December 18, 2008

திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -1)

முன் குறிப்பு: இரண்டு வருடங்களுக்கு முன் நான் குழுமம் ஒன்றில் உறுப்பினராகியிருந்தேன். பல இடுகைகளை படித்து, மறுமொழி இடுவதே எனக்கு பிடித்தமான வேலை என்றாலும், அவ்வப்பொழுது கிறுக்கியவற்றையும் ஒரே கூரையின் கீழ் இதே வலைப்பதிவில் கோர்த்துவிட எண்ணியிருக்கிறேன். "பழைய கள்ளு" என்று தலைப்பினுள் இந்த பதிவுகளை அடைத்து வைக்க முற்பட்டிருக்கிறேன். முன்பே இதை படித்திருப்பவர்கள் தயை கூர்ந்து மன்னிக்க.
*************************************************************************************

முன்னுரை

முன்னுரை என்றாலே தலைப்பைப் பற்றியதாக இருக்கவேண்டும் என்ற தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள. உதாரணத்திற்கு என்னுடைய முன்னுரை, எங்கள் வீட்டு தச்சனிடமிருந்தும் துவங்கலாம. துவங்குகிறது. திருவண்ணாமலைக்கும் தச்சனுக்கும் என்ன சம்மந்தம்? 'முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் என்ன சம்மந்தம்' என்ற பழங்கால வழக்குமொழி உங்கள் நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறது. வழக்குமொழிக்கு பதிலளிக்க முடியாவிட்டாலும், தச்சனுக்கும் திருவண்ணாமலைக்கும் என்ன சம்மந்தம் என்று இன்னும் சில வரிகளைப் படித்தால் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்கென்ன கவலை, வளவளவென்று கழுத்தறுக்காமல் திருவண்ணாமலையைப் பற்றி என்ன கூற விரும்புகிறாயோ அதை மட்டும் சொல், என்று தீவிர பிடிவாதத்துடன் இருப்பவர்கள், முன்னுரையை தாண்டிக் குதித்து, அடுத்துவரும் 'பயணம்' பத்தியை ஓரமாய் ஒதுக்கி, 'திருவண்ணாமலை' என்ற தலைப்புக்கு, ட்ரிபிள் பிரமோஷன் வாங்கிக்கொண்டு நுழைந்துவிடுங்கள்.

படிப்படியாக, என்னுடன் கூட வரவிரும்புபவர்களுக்கு சில முக்கிய விளக்கங்க. அடிக்கடி 'ஸ்ரீதர்' என்று இந்தக் கட்டுரையில் வரும் நபருடனும், அவரின் புதல்வியுடனும் நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். ஸ்ரீதருடன் நீ ஏன் தனியாகப் பயணம் மேற்கொண்டாய் என்ற வீண் மன உளைச்சலுக்கு உள்ளாகாதீர்கள். ஏனெனில், இக்கட்டுரை எழுதும் நான் ஸ்ரீதரின் தர்மபத்தினி.

ஒரு சுபயோக சுபதினத்தில், ஸ்ரீதர் தன் வீட்டை, சிறிதே மாற்றியமைக்கத் தீர்மானித்தார். இதனால் வந்தது வினை. முழு வீட்டையும் தச்சன் தன்னுடைய ஆட்களுடன் ஆக்ரமித்துக் கொண்டு, விடாபிடியாய், வேலையைத் தொடர்ந்தார். ஒரே வாரத்தில் முடிந்து விடுவதாய் வாக்களித்த வேலை பதினைந்து நாட்களாகியும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீதருக்கு, தான் இளிச்சவாயனா என்ற எண்ணம் நாளுக்கு நாள் மேலிட, தச்சனை ஒரு நாள் தைரியமாய் எதிர்த்துக் கேட்டுவிட்டார். தச்சனும் மனதிற்குள் சிரித்துக் கொண்டாலும், புறத்தே சாதுவாய் வேடமிட்டு, மன்னிப்புக் கோரினார்। பின் மஹா உத்தமமான யோசனை ஒன்றையும் கூறினார்। "ஐயா, நீங்கள் உங்கள் குடும்ப சகிதம் எங்காவது வெளியூர் சென்று வந்தால் ஒரு மூன்றே நாளில் ராப்பகலாய் உழைத்து வேலையை முடித்துக் கொடுத்துவிடுகிறோம்। உங்கள் துணைவிக்கோ, மகளுக்கோ தூசியால் ஊறும் விளையாது" என்று திருவாய்மொழிந்தார்।வெளியூர் செல்லும் அளவுக்கு விடுப்பெடுக்க நான் ப்யூன் வேலையில் இல்லை, என்று ஸ்ரீதர் அலட்டிக்கொண்டாலும், என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டதால், சதித்திட்டம் தீட்டி, இரண்டு வருடமாய் பெங்களூரை விட்டகலாத ஸ்ரீதரை, எப்படியேனும் விடுப்பு எடுக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். இரவு தூங்கப் போகும் முன், சாதுவாய் முகத்தை முயற்சி செய்து மாற்றியமைத்துக் கொண்டு, "உங்களின் வேலையோ நாளுக்கு நாள் மிகுந்த மனஉளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது. இதில் மாட்டிக்கொண்டு, தூண்டில் மீன் போல் தவிக்கிறீர்கள், சற்றே ஓய்வைத் தேடி புறப்படுவோம்" என்றெல்லாம் வார்த்தை ஜாலத்தால் அவரை சம்மதிக்க வைத்தேன். "எங்கு செல்லலாம் என்ற கேள்விக்கு இடமே இல்லை. தற்போதைய சூழ்நிலையில் உங்களால் சுற்றுப் பயணம் செய்ய இயலாது, மிகவும் சோர்ந்திருக்கிறீர்கள். புத்துணர்ச்சியூட்டும் ஆன்மீகப் பயணமே சிறந்தது" என நெடுநாள் ஆசையை நிறைவேற்றும் பணியில் தீவிரமாய் இறங்கினேன்.திருவண்ணாமலைக்கு, நினைத்தவுடன் செல்ல முடியாது. கடவுளே கூப்பிட்டால் தான் நம்மால் அங்கு செல்ல இயலும் என்று யாரோ ஆத்திகர் சொன்னது நினைவில் வந்தது. என்னைப் பொருத்த வரை நான் இன்னும் முழுமையான ஆத்திகவாதி இல்லை என்று சொன்னால் அது பொய்யில்லை. இதனால் அக்கூற்றின் மீது பெருமதிப்பேதும் வைத்திருக்கவில்லை. எனினும் மஹான்கள், சித்தர்கள் பலர் வாழ்ந்த இடம். வாழும் இடம். ரமணாஸ்ரமத்தில் தங்க வேண்டும் என்பது நீண்ட நாள் அவா. பயணம் செல்ல ஒருவழியாய் முடிவானது. இது தான் தச்சன் எங்களை திருவண்ணாமலைக்கு துரத்திய கதையின் சுருக்கம்.

பயணம்

அதென்னவோ பயணத்திற்கு முன்பு எப்பொழுதுமே ஒரு இனம்புரியா ஆனந்தம் சூழ்வதுண்டு. இது என்னைப் போல், பயண வெறியர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. பலரும் அனுபவித்திருப்பது. அன்று காலையிலிருந்து நான் சாத்வீக மனநிலையில் சாந்தமாய் இருந்தேன் என்றால் அது மிகையில்லை. பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை கிட்டத்தட்ட 180 கிமி என்பதால் ஸ்ரீதர் குடும்ப சகிதமாய் காரிலேயே பயணிக்க தீர்மானித்திருந்தார். பயணத்தின் போது பாட்டுக் கேட்டுக்கொண்டு போவதும், கூடவே சேர்ந்து உரத்த குரலில் பாடிக்கொண்டு போவதற்கும் ஈடு இணை உலகில் இல்லை. ராஜ்கபூரின் பாடல்கள், சென்ற ஆண்டின் சிறந்த இருபது ஹிந்திப் பாடல்கள், அலைப்பாயுதே, இளையராஜா ஹிட்ஸ், இவற்றுடன், சுவாமி சுகபோதாநந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!'. இவற்றிற்கெல்லாம் ஒரு தனிப்பையே வேண்டியிருந்தது. 'சுகராகம் சோகந்தானே' என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. 'தர்த் பரி கீத்' என்ற தொகுப்பே நான் எல்லா பயணத்திற்கும் எடுத்துச் செல்வேன். இம்முறை, ஆஸ்ரமத்திற்கு செல்வதால், மூக்கை சிந்தியபடி அழாமல் செல்ல வேண்டுமே, என்று பிரயத்தனப்பட்டு, அந்தத் தொகுப்பை விலக்கி வைத்தேன்.என் பெண்ணும் நானுமாய் ஸ்ரீதர் அலுவலகத்திற்கு சுமார் நாலு மணிக்குச் சென்றோம். நான் அலுவலகத்தினுள் நுழைந்து குறுக்கும் நெடுக்கும் நடந்தபடியிருந்ததால், வேறு வழியின்றி எல்லோருமாய் ஸ்ரீதரை அரைமணி முன்பே விரட்டிவிட்டனர். என் பெண்ணும் 'அப்பா வேணும்' என்று அழுது, என் பரிபூரண ஆசி பெற்றாள்.நாலரை மணிநேரம் பிடிக்கலாம் என்று நண்பர்கள் கூறியிருந்தனர். இணையத்தின் வழியே ரமணாஸ்ரமத்தில் அறைக்கு ஏற்பாடு செய்திருந்தேன். மறுநாளே அனுமதி கிடைத்திருந்தபடியால் முதல் ஒரு நாள் ஏதேனும் ஹோட்டலில் தங்கிவிட தீர்மானித்திருந்தோம்.

எத்தனையோ பேர் பாதையின் அழகை எழுதியே பயணக் கட்டுரையை அழகாய் வரைந்துவிடுகின்றனர். இதே சரக்கை வைத்தே நாமும் ஒப்பேற்றக் கூடாது என்று தீர்மானித்திருந்தாலும், சிறிதேனும் இதைப் பற்றி எழுதாமல் இருக்க முடிவதில்லை। பெங்களூரிலிருந்து ஓசூர் க்ருஷ்ணகிரி வழியே உத்தாங்கரை, செங்கம் என்று தொடர்ந்து, இறுதியில் திருவண்ணாமலை அடையலாம்। பெங்களூரிலிருந்து க்ருஷ்ணகிரி வரை தமிழ் நாடு அரசு பாதையை நன்கு அமைத்திருக்கிறது। நான்குவழிப் பாதையாய் குண்டு குழியின்றி சுகமாய் பயணிக்கலாம்। இந்தப் பாதை வழியே சில இடங்களில் ஏற்ற இறக்கங்களுடன் செல்லும் பொழுது, இருபக்கமும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை, வயல்களும், தோப்பும், சிறிய மடுக்களும் தென்பட, நடுவில் நீண்டு அகண்ட நான்கு வழிப் பாதை ஏறி இறங்குவது ஓவியக் காட்சி போல் இருந்தது। இயற்கை நடுவே, மனிதனின் கைவண்ணத்தைப் பார்ப்பது, இயற்கையை மனிதன் எத்தனை வென்றிருக்கிறான், அல்லது வெல்ல முயன்றிருக்கிறான் என்று எண்ணம் மேலிடச் செய்கிறது, இதனாலேயே சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறதே என்ற வருத்தமும் வரச் செய்கிறது। கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை।க்ருஷ்ணகிரிக்குப் பிறகு, ஊத்தாங்கரை, செங்கம் பாதைகள் காட்டுவழிப்பாதைகள். எனினும் பாதைகள் சிறப்பாக அமைக்கபட்டிருப்பதால், பயண சிரமமோ, ஓட்டும் சிரமமோ தெரியவில்லை. காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கையில் நானே காற்றாகி, மேலே பறப்பது போன்ற பிரமை. காட்டுவழிகளில் செதுக்கப்பட்ட மலைகளில் பக்கவாட்டு தரிசனம், எகிப்து நாட்டின் பிரமிட்டையும் அதில் வரைந்த முக வெட்டுக்களையும் நினைவூட்டியது.சுகபோதாநந்தாவை கேட்கலாம் என்ற ஆசை எனக்கு மேலிட்டாலும், 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரியும் வரம் கொடுக்க வேணும்' என்பது போல், ஸ்ரீதர், வண்டி ஓட்டும் பொழுது 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' என்றால் மனம் கேட்காது என்று வாதிட்டு இறுதியில் பாட்டு கேட்டுக்கொண்டு பயணித்தோம். கூடவே நிறைய இடங்களில் சுற்றி யாரும் இல்லாததால் தொண்டை கிழிய கத்திப் பாடி, உலகம் மறந்த நிலையில் இன்பத்தில் துய்த்தேன்.

திருவண்ணாமலையை அடைந்த பொழுது இரவு மணி எட்டரை. திருவண்ணாமலை ஒரு பெரிய டவுன் என்று நினைப்பவர்கள் ஏமாறலாம். 'மினி-டவுன்' 'செமி-டவுன்' என்ற சில வார்த்தைகள் இதற்குப் பொருந்தலாம். சுமாரான ஹோட்டலைத் தேடி அலைந்தே அரைமணியைக் கழித்தோம். 'பெரிய தெரு' என்ற பெயர் பூண்டு, அண்ணாமலை கோவிலின் பின்புறச் சுவற்றைத் தாங்கியிருந்த தெருவில் கூட எத்தனை தேடியும் தங்கக்கூடிய வகையில் ஒரு ஹோட்டலும் தென்படவில்லை. என்னிடமுள்ள மிகப்பெரிய குறை, அசுத்த இடங்கள் என்று நானே சிலதை கற்பனை செய்து கொண்டு முகம் சுளித்துவிடுவேன். சுத்தமும், அசுத்தமும் வெளி அழகில் இல்லை. எளிமையான தோற்றம் கொண்ட சுத்தமான இடங்களும் உண்டு என்று உள்மனதிற்கு தெரிந்திருந்தாலும் இந்த பழக்கத்தை இன்னும் விட முடியவில்லை. சுமாராகத் தெரிந்த ஒரு ஹோட்டலில் சென்று அறையை பார்வையிட்டோம். சுண்ணாம்பு பூசாத அழுக்குச் சுவர்களும், துவைத்து பலநாளான தலையணை, மெத்தையும் எங்களை வரவேற்றன. ரொம்ப கவனமாகப் பார்த்தால் கீழே பூச்சி கூட ஓடலாம் என்று தோன்றியது. இதைத் தாண்டி கழிப்பிடத்தின் சுத்தத்தை சென்று பார்வையிட எனக்கு திராணியில்லாது போகவே, காரிலேயே தங்கிக் கொண்டு, நாளை ஆசிரமத்துக்கு போகலாம் என்று கூறினேன்.செய்வதறியாது திருவண்ணாமலையையின் சிலத் தெருக்களை காரிலேயே சுற்றினோம். பிறகு தென்பட்டது 'ஹோட்டல் ராமகிருஷ்ணா' என்ற மின்னி மறையும் பலகை. நினைத்ததை விட நன்றாகவே இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. கட்டணமும், முன்னூறு ரூபாய் முதல் நானூறு ரூபாய் வாங்கினால் அதிகம். அங்கிருந்த பணியாட்களில் சிலர், நாங்களே தமிழில் பேசினாலும், எங்களிடம் ஆங்கிலம் பேசுவதையே குறிக்கோளாய்க் கொண்டிருந்தனர். என் பெண்ணிடம், 'நீ தமிழ் யார்கிட்ட பேசுவ பாப்பா' என்று ஒருவர் கேள்வி கேட்டார்.குத்துக்கல்லாய் நான் தமிழ் பேசிக் கொண்டிருக்க, என்னமாய் இப்படி ஒரு கேள்வி கேட்டார் அந்த மனிதர் என்று எரிச்சலடைந்தேன். 'என் ·ப்ரெண்ட் தாமரை கிட்ட' என்று சொல்லி என் பெண் மேலும் பால் வார்த்தாள்.தமிழ் நாட்டில் கிடைக்கும் தோசை இட்லிக்கு ஈடு இணை எங்குமே இல்லை. இட்லி உதிர்த்தால் உப்புமா போல் உதிராமல் பஞ்சு போன்று மிருதுவாய் இருந்தது. மறுநாள் அண்ணாமலை கோவிலுக்கு செல்லும் திட்டத்துடன் உறங்கிப் போனோம்.திருவண்ணாமலை

"பிறக்க முக்தி திருவாரூர்

தரிசிக்க முக்தி சிதம்பரம்

இறக்க முக்தி காசி

நினைக்க முக்தி திருவண்ணாமலை"

என்று கூறுவது வழக்கம. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருவண்ணாமலையில் உயர்ந்து திகழும் 'பெரிய கோவில்' என்று அழைக்கப்படும் அண்ணாமலையார்க் கோவில் நடுநாயகமாய்த் திகழ்கிறது। இதைத் தவிர தெருவுக்கு மூன்று கோவில் என்று கணக்கிலடங்காகோவில்கள். சிதம்பரம் கோவிலைப் போன்று வியாபார நோக்கம் இங்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. நிரம்ப பக்தி சிரத்தையுடனும் எளிமையுடனும் பூஜை நடைபெறுகிறது. செல்வி ஜெயலலிதா இக்கோவிலின் மேம்பாட்டுக்கும் அன்னதானத் திட்டத்திற்கும் பாடுபட்டிருப்பதாகப் பலகை ஒன்று குறிப்பிடுகிறது. அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் உச்சி கால அபிஷேகத்திற்கு கொடுத்திருந்தோம். இதனால் எங்களுக்குத் தனி வரவேற்பு. கால் கடுக்க பலர் வரிசையில் தரிசிக்கையில், அபிஷேகப் பணம் கொடுத்து, நான் கடவுளிடம் ஒரு மணிநேரத்திற்கு முக்கியத்துவம் எடுத்துக்கொண்டேன். எல்லோரையும் கடந்து கர்ப்பக்கிரஹத்திற்குள் நுழைகையில் எனக்கு மனம் கூசியது.பக்தி சிரத்தையுடன் பூஜைகள் நடைபெற்றது என்றாலும் என்னால் ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்ல. பெங்களூரில், கோவிலை, குறிப்பாக இறைவனின் கர்ப்பகிரஹத்தை தூய்மையாய் வைத்திருப்பார்கள்.தீபாராதனையின் பொழுது, விளக்குகளுக்கு எண்ணைவிட தனிக் கரண்டி, திரியை எடுக்க, எடுத்து அப்புறப்படுத்த, மருத்துவர்கள் உபயோகிப்பது போல் tong எனப்படும் நீண்ட ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கருவி என்று இயங்கி வருகிறது பெங்களூர் கோவில்கள்। 'Cleanliness is next to Godliness' என்பதில் நம்பிக்கைக் கொண்டவர்கள்। இந்த எண்ணம் தமிழ்நாட்டுக் கோவில்களில் அத்தனை முக்கியமாக கருதப்படுவதில்லை. ஆசாரமும், மடியும் கடைபிடிக்கும் அளவு ஏன் சுத்தத்தை கடைபிடிக்க மறுக்கிறோம்?இங்கு திருவண்ணாமலைக் கோவிலில், ஆசாரமாய் ஒருவர் அபிஷேகம் செய்தார். பக்தி அத்தனை பேர் முகத்திலும் இருந்தது. தமிழிலேயே பாசுரம் பாடினார்கள். புரிந்தது, அதனால் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தீபாராதனையின் போது, விளக்கிற்கு எண்ணையைக் கைவிரலால் எடுத்து விடுகின்றனர். அந்த விரலைத் துடைக்க தனித் துணி வைத்திருந்தது மட்டும் ஆறுதலாய் இருந்தது. உண்ணாமுலை அம்மனை தரிசித்து, அபிஷேகம் செய்து, மொத்தக் கோவிலையும் வலம் வந்தது இன்னும் இரண்டு மணிநேரத்தை முழுமையாய் விழுங்கியது. பிரசாதமாக வழங்கப்பட்ட உணவு கிட்டத்தட்ட ஐந்து பேர் முழுச்-சாப்பாடு சாப்பிடும் அளவு தாராளமாய் இருந்தது. அதனால் ஏனையோருக்கும் பிரசாதமாய் வழங்கி நாங்களும் சிறிது உண்டு அண்ணாமலையாரின் தரிசனத்தை முடித்து ஹோட்டல் திரும்பினோம். இன்னும் சிறிதே நேரத்தில் நான் பல நாள் செல்ல நினைத்திருந்த ரமணாஸ்ரமத்திற்குப் போகப் போகிறேன் என்ற எண்ணத்தில் அதுவரை இருந்த களைப்பும் வியர்வையும் பறந்து போனது.

(இன்னும் வரும்)

26 comments:

 1. மறு வாசிப்பிலும் நன்றாகவே இருக்குது.

  பெங்களூரில் எல்லாக் கோவிலிலும் பதிவில் சொன்னது போல் செய்வதில்லை. வெகு சில கோயிலில் மட்டுமே !!

  ReplyDelete
 2. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்,பயணம் ஆரம்பிக்கும் முன் உள்ள மனநிலை,பயணத்தின் போதான மனநிலையை பற்றிய உங்கள் வர்ணனைகள் மிக நன்றாக இருந்தது

  ReplyDelete
 3. colors கொஞ்சம் செக் பண்ணுங்கள்
  post a comment சுத்தமாக தெரியவில்லை

  ReplyDelete
 4. //"ஐயா, நீங்கள் உங்கள் குடும்ப சகிதம் எங்காவது வெளியூர் சென்று வந்தால் ஒரு மூன்றே நாளில் ராப்பகலாய் உழைத்து வேலையை முடித்துக் கொடுத்துவிடுகிறோம்। உங்கள் துணைவிக்கோ, மகளுக்கோ தூசியால் ஊறும் விளையாது"//  ஓ.......... இப்படியும் ஒரு வழி இருக்கா........

  ReplyDelete
 5. ரொம்..............ப பெரீசாஆஆஆஆ எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 6. //Jeeves said...

  பெங்களூரில் எல்லாக் கோவிலிலும் பதிவில் சொன்னது போல் செய்வதில்லை. வெகு சில கோயிலில் மட்டுமே !!
  //

  வா ஜீவ்ஸ்! நான் பார்த்த வரை நம்மூரை விட பன்மடங்கு நல்லாத் தான் இருக்கு.

  :)

  //பாபு said...
  நன்றாக எழுதியிருக்கிறீர்கள்,பயணம் ஆரம்பிக்கும் முன் உள்ள மனநிலை,பயணத்தின் போதான மனநிலையை பற்றிய உங்கள் வர்ணனைகள் மிக நன்றாக இருந்தது
  //

  நன்றி பாபு. வரவிற்கும். கருத்துக்கும்.
  என்னால் மறக்க முடியாத பயணத்தில் திருவண்ணாமலைப் பயணம் உண்டு. அதனால் தான் பயணக்கட்டுரையே எழுதாத நான் இதைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன். :)


  //பாபு said...
  colors கொஞ்சம் செக் பண்ணுங்கள்
  post a comment சுத்தமாக தெரியவில்லை//

  நேற்றையிலிருந்து திண்டாடி திக்குமுக்காடிட்டு இருக்கேன். என்னுடைய அவ்தாரில் இருக்கற படம் வேற மாத்தணம். அதை imageshakuல் upload செஞ்சு html மாத்தினா பத்வே காணாம போயிடுது
  :(((

  ஒரு கலர் மாத்தினா இன்னொரு கேனத்தனமான கலர் வருது. குரங்கு அப்பம் தின்ன கதையா போச்சு :))))

  நன்றி. மாற்ற ட்ரை பண்ணிட்டே இருக்கேன்.

