September 17, 2010

கிரஹணம் முதல் கிரகம் வரை (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)


சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே கோட்டில் நின்றால் அது கிரஹணம். நம் ஜாதகத்தில் நவ கிரஹங்களும் சாயா கிரஹங்களான ராகு கேது உட்பட ஒன்பதும் கிரஹ நிலைகள், athan வீர்யம், வீழ்ச்சி, உச்சம், பார்வை என பலவும் கணிக்கப்பட்டிருக்கும்.

அண்டவெளியில் என்னவெல்லாம் நிகழ்கிறதோ அது ஜீவராசிக்குள்ளும் நிகழும் என்று கூறுவதுண்டு. இதன் அடிப்படையிலேயே நம் ஜோசிய ஜாதக கணிப்புகள் அமைந்துள்ளன. எங்கோ எதிலோ அண்டத்தில் நிகழும் நிகழ்வுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்றால், அங்கு பெரிய (macro) அளவில் நிகழும் அனைத்தும் ஒவ்வொறு சிறு ஜீவராசியின் உள்ளும் சிறு அளவில் நிகழ்கிறது என்கின்றனர். "பிண்டத்துள் அண்டம்" என்பதே ஆன்மீக தத்துவமும். வேளியே வெளி ஆராய்ச்சியில் இறங்கி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பும், தன்னுள் இறங்கி ஆராயும் ஞானமும் எங்கோ எப்படியோ பின்னிப்பிணைவதே இறைத் தத்துவதின் ஆணிவேர்.

அப்படி இருக்கையில், கிரஹண நிகழ்வுகள் நம்முள்ளும் சிறிய அல்லது பெரிய மாற்றத்தை தற்காலிகமாக உண்டுபண்ணலாம். (அல்லது பண்ணாமலும் போகலாம்). கிரஹண நேரங்களில் இறைவனை தியானித்தலே சிறப்பு. மற்றபடி கிரஹண நேரத்தில் பிள்ளை பிறந்தால் அது குற்றம் ஆகாது. கிரஹண நேரத்தில் இன்புற்று இருந்து கர்பம் தரித்தால் அப்படிப்பட்ட சிசுவிற்கு தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி கர்மவினை கடுமையாக இருந்தால் ஜோதிடமும் ஜாதகமும் அதை சுட்டிக்காட்ட வல்லவை. எப்பேர்பட்ட பரிகாரமும் அதனை தடுக்க முடியாமற் போகலாம்.

கணித மேதை பாஸ்கராச்சார்யாரின் வாழ்வில் நடந்ததே இதற்கு சான்று. அவரின் பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை அறிந்து, அதனை தடுக்கும் பொருட்டு, பல ஆராய்ச்சிக்கு பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் நிகழ திட்டமிட்டிருந்தார். அக்கணத்தில் திருமணம் நிகழ்ந்தால் மாங்கல்யம் பலம் பெறும் என்று கணித்து அதன் படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று திருமணமும் குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. ஆனாலும் லீலாவதியின் கணவன் இறந்து விடுகிறான். எங்கேயோ தவறு நேர்ந்திவிட்டிருக்கிறது புரிந்தது. கடிகா / கடிகை என்பது அக்காலத்தில் நேரம் கணிக்க உதவிய கருவி. அதன் அருகில் எட்டிப்பார்த்து விளையாடிக் கொண்டிருந்த லீலாவதியின் மூக்குத்தி கடிகையினுள் விழுந்து விட கடிகையின் நேர கணிப்பு குழம்பி, தவறாகி விடுகிறது. மனித முயற்சிக்கு மேற்பட்ட கர்மவினை தான் இறுதியில் வாழ்வை வழிநடத்திச் செல்கிறது!

நம் வினையே நம்மை ஆட்டுவிக்கிறது. நம் வினையை நம் ஜாதகத்திலும், துணைவன் / துணைவியின் ஜாதகமும் மேலும் நமக்கு பிறந்த குழந்தைகளின் ஜாதகமும் சுட்டிக்காட்ட வல்லவை. பிறந்த குழந்தை நம் வினையை சுட்டிக்காட்டுகிறது. அல்லது நம் வினைக்கேற்ப சிசு பிறக்கின்றது. அது பிறந்த வேளையால் நாம் உயர்வதும் தாழ்வதும் இல்லை. அதனால் யாரையும் இராசி இல்லாதவர்கள் என்றோ அல்லது மிகுந்த ராசிக்காரர்கள் என்றோ அபிப்ராயப் படுவது அறிவீனம். அவரவர்களின் உயர்வும் தாழ்வும் அவரவரின் கர்மாவைப் பொருத்தே அமைகிறது. வினைப்பயனை வெல்லக்கூடியது பிரார்த்தனையும் இறைவன் அருளும் மட்டுமே. வினை கடுமையாக இருந்தால், மகத்தான பிரார்த்தனையும், அருளும் வேதனையை மட்டுப்படுத்த செய்யலாமேயன்றி அகற்றுவது மிகவும் கடினம். கடும் வினையின் காரணமாக பிரார்த்தனை செய்யும் மனநிலையும் இயல்பும் கூட இல்லாமல் போகலாம்.

No comments:

Post a Comment