November 01, 2010

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)

போதுமென்ற மனமே பொன் மனம். போதும் என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக போராடிக் கொண்டே இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் திருப்தி பெறுவதில்லை. இன்னும் இன்னும்...இன்னும் இன்னும்... பெயரா? புகழா? பணமா? அந்தஸ்தா? இன்னும் சிந்தையை குளிர்விக்கும் அத்தனை வஸ்துவும் போதும் என்று நாம் நினைக்காத வரை நீண்டு கொண்டே போகிறது. எங்கே முற்று புள்ளி வைக்க வேண்டும்? அடி முடி காணாது நீளும் ஆசைகளுக்கு போதும் என்ற மனம் எப்பொழுதுமே வராது, நாமாக அதை அடக்காத வரை. அளவான இருவேளை சோறு, உடுக்க இரு துணி. படுக்க இடம். இவை போதும் சாதகனுக்கு.

ஆனால் பிள்ளை குட்டி ஆகிறது. பாதுகாப்பு, வீடு கட்ட வேண்டும். படிக்க வைக்க வேண்டும். பணம் வேண்டும். பணம் என்று வந்தவுடன் போதும் என்ற எண்ணம் என்றுமே வருவதில்லை. அவனை விட நான் பணபலம் பெற வேண்டும். அவனுக்கு இரண்டு என்றால் எனக்கு நான்கு... நீண்டு கொண்டே போகிறது. பணத்தோடு புகழ் / படை பலமும் வேண்டும். ஆள் அந்தஸ்து அவனுக்கு கௌரவத்தைக் கொடுக்கிறது. எப்படிப்பட்ட அந்தஸ்து என்பது ஆளவிட முடியாதது. சாதாரணமானவனுக்கு ஜில்லா பணக்காரன் ஆகவேண்டும் என்பது லக்ஷியம். அப்புறம் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. கடைசியில் ஹிட்லரைப் போல் உலகை ஆட்டுவிக்க எண்ணுகிறான். தரணையை ஆண்டவன் அண்ட சராசரத்தையும் ஆள எண்ணுகிறான்.

* ராஜாக்கள் ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டதெல்லாம் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.

* சாதரணர்கள் ஆகிய நாம் இன்னும் இரண்டு வீடு கட்டிக்கொண்டு பிள்ளைகளுக்காக சேர்த்து, அவர்கள் சௌகரியம்.... பேரன் பேத்திகளுக்காக மீண்டும் பணம்....இதுவும் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.

* ஒவ்வொரு இலக்கும் லக்ஷியமும் கூட நம்மை உயர்த்திக்கொள்ள நாம் பிரயத்தனப்படுவது. நம் புகழுக்காக, பேருக்காக, உயர்வுக்காக. அந்தஸ்துக்காக.

* இதையும் தாண்டி ஒருவன் உலக நன்மைக்காக வாழ்கிறான் என்றால் (அப்படி வாழ்பவர்கள் மிக மிக குறைந்து வருகிறது) அங்கும் அவர்களின் மனதில் மூலையில் ஒரு இடம் "அங்கீகாரம்" எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறது.
"போதும்" என்பது "எவ்வளவு பெரிய நிலை எய்தினாலும்" சாத்தியப்படுவதில்லை. போதும் என்ற மனம் உண்மையான ஞானிக்கு சித்திக்கிறது. எனக்கு இது போதும். இவ்வளவு இருக்கும் போது கிடைக்கும் திருப்தி தான் மிக அதிக அளவில் கிட்டிய போதும் கிடைக்கிறது. ஆக மகிழ்ச்சி மனத்தில் இருக்கிறது. "போதும்" என்ற நிறைகின்ற மனத்தில். இப்படிப்பட்டவனின் மனம் கட்டுக்குள் நிற்கிறது. அவன் உதிர்க்கும் சொற்களும் கூட கட்டுக்குள் நிற்கிறது.

ஒரு கலந்துரையாடலில் இருவகையானோர் பேசாது மௌனம் காப்பார். ஒன்று, தனக்கு எதுவுமே தெரியாத புரியாத மூடன், இன்னொன்று, எல்லாம் அறிந்ததால், அங்கு பேச எதுவுமே இல்லை என்ற நிலையில் ஞானி. இருவரும் பார்வைக்கு ஒன்று. செயலில் ஒன்று. ஆனால் அறிவில் இருவேறு துருவங்கள்.

போதும் என்ற நிறைந்த மனத்தின் தன்மையை எடுத்திருக்கும் பட்டினத்தார் பாடல்:


உடை கோவணம் உண்டு
உறங்கப் புறந்திண்ணையுண்டு
உணவிங்கு அடைகாய் இலையுண்டு
அருந்த தண்ணீர் உண்டு
அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு
இந்த மேதினியில்,
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?

உணவுண்டு. உடையுண்டு. உறங்க திண்ணையுண்டு. நீர் உண்டு. வாயால் உரைப்பதற்கு தித்திக்கும் இறைவன் திருநாமம் உண்டு. வேறு என்ன வேண்டும்!! என்கிறார்.

அப்படியே ஒருவன் போதுமென்ற மனம் கொண்ட ஞானியாய் வாழ்ந்தாலும் அவனை பாடாய் படுத்த எத்தனை பேர்! ஆபுத்திரனுக்கு வராத சோதனையா? இறைவனை அடைய முற்படுவோர், முதலில் இறைவனை "அன்னமயமாய்" பார்கிறார். அன்னத்திலிருந்தே யக்ஞம். அதனின்று மழை. மழை கொணருவது பயிர். பயிரால் உயிர். ஆக உயிர்க்கு ஜீவ நாடி அன்னம். முதலில் பிரம்மத்தை ஜீவ நாடியான அன்னமாய் பார்க்கிறான். உணர்கிறான்.

அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்,
அஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னாத:

நானே அன்னம். அன்னத்தை நுகர்பவன் நானே. என்கிறது ஸ்லோகம்.

அன்னத்தை த்வேஷிக்காதே என்று உபதேசித்தலில் துவங்கி, அன்னம் வழங்கும் இறைவனை லக்ஷ்மி ரூபமாய் காண்கிறோம். அன்னத்தை தனியே உண்பது சிறப்பன்று. பிறருக்கும் வழங்கி பின் உண்ண வேண்டும். பக்தர்கள் பலர் முன்னாளில் அடியார் ஒருவருக்கேனும் அன்னம் வழங்கிவிட்டே உணவு உண்பதை வழக்கமாகக் கொணடிருந்தனர். ஆபுத்திரனும் அப்படித்தான். யாரிந்த ஆபுத்திரன் ? பெற்றோர் நிர்கதியாக்கிவிட ஆவினால் (பசுவினால்) காக்கபட்டவர் வளர்க்கபட்டவர். அதனால் ஆபுத்திரன் என்று பெயர் வந்தது. அவர் பிக்ஷை எடுத்து ஜீவனம் நடத்துகிறார். கிடைத்த பிக்ஷையில் பசியையும் பொருட்படுத்தாது ஊனமுற்றவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வழங்குகிறார். இதனால் மனம் மகிழ்ந்து சரஸ்வதி தேவி அவருக்கு அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை வழங்குகிறாள். இது கிடைத்ததும் அவர் மிகவும் மகிழ்ந்து வாரி வாரி வழங்கிறார். தேவேந்திரன் இவரின் மனப்பக்குவத்தைக் கண்டு வரம் கொடுக்க எண்ணுகிறான்.

"தன்னிடம் இருப்பதே போதும், வேறென்ன வரம் வேண்டும்" என போதுமென்ற மனதோடு வரத்தையும் மறுத்துவிடுகிறார். இந்திரனுக்கு அஹங்காரம் குட்டுப்படுகிறது. உடனே அவர் கோபம் கொண்டு அந்நாடெங்கும் சுபீஷம் உண்டாக்குகிறார். ஆபுத்திரனுக்கு கொடுப்பதற்கு இருந்தாலும், எங்கும் சுபீஷம் நிலவுவதால் வாங்குவதற்கு யாருமே இல்லாமல் ஆகிவிடுகின்றது. இன்னொருவருக்கு கொடுக்க முடியாததால் அவரும் அன்னம் உண்ணாமலேயே இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று கப்பலில் வந்த பிரயாணிகள் கூற அவர்களுக்கு உணவளிக்க பிரயாணிகளுடன் அந்நாடு நொக்கி புறப்படுகிறார். நடுவே ஒரு தீவில் களைப்பாற மீண்டும் பிரயாணிகள் கப்பலேறிய போது ஆபுத்திரனை மறந்துவிட்டு கப்பல் புறப்படுகிறது. தன்னந்தனி தீவில் மக்கள் யாருமின்றி, அன்னம் கொடுக்க ஒருவரும் இல்லாததால், அக்ஷய பாத்திரத்தை ஜலத்தில் விட்டு விட்டு, தானும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அமுதசுரபி என்று பெயர்பெற்ற இப்பாத்திரமே மணிமேகலையில் கையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. போதும் என்ற உயர்ந்த குணம் உடையவனுக்கும் கூட எப்பேர்பட்ட சோதனை!

10 comments:

  1. @ஷக்தி

    நல்ல பகிர்வு. என்று போதும் என்ற மனம் வருகிறதோ அன்று பற்று அறுபடும். பற்று அறுபட்டால், மறு பிறவி இல்லை

    ReplyDelete
  2. ரொம்ப அருமையா சொன்னீங்க....நன்றி LK :)

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், தங்களின் மின்னஞ்சல் பணி செய்யவில்லை.

    ReplyDelete
  5. நன்றி ராதாக்ருஷ்ணன் அவர்களே. தங்களுக்கும் தங்கள் குடும்ப்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    அன்புடன்,
    ஷக்தி

    ReplyDelete
  6. நல்லதொரு பதிவை தந்தமைக்கு என் மனம் கனிந்த நன்றி ஷக்திப்ரபா...

    தொடர்ந்து படித்து வருகிறேன்...

    வாழ்த்துக்கள்...

    தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    கூடவே என் புதிய பதிவுகள் இதோ :

    மன்மத அம்பு - கப்பலில் காதல் http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html


    ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்.
    http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html

    ReplyDelete
  7. thanks gopi...avasarama reply.... wishing u all happy deepavaLi

    ReplyDelete
  8. போதாது, இதுமாறி நிறைய படிக்கணும்,போதும் என்ற அளவுக்கு . நன்றி!

    ReplyDelete
  9. உங்கள் நன்றியை இது போன்ற பொன் கருத்துக்களை பொக்கிஷங்களை நம் முன் வைத்த மூதாதையர்க்கு சமர்ப்பிக்கிறேன்.

    வருகைக்கு நன்றி சரவணன் :)

    ReplyDelete