March 02, 2016

ரயில் சினேகம்

(முன்னறிவிப்பு: இது தொலைகாட்சித் தொடரைப் பற்றிய பதிவு அல்ல) பூமித்தாயின் மடியில் ஏறக்குறைய பல நேரங்களில் தனித்து விடப்பட்ட குழந்தையைப் போல்   நீங்கள் உணர்ந்ததுண்டா? 

நூற்றுக்கணக்கான மனிதர்களின் மத்தியிலும் சிரித்து பேசியபடியே தனிமையை தழுவியிருக்கிறீர்களா? நண்பர்களையும் உறவுகளையும் கொண்டாடியபடியே தனித்து நின்றிருக்கிறீர்களா? அப்படியெனில் இப்பதிவு நம்மைப் போல் சிலரைப் பற்றிய பதிவு. 

பதின்ம வயதிற்கும் முன்பே, குழந்தைப் பருவம் தொட்டே எனக்கு பேச தெரிந்ததில்லை என்பதே உண்மை.  ஒருவேளை எழுதும் திறன் அதிகரித்திருந்தால் என் மனதில் எங்கோ மூலையில் ஒளிந்திருக்கும் சில எண்ணங்களை எழுத்துருவில் வார்த்திருப்பேன்.

அறிவியல் கண்டுபிடிப்புக்களைப் பற்றி ஆராயலாம். அத்தனை அறிவு இருப்பவர்கள் என்னிடம் சிக்கினாலும் அவர்களிடம் திறமையாய் கேள்வி கேட்கவும் அவர்களின்  கருத்தை உள்வாங்கும் திறனும் எனக்கு அதிகம் இருப்பதாய்  நினைத்ததில்லை.

நமக்குத் தெரிந்த சொற்ப ஞானத்தைக் கொண்டு இசை, இலக்கியம் சார்ந்த பேச்சுக்களில் சற்றே மூழ்கி எழலாம். இருப்பினும், இசை-இலக்கியக் கடலின் 
ஆழத்தில்,  நாம் சிறு துளியென மௌனமாய் கலந்து விடுவதே உத்தமம். கலை இசை இலக்கியத்தின் ரசிகையென என்னைக் கற்பித்துக் கொண்டால், ரசிகைக்கு பேச ஒன்றுமே இல்லை. 

சமையல் சிந்தனை, ஆடை அணிகலன், அன்றாட அலுவல்கள் இது குறித்துப் பேச பெரும் ஈடுபாடு எழுந்ததில்லை. 

அன்பையோ பரிவையோ பகிரவேண்டியது கண்டிப்பாக அவசியம். அத்தகைய குசல விசாரிப்புக்கள் இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் முடிந்து விடுகிறது. 

கடந்து வந்த பாதையில் அறிமுகமான ஏறக்குறைய எல்லா முகங்களின் தோழமையை, உறவை, சுவைத்த படியே விட்டு விலகிக் கொண்டே இருக்கிறேன். 

பெரும் கும்பல்களின் மத்தியில் ஆரவார சந்தோஷங்களில் பங்கேற்றுக் கொண்டே தனித்து  நின்றிருக்கிறேன்.

பள்ளி கல்லூரி  நாட்களிலுருந்து தற்போதைய பயணம்  வரை நூற்றுக்கணகான உறவுகளின் அறிமுகம் உண்டு.  ஆழ்ந்த நட்புக்கும் - ஆரம்ப பரிச்சியத்திற்குமான  நடுத்திர கயிற்றிலேயே பலர் நின்றுவிடுவார்கள். அதைத் தாண்டி உள்ளே வர நான் அனுமதித்ததில்லையா என்று குழம்பியிருக்கிறேன். 

ஏன் எவரிடமும் அதிதீவிர நட்போ உறவோ பாராட்ட என்னால் முடிந்ததில்லை என பல முறை யோசித்ததுண்டு. 

என்னுள் ஆழ்ந்து மூடப்பட்டு உறங்கிக் கிடக்கும் ஒரிரு சிந்தனைகளும் கருத்துக்களும் அதிகம் பரிமாறப்படுவதற்கு ஏதுவாய் இருப்பதில்லை. 

எப்படிப்பட்ட வார்த்தைகள் பரிசீலித்து பின் தேர்வு செய்து வாயினின்று உதிர்க்க வேண்டும் என்று புத்தர் சொல்லியிருப்பதைப் பாருங்களேன்! 'அட! என்னமா யோசிச்சு நமக்காவே சொல்லிவிட்டு பொயிருக்கிறார் ! 

"Rolling stone gathers no moss" என்ற கூற்றின் படி, சுழன்றோடிய படியே எத்தனையோ மனிதர்களிடம், பேசிக்கொண்டிருக்கும் வேகத்திலேயே விடைபெற்று சென்று கொண்டே இருக்கிறது என் பயணம். 

எதையும் சுமந்ததில்லை. எவரையும் சுமந்ததில்லை. 

சுமந்த மிகச் சிலரை இழக்கும் பொழுது  - இன்னும் ஆழ்ந்த தனிமையில் மறுபடியும் மௌனமாகிப் போகிறேன். ஷக்திப்ரபா


8 comments:

 1. வலை உறவுகளும் ரயில் சிநேகமாக இருக்கலாம் இருந்தாலும் அவர்களை மீண்டும்(பதிவுகளில்) சந்திக்கும் போது ஒரு புன்முறுவல் பூப்பதில் தவறில்லையே

  ReplyDelete
  Replies
  1. நன்றி. கண்டிப்பாக அவசியமான ஒன்று தான் :) புன்னகையும் வாழ்த்துக்களும் தானே சேகரிக்கும் சொத்து !

   Delete
 2. //எதையும் சுமந்ததில்லை. எவரையும் சுமந்ததில்லை.//

  இதுபோல என்னால் இருக்க முடியாமல் இருந்து வந்தது. எதையும், எவரையும் எல்லாவற்றையும் என் மனதில் மிகச்சுலபமாக சுமந்துகொண்டேன். நாளடைவில் அதுவே என் ஒருசில பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணமுமாகிவிட்டது.

  //சுமந்த மிகச் சிலரை இழக்கும் பொழுது//

  மனம் சற்றும் ஆறுதல் அடையாமல், துடித்துப்போகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

  //- இன்னும் ஆழ்ந்த தனிமையில் மறுபடியும் மௌனமாகிப் போகிறேன்.//

  நானும் இதை இப்போதுதான் மிகவும் கஷ்டப்பட்டு உணர்ந்து அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளேன்.

  குழப்பத்தில் இருந்த எனக்குள் ஓர் தெளிவு ஏற்படுத்தியுள்ள தங்களின் இந்தப் பகிர்வுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. நன்றி. பதில் தங்கள் வழக்கமான உற்சாகம் குறைவாக உள்ளதே hope all is fine with u..... பதிவால் தங்களுக்கு ஒரு சிறு உதவியென்றாலும் மிக்க மகிழ்ச்சி.

   Delete
 3. well said. hats-off to you prabha maam. stay blessed. keep writing and keep smiling always.

  ReplyDelete
  Replies
  1. Thankyou soo much for dropping in here. :) These encouragements keep us going. Cheers.

   Delete
 4. wavelength செட் ஆகலையோ என்னமோ. அதனால் கூட நடுத்தரக்கயிறில் நின்றிருக்கலாம். அப்பறம், பயனுறப்பேசுதல்ங்கற கொள்கையெல்லாம் professional வாழ்க்கைக்கு வேணும்னா சரி. தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதெல்லாம் சரிப்படாது. பேச்சுங்கறது நாம மத்தவங்களைப் புரிஞ்சுக்க, மத்தவங்க நம்பளைப் புரிஞ்சுக்க. நாம என்ன கூக்ளா, "நோ ரிசல்ட்ஸ் found"ன்னு பேசாம இருக்க. அப்டிலாம் பார்த்தா இந்த கமன்ட் கூட நான் போட்ருக்க முடியாது. :p

  மிச்சபடி யாரும் யார்க்கிட்டேர்ந்தும் விலகுவதுமில்லை, நெருங்குவதுமில்லை. கருத்துப்போட கமன்ட்பெட்டியும், ஏதுவா ஒரு பதிவும் போட்டதுக்கு டாஆஆஆஅன்க்ஸ்!!! ;-)

  ReplyDelete
 5. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி க்ருபா. கண்டிப்பாக வேவ்லெங்க்த் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

  ///மிச்சபடி யாரும் யார்க்கிட்டேர்ந்தும் விலகுவதுமில்லை, நெருங்குவதுமில்லை/// இதைத் தானே பதிவும் பத்து பத்தியில் சொல்ல விழைகிறது..... :)

  ReplyDelete