September 25, 2010

இரந்துண்டு வாழ்தல் - (சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து)


"ஏற்பது இகழ்ச்சி" என்கிறார் அவ்வை. இரந்துண்டு வாழ்தல் என்பது இகழ்ச்சியாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரின் மரண பயத்தையும் மிஞ்சி நிற்கிறது பிறரிடம் நாம் கடன் பட்டு விடுவோமோ, அவர்கள் தயவை எதிர்பார்த்து வாழ நேரிடுமோ என்ற பயம். அதற்காகத் தானே பணமும் சேமிப்பும்!

"இறைவனே உன்னிடம் மாறாத பக்தி, பிறரிடம் கை ஏந்தாத வாழ்வு, அனாயாசமான (எளிதான) மரணம்" இவற்றைத் தவிர வேறேன்ன வேண்டும்!

அனாயாசேன மரணம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வை பக்திம் அசஞ்சலாம்


இரந்து வாழும் நிலையல்லவா பிரம்மச்சரியத்தின் கடமை. பிக்ஷை பெறுதல் என்பதே இங்கு எப்படி மேன்மையாக்கப்படுகிறது? என்றால்...

பிட்சை உண்டு வாழ்தல் பிரம்மச்சரியத்தின் கடமை. அவன் தன் கடமையை கர்மயோகியாகச் செய்யும் பொழுது அது உயர்வுக்கே வழிவகுக்கும். உஞ்சவ்ருத்தியும் பிட்சையும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசப்பட்டவை. உஞ்சவிருத்தி பிரம்மாச்சாரியின் கடமை இல்லை. அது பிராமணனின் கடமை. போர் அடிக்கும் இடத்திலோ அங்கு இல்லாத பொழுது கடை வீதியில் சிதறிக்கிடைக்கும் நெல்லை எடுத்து உண்பதே உஞ்சவ்ருத்தி. உஞ்சவிருத்தி செய்பவர்கள் வேறு எவரிடமும் உணவை வாங்கிக்கொள்ளுதல் கூடாது.

தானம் வாங்கலாம். முந்தைய காலத்தில் மூதாதையர்களுக்குறிய கடனை / காரியத்தை செய்யும் பொழுது அங்கே பிராமணன் ஒருவனுக்கு தானம் கொடுப்பது வழக்கம். தானம் எப்படி வாங்க வேண்டும் கொடுக்க வேண்டும் என்பது சாஸ்திரப்படி தெரிந்து கொண்டு வாங்கிக்கொள்ளுதல் நலம். உதாரணத்திற்கு பசு தானம் வாங்கினால் லக்ஷம் முறை காயத்ரி மந்திரம் சொன்னால் வாங்கியவனின் சுமை குறையும். தானம் பெறுபவனின் தலையில் மிகப்பெரிய சுமை இறக்கி வைக்கப்படும். தானம் கொடுப்பவனின் பாதி பாபங்களும் வாங்குபவனுக்கு போய் சேரும். இதெல்லாம் தான மனப்பான்மையோடு செய்யப்படும் உண்மையான தானத்திற்கு பொருந்தும். தானம் என்பது பிச்சையிடுவதல்ல, தானம் என்பது அன்பளிப்பு அல்ல.

தானம் கொடுப்பதற்கு பரந்த மனசு முக்கியம். பணம் இருப்பதோ இல்லாததோ இங்கு பொருட்டு அல்ல. உன்னிடம் என்ன இருக்கிறதோ அதை கொடு. தானம் கொடுக்கும் பாவத்துடன் கொடு. தானம் கொடுக்கும் பொழுது

* சிரத்தையுடன் கொடுக்கவேண்டும்
* பயத்துடன் கொடுக்கவேண்டும் (பவ்யம் /அடக்கம் என்று கொள்ளலாம்)
* வெட்கத்துடன் கொடுக்க வேண்டும் ('இது என்ன பெரிய தானம்' என்ற கூச்சம் நிரம்பியிருக்க வேண்டும்)
* சந்தோஷத்திடனும் முகமலர்ச்சியுடனும் கொடுக்க வேண்டும்.
* தானம் கொடுப்பதன் அருமை பெருமைகளை அறிந்து கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தானத்தை ஏற்பவனுக்கு நிச்சயம் அதன் சுமை கூடும். அப்போது அவன் தானம் ஏற்றதற்கு பரிஹாரம் செய்து கொள்ளுதல் நலம். தானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் பலரும் அறிந்ததே. கீரிப்பிள்ளை பிராமணன் ஒருவனை தானத்தை உயர்வாகப் பேசிய கதை நமக்குத் தெரியும். அதுவே சிறந்த தானத்திற்கு உதாரணம். எது இருக்கிறதோ அதையும் இழக்க மனம் துணிந்தால் அதுவே தானம்.

ரந்திதேவன் என்ற ஒரு அரசன். அவன் நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அரசனும் மக்களுக்காக வருந்தி உணவருந்தாமல் இருந்தான். மக்கள் மனம் வருந்தி, அரசனே மக்களை வழிகாட்ட வேண்டியவன், அவன் உண்ணாவிட்டால் எப்படி சாத்தியப்படும் என்று எடுத்துக்கூறி அவனை உணவருந்தச் செய்தனர். மிகுந்த வற்புறுத்தலின் பேரில் அவன் முதல் கவளம் உண்ணும் போது வேறொருவன் பசி பொருக்காது பிச்சை கேட்கிறான். அரசனும் சிறிது உணவை தானம் வழங்குகிறார். திரும்பவும் உண்ண முற்படுகிறான் இப்பொழுது பசி பிச்சை கேட்டு இன்னொருவன். இப்படியே அனைத்து உணவையும் தானம் வழங்கிவிட்டு பசிக்கு கொஞ்சமேனும் நீர் அருந்த நினைக்கிறான். அதையும் ஒருவன் இரந்து கேட்க, நீரையும் தானம் வழங்கி விடுகிறான். அதன் பின் இறைவன் கருணை உள்ளம் கொண்டு அவனையும் அவன் நாட்டு மக்களையும் அருள்வதாக புராணக் கதை கூறுகிறது. இறை தரிசனம் பெற்ற அவன் "அஷ்ட சித்திகள் வேண்டேன், பிறவா வரம் வேண்டேன், உலகில் உள்ள துன்பம் அனைத்தும் எனக்கே வந்து சேரட்டும்" என்று கேட்டுக்கொள்கிறானாம். அப்பேர்பட்ட கருணை உள்ளம் கொண்டவன்!

"நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் - இன்னும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்"


(ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா)

No comments:

Post a Comment