October 05, 2010

நின்றால் - நடந்தால் - பேசினால் குத்தப்படும் ஜாதி முத்திரை (ஆசிரியர்கள் - பகுதி 3)

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெங்கும் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

என்று பாடினார் பாரதி. அதன் அர்த்தத்தை, பாட்டின் இன்னிசையிலே புகுத்தி ஊட்டியவர்கள் என் பெற்றோர்கள். எனக்கு ஜாதி பார்க்கத்தெரியாது. ஏனெனில் ஜாதி என்று ஒன்று இருக்கிறது என்பதே என் மனதில் வெகு நாள் வரை பதிந்ததில்லை. அப்படி ஒன்று இருப்பதாக தெரிந்த பிறகும் யாரிடமும், ஜாதியைப் பற்றி பேசுவதும் இல்லை. அதன் அவசியமும் இருந்ததாக தோன்றியதில்லை.

சோனியாவும், மிதாவும், பினு ஃபெர்னான்ண்டஸும் பள்ளியில் என்னருகேதான் மீன் உண்பார்கள். எனக்குக் குமட்டியதில்லை. அது தீட்டு என்று தோன்றியதில்லை. அவர்கள் மீன் உண்ண, அவர்கள் அருகில் தோள் உரசிய படி நானும் புளியோதரையை எந்த விதக் காழ்ப்புணர்ச்சியும் இன்றி உண்டிருக்கிறேன்.


எங்களுடன் ஹேமா என்ற வகுப்புத் தோழியும் அவ்வப்பொழுது உணவு உண்ண வருவாள். மற்றவர்கள் கொண்டு வரும் உணவை வெளிப்படையாக முகம் சுளித்துப் பழிப்பாள். ஒரு நாள், மிதா ஆம்லெட் கொண்டு வந்ததை தோசை என்று ஏமாற்றி, ஹேமாவை உண்ணச் சொன்னாள். அவளும் தோசை என்றே நம்பி, அதை ரசித்து, சப்புக் கொட்டிப் பாராட்டினாள். இந்த அநாகரீகத்தைக் கண்டித்து நான் நன்றாக திட்டினேன். அதற்கு அவர்கள் தந்த பதிலோ, 'எங்கள் அருகே அமர்ந்து எங்கள் சாப்பாட்டை மட்டம் தட்டிப் பேசுகிறாளே எங்கள் மனது புண்பட்டிருக்காதா?' நியாயம்தான். நியாயம் இவர்கள் பக்கம் இருந்ததாகத் தோன்றியதால், அது பற்றிய பேச்சைப் பிறகு எடுக்கவில்லை. அதன் பின்னரும், அவள் எங்களுடன் ஒருநாளும் உண்ண வரவில்லை. புலால் உண்ணாததும், உண்பதும் ஜாதியையொட்டி பார்ப்பது மிக வினோதமானது. புலால் உண்பதற்கும் அல்லது உண்ணாமல் இருப்பதற்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம்?

பினு ஃபெர்நாண்டஸ், க்ருஸ்மஸ் அன்று என்னை வீட்டிற்கு அழைத்திருந்தாள். எனக்காக அவள் ஒரு துண்டு கிருஸ்துமஸ் கேக் வைத்திருந்தாள். கொறிப்பதற்கு பாகற்காயை அவள் அம்மா வறுத்து வைத்திருந்தாள். 'இதில் முட்டை இல்லை. உனக்காக முட்டையின்றி கேக் செய்யச் சொன்னேன். சாப்பிடுவாயா?'' ரொம்பத் தயங்கி என்னிடம் தட்டை நீட்டியபடி கேட்டாள். என் உணர்வுகளை மதித்து, முட்டை இருப்பதால் கேக் சாப்பிட மாட்டேனோ என்ற எண்ணத்தால், எனக்காக தனியே செய்து வைத்திருந்த அவள் நட்பு என்னை நெகிழ்த்தியது. கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. 'கேக் மட்டும் கொடுத்து அனுப்பிவிடுவாயா என்ன? நான் உன் வீட்டில் தான் இன்று உண்ணப் போகிறேன்' என்றேன். ஆண்டி செய்த பாகல் வறுவல் போல், அம்மா என்ன, யாருமே அத்தனை ருசியாய் செய்ததில்லை. நான் வளர வளர ஜாதியற்ற சிந்தனையும் வளர்ந்தது. கூடவே நான் வித்தியாசமானவள் என்ற நினைப்பும்.