  ReplyDelete
 7. //SUREஷ் said...
  ஓ.......... இப்படியும் ஒரு வழி இருக்கா........
  //

  வாங்க சுரேஷ். பெரிய ஆளு அவங்க! ஆனா அவரால தான் விட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வெச்சொம்ன்னு நினைச்சு அவரை மன்னிச்சு விட்டுடேன் :D

  //SUREஷ் said...
  ரொம்..............ப பெரீசாஆஆஆஆ எழுதி இருக்கீங்க
  //

  :)))))))))) hehe :embarassed:
  மொத்தமா 5 பாகம் வேற. அடுத்த பகுதி எல்லாம் இவ்ளோ பெருசு இல்லை. hehe :D பொறுமையா படிச்சதுக்கே உங்களை பாராட்டணம் :))

  இந்த பதிவை (பழைய குழுமத்தில்) போட்ட பிறகு நானே படிச்சு, "இவ்ளோஓஓஓஓஓ பெரிய பதிவு" ன்னு டென்ஷன் ஆகிட்டேன் :)))

  (எவ்ளோ பெரிய மாத்திரை ன்னு பஞ்சதந்திரம் ரேஞ்சில்) .

  வருகைக்கு நன்றி. :)

  ReplyDelete
 8. ஷக்திப் ப்ரபா,

  //இரண்டு வருடங்களுக்கு முன் நான் குழுமம் ஒன்றில் உறுப்பினராகியிருந்தேன்//

  Shakthiprabha Veteran Hubber?
  forumhub.mayyam.com?

  அந்த பதிவுகளை படித்து அப்போது “எப்படி இவர்கள் சளைக்காமல் எல்லா பாடல்களையும் ம்ம்ம் நல்லா இருக்கு..ம்ம்ம் நல்லா இருக்கு.. அதுவும் பாடல் வரிகளோடு...சகட்டுமேனிக்கு” என்று
  வியந்திருக்கிறேன்.நொந்துருக்கிறேன்?)இது மாதிரி சிலோன் ரேடியோக்களிதான் வரும்.

  இருந்தாலும் நல்லாவும் இருந்தது(ஹம் செய்துக்கொண்டே படித்ததும் உண்டு)

  எதுக்கு இது இப்போது என்றால் இந்த கட்டுரயை சுருக்கி எழுதலாமே என்கிற்
  என் தாழ்வான வேண்டுகோள்.அலுப்பு
  தட்டாமல் இருக்கும். மேலும்...

  You could attract new visitors beyond your patrons.

  அனுபவம் நல்லா இருக்கு மேடம்.எழுத்தும் நல்லா இருக்கு மேடம். யார் சாயலும் இல்லாமல்.(வழக்கமா சுஜாதா நெடி இல்லை)

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. அருமை சகோதரி,

  திருவண்ணாமலையிலிருந்த வண்ணம் உங்கள் கட்டுரையை படிக்கிறேன்.

  அருமையான நடை. இல்லத்தரசியின் பார்வையில் அருணாசல தரிசனம் காண ஆவலாய் இருக்கிறேன்.

  உங்கள் கட்டுரை அனைத்தும் முடிந்ததும்.. அருணாச்சல ரகசியத்தை கூற விரும்புகிறேன்.

  :))

  ReplyDelete
 10. எழுத்துக்களின் அளவை சிறிது கூட்டிருக்கலாம்.
  எழுத்து நடை நன்றாக இருக்கு.
  திருவண்ணாமலைக்கு, நினைத்தவுடன் செல்ல முடியாது. கடவுளே கூப்பிட்டால் தான் நம்மால் அங்கு செல்ல இயலும்
  இன்னும் எனக்கு அழைப்புவரவில்லை. :-)

  ReplyDelete
 11. //இன்னும் எனக்கு அழைப்புவரவில்லை. :-)
  //


  வருகைக்கு நன்றி குமார்.

  அழைப்பை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது தான். கோவிலை விட, ஆசிரமம், தியான மண்டபம் அருமையாய் உள்ளது. :) நிச்சயம் ஒரு முறை சென்று வாருங்கள்

  ReplyDelete
 12. // ஸ்வாமி ஓம்கார் said...
  அருமை சகோதரி,

  திருவண்ணாமலையிலிருந்த வண்ணம் உங்கள் கட்டுரையை படிக்கிறேன். //

  நன்றி ஸ்வாமி ஓம்கார் அவர்களே :)

  //
  உங்கள் கட்டுரை அனைத்தும் முடிந்ததும்.. அருணாச்சல ரகசியத்தை கூற விரும்புகிறேன்.

  :))
  //

  நிரம்ப சந்தோஷம். காதிருக்கிறோம். :)

  நான் இக்கட்டுரையை எழுதியதே....

  "எனக்கும் கூட திருவண்ணாமலையில் அதிசயம் காண நேர்ந்ததோ என்ற குழப்பம் தீராததால் தான் :) "

  ஐந்தாவதான கடைசி பகுதியில் அதைப் பற்றி கூறியிருக்கிறேன்.

  மேலும், தியான மண்டபத்திலும், ஆசிரமத்திலும் ஆன்ம அமைதி கிட்டியது.

  ReplyDelete
 13. ////கே.ரவிஷங்கர் said...
  Shakthiprabha Veteran Hubber?
  forumhub.mayyam.com? /////

  வாங்க ரவிஷங்கர். ஆம் அதே ஷக்திப்ரபா தான். ஆனால் நான் மய்யத்தில் எழுதுவது அரிது. வெறும் பொழுதுபோக்கிற்காகவும், நண்பர்கள் சிலருடன் அளவளாவவும் மட்டுமே மய்யத்திற்கு செல்வது வழக்கம்.

  இதை எழுதியது வேறொரு குழுமத்தில்.


  ////////அந்த பதிவுகளை படித்து அப்போது “எப்படி இவர்கள் சளைக்காமல் எல்லா பாடல்களையும் ம்ம்ம் நல்லா இருக்கு..ம்ம்ம் நல்லா இருக்கு.. அதுவும் பாடல் வரிகளோடு...சகட்டுமேனிக்கு” என்று
  வியந்திருக்கிறேன்.நொந்துருக்கிறேன்?) /////////

  ஹிஹி. அதெல்லாம் manufacturing defect :) I enjoy humming and typing my songs, hence all those hmm and aahhs during the songs :)

  ////////இந்த கட்டுரயை சுருக்கி எழுதலாமே என்கிற்
  என் தாழ்வான வேண்டுகோள்.அலுப்பு
  தட்டாமல் இருக்கும். மேலும்...
  You could attract new visitors beyond your patrons. ///////

  மிக்க நன்றி. எனக்கு இது போன்ற விமர்சனங்கள் தேவை. I owe a lot to criticisms, as I feel, it may chisel me to shape up my writings :)

  I shall def keep ur words in mind.

  :bow:

  என்னுடைய பதிவுகளிலேயே இது தான் மிக பெரிய பதிவு என்று நினைக்கிறேன் (அதுவும் முதல் அத்தியாயம் இன்னும் பெரிது :embarassed:


  /////எழுத்தும் நல்லா இருக்கு மேடம். யார் சாயலும் இல்லாமல்.(வழக்கமா சுஜாதா நெடி இல்லை)////

  நன்றி. யார் சாயலும் இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில்....நான் யாரையும் படித்ததில்லை :embarassed:

  :)

  ReplyDelete
 14. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.......


  நல்லா இருக்குப்பா.

  ReplyDelete
 15. vaanga thulasi. nandri
  nostalgia thaan :)

  ReplyDelete
 16. SP,

  நான் சமீபத்தில் மிகவும் ரசித்து வாசித்த எழுத்து இது.உங்கள் இயல்பான நகையும் சரளமான மொழியும் மறுமுறை படிக்கும்படி செய்கின்றன. பத்தியின் முதல் பகுதி படிக்க முகத்தில் ஒரு முறுவல் நிலைக்க வைத்துவிட்டீர்கள்.

  இந்தப் பேனாவை ஏனோ மையத்தில் காண்பிப்பதில்லை. Horses for courses I guess !

  பூரண ஆசி பெற்று பால் வார்த்த செல்வத்துடன் உங்கள் பயணங்கள் இனிதே தொடர வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து எழுதுங்கள் !

  ஆன்புடன்
  பிரபு ராம்


  PS: விடாபிடியில் இல்லாத ஒற்றை

  ReplyDelete
 17. நல்லா எழுதி இருக்கீங்க ஷக்தி! தொடர்ந்து எழுதுங்கள்! :)

  ஷக்தி, பிரபு ராமையெல்லாம் மையம் தவிர இன்னொரு உலகத்தில் பார்க்கிறேன்! இது ரொம்ப சின்ன உலகம்தான் போல!

  திருவிளையாடல் வசனம்:

  என்னை யாருனு உங்களுக்கு தெரியாதுங்கோ!

  ஆனால் உங்களை எல்லாம் நமக்கு தெரியும்ங்க!

  -வருண்

  ReplyDelete
 18. //இந்தப் பேனாவை ஏனோ மையத்தில் காண்பிப்பதில்லை. //

  வாருங்கள் பிரபுராம். I am delighted to see u here :)

  மைய்யத்தில் எழுதக்கூடாது என்பதெல்லாம் இல்லை. அங்கு நான் வருவது, நண்பர்களுடன், அளவளாவ, குதூகலிக்க. :)

  Some places are meant for some moods :) I thoroughly enjoy myself there :D

  உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. :)


  //வருண் said...
  நல்லா எழுதி இருக்கீங்க ஷக்தி! தொடர்ந்து எழுதுங்கள்! :)
  திருவிளையாடல் வசனம்:

  என்னை யாருனு உங்களுக்கு தெரியாதுங்கோ!

  ஆனால் உங்களை எல்லாம் நமக்கு தெரியும்ங்க!

