December 29, 2008

திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -2)

ரமணாஸ்ரமம்


சற்றே ஊரெல்லையில், செங்கம் சாலையில், அமைதியின் இருப்பிடமாய் அமைந்திருக்கிறது ரமணாஸ்ரமம். நாங்கள் சென்றடைந்த பொழுது மணி நன்பகல் பன்னிரெண்டை தாண்டியிருந்ததால், அலுவலகம் மூடும் நேரம். அவசரமாய் அனுமதிக் கடிதத்தின் பிரதியைக் காண்பித்து அறை சாவியை வாங்கிக் கொள்ள நேர்ந்தது. ரமணாஸ்ரமத்தில் தங்க வேண்டும் என்றால் ஆஸ்ரமத்திற்குள்ளேயே காட்டேஜஸ் போன்று அமைத்திருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். அவ்வாறல்லாமல் தனி குவார்டர்ஸ்க்கு செல்ல நேர்ந்தது. நிரந்தரமாகத் தங்குவோருக்கு காட்டெஜும் எங்களைப் போல் அவ்வப்பொழுது செல்பவர்களுக்காக குவார்டர்ஸும் அமைத்திருக்கிறார்கள். நடக்கும் தூரத்தில் இருந்த இந்த குவார்டர்ஸ் என்று அழைக்கப்படும் அடுக்கு மாடிக் கட்டிடம், ஆளரவம் கம்மியான இடத்தில் அடுத்த வீட்டின் நெடிய அடர்ந்த மாந்தோப்பை நோக்கியவாறு அமைந்திருந்தது.
சற்றுநேர ஓய்விற்குப்பின் ஆஸ்ரமம் சென்றடைந்தோம். முதலில் ரமணரின் தாயார் சமாதியும், அதைத் தொடர்ந்து ரமணர் சமாதியும் இருக்கிறது. ரமணர் தவநிலையில் அமர்ந்திருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். இதைச் சுற்றி தியான மண்டபம் சற்று பெரியதாகவே கட்டப்பட்டுள்ளது. சுமார் 100 பேர் நெரிசலின்றி உட்காரலாம். ரமணரின் சமாதியிலும் அவர் தாயார் சமாதியிலும் நிதமும் பூஜை, ஜபம், வேத பாராயணம் முதலியன நடைபெறுகிறது. எங்கும் செடிகளும், பூக்களும் சொறிந்திருக்கிறது. சிவலிங்கப்பூ, மரத்திலிருந்து நொடிக்கு ஒன்று தரையில் விழுந்து ஆசிரமத்தையும், ரமணரையும் வணங்கிக் கொண்டிருக்கிறது. அதையும் மீறி அம்மரம் முழுதும் சிவலிங்கப்பூ. முகர்ந்துப் பார்த்தால் பன்னீர் வாசம் வருகிறது. இம்மரத்தைச் சுற்றி ஐந்தாறு மயில்கள் இருக்கின்றன। ஆஸ்ரமத்தைச் சுற்றிலும் நிறைய மயில்கள் நம்முடன் அந்நியோன்யமாய் உலா வருகின்றன. வலதுபக்கத்தில் அலுவலகத்தை ஒட்டியபடி, ஆஸ்ரமத்திற்குச் சொந்தமான புத்தகக்கூடம் ஒன்று உள்ளது। இதில் தொண்ணூறு சதவிகிதம் ரமணரின் எழுத்துகள், அல்லது அவரைப் பற்றி பக்தர்கள் எழுதியது, அல்லது அவரின் போதனைப் பற்றிய புத்தகங்கள் இருக்கின்றன.