ஜாதி என்பதன் தாக்கம் சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் வரை செல்லும் என்பது கல்லூரி நாட்களில் நிறையவே தெரியவந்தது. வேதம் புதிது அருமையான படம். அதன் கருத்தும்நடிப்பும் பிடித்திருந்தது. குறிப்பாய் சிறுவனின் நடிப்பு. அவன் பிராமணச் சிறுவனாய் நடித்தான் என்பதால் இல்லை.ஒரு சிறுவன் நன்றாய் நடித்திருக்கிறான் எனும் பொதுவான எண்ணத்தால்.

"வேதம் புதிது படத்தில் அந்தப் பையன் நன்றாக செய்துள்ளான் இல்லையா" என்றேன் என் தோழியிடம். தோழிக்கோ சொல்லப்பட்ட சிந்தனையல்லாது, ஜாதி மட்டும் நன்றாகவே புரிந்திருந்தது. 'ஆமாமாம் உனக்கு அந்த சீன் புடிக்கத்தானே செய்யும். நீ பிராமின் இல்லையா' என்றாள் சிரித்தபடி. ஜாதியின் தீவிரம் எப்படி இளைஞர்களையும் யுவதிகளையும் விட்டுவைக்காமல் தாக்கியுள்ளது எனப்புரிந்தது. கள்ளமில்லாத குணத்திற்கு அன்று தான் கிடைத்தது முதல் சாட்டையடி. நான் பார்க்கத் தவறிய கோணத்தில் அவளால் பார்க்க முடிந்தது. நடிப்பை, திறமையை, செயலை, சொல்லவரும் எண்ணத்தையெல்லாம் தாண்டி அங்கு ஜாதியைத்தான் அவளால் பார்க்க முடிந்தது.

அப்பொழுது தான் எனக்கு முதன்முதலாய் கர்வம் தலை தூக்கியது. நான் மிகவும் வித்தியாசமானவள். என் சிந்தனை சிறந்தது எனும் லேசான கர்வம். என் மேல் எனக்கே நிரம்ப பெருமை. நான் பார்க்கும் கோணங்கள் மேலும், எண்ணங்கள் மேலும் எனக்குத் தாங்கொணாப் பெருமை. ஜாதியில்லை என்று சிந்திப்பதே 'மாண்புமிகு' செயல் என்று நினைப்பதால் வருவது. இதுவும் ஒரு வகையில் தவறுதான். இப்படிப் பட்ட எண்ணம், வேறூன்றியது என்றால் அதற்குக் காரணம் சுற்றுப்புறச்சூழலில் உள்ள மற்றோர்களின் சிறுமை எண்ணங்கள். இந்தக் கர்வம் பல வருடங்கள் தொடர்ந்தது.

திருமணமான புதிதில், எங்கள் அடுக்கு மாடியில் இருக்கும் சில தோழிகளிடம் நட்புப் பூண்டிருந்தேன். ஜாதியைப் பற்றி நான் என்றும் பேசியதில்லை. அவர்கள்தான் என்னிடம் கிண்டல் செய்வார்கள். 'உங்கள் பிராமணர்களுக்கு என்றுமே தலைகனம் உண்டு' என்பதில் துவங்கி பல விஷயங்களை சுட்டிக் காட்டுவார்கள். எல்லாவற்றிற்கும் சிறு புன்னகையைத் தவிர பதிலேதும் கூறியதில்லை. அவர்கள் புலால் உண்டால், என் வீட்டில் வந்து உண்டால் கூட, என் அருகிலேயே அமர்ந்து ஒட்டி உறவாடி உண்டால் கூட எனக்கு அதில் சங்கோஜமோ வெறுப்போ இருந்ததில்லை. பிராமணர்களின் சில பண்பை தவறு என்று நானே அவர்களிடம் ஒப்புக்கொண்டிருக்கிறேன். என் மேல் அவர்கள் நல்ல அன்பு வைத்திருந்தனர்.

அன்று என் வீட்டில் பண்டிகை. கோலமிட்டுக் காவியிட்டுருந்தேன். என் சிந்தித் தோழி ஒருத்தி சமைக்க மட்டன் வாங்கி வந்திருந்தாள். என்னை வம்பு செய்வதற்க்காக, வாசலில் கோலத்தின் அருகே, சற்று உட்புறமாய், மட்டனை கவருடன் வைத்துவிட்டு 'உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் பார்' எனக் கூவிச் சிரித்தாள். என்னெவெனப் புரிந்த பிறகு அதிராமல், கத்தாமல், எடுத்துப் போகும் படி, பொறுமையாய் கூறினேன். பின் எனக்குப் பண்டிகை, வாசல் முகப்பு என்பது எங்களைப் பொருத்த வரை மிக புனிதமான விஷயம், அதில் செத்த ஆட்டை கோலத்தின் அருகில் வைத்தது எனக்குப் பிடிக்கவில்லை என்று நிதானமாய்க் கூறினேன். இது ஜாதியைத் தாண்டிய நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம்.

அவளுக்குப் புரிந்தது. அப்படியே அதை கொண்டு வெளியில் ோட்டவள், என்னை நோகடித்ததற்கு இனி பத்து நாள் புலால் உண்ணப் போவதில்லை என்று தெரிவித்தாள். எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. இவ்வளவு தன்னை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று பத்துமுறை கூறியும் அவள் கேட்கவில்லை. இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தோழி என்னிடம் மெதுவாய் கேட்டாள். 'உனக்கு புலால் அவ்வளவு பிடிக்காது என்றால், எங்களையெல்லாமும் புடிக்காதா? நாங்கள் உன் நெருங்கிய தோழிகள் இல்லையா? எங்களை நீ தான் புண்படுத்திவிட்டாய்'

'உன்னை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள். என் வீட்டில் விசேஷ தினங்களில் புலால் வாசலில் இருப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை'. என்றேன். நானும் அவர்களைப் புண்படுத்தியிருக்கலாம். இன்றும் இவர்களெல்லாம் எனக்கு மிக மிக நெருங்கிய தோழிகள். பாசமும் அன்பும் பரிமாறிக்கொள்கிறோம். எங்கோ தவறு நிகழ்கிறது. ஜாதிகள் இல்லை என்று மனதால் நம்பி, சம மனப்பாங்கோடு பார்க்கும், என் போன்ற சிலருக்கும், சில நேரம் அவமதிப்பே ஏற்படுகிறது.

'ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்'


சரிதான். மறுக்கவில்லை. குல உயர்த்தி இருப்பதாக நினைத்துக்கொண்டு, உயர்ந்த குலத்தவர்களாய்ச் சிலரைக் கற்பித்துக் கொண்டு, அவர்களை மட்டம் தட்டுவோரை என்ன சொல்வது? விட்டுக்கொடுப்பதாலேயே, குட்டப்படவேண்டுமா என்ன?

பேசும், சிந்திக்கும் ஒவ்வொரு கோணத்திலும் ஜாதி தலை காட்ட வேண்டுமா? நெடு நாளானது புண் ஆற. பிறகு இன்னும் ஆழமாய்ச் சிந்தித்துப் பார்த்தேன். 'நான், எனது' என்ற எண்ணம் மறையவேண்டும். அதுதானே உயர்ந்த தத்துவம்? யார் எந்த ஜாதியை மட்டமாய் பேசினால்தான் என்ன? அதனால் எனக்கு ஏன் வருத்தம் ஏற்பட வேண்டும்?

பிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணன் ஆகமாட்டான். எவன் ஒருவன் பிரம்மத்தைத் தியானிக்கிறனோ அவனே பிராமணன்.பிராமணனாய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் தான் என்ன?

