிலை கபாலீசுவரன் கோவிலில் நவக் கிரகங்கள் இருக்கும் இடத்தில் இவை பதியப்பட்டிருப்பதாக நினைவு. நவக்கிரகங்களைச் சுற்றும்போது படிக்கலாம் வாழ்த்துக்கள்

    ReplyDelete