எனக்கு மிகவும் பிடித்திருந்த இடங்கள் புத்தகக்கூடமும் தியான மண்டபமும். முதலில் அவரின் அன்னை சமாதிக்குச் சென்றேன். அங்கே சுவற்றில் 'My death experiences' என்று தலைப்பிட்டு, ரமணரின் பதினாறாவது வயதில் நடந்த சம்பவத்தின் தாக்கமும், திடீரென சாவின் மேல் அவருக்கு வந்த பயமும், அதனால் தொடர்ந்த தேடலும், பயனும் பற்றி எழுதியிருந்தனர். அங்கே, திருமூலரின் தமிழ்ப் படைப்பு ஒன்றை ஒருவர் வாசித்தபடி இருக்க, ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு சன்யாசினி, அதைத் தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். 'எம பயம் நீங்க' என்ற தலைப்பில் அந்த நபர் திருமூலரின் செய்யுளைப் படிக்க அந்த அம்மையார் அதை ராகமாகப் பாடிக் காட்டினார்."எல்லாம் தெரிந்திருந்தாலும், சாவு கிட்ட வரும்பொழுது பயமாத் தாங்க இருக்கு" என்றார் அந்த அம்மையார். சற்று நேரம் நானும் அருகமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன. எனக்கு வலியின் மீது இருக்கும் அபரீமிதமான பயம் நினைவு வந்தது. என்றாவது இதை வென்று விட வேண்டும், என்ற தீவிர எண்ணத்துடன், சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து, பின் ரமணரின் தியான மண்டபத்துக்குச் சென்றேன்.
பிற்பகல் இரண்டு மணியிருக்கும்। தியான மண்டபத்தில் என்னைத் தவிர, எண்ணி பத்து பேர் இருந்தால் அதிகம. அவரவர் வெவ்வேறு உலகில் தியானம் செய்து கொண்டிருந்தனர். அங்கு சூழ்ந்திருந்த நிசப்தத்திலேயே A-U-M என்ற மந்திரத்தின் அடக்கம் விளங்கியது போல் இருந்தது. ஒட்டு மொத்த தத்துவமே ஓம் என்ற மூலமும் முடிவுமே என்று தோன்றியது. தியானித்துக் கொண்டிருந்த பத்து பேரில் குறைந்தது ஆறு பேர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியான மண்டபத்தில் அரை மணியிருந்து விட்டு, பக்கத்தில் இருக்கும் ரமணாஸ்ரமத்திற்குச் சொந்தமான லைப்ரரியில் மீத இரண்டு மணிநேரத்தைக் கழித்தேன். ஆஸ்ரமத்திற்கு இரு கட்டிடம் தள்ளி, வேறொரு இடத்தில் லைப்ரரி அமைந்துள்ளத. ஆஸ்ரம விருந்தினர், ஆஸ்ரமவாசிகளைத் தவிர, ஊரிலுள்ள ஏனையோரும் உறுப்பினர் ஆகலாம. இரண்டு மாடிகளில் ஏகப்பட்ட புத்தகத் தொகுப்பு வைத்திருக்கின்றனர். பக்தி இதழ்களில் துவங்கி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ என்று பலரின் தத்துவப் புத்தகங்கள் காணக் கிடைக்கும். முதல் மாடியில் தமிழ் புத்தகங்களும், இரண்டாம் மாடியில் ஆங்கில புத்தகங்களுக்குமாகப் பிரித்து வைத்திருக்கின்றனர். எழுபது சதவிகிதம் தத்துவம் சார்ந்த அல்லது ஆன்ம-விளக்கம் தரும் புத்தகங்கள் இருக்கின்றன. நாவல்கள், பயணப்புத்தங்கள், வானவியல், ஜோதிடம் என்று மற்றவை சிறிதே இடம் வகிக்கின்றன. பலரின் தத்துவப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஓரிரு புத்தகங்கள் முன்பே சிறிது படித்திருந்தாலும், அவரின் கேள்வி-பதில் புத்தகம் ஒன்றைப் புரட்ட நேர்ந்தது எல்லா கேள்விகளுக்கும் எதிர் கேள்வியிலேயே தொடங்கி விடையளிக்க முயன்றிருக்கிறார். உதாரணத்திற்கு: "பிரம்மம் என்றால் என்ன?" என்றால் "பிரம்மம் என்றால் எதுவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?" என்று விடை துவங்குகிறார். படிப்பது சுவாரஸ்யமாக இருந்தது.
"எல்லார் தத்துவமும் படித்து, இருக்கின்ற தெளிவைக் குழப்பிக் கொள்" என்ற என் கணவரின் குற்றச்சாட்டு உண்மை என்று உறுத்தினாலும், ஓஷோ, ஜே।கிருஷ்ணமூர்த்தி, வாஸ்வானி, காஸ்பெல் ஆஃப் ராமகிருஷ்ணா, வேதாத்ரி மஹரிஷி, சிறிது Zoroastrianism என்று என்னால் குழப்பிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அத்தனையும் மேம்போக்காய் புரட்டுவதற்கு ஏதேனும் ஒன்றை முழுமையாய் படித்தால் என்னுள் இருக்கும் பல வினாக்களுக்கு விடை கிடைத்திருக்கலாம்!!!
ரமணாஸ்ரமத்தின் புத்தகக்கூடத்தில் கிட்டத்தட்ட ரமணரின் 10 புத்தகங்களை வாங்கினோம். இரவு மூன்று நாளும் அதில் இருந்த ஒரு பத்தியை நானோ ஸ்ரீதரோ படித்து, புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சாயும் காலம் வரை ரமணீயமாக இருந்த மாந்தோப்பு, இரவு நேரத்தின் அமைதியில் வெகுவாய் என்னை பயமுறுத்தியது. பகலில் ரம்யமாய் தோன்றும் ஒன்றே இரவில் பயங்கரமாய் மாறக் காரணமாகும் மனம் எத்தனை விந்தைக்குரியது!
"என்னைத் தனிமையில் விட்டுவிடுங்கள்" என்று ஒன்றுமில்லா வெத்து அலட்டல் அலட்டிக் கொண்டு நான் இத்தனை அமர்க்களப் படுத்துகையில், என் நான்கு வயது பெண்ணையும் சமாளித்து, அவளுடனேயே ஆஸ்ரமம் முழுக்க சுற்றி, இடையிடையே தியானமும் செய்து, பின், இரவின் அமைதியிலும் பயத்தின் சாயலேயின்றி அறையில் தியானிக்கும் என் கணவரிடம் நான் நிறைய கற்கவேண்டியிருக்கிறது என்று எண்ணியபடி தூங்கிப் போனேன்.