  //

  வாருங்கள் வருண் :) நன்றி.
  அடடடா! நீங்க யாருன்னு தெரியாம எனக்கு தூக்கமே வராது curiosity kills the cat :)

  வருகைக்கு நன்றி :)

  ReplyDelete
 19. // பயணத்தின் போது பாட்டுக் கேட்டுக்கொண்டு போவதும், கூடவே சேர்ந்து உரத்த குரலில் பாடிக்கொண்டு போவதற்கும் ஈடு இணை உலகில் இல்லை//

  நினைச்சுப்பார்த்தாலே சூப்பராக இருக்கு!

  ReplyDelete
 20. //ரமணாஸ்ரமத்திற்குப் போகப் போகிறேன் என்ற எண்ணத்தில் அதுவரை இருந்த களைப்பும் வியர்வையும் பறந்து போனது.
  //

  முதல் வாசிப்பு என்பதால் மிக ஆர்வம் ரமணா ஆஸ்ரம் நிறைய செய்திகளை சொல்லும் என்ற ஆர்வத்துடனும் :))

  ReplyDelete
 21. //ஆயில்யன் said...

  முதல் வாசிப்பு என்பதால் மிக ஆர்வம் ரமணா ஆஸ்ரம் நிறைய செய்திகளை சொல்லும் என்ற ஆர்வத்துடனும் :))
  //


  வாருங்கள் ஆயில்யன் :)

  அடுத்த சில பகுதிகள் (மொத்தம் ஐந்து) ஆஸ்ரமங்கள் பற்றி சொல்லும்.


  ஆம்! எனக்குப் பிடித்தமான விஷயங்கள்
  1. பயணம்.
  2. கத்திப் பாடிக்கொண்டே /பாடல் கேட்டுக்கொண்டே காற்றைக் கிழித்துக்கொண்டு பயணம்.

  :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

  ReplyDelete
 22. நானும் 'திருவண்ணாமலை' மாவட்டதை சார்ந்தவன் தான். மாதம் ஒருமுறை, BANGALORE to T.V.MALAI பயணம் செய்யும் நான், உங்களை போல், பயணத்தை அழகாக ரசித்ததில்லை...

  ஊத்தங்கரை to செங்கம் routeல் குண்டு குழிகள் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லை போலும்...

  Hotel 'ARYA' - கூட நல்லாதான் இருக்கும்... (cost கூட cheap தான்).

  ReplyDelete
 23. // ஷாஜி said...
  நானும் 'திருவண்ணாமலை' மாவட்டதை சார்ந்தவன் தான்.

  ஊத்தங்கரை to செங்கம் routeல் குண்டு குழிகள் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லை போலும்...

  Hotel 'ARYA' - கூட நல்லாதான் இருக்கும்... (cost கூட cheap தான்).//

  வாங்க ஷாஜி :)

  பயணம் செய்யற குஷியில் குண்டு குழி கூட பறப்பது போல் தெரிந்ததோ என்னவோ :))

  jokes apart, I did find roads decent enough, except for a lil stretch, which lasted for hardly 15 mins .

  நான் சென்று வந்து 2 வருடங்கள் ஆகிவிட்டதால், எந்த இடம் என்று மறந்துவிட்டது.

  reg hotel, we very much wanted to stay in and near ashram, to get the feel of it.

  வருகைக்கு நன்றி. :)

  ReplyDelete
 24. //ஒரு சுபயோக சுபதினத்தில், ஸ்ரீதர் தன் வீட்டை, சிறிதே மாற்றியமைக்கத் தீர்மானித்தார்.//


  இந்த வரிக்கு முன்னாலும், பின்னாலும், ஏன் கட்டுரை பூராவுமே
  நல்ல தார்ச் சாலையில் வழவழத்துச் செல்லும் வண்டி போல நடை அழகாக இருக்கிறது.

  'பயணக் கட்டுரை என்றால் எப்படியிருக்க வேண்டும்?' என்று கேட்டால், தாராளமாய் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி விடலாம்.

  தொடர்ந்து படித்து நிறைய சொல்வேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. " நினைக்க முக்தி திருவண்ணாமலை "

  nallaa ezhudhureenga SP akka :D

  ReplyDelete
 26. மிகவும் அருமையாக எழுதப்பட்ட கட்டுரை.

  எனக்கு சிறுவயதில் திருவண்ணாமலை சென்று இருப்பதுபோல் உணர்வு இருக்கிறதேயன்றி உண்மையிலேயே திருவண்ணாமலை சென்றேனா எனத் தெரியவில்லை.

  இந்த ஏப்ரல் மாதம் குடும்பத்துடன் இந்தியா வரும்போது என்ன செய்யலாம் என நினைத்திருக்க ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கிறது இந்தக் கட்டுரை.

  தொடர்ந்து படிக்கும்வகையில் ஆவலைத் தூண்டும் வண்ணம், எழுதியவிதம் மிகவும் சிறப்பு.

  சுற்றுலா கட்டுரைகள் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தையும் விதைத்துச் சென்றது இன்னும் சிறப்பு.

  மிக்க நன்றி ஷக்தி.

  ReplyDelete