September 13, 2010

ஆசிரியர்கள் பகுதி - 2 - பழைய பதிவு

நம் ஒவ்வொருவரின் பிறப்பிலும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாமும் மெருகேறி, நம்மை செப்பனிட்டுக் கொள்ள விழைகிறோம். எத்தனையோ பள்ளங்கள், தோல்விகள், விழுந்து எழும் சிராய்ப்புகள். இத்தனையும் மீறி நிமிர்ந்து நின்று, கணப்பொழுதும் கற்கும் பாடத்தால் நம்மை உயர்த்திக் கொள்வதே வாழ்வின் குறிக்கோள்.

இதற்கு ஆசிரியர்களின் பங்கு சொல்லி மாளாதது. நான் கூறுவது பாடதிட்டத்தை சிந்தையில் புகுத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல. பல்வேறு முகமூடிகளின் ஊடே ஒளிந்திருக்கும் பலரின் செயல், சொல், சில நேரம் நாம் பட்டு அனுபவிக்கும் படிப்பினை என எல்லாமே ஆசிரியர்கள் தான்.

காலம், நேரம், அனுபவம் இவை தான் முன்னோடி ஆசிரியர்கள். இவை கற்றுக்கொடுக்காதது கொஞ்சமே. அவ்வப்பொழுது பல ஆசிரியர்கள் பாடங்களை இன்னும் மெருகூட்டுகிறார்கள்.

குழந்தை பிராயம் முதல் எத்தனை பாடங்கள்! கீழே விழுந்தால் அடி. முதல் பாடம். தீ சுடும் அடுத்த பாடம். பாடங்கள் என்றும் கசக்கும். சிறு குழந்தை முதல், பெரியவர் வரை பாடங்களை என்றும் கசப்புடனேயே அசை போடுவர். ஆனால் அவற்றால் நாம் பெற்ற பயன் மட்டும் மிகவும் தேவையான படிப்பினை. அதனை அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் என்ற போர்வையில் விளங்கும் அனைவருக்கும் நாம் கடமைப் பட்டுள்ளோம்.

முதல் ஆசிரியர் அம்மா தான். நானென்று இல்லை அனைவரும் கூறும் மறுக்க முடியாத உண்மை. உலகை அறிமுகப்படுத்துபவள். அப்பாவை உற்றாரை, உறவினரை, நல்லதை, கெட்டதை, அறிமுகப்படுத்தி நம்மை உலகை எதிர்கொள்ளத் தயாராக்குபவள். அவள் சொல்லிக்கொடுக்காததை படிப்பினையாய்ப் பிறரிடம் புரிந்து கொள்ளும் பொழுது சில நேரம் வலிக்கும்.

காலமும், சூழ்நிலையும், நிறையவே சிந்திக்க வைக்கும் பல படிப்பினைகள் தந்ததைப் பற்றி நான் யோசிக்கும் முன், எனக்கு நினைவிற்கு வருபவர்கள் சில பள்ளி ஆசிரியர்களும்.

எனக்கு நினைவாற்றல் நிரம்பக் கம்மி. எனினும் என்னுடைய ஒவ்வொரு ஆசிரியை, தோழி, தோழர்கள் என பலரின் பெயரும் முகமும் இன்னும் நினைவில் நின்றாடும் ஒன்று.

எல்.கே.ஜி.யில், 'கீதா' மிஸ் நினைவுகோரும் பொழுது வேறெதுவும் நெகிழ்ச்சியாகவோ, இகழ்ச்சியாகவோ தோன்ற வாய்ப்பே இல்லை. ஏனெனில் இவர் எங்களுக்கு பாடம் புகட்டிய நினைவு இல்லவே இல்லை. ஸ்கேல் ஒன்று வைத்திருப்பார். பெஞ்செல்லாம் இருக்காது. தரையில் அமர்ந்திருப்போம். என்ன செய்வோம் என்றும் நினைவில்லை. ஏ,பி.சி சொல்லிக் கொடுத்திருக்கலாம் (சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்). சற்று நேரத்திற்கெல்லாம் எல்லோரும் கட்டாயமாகப் படுத்து விட வேண்டும். ஸ்கேல் வைத்துக் கொண்டு வலம் வருவார். யார் கண்ணை மூடவில்லை என்று மிரட்டிக் கொண்டே வருவார். ஆனால் இவரிடம் யாருக்கும் பயமே இல்லை. சாந்தமான முகம். கோபம் வரவே வராது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். அதனால் அரைக் கண் மூடி, தூங்குவது போல் நான் நடித்தது நன்றாய் நினைவிருக்கிறது. ஒல்லியாய் குச்சியாய் வெள்ளையாய் தேகம். ஒல்லியாய் குச்சியாய் நீளமாய் முடி. பின்னலிட்டிருப்பார். மாமியாருக்கு வேண்டியதை செய்து விட்டு, பொழுது போகாத நேரத்தில் (ஊதியத்திற்காகவும்) எங்களுடன் மாரடித்தார் என்று இப்பொழுதும் தோன்றுகிறது. அப்பட்டமான நடுத்தர வர்க்க முகம். எல்.கே.ஜியெல்லாம் தாண்டிய பின், ஐந்தாம் வகுப்பு வரை இவரை பலமுறை பார்த்திருந்தாலும் ஒரு முறை கூட, மாணவ மாணவிகளைப் பார்த்து புன்னகைத்ததே இல்லை. இவரை பற்றி ஏன் எழுதுகிறேன் என்பதற்கு ஒரே காரணம் தான். என் பள்ளி வாழ்க்கையின் *முதல் ஆசிரியை* என்பதால் மட்டுமே.

அடுத்து சியாமளா மிஸ். கருப்பாய் குள்ளமாய் இருப்பார். இவருக்கு பாபு என்று ஒரு மகன் உண்டு. அவனும் என்னுடன் யூ.கே.ஜி படித்தான். என் பக்கத்தில் உட்காருவான். பென்சில் ஸ்லேட் என எல்லாவற்றையும் பிடிங்கிக் கொண்டுவிட்டு அழவிடுவான். குறும்பு கொப்பளிக்கும் அவன் முகத்தில், நான் அழும் பொழுது அப்படி ஒரு திருப்தி தெரியும்! அடிக்கடி சியாமளா மிஸ்ஸிடம் போய் கோள் மூட்டிவிடுவேன்; 'பாபு இப்படி செய்யறான் மிஸ்!' என்று. அவரும் அவனைக் கண்டிப்பார். ஒரே ஒரு முறை, ஏனென்று நினைவில்லை, எதோ தவறு செய்து விட்டதால் இருக்கலாம். என்னை கூப்பிட்டு ஸ்கேலால் 'படீர்' என்று ஒரு அடி உள்ளங்கையில் கொடுத்தார். பள்ளி ஆசிரியர்களிடம் நான் வாங்கிய இரண்டு அடிகளில் முதல் அடி, இவர் கொடுத்தது தான். ரொம்ப அவமானமாய் இருந்தது. அன்று முழுக்க குனிந்த தலை நிமிராமல் வகுப்பில் இருந்தது நினைவில் இருக்கிறது.

பாவாடை தாவணியில், பதினெட்டு வயது மிஸ் ஒருவர் எங்களுக்கு பாடம் எடுப்பார். அப்பொழுது நாங்கள் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். எனக்கு அரவிந்த், சத்ய மூர்த்தி என்று சில நண்பர்கள் இருந்தனர். இவர்களுடன் கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பேன். டீச்சரை கிண்டல் அடிப்பது, கமுக்கமாய் சிரிப்பது என்று நல்ல காரியங்களில் அவ்வயதில் ஈடுபட்டிருந்தேன். இந்த அழகான பதினெட்டு வயது டீச்சரின் பெயர் ப்ரேமா. முகத்தில் பரு இருக்கும். சற்றே பூசினாற் போன்ற தேகம். எல்லா மிஸும் சுமாராய், வயதானவராய் (comparitively) இருக்கும் நேரத்தில் இவர் மட்டும் சின்னப் பெண்ணாய் பளிச்சென்று இருப்பார். நீள அடர்த்தி முடி. இவரை கிண்டல் செய்வது எங்களின் பொழுது போக்கு. ஏதேனும் துர்நாற்றம் வருவது போல் அர்விந்த் மூக்கை மூடிக் கொள்வான். உடனே இன்னொருவன் "ப்ரேமா மிஸ் குளிக்காம வந்துட்டாங்களா" என்பான். நான் கிக்கிபிக்கி என்று இளிப்பேன். இப்படி அவர் எங்களைக் கடக்கும் பொழுதும் வேண்டுமென்றே நிறைய பேசுவோம். அதெல்லாம் அவரின் காதில் விழாதா, அல்லது விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தாரா என்பது இன்று வரை மர்மம்.

சாவை பற்றியும், சோகத்தை பற்றியும் நிறைய தெரியாது தான். முதன் முறை அன்று தான் கேட்டோம்.

"சில்ரென், இன்னிக்கு உங்களுக்கு லீவ். ப்ரேமா மிஸ்க்காக எல்லாரும் எழுந்து நிக்கறீங்களா?"

"ஏண்டா சத்யமூர்த்தி என்னாச்சு?"

"ப்ரேமா மிஸ் செத்து போய்ட்டாங்களாம்!"

"அப்டீன்னா"

"தெரில. ஆனா இனிமே வரமாட்டாங்க."


வீட்டிற்கு சென்று நிறையவே அழுதேன். ப்ரேமா மிஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுவிட்டிருந்தார்கள். (காதல் தோல்வியாய் இருக்கலாம்.... இல்லை பரிட்சையில் பெயில் ஆனார்களோ என்னவோ) வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். "ரொம்ப கிண்டல் பண்ணினோம் மிஸ்ஸை.. இனி வரவே மாட்டாளா" என்று.

ஒரு வாரம் எல்லோருமே சுரத்தில்லாமல் இருந்தோம். அதன் பிறகு மீண்டும் சாவு என்ற வார்த்தை மறந்து போனது. அதைப்பற்றி அதிகம் யோசிக்கவும் இல்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு அர்விந்த் "இங்க தான் ப்ரேமா மிஸ் தூக்கு போட்டுட்டாங்க" என்று எங்களை பயமுறுத்த, ரொம்ப டென்ஷனோடு இரண்டாம் வகுப்பு உத்திரத்தைப் பார்த்து, அந்த பயத்திலேயே ப்ரேமா மிஸ்ஸின் சோகத்தை மறந்து போனோம்.

(இன்னும் வரும்)

No comments:

Post a Comment