நமக்கென ஒரு கோட்டை வரைந்து வைத்திருப்பதில் தப்பில்லை. அதை மற்றோரை தாண்டச் சொல்லாமல் இருப்பதிலும் தப்பில்லை. அது தாண்டப்படும் பொழுது, அது மன்னிக்கப்பட வேண்டும். அன்றலர்ந்த தாமரையாய், முகம் கருகாமல் இருக்கவேண்டும். தன் வீடு, தன் மக்கள் தன் சாதி என்னும் தொன்னை உள்ளம் உடைய வேண்டும். சாதிப் பெருமை பேசாததாலும், சமத்துவமாய்ச் சிந்திப்பதாய் நினைத்துக் கொள்வதாலும், எனக்குள் எனக்கே தோன்றும் கர்வம் உடைய வேண்டும்.

'காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெங்கும் நாமன்றி வேறில்லை'


இன்னொரு கர்வமற்ற பரிமாணத்துக்கான முயற்சி.(இன்னும் வரும்)

7 comments:

 1. காக்கை குருவி எங்கள் ஜாதி
  நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
  நோக்கும் திசையெங்கும் நாமன்றி வேறில்லை
  நோக்க நோக்க களியாட்டம்

  என்று பாடினார் பாரதி. "

  ஆனால், அவர் ஒரு நல்ல ஆச்சாரமான பிராமண குடும்ப மாப்பிள்ளையாகப்பார்த்த்துத்தான் அவர் பெண்ணுக்கு மணம்செய்வித்தார்.

  தன் வாழ்க்கையில் பல பிராமண ஆச்சாரங்களை அனுஸ்டித்தார்.

  அவர் மரணமும் பிராம்ணச்சடங்குகளோடுதான் நடைபெற்றது.

  பிறப்பிலும் இறப்பிலும் அவர் பிராமணராகத்தான் வாழ்ந்தார்.

  ஆச்சாரங்களை சரிவர அனுஸ்டித்து பிராமணர்கள் வாழ்ந்தால் மாதம் மும்மாறி பெய்யுன் என்றார்.

  ReplyDelete
 2. காக்கை குருவிதான் எங்கள் ஜாதி என்றார். மனிதர்களில் சிலர் கிடையாது.

  ‘பறையருக்கும் புலையருக்கும் விடுதலை’ என்றார். அதன்படி மக்களுக்கு அவர்கள் ஜாதிவாரியாகத்தான் விடுதலை என்றார்.

  ReplyDelete
 3. சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கிறதே. முதல் இரண்டு பத்திகள் படித்தேன். விரைவில் முதல் அத்தியாயத்தில் இருந்து படித்து விடுகிறேன். நன்றி சகோதரி.

  ReplyDelete
 4. அந்தப் பாட்டில் அந்த வரிகளை மட்டும் நம் மனப் பக்குவத்திற்கு ஏற்ப நாம் எடுத்துக்கொண்டு போவோமே நண்பரே :)

  அப்படி எடுத்துக் கொண்டு விட்டால் மனம் சலனமின்றி அமைதியாய் மலர்ந்திருக்கும்.

  வருகைக்கு நன்றி :)

  ReplyDelete
 5. வருகைக்கு மிக்க நன்றி ராதாக்ருஷ்ணன் அவர்களே :)

  ReplyDelete
 6. சிறு பிராயத்திலிருந்தே சாதீயம் ஊட்டி வளர்க்கப் பட்டுவிட்டோம். அடுத்த தலைமுறைக்கு இதை நாம் கொண்டு போகாமல் விட்டாலே சரியாகிவிடும்.

  நல்ல பதிவு....தொடருங்க...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. ஆரூரன் எவ்வளவு அழகாக அதற்கு solution சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள். "வேதம் புதிது" படத்தின் இறுதிக் காட்சிக்காகவே படத்தைப் பார்க்கலாம். கனம் சேர்த்த பகுதி. அவர் 2 மணி நேரம் சொல்லியதை இரண்டே வரியில் அழகாக சொல்லிவிட்டீர்களே.

  வருகைக்கு நன்றி :)

  ReplyDelete