ஆங்கில வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் சாரதா மிஸ்.
"Can I marry u mary" asked john
"No john, you can marry me when I am 20 and you are 25"
இதற்கு அழகாய் தமிழில் விளக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பிற்கு சாரதா மிஸ் தான் வகுப்பாசிரியை. முக்கால் வாசி ஆசிரியைகள், ஆங்கிலம், தமிழ், கணக்கு என பல வகுப்பும் எடுப்பார்கள். விளக்கம் கொடுக்கும் பொழுது, பக்கத்து செக்ஷன் மிஸ் வந்து விட்டதால், சற்றே பாடத்தை நிறுத்தி, தங்களுக்குள் ஏதோ பாடம் எடுக்கும் அந்த வாக்கியத்தைப் பற்றி தமிழில் கூறி சிரித்துக் கொண்டனர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், marry என்ற வார்த்தை மட்டும், ஏதோ கெட்ட வார்த்தை என்று புரிந்தது போல் இருந்ததால், ஒருவரை ஒருவர் பார்த்து, ரகசியமாய் புன்னகைத்துக் கொண்டோம்.
என் அம்மா அப்பொழுதெல்லாம் தனி வித சிகையலங்காரம் செய்து விடுவார்கள். அதன் பொருட்டு 'லண்டன் லேடி' என்று என்னை பல ஆசிரியைகள் கூப்பிடக் காரணமாய் இருந்தது சாரதா மிஸ் தான். சாராதா மிஸ்ஸுக்கு என் மேல் தனி பிரியமா இல்லையா என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் என்னைத் திட்டியதில்லை. 'என்ன லண்டன் லேடி எதுக்கு சிரிக்கற' என்று கேள்வி எழுப்ப, எக்குத் தப்பாய் மாட்டிக் கொண்டு நான் முழித்தேன்.
'இல்லை மிஸ் சும்மா தான்.. சாரி'
அன்று நல்ல மனநிலையில் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தார்.
'சரி இதனால எல்லாருக்கும் என்ன தெரியுது? யாரானும் கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா 20 பொண்ணுக்கும் 25 ஆணுக்கும் இருந்தால் தான் செஞ்சுக்க முடியும்' என்று சொல்லி சிரித்தார். (ஏன் சிரித்தார் என்று அப்பொழுது விளங்க வில்லை!)
குறைந்தது பத்து அல்லது பன்னிரெண்டு வயது வரை, ஐந்து வருட இடைவெளி இருக்கும் ஆணை மட்டுமே ஒரு பெண் திருமணம் செய்ய வேண்டும் என்று தீவிரமாய் நம்பிக்கொண்டிருந்தேன்!
சாரதா மிஸ்ஸுக்கு ஒரு (கெட்ட?!) பழக்கம் உண்டு. எந்த மாணவனோ மாணவியோ 'தெரிலை மிஸ்' என்று சொன்னால், வெகு நக்கலாய் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவார்கள். மிச்ச மாணவ மாணவியரின் முன் அவமானப்படுத்தவும் செய்வார்கள்.இதனால்யே சாரதா மிஸ் என்றால் ஏனோ எனக்கு அவரால் விளைந்த ஒரு கசப்பான அனுபவம் தான் நினைவில் வரும்.
எங்கள் வகுப்பில் விஷால் என்று ஒரு மாணவன் இருந்தான். படிப்பில் சற்றே சுமாரான மாணவன். இதைத் தவிர அவனிடம் தவிர்க்க முடியாத விஷயம் இன்னொன்று இருந்தது. அப்பாவியாய், அசமஞ்சமாய் முகம் வைத்திருக்கும் இவன் தன் அரை டிராயரிலேயே மலம் கழித்து விடுவான். சில நாட்களில் அல்லது பல நாட்களிலும் சாரதா மிஸ் ரொம்ப அமைதியாய் அதை அணுகியிருக்கலாம். அணுகியிருப்பார்கள். நினைவில்லை.
ஒரு மதிய வேளை விஷால் மலம் கழித்திருந்தான். அவனது கை, கால்கள், சட்டை, ட்ரவுசர், பெஞ்ச் என எல்லாவற்றிலும் கறையாகி ஆகி விட, ரொம்ப எரிச்சலடைந்தார். சொல்லி களைத்துவிட்டதாலோ என்னவோ அல்லது வேறேதோ எரிச்சலின் பிரதிபலிப்பாக இருக்கலாம், அன்றைக்கு அவனை அத்தனை மாணவர்களின் முன்னிலையில் வெகுவாய் அவமானப்படுத்திவிட்டார். வகுப்பில் துர்நாற்றம் மிகுந்திருந்தாலும், சக மாணவன் என்ற முறையில், டீச்சரிடம் திட்டு வாங்குகிறானே என்ற பரிதாபத்தில் யாருமே அவனை கிண்டல் செய்யவில்லை. நாங்கள் அப்படி இருக்க, அவர் வெகுவாக கிண்டல் செய்து, மிகவும் அவமானப் படுத்திவிட்டார்.
பெயர் பெயராய் எங்களை அழைத்து, ' நீ உள்ளாடையில் மலம் கழிப்பாயா' என்று கேட்க, பலரும் அமைதியாய் இருந்தோம். ஆனாலும் வற்புறுத்தி எங்களை 'இல்லை மிஸ்' என்று கூறவைத்தார். அவன் முகம் வெகுவாய் சிறுத்துப் போனது.
சிரித்த முகத்துடன், நளினமாய் இருக்கும் சாரதா மிஸ் ஏன் அன்று அவ்வாறு அவனை சிறுமைப் படுத்தினார் என்று இன்னும் விளங்கவில்லை. பல வருடங்கள் பள்ளியில் இருந்த பொழுதும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, சாரதா மிஸ்ஸை எப்பொழுதேனும் தெருவில் பார்க்க நேரிடும். அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் விஷாலின் சிறுத்துப்போன அழுத முகமே நினைவிலாடும்.
அதன் பின் அவர்களின் அன்புக்குறிய மாணவியாக ஆக இருக்க எனக்கு மனம் வரவில்லை.
சில நேரங்களில், சில ஆசிரியர்கள்!
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)
அன்புள்ள சக்தி,
ReplyDeleteஇதை யார் வாசித்தாலும் தனது வாழ்க்கையில் கடந்து சென்ற ஓர் ஆசிரியரை, முக்கியமாக இதே போன்று மனநிலையிலிருந்த ஓர் ஆசிரியரை நினைவிற்கு கொண்டு வரும்!
தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணங்கள்!
நண்பரே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete