October 22, 2010

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியை வழிபடும் நவராத்திரி நாள்களில், முதல் மூன்று நாள்கள் துர்கைக்கும், நடு மூன்று நாள்கள் லக்ஷ்மிக்கும், கடை மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் விசேஷமாய் கொள்கிறார்கள்.


ஆதிபராஷக்தியே க்ரியாஷக்தி (துர்கை), இச்சாஷக்தி (லக்ஷ்மி), ஞானஷக்தியாய் (சரஸ்வதி) விளங்குகிறாள். துர்கை தனது அம்சமான அம்பா, காத்யாயினி, பார்வதி என எண்ணற்ற வடிவங்கள் கொண்டவளாய் நம்மை ஆட்கொள்ள வருபவள். அதில் ஒன்று தான் 'காளிகாதேவி'யின் அம்சம். இவளின் புறத்தோற்றம் மிகுந்த சர்ச்சைக்குறியதாகவும், அதிர்ச்சியூட்டுவதாயும் அமைந்திருக்கிறது. அண்டசராசரங்களையே ஆடையாய் அணிந்திருக்கும் இவள், 'திகம்பரி'யாய் வலம் வருகிறாள். 'ஷாக்தம்' அல்லது ஷக்தி வழிபாட்டின் முறையில் வந்தவர்களுக்கு காளி குலதெய்வமாக விளங்குகிறாள். ஐம்பது மண்டையோடுகளின் மாலைகளை அணிந்து, ரத்தவெறியுடன் மயானப் பிரதேசங்களில் உலா வருகிறாள். தலைமுடி கட்டுக்கடங்காமல் விரிந்து இருக்க, அழிவின் பிரதிபிம்பமாய் புனையப்படுகிறாள்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், போர் மூண்டபோது, துர்கை தனது அதீத ஷக்தியான காளிகாதேவிக்கு உயிர் கொடுத்ததாய் சொல்லப்படுகிறது. காளிகாதேவி, அசுர வடிவங்களை சம்ஹாரம் செய்து, மாலையாக்கி கோர தாண்டவம் புரிகிறாள். பிரளயத்தில் ஒரு யுகமே முடிந்த அறிகுறியுடன், கோர தாண்டவம் ஆடுகிறாள். தன் பணி முடிந்ததும் தெரியாமல் அவள் அழிவில் மூழ்கியிருக்கும் போது, சிவன் ஒரு குழந்தை உரு கொண்டு மயானத்தில் தோன்றுகிறார். குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அவள் வெறியும் கோபமும் அடங்கி, இறப்பின் நடுவில் பிறப்பின் தத்துவத்தை உணர்த்துபவளாய் அதைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுவதாய் புராணம் கூறுகிறது.

காளியே பின்பு 'பத்ரகாளி'யாக சாந்த உருப்பெற்று அருள்பாலிக்கிறாள். 'பத்ர' என்றால் சௌபாக்யம் அருள்பவள் என்று பொருள் கொள்ளலாம். கோப வடிவமாக இருக்கும் அன்னையை ப்ரீதி செய்தால் உடனே இளகி அருள்பாலிக்கிறாள். இதனால் காளிகாதேவிக்கு ஷக்தி அதிகம்.

கல்கத்தா காளியைத் தவிர, தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஒரு காளி கோவில் இருக்கிறது. திருச்சியைத் தாண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற ஸ்தலத்தில், 'மதுரகாளியம்மன்' கோவில் இன்றும் பல பக்தர்களின் வழிபாட்டுடன் சிறந்து விளங்குகிறது.

பல பக்தர்களுக்கு குலதெய்வமாய் விளங்கும் அன்னையின் திருக்கோவில், திங்கள் வெள்ளிகளில் மட்டுமே திறந்திருக்கிறது. மாவிளக்கு போட வருவோரின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. அங்கிருக்கும் கிணற்றடியில் குளித்து, அங்கேயே மாவிளக்கு இடித்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். குளிக்க, மாவிடிக்க என எல்லாவற்றிற்கும் வசதி கோவிலிலேயே இருக்கிறது. தற்போது இன்னும் விஸ்தாரமாய் உடை மாற்ற சுற்று மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கள் பெற்றோருக்கும் இவளே குலதெய்வமாகையால், நானும் சில முறை இத்திருக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை சிறப்பு பூஜை செய்ததால் கர்ப்பக்ரஹத்திற்கு அருகில் அமரும் பேறு கிட்டியது. உடுக்கை ஒலிக்க அம்மனை பூஜை செய்து அழைக்கும் பொழுது சிலிர்ப்பு உண்டானது நிஜம்.

மதுரகாளியின் ஸ்தல வரலாறு, சுவாரஸ்யமாகவும், மூன்று வித்தியாசமான கதைகள் கொண்டதாகவும் இருக்கிறது. சிலர், மதுரையை கண்ணகி எரித்த பிறகு, மதுரையில் வாழ் காளிதேவி, மதுரையை விட்டு, சிறுவாச்சூரில் கோவில் கொண்டாள் எனக் கூறுகின்றனர்.

வேறொரு கதைப்படி, ஐந்து ரிஷிகள் மலையில் தவமியற்றிக் கொண்டிருந்தனர். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காளிகாதேவியை வணங்கி வந்தனர். அவளும் மனமிரங்கி இவர்களுக்கு அருள் பாலிக்க, அங்கிருக்கும் ஒரு மரத்தடியில் குடிகொண்டு தாங்களின் பூஜையை ஏற்கவேண்டுமென காளிதேவியை வணங்கி கேட்டுக்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் பூஜிக்கும் போது, மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்த தேன், ரிஷிகள் வாயில் விழுந்ததாகவும், அதனால் 'மதுர' காளி என்ற பெயர் வழங்கப்பட்டதாய் இன்னொரு கதை கூறுகிறது.

பலரால் நம்பப்படுவதாக இருக்கும் வேறொரு புராணக்கதைப்படி, செல்லியம்மன் என்ற தெய்வம் முன்பு இக்கோவிலில் குடிகொண்டிருந்தாள். ஒரு சமயம், மந்திரவாதியின் மாயத்தில் சிக்கி அவனுக்கு அதிக வரம் கொடுத்துவிட்டதால், அவனிடம் அவதியுற்று அடிமையாய் இருந்து வர நேரிட்டது. மதுரையை எரித்து கால்போன போக்கில் சுற்றிக்கொண்டிருந்த கண்ணகிக்கு, சிறுவாச்சூரில் அவள் தேடிய நிம்மதி கிடைத்தது. செல்லியம்மனின் இந்த நிலையைக் கண்டதும், காளியிடம் முறையிட்டு, செல்லியம்மனை வேறு இடத்திற்குத் தாற்காலிகமாய் சென்றுவிடுமாறு கூறிகிறாள். செல்லியம்மனும் சம்மதித்து, பெரியசாமி மலையில் கண்ணகியுடன் இருக்க, அத்திருக்கோவிலில், அன்று காளி குடிகொள்கிறாள். அன்றிரவு காளி, மந்திரவாதியை சம்ஹாரித்து அருள்பாலித்த பிறகு, செல்லியம்மன், காளியை அங்கேயே தங்குமாறு பணித்து, தான் மீண்டும் பெரியசாமி மலைக்கே சென்று விட்டதாய்க் கூறுகின்றனர். இன்றும் வரும் பக்தர்கள், மலையில் இருக்கும் செல்லியம்மனையும் தரிசித்துவிட்டுத் தான் செல்கின்றனர்.

காளி என்பவள் கொடுமைகளையும், அரக்க குணங்களையும் ஈவு இரக்கமின்றி அழிப்பவள். கேட்டினை அழிக்கும் வடிவத்தின் உருவகமே காளிகாதேவி. உக்ர தெய்வங்களிடம் பக்தியுடன் முறையிட்டால், அவர்கள் விரைவில் அருள்பாலிப்பார்கள் என்று கூறப்படுகிறது. காளிகாதேவியின் கோர வடிவத்தின் ஆழத்தில் இருக்கும் அன்பு அன்னையைக் கண்டு, அவளின் அருளுக்குப் பாத்திரமாவோம்.

யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் - நிந்தன்
செயல்கள் அன்றி இல்லை.

-மஹாகவி பாரதி.

No comments:

Post a Comment