September 28, 2010

எண்ணற்ற பொக்கிஷங்கள் (சோ-வின் எங்கே பிராமணனிலிருந்து தொகுக்கப்பட்டது )

காலகாலமாக நாம் போற்றி வரும் புராண இதிஹாசங்கள், வேத மந்திரங்கள், உபநிஷதுக்கள் இவற்றுள் நமக்கு தெரிந்தவை சில. தெரியாதவை கணக்கற்றவை. ரிக், யஜூர், அத்ர்வன, சாம வேதங்களாக இன்றைக்கு நான்கு வேத மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நம் மதம் வழங்கி வருகிறது. ஆனால் வேதமோ மொத்தம் நான்கு மட்டுமல்ல. கணக்கிலடங்காதவை. எண்ண எண்ண குறையாதவை. எத்தனை வேதங்கள் என்று கண்டுணர முடியாதவை. இறைவனைப் போல் முடிவற்றவை. சாமான்யனின் புரிதலுக்கும் புலனறிவுக்கும் அப்பாற்பட்டவை.

"அனந்தாவை வேதானாம்" என்று வேதமே குறிப்பிடுகிறது. இதில் நான்கே நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். வேதங்களை ரிஷிகள் உணர்ந்தனர். ஞானிகளால் "உணரப்பட்டவை", கற்றுக்கொடுக்கப்பட்டவை அல்ல. அதனாலேயே இம்மந்திரங்களை ஓதுவது மட்டுமே சிறந்தது - குரு மந்திரம் ஓதும் பொழுது அதனை கேட்டே தெளிவுற்று மாணாக்கன் ஓதினான். வேத மந்திரங்களை எழுதி கற்பித்தல் முறையாக கருதப்படவில்லை. ஒலி நீட்சி , i.e. குறில் நெடில் முதலியவை மிகுந்த கவனத்துடன் ஓதவேண்டும் என்பதால், தானாக எழுதி படித்தலை விட குருவின் மேற்பார்வையின் கீழ் ஓதுதலே சரியென உணர்ந்து அவ்வழியே பின்பற்றப்பட்டது. வேதங்களை சரிவர கற்றுணர கிட்டத்தட்ட பனிரெண்டு வருட காலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தற்காலத்தில் நாம் வேதமந்திரங்களை அல்லது வேதத்தின் ஒரு பகுதியான ருத்ரம் சமகம் முதிலிய மந்திரங்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து, வீட்டில் மந்திர ஓலியை நிரம்பச் செய்கிறோம். இது மிகவும் உன்னதமானது என்று கூறிவிட முடியாது என்கிறார் சோ. மந்திரங்களை சரியாக பயின்ற ஒருவர் நேரடியாக ஓதுவதே மிக்க நலன் விளைவிக்கக் கூடியது. மேலும் வேத மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில் மற்ற சப்தங்கள் ஒடுங்கி இருத்தல் சிறப்பு. காலத்திற்கேற்ப நாம் நம்மை மாற்றிக்கொண்டு விட்டாலும், இவ்வழக்கத்தை ஒப்புக்கொண்டு விட்டாலும், இவ்வழி பின்பற்றினால் பயனோ பலனோ முழுமை பெறுவதில்லை.


பரத்வாஜ மஹரிஷிக்கு ப்ரம்மன் முன்னூறு வருட கெடு கொடுத்து வேதம் முழுவதையும் அறிந்து வரச் சொல்கிறான். முன்னூறு வருடம் முடிந்த பின், இந்திரன் அவர் முன் தோன்ற, பரத்வாஜ முனிவரோ "இன்னும் நூறு வருடம் கொடுத்தாலும் அதை வேதத்தை உணரும் பொருட்டே செலவிடுவேன். தெரிந்து கொள்ள வேண்டியதோ மிக அதிகம்" என்கிறார். அங்குள்ள சில மலைகளை சுட்டிக்காண்பித்து அவற்றை வேதம் என்று உருவகப்படுத்தினால் 'நீங்கள் தெரிந்து கொண்டதோ இவ்வளவே' என்று ஒரு பிடி மண் அளந்து காட்டுகிறான். வேதத்தை முழுவதுமாய் தெரிந்து கொள்வது இயலாத காரியம். அவை முடிவற்றவை கணகற்றவை என்று இந்திரன் சொன்னது புராணக் கதை.

தொலைந்த பொக்கிஷங்கள் பலவற்றில் திவ்ய ப்ரந்தமும் ஒன்று. வெவ்வேறு ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்யப்ரபந்தம் முதலில் கிடைக்காமலே இருந்தது. நாதமுனிவர் என்பவரே, தொலைந்த பிரபந்தங்களை மக்களுக்கு சேர்பிக்க மனம் கொண்டு அவற்றில் சிலவற்றை தேடி நம்மிடம் கொணர்ந்தார். அவையே நாலாயிரம் திவ்யப்ரபந்தமாக வழங்கப்படுகிறது. தமிழில் ஆழ்வார்கள் பலர் தமக்கு தெரிந்த வேதத்தை முன்னிறுத்தி அதனையொட்டி பாடல்கள் புனைந்துள்ளனர். நம்மாழ்வாரின் பல பாடல்கள் வேதங்களின் சாராம்சத்தை விளக்குகிறது. அவர் எழுதிய திருவாய்மொழியை ஆதாரமாக வைத்தே இராமானுஜர் வைணவ விளக்கங்களையும் நியதிகளை வகுத்ததாக அபிப்ராயப்படுகின்றனர்.

No comments:

Post a Comment