(இன்னும் வரும்)

11 comments:

 1. ஷக்தி,

  //பகலில் ரம்யமாய் தோன்றும் ஒன்றே இரவில் பயங்கரமாய்//

  உண்மைதான்.

  //"எல்லாம் தெரிந்திருந்தாலும், சாவு கிட்ட வரும்பொழுது பயமாத் தாங்க இருக்கு"//

  எப்படி இது? co-incidence.

  இதே கருத்தைச் சொல்லும் அடிப்படையில் “சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு” எனற என்னுடைய லேட்டஸ்ட் சிறுகதையை
  படித்தீர்களா? கருத்துச் சொல்லலாம்.

  நன்றி.

  ReplyDelete
 2. //என்னைத் தனிமையில் விட்டுவிடுங்கள்" என்று ஒன்றுமில்லா வெத்து அலட்டல் அலட்டிக் கொண்டு நான் இத்தனை அமர்க்களப் படுத்துகையில், என் நான்கு வயது பெண்ணையும் சமாளித்து, அவளுடனேயே ஆஸ்ரமம் முழுக்க சுற்றி, இடையிடையே தியானமும் செய்து, பின், இரவின் அமைதியிலும் பயத்தின் சாயலேயின்றி அறையில் தியானிக்கும் என் கணவரிடம் நான் நிறைய கற்கவேண்டியிருக்கிறது //


  :)

  நிறைய நூல்கள் படிக்க ஆரம்பித்ததாலும், கூட இது போன்ற மற்றவர்கள் மிகச்சாதாரணமாய் நினைக்கும் பழக்கங்களில் நம்மால் நிறைய கண்டு கற்க கூடிய எண்ணங்களை கொண்டு வரும் :)))

  ReplyDelete
 3. //கே.ரவிஷங்கர் said...
  ஷக்தி,

  ////"எல்லாம் தெரிந்திருந்தாலும், சாவு கிட்ட வரும்பொழுது பயமாத் தாங்க இருக்கு"//

  எப்படி இது? co-incidence.
  //

  வாங்க ரவிஷங்கர் :)

  எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். இறப்பு தன்னை நெருங்கும் போதும், பயம் கொள்ளாது ஒருவன் இருந்தால் அது மிகப்பெரிய(அரிய) விஷயம்.

  நான் இன்னும் பல பதிவுகள் பல வலைப்பூக்கள் படிக்கவில்லை. கடந்த ஒருவாரமாக, மகளுக்கு பரிட்சை (அதனால் எனக்கும் பரிட்சை :| )

  இன்னும் ஒரிரு தினங்களில் பல வலைப்புக்களை படித்து மறுமொழி கூற எண்ணியுள்ளேன் (என் மிகப்பெரிய பொழுதுபோக்கு இது :) )

  அந்த வரிசையில் உங்கள் வலைப்பதிவு தான் முதலில் :)

  //ஆயில்யன் said...

  :)

  நிறைய நூல்கள் படிக்க ஆரம்பித்ததாலும், கூட இது போன்ற மற்றவர்கள் மிகச்சாதாரணமாய் நினைக்கும் பழக்கங்களில் நம்மால் நிறைய கண்டு கற்க கூடிய எண்ணங்களை கொண்டு வரும் :))) //

  வாருங்கள் ஆயில்யன் :) ரொம்பவும் உண்மை இது :)

  ReplyDelete
 4. எது முக்கியம் : ஆன்மவியல் புரிதலா , கேச அடர்த்தியா, என்ற கேள்விக்கு பதில் எளிதாகிப்போனதிலிருந்து என் கொஞ்சநஞ்ச தேடல்களும் நின்றுவிட்டன.

  அதற்குமுன் நானும் சவாசனத்திலிருந்து யோக நித்திரைக்கு பயணிக்க முயன்றேன். பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தாரின் ஆரோவில் மாத்ரி மந்திர் ஒரு தியான மண்டபம். ஒரு மாபெரூம் உருண்டையுள் ஒரு வட்ட வடிவ அறை, நடுவே ஒரு பளிங்கு உருண்டையில் ஒற்றை சூரியக்கதிர். சுற்றிலும் சம்மணமிட்ட அமைதியாக தியானம் செய்ய முயலும் மனிதர்கள். முதல்முறை அத்தனை நிசப்தம் ஒரு மிரட்சியே தரும். நீங்கள் அதை ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  மரணபயம் /புரிதல் v. உணர்தல் பற்றிய உரையாடலை நீங்கள் எதேச்சையாக கேட்க நேர்ந்ததும், பல தளங்களில் இயல்பாக இயங்கும் உங்கள் கணவர் பற்றியும் நீங்கள் எழுதி இருந்தது அழகாக இருந்தது. There is a potential poem in that moment somewhere.

  ReplyDelete
 5. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  வாழ்வென்னும் வங்கியில்
  வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

  வளம் பெருக.. துயர் மறைய..


  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  சூர்யா
  butterflysurya.blogspot.com

  ReplyDelete
 6. //பிற்பகல் இரண்டு மணியிருக்கும்। தியான மண்டபத்தில் என்னைத் தவிர, எண்ணி பத்து பேர் இருந்தால் அதிகம. அவரவர் வெவ்வேறு உலகில் தியானம் செய்து கொண்டிருந்தனர். அங்கு சூழ்ந்திருந்த நிசப்தத்திலேயே A-U-M என்ற மந்திரத்தின் அடக்கம் விளங்கியது போல் இருந்தது. ஒட்டு மொத்த தத்துவமே ஓம் என்ற மூலமும் முடிவுமே என்று தோன்றியது.//

  உண்மைதான்.

  உணர்ந்த உணர்வை அப்படியே தூக்கி வெளியே வைத்தமாதிரி வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

  தொடர்ச்சி நோக்கி..

  ReplyDelete
 7. அடுத்த பகுதி ??

  msp

  ReplyDelete
 8. எழுதுகிறேன் பிரபு. I needed a break for personal reasons.

  நன்றி வண்ணத்துப்பூச்சியார் (surya)

  நன்றி ஜீவி. :)

  பிரபு,

  Aurobindo பற்றி கேள்விபட்டிருக்கிறேன். செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு. :)

  ////There is a potential poem in that moment somewhere.///

  Resource is easier to spot when the person in question is talented :)

  தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி :)

  ReplyDelete
 9. ரமணாஸ்ரமம், மரணம், பயம், வெளிச்சம், இருள், நூலகம், தத்துவஞானிகள் என மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மிக்க நன்றி ஷக்தி.

  ReplyDelete
 10. உங்க கட்டுரையைப் படிச்ச பிறகு திருவண்ணாமலை போகவேண்டும் என முடிவு செய்து ஏப்ரல் மாதம் சென்று வந்தோம். நன்றாக இருந்தது. மிக்க நன்றி ஷக்தி.

  ReplyDelete
 11. //உங்க கட்டுரையைப் படிச்ச பிறகு திருவண்ணாமலை போகவேண்டும் என முடிவு செய்து ஏப்ரல் மாதம் சென்று வந்தோம். நன்றாக இருந்தது. மிக்க நன்றி ஷக்தி.//

  மிக்க நன்றிங்க ராதாக்ருஷ்ணன். நானும் ஒருவருக்கு ஊந்தும் சிறு கருவியாக இருந்திருக்கிறேன் என்ற எண்ணமே இக்கட்டுரையை முழுமை பெறச் செய்துவிட்டது.

  ReplyDelete