October 04, 2010

வாஸ்து சாஸ்திரம்

(சோ-வின் எங்கே பிராமணன் பகுதி-2லிருந்து தொகுக்கப்பட்டது)


ஒவ்வொரு பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் சுவாரஸ்ய கதை, நிகழ்வு அல்லது நியதி கோர்க்கப்பட்டிருக்கும். ஜோதிட சாஸ்திரத்தைப் போலவே நம்பிக்கையுடன் பின்பற்றப்படுவது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து சாஸ்திர வல்லுனர்களை நாடி வீட்டிற்கு ஹோமமும் ஷாந்தியும் செய்த பின்னரே குடிபெயரும் பழக்கம் பலரிடம் நிலவி வருகிறது.

ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி வாஸ்தோத்வன் எனப்படும் வாஸ்து அதிபதி ஈஸ்வரனின் அம்சம். அவன் கருணா மூர்த்தி. நல்லன எல்லாம் நடத்திக்கொடுப்பவன். அவனை வேண்டியும் அவன் அருளை துதி பாடும் ஸ்தோத்திரங்கள் உள்ளன, எனினும், வாஸ்து புருஷனைப் பற்றி ஆகம சாஸ்திரத்தில் வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் கொடூரம் நிறைந்தவன், அவனுக்கு ஷாந்தி செய்து திருப்தி செய்யவிட்டால், நம்மை ஆட்டுவிக்கக் கூடியவன் என்பது இன்னொரு நம்பிக்கை.

அரக்கனை அழிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்க, அவரின் வியர்வை துளியிலிருந்து தோன்றியவன் வாஸ்து புருஷன் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. அரக்கனை அழித்த பின்பும் அவன் குரூரம் கட்டுக்குள் அடங்காமல் போக, சிவன் அவனை தன் காலடியில் அமிழ்த்தி, அஹம் அழிக்கிறான். வாஸ்து புருஷன் சிவனிடம் தஞ்சம் புகுந்த பிறகு, மனிதர்களுக்கு நிறைவும், செல்வமும் அருளி நிற்கும் வாஸ்து அதிபதியாக்கி பூமிக்கு அனுப்பப்படுகிறான். அவனை வணங்கி நிற்போருக்கு அருள் பாலிக்கிறான் என்று கூறுகிறது.

இன்னொரு சாராரின் கருத்து படி வாஸ்து புருஷன் கட்டுக்கடங்காமல் போன போது தேவர்கள் பலரும் அவனை அமுக்கி வீழ்த்தியதாகவும், அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு தேவன் அதிபதியாகி அமுக்கியதால் அந்தந்த பாங்கங்களை அந்த தேவதைகளைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். தன் தோல்வியை வேண்டி நின்ற அவனுக்கு வருடத்தில் எட்டு நாட்கள் முழித்திருக்கும் வரமும் அதிலும் பிரத்தியேகமாக சில மணிகளே அவன் முழித்திருப்பான் என்று வரமருள்கின்றனர். வாஸ்து புருஷனின் அருளை சம்பாதிக்காதவர்களை அவன் பலவாறாக சோதனைக்கு ஆட்படுத்துகிறான் என்பது நம்பிக்கை. வாஸ்து புருஷனின் தலை - கிழக்கு நோக்கி ஈசான்ய மூலையிலும், கால் - தென் மேற்கு மூலையிலும் அமைந்திருக்கிறது. இவனை திருப்தி படுத்திய பின்னரே கட்டிட வேலைகளைத் துவக்கி எந்தெந்த இடங்கள் எந்தெந்த திசை நோக்கி இருக்க வேண்டுமோ அப்படி அமைத்தால் சுபீஷம் நிலவுவதாக கருத்து.

தேவலோகத்தில் கட்டிட கலையில் நிபுணராக அதிபதியாக கருதப்படும் மயனே தேர்ந்த வாஸ்து சாஸ்திர நிபுணன் என்பதால் அவனே வாஸ்து புருஷனாக பாவிக்கப்படுகிறான் என்றும் வேறு கோணமும் உண்டு.

கட்டிடங்களின் கட்டமைப்புகளை சாஸ்திரமாக வழங்கி வருவது சைனாவிலும் feng shui என்ற பெயரில் கடைபிடிக்கபடுகிறது. விஞ்ஞான முறைப்படியான விளங்கங்களுடன், வானவியல் சாஸ்திரத்தின் தொடர்போடு அலசி ஆராய்ந்து, பாஸிடிவ் அதிர்வுகள் அலைகளை வரவேற்க வல்லதாய் அமைத்துக் கொள்கிறார்கள். சிரிக்கும் புத்தர் சிலையோ, மீன் தொட்டியோ சரியான் இடத்தில் வைக்கப்பட்டால் சுபீஷம் தரும் என்பதும் இவ்வழக்கத்தின் நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரமும், feng shui-ம் நிறைய இடங்களில் சற்றே வேறுபடுகிறது.



சாஸ்திரம் எது எப்படியாயினும், நம் சுற்றுப்புற சுழலின் அமைதிக்காக சிறு பிரார்த்தனையுடன் கட்டிட வேலைகளைத் துவங்கி, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே எல்லா சாஸ்திரங்களிலும் அவற்றின் அதிபதியாகவும் விளங்குகிறான் என்ற தெளிந்த அறிவுடனும் பணிவுடனும், குடிபெயர்ந்த பின்பும், தினமும் கூட இறைவழிபாட்டை மேற்கொண்டால், இல்லமும், சுற்றுப்புறமும், இன்பமாய் அமைத்திட எளிது.

2 comments:

  1. இன்றைய டாப் பிரபல தமிழ் blogs களை www.sinhacity.com il வாசியுங்கள்

    ReplyDelete
  2. ஏதோ புதிய தளம் போலிருக்கிறது. நன்றி நண்பரே. பத்து வலைப் பதிவை போட்டிருக்கிறீர்கள். அதில் என்னுடையதும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பதிவிட்ட உங்கள் நல்லெண்ணத்தை என்னவென்று சொல்வது. :)))

    நன்றி.

    ReplyDelete