November 21, 2010

சின்ன பெண்ணின் புத்திமதி (ஆசிரியர்கள் பகுதி -4)


எத்தனையோ முறை தலை கசக்கி யோசித்தாகிவிட்டது. சில நேரம் நான் மூன்றாம் வகுப்பு படிக்காமலேயே நான்காம் வகுப்பு போயிக்கிறேனோ என்று தோன்றும் (அப்பொழுதெல்லாம் டபுள் ப்ரமோஷன் என்கிற கான்செப்ட் உண்டு). மூன்றாம் வகுப்பின் முகப்பு, வகுப்பு, ஆசிரியைகள், நான் அமர்ந்த இடம், அதை ஒட்டிய எதுவுமே செலெக்டிவ் அம்னீஷியா போல் மறந்தே விட்டது.


ஒரு பெரிய ஹாலில் தடுப்பு உயர பலகைகள் போட்டு நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கள் இருக்கும். ஷாந்தி மிஸ் வகுப்பே எடுத்ததில்லை. பின் எதற்கு வகுப்பருகே சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்ற புதிருக்கு நெடு நாள் கழித்துதான் விடை தெரிந்தது. ·ப்ராக் ரேஸ், லெமன் அண்ட் ஸ்பூன், என பல போட்டிகள் இருந்தாலும் எதிலும் நான் முதலாவதாக வந்ததாய் சரித்திரமே இல்லை. எனக்கும் விளையாட்டிற்கும் காத தூரம். ஷாந்தி மிஸ் ப்ளே க்ரவுண்டில் விசில் ஊதுவதும், பின் போட்டி ஆரம்பிப்பதுமாய் ஸ்போர்ட்ஸ் டேக்கு பயிற்சியில் தீவிரமாய் ஈடுபடுவார். 'ரன்னிங் ரேஸ்' மட்டும் எனக்குப் பிடிக்கும். 'எல்லாரும் எனக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும்' என்று கண்மூடித்தனமான வெறியுடன் ஓடுவேன். பல நேரம் நான் முதல் மூன்று இடங்களைப் பிடித்ததில்லை. என்றாவது ஒரு நாள் இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்தால் கலர் கொடி பிடித்து ரேங்க் பலகைகளில் நிற்க வைப்பது பெருமையாய் இருக்கும். ஒரே ஒரு முறை முதலாய் வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இல்லை மூன்றாவதாகவும் இருக்கலாம். கலர் கொடி பிடித்து நின்றது பெருமையாய் இருந்தது. இதுவெல்லாம் பயிற்சியின் பொழுது தான். ஸ்போர்ட்ஸ் டேயின் பொழுது, நான் வேகமாக ஓடுவதாய் எனக்குத் தோன்றினாலும், எனக்கு முன் நான்கு பேர் ஓடினார்கள், என்று அவர்கள் வெற்றி பெறும் பொழுது தான் தெரியவரும்.

'போட்டேட்டோ ரேஸ்' என ஒரு விளையாட்டு உண்டு. 'பொட்டேட்டோ கேதரிங்' என்றும் கூறுவர். அந்த ரேஸ் எனக்குப் பிடிக்காத ஒன்று. எத்தனை வேகமாய் ஓடினாலும், என்னிடம் இருக்கும் உருளைக்கிழங்கு அப்படியே இருக்கும். பத்து பேர் ஓடினால் நான்கு அல்லது ஐந்தாவதாய்த் தான் வந்திருக்கிறேன். என் கிழங்கை எடுக்கையில் நைசாக, அடுத்தவர்கள் எத்தனை எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதிலேயே நேரத்தை கோட்டை விட்டு விடுவேன். ஒரு வேளை ஷாந்தி மிஸ் சதி செய்து எனக்கு இரண்டு கிழங்கு அதிகம் வைத்திருப்பார்கள் என நானே வழியின்றி என்னைத் தேற்றிக் கொள்வேன்.

ஷாந்தி மிஸ் மேல் தாங்க முடியாத ஒரு பயபக்தி இருந்தது. ஸ்போர்ட்ஸ் டேக்கு ஓடி ஓடி உழைக்கும் ஒரே மிஸ் என்பதால் இருக்கலாம். பள்ளியில் ஐந்தே வகுப்புகள் இருந்ததால், இன்னும் இரண்டு வருடத்தில் படிப்பு முடிந்து விடும் அதன் பின் நாமும் ஷாந்தி மிஸ் போல் ஆகிவிடலாம் என்று நினைப்பேன். ஷாந்தி மிஸ் அட்டைக்கரி கலர். சிரிப்பும் முகமும் படு வசீகரம். அடிக்கடி நாலாம் வகுப்பு மீனாட்சி மிஸ்ஸிடமோ இல்லை வேறு யாராவது டீச்சரிடம் அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள். ஷாந்தி மிஸ்ஸுக்கு கல்யாணம் என்று அரசல் புரசலாய் பேச்சும் இருந்தது. ஐந்தாம் வகுப்பு முடித்ததும் நானும் ஷாந்தி மிஸ்ஸைப் போல் அழகாகி விடுவேன், அப்புறம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கற்பனைக் கோட்டை கட்டியிருந்தேன். ஷாந்தி மிஸ் -நான் முதன் முதலில் ஹீரோயின் வர்ஷிப் செய்த பெண்.

ரேகா என்று ஒரு வகுப்புத் தோழி இருந்தாள். ரொம்ப நெருங்கிய தோழியெல்லாம் கிடையாது. சுமாரான நட்பு. நன்றாகப் படிப்பாள். அவளும் நானும் சில நேரம் ஒன்றாக மதிய உணவு உண்போம். இன்னாருடன் இன்னார் தான் மதிய உணவு உண்ணவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. யாருடன் யார் வேண்டுமானாலும் செட் சேர்ந்து கொள்வோம். ரேகாவும் நானும் சில நாள் ஒன்றாய் உணவு சாப்பிடுவோம். 'அம்மா நான் வளர்கிறேனே, எனவே பள்ளிக்கு உணவு கொண்டு வந்து மானத்தை வாங்காதே ' என்று கட்டளை இட்டதால், அம்மா பள்ளி வருவது நின்றுவிட்டது.


ரேகா எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்குவாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனக்கு அறிவுரை வழங்கவே உலகில் பலர் உருவெடுத்துப் பிறந்திருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்து, இன்றுவரை நண்பர்கள், உறவினர்கள், பால்காரி, தயிர்காரி என இன்னாரென்று இல்லாமல் எல்லாருமே அவரவர் பங்குக்கு அறிவுரை வழங்கிச் செல்வர். திரும்ப எதிர்த்துப் பேசாமல், முப்பத்திரண்டு பல்லையும் காட்டி சிரித்திருப்பதாலேயே எல்லோருக்குமே எனக்கு அறிவுரை வழங்குவது பிடிக்கும்.

'நீ கணக்கு நன்றாய் போட வேண்டும்' (கணக்கு, பிணக்கு, ஆமணக்கு... கட்சி நான்) என்பதில் துவங்கி, 'கௌஷிக், ஷ்யாம் எல்லாம் கெட்ட பசங்க.. அவாளோட சேராத, எதுக்கு பாய்ஸோடலாம் பேசற?' வரை எல்லாம் எனக்கு சொல்லித் தெளிய வைப்பாள்!

இப்படி இருக்கும் ஒரு காலகட்டத்தில் தான் பள்ளி விழா (annual day) வந்தது. அப்பொழுது எல்லார் வாயிலும் முணுமுணுத்தபடி இருந்த பாட்டு

"கடலின கரெ போனோரே
காணா பொன்னென போனோரே
போய் வரும்போ எந்த கொண்டுவரு
கை நிறைய....."

ஷாந்தி மிஸ் இந்தப் பாட்டுக்கு டான்ஸ் செய்ய என்னைத் தான் முதல் சாய்ஸாகத் தேர்ந்தெடுத்தார். 'இவளுக்கு இந்த ட்ரெஸ் போட்டு ஆட வெச்சா ஜோரா இருக்கும்' என்று ஐஸ் வைத்து, முதலில் க்ரூப் டான்ஸில் நடு ஆளாய் ஆட, எனக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள்... ம்ஹூம்! உடம்போ கையோ வளையவே இல்லை. முக பாவம் மட்டும் ரொம்ப நன்றாய் செய்தேன். இருந்தும் சளைக்காமல் ஷாந்தி மிஸ் டான்ஸிலிருந்து நீக்காமல், என்னை கும்பலோடு சைட் டான்ஸ் பண்ணவதற்கு அடுத்து தயார் செய்தார். இன்னும் மூன்று நாள் வேஸ்டானது. எனக்கு நடனம் வரவில்லை என்பது என்னை விட ஷாந்தி மிஸ்ஸுக்கு வருத்தமாய் இருந்தது. மற்ற மிஸ்ஸையெல்லாம் கூப்பிட்டு என்னை ஆடச் சொல்லி காண்பித்தார். எல்லோரும் பரிதாபமாய்ப் பார்த்தனர். ஆங்கில நாவல்களில் "if the earth could open up and swallow me NOW..." என்று வரும். அது போல் இருந்தது என் மன நிலையும்.

'ப்ரபாக்கு டான்ஸ் வராது போல ஷாந்தி. அவளை டான்ஸிலிருந்து எடுத்துடு' என்று ஏகோபித்த வோட் பெற்று, கடைசியில் துரத்தப் பட்டேன். ஷாந்தி மிஸ்ஸுக்கு எப்படியானும் ஒரு டான்ஸில் நான் இருந்தே ஆகவேண்டும் என்ற தீரா ஆசையில், முகபாவம் (பாவம்!!) நன்றாக இருப்பதாய் மீண்டும் வோட்டெடுத்து, அஷ்டலக்ஷ்மி டான்ஸிக்கு, குழந்தையை மடியில் வைத்து உட்கார்ந்திருக்கும் 'சந்தான லக்ஷ்மி' வேடம் தந்தார்கள். ஏதோ வந்ததே லாபம் என்று கடைசியில் புன்னகைத்தபடி சந்தான லக்ஷ்மியாக டான்ஸ் ஏதும் செய்யாமல் பொம்மை போல் வலம் வந்தேன். கடைசியில் மலர் மழை என் மேல் பொழியும். இவ்வளவு அவமானப்பட்டதற்கு இதாவது கிடைத்ததே என்ற சந்தோஷம். மலர் சொரிந்தால் எவ்வளவு இன்பம் என்பது நிஜமாகவே அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

பள்ளி தினத்தன்று சந்தோஷமாகவே சந்தான லக்ஷ்மியாய் இருந்தேன். என் மடியில் உமா மிஸ்ஸின் மூன்று வயதுக் குழந்தை. அலுங்காமல் அவனும், சிரித்தபடி நானும். நன்றாய் இருந்ததாய் பாராட்டும் கிடைத்தது. உமா மிஸ் கூட தன் பையனை மடியில் அமர்த்தியதற்கு சினேகப் புன்னகை பூத்தார்கள்.

கடலினக்கரே விட இது பெட்டர் என்ற 'சீச்சீ இந்த பழம்' தத்துவம் கடை பிடித்தேன் என்றாலும் உள்ளூர ரொம்ப வருத்தமாய் இருந்தது நிஜம். எனக்கு ஏன் நடனம் வரவில்லை என்று நொந்து போயிருந்தேன். சொல் பேச்சு கேட்டு வளையும் படி உடம்பு வைக்காமல் நடனம் ஆடும் ஆசையை மட்டும் வைத்துக்கொண்டு தவியாய் தவித்தேன்.

பிறிதொரு நாள் மீண்டும் நானும் ரேகாவும். "இதுக்கெல்லாம் ஏண்டி வருத்தபடற.. இப்போ நானோ ரவியோ இதமாதிரி மேடைல அழகா பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி நிக்க முடியுமா?" என்றாள்.

ரவியும் ரேகாவும் ஒரே மாதிரியே இல்லை. ரவி நன்றாகப் படிக்க மாட்டான். அதிகம் யாருடனும் பேச மாட்டான். ரேகா நன்றாகப் படிப்பாள். எல்லாருடனும் பேசுவாள். குறைகளை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பாள்.

இருவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை தான். இருவரும் போலியோவினால் பாதிக்கப் பட்டவர்கள்.

சந்தானலஷ்மி ஏதோ ஒரு வகையில் அன்று பாடம் பெற்றாள்!

(இன்னும் வரும்)

8 comments:

  1. http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

    கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

    நூல் வெளியிடுவோர்:
    ஓவியர் மருது
    மருத்துவர் ருத்ரன்

    சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
    தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

    நாள்: 26.12.2010

    நேரம்: மாலை 5 மணி

    இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


    அனைவரும் வருக !

    ReplyDelete
  2. சிறிது இடைவெளிக்குப் பிறகு வலைஉலகிற்கு மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள் அந்த நாள் ஞாபகம் வந்ததே.....

    ReplyDelete
  3. "கடலின கரெ போனோரே
    காணா பொன்னென போனோரே
    போய் வரும்போ எந்த கொண்டுவரு
    கை நிறைய....."

    அட! செம்மீன்!

    அந்த சத்யன், ஷீலா முகங்கள் இன்னும் மறக்கலே!

    ReplyDelete
  4. //பள்ளி தினத்தன்று சந்தோஷமாகவே சந்தான லக்ஷ்மியாய் இருந்தேன். என் மடியில் உமா மிஸ்ஸின் மூன்று வயதுக் குழந்தை. அலுங்காமல் அவனும், சிரித்தபடி நானும். நன்றாய் இருந்ததாய் பாராட்டும் கிடைத்தது. உமா மிஸ் கூட தன் பையனை மடியில் அமர்த்தியதற்கு சினேகப் புன்னகை பூத்தார்கள்.

    கடலினக்கரே விட இது பெட்டர் என்ற...//

    முன்னால் சொன்னதை மறந்து விடாமல் பின்னால் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்திச் சொல்லும் லாகவம், சீரான தன்நிலை சுய விமரிசனம், அந்த வயது நினைவுகளை வெறும் அசை போடுதல் இல்லாமல் இந்த வயதில் கண்முன் நிறுத்திப் பார்த்து கறாராக அலசும் பாங்கு.. எல்லாம் இந்த பகுதிக்கு கூடுதல் சிறப்பைக் கூட்டித் தருகின்றன.

    தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  5. நன்றி ஜீவி. கொஞ்சம் இடைவெளி விட்டு திரும்ப வலை பின்ன எத்தனித்துள்ளேன். இன்னும் ஓரிரு மாதங்களிக்குப் பிறகு அதிகம் எழுதுவேன் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  6. உங்கள் தொடர் வருகைக்கு மிக மிக நன்றி. :)

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நன்றி ஜீவி. தங்களுக்கும் நற்-புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete