September 08, 2010

கூடு விட்டு கூடு பாய்தல் ( சோவின் எங்கே பிராமணன் - பகுதி 2ல் இருந்து கோர்கப்பட்டது)

உடல் அநித்தியம், ஆன்மா நித்தியம், உடலானது உயிர் தங்கும் கூடு. 'கூடுவிட்டு கூடு பாய்தல்' பெரிய சித்தர்களால் ஞானிகளால் செய்யக்கூடிய சித்திகளுள் ஒன்று. இன்னொருவரின் உடல் தாங்கி நின்ற போதும், ஆன்மா வேறுபடுவதால் (நிற்க: ஆன்மா வேறுபடாது என்றாலும், தனிப்பட்ட கர்ம பதிவுகளைத் தாங்கிய ஜீவ-ஆத்மா என்று கொள்ளலாம்) நடை உடை பாவனை குணம் முதலியவை வேறுபடுவதால் தங்கியிருப்பது வேறு ஒரு ஆன்மா என்று கண்டுகொள்ளலாம்.

"கூடுவிட்டு கூடு பாய்தல்" முக்கியமாக சித்தர்கள் வரலாற்றில் சர்வசாதாரணமாய் சுட்டிக்காட்டப்படும். ஆதிஷங்கரர் இதே முறையை கையாண்டு, விடையுணர்ந்து நிபந்தனையில் வென்ற சரித்திரம் அனைவரும் அறிந்ததே. பாம்பாட்டி சித்தரும் கூடுவிட்டு கூடு பாய்ந்து சில ஞான உபதேசங்களை உபதேசித்தார். சித்தர்கள் இச்சித்தியை உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தினர் என்பது நினவில் கொள்ளத்தக்கது.

பெயருக்கேற்றார் போல் பாம்பாட்டி சித்தர், பாம்பை பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, அவைகளில் விஷத்தை சேமித்து விற்பது இதையே தொழிலாகக் கொண்டிருந்தார். பாம்புடன் பழகுவதால் அவருக்கு விஷமுறிவு மூலிகைகளெல்லாம் அத்துபடி. அவ்வூரில் பாம்பு கடிக்கு சிறந்த வைத்தியராகவும் திகழ்ந்தார். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இறங்கினார். மருதமலைப் பகுதியில் விஷவைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றும் துவங்கினார்.

ஒரு சமயம் நவரத்தின பாம்பு ஒன்று மருதமலைப் பகுதியில் வசிப்பதாகவும், அதன் நஞ்சு மிகப்பெரிய சித்து வித்தைகளைச் செய்யும் திறன் கொண்டது என்றதால் அதனை பிடிது விட உறுதிபூண்டு மருதமலைக் காட்டிற்கு சென்றார். இவர் தேடும் பணியில் மும்முரமாக இருக்கும் தருவாயில், பலத்த சிரிப்பொலியுடன் பிரகாச உருவம் தாங்கி சட்டை-முனி சித்தர் பாம்பாட்டி சித்தர் முன் தோன்றினார்.

இவர் பாம்பை தேடுவதைப் பார்த்து சிரித்தபடி, "நவரத்தின பாம்பை நீயே உனக்குள் வைத்துக்கொண்டு வெளியே தேடுகிறாயே இது பயனற்ற செயல்தானே" என்றார்.

"மிகுந்த உல்லாசத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு பாம்பு உன் உடலுக்குள் குடியிருக்கிறது (பாம்பாக உருவகப்படுத்துவது உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி ஷக்தியை) , உன் உடலில் மட்டுமன்றி எல்லோர் உடலிலும் குடியிருக்கிறது, உன் உடம்புக்குள் இருக்கும் அப்பாம்பை ஆட்டுவிப்பவன் தான் அறிவாளி. அதனை அடக்கி ஆளக்கூடியவர்கள் தான் சிறப்பு மிக்க சித்தர்கள் எனவே வெளியில் இருக்கும் அந்தப்பாம்பை விட்டு விட்டு, உன்னுள் இருக்கும் இந்தப்பாம்பை அடக்க வழி தேடு" என்று அருள் கூர்ந்தார். மேலும், 'இறைவனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும், குண்டலினி விழித்து எழும், தியானம் சித்திக்கும்ம். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே' என்கிறார்.

பாம்பாட்டி சித்தர் பக்குவம் அடைந்து இனி இப்பாதையை விட்டு விலகாத யோகம் பயில்வேன் என்று உறுதிபூண்கிறார்.

"அப்பொழுதும் நீ பாம்புகளை பிடித்துக்கொண்டிருந்தாய், இப்பொழுதும் சூட்சுமமான பாம்புகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளாய் எனவே நீ இப்பொழுதும் பாம்பாட்டி தான்" என்று அருளி மறைந்தார் சட்டை முனி சித்தர்

ஒரு ஊரில் இறந்து போன மன்னனைச் சுற்றி மனைவி சுற்றத்தார் அழுது புலம்பிக்கொண்டிருந்தனர். கொடுங்கோலாட்சி புரிந்த தீய நடத்தை கொண்டிருந்தவன் மன்னன். அப்படியும் மக்கள் அவன் மேல் வைத்த பாசம் ஆச்சரியம் தந்தது. அவனை நல்லவனாக்கி நடமாடவிட்டு, நல்ல உபதேசம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, தன் உடலை பத்திரப்படுத்திவிட்டு, இறந்து போன பாம்பு ஒன்றை அரசன் உடலில் விசிறியடிக்கிறார். மக்கள் எல்லோரும் பீதியுடன் விலக அரசி மட்டும் உடலை விட்டு நகராது நிற்கிறார். அதன் பின் அரசன் உடலில் சித்தர் புகுந்து கொண்டார்.

பாம்பு தான் அரசனை கொன்றுவிட்டது என்று அதனை அடிக்க மக்கள் புறப்படுகின்றனர். அரசன் உடல் தாங்கி எழுத சித்தர் "செத்த பாம்பை ஏன் அடிக்கிறீர்கள்? என்று அதனை தடவி கொடுத்து " பாம்பே நான் எழுந்து விட்டேன், நீயும் எழுந்திரு" என்றார்.

ஆடு பாம்பே என்று பாம்பை ஆட்டுவித்து தத்துவங்கள் நிரம்ப பாடல் பாடுகிறார். அரசிக்கு வந்திருப்பது வேறு ஒரு நபர் என்ற
சந்தேகம் உதித்தது.

நாடுநகர் வீடு மாடு நற்பொருள் எல்லாம்
நடுவன் வரும்போது நாடிவருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னே?
கூத்தன் பதங்குறித்தி நின்று ஆடு பாம்பே


முக்கனியும் சக்கரையும் மோதகங்களும்
முதிர்சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாக கண்டோமென்று ஆடு பாம்பே

(பாடல் எளிமையாய் இருக்கிறது. self explanatory ) செல்வமும், புகழும், படை பலமும், இறப்பும் காலனும் தேடி வரும் போதும் கூட வருமோ? கூடு விட்டே ஆவி பொனால் அவற்றின் பயன் தான் என்ன என்று ஆடு பாம்பே (கூத்தன் பதம்: ? இங்கு சிவனை அவனின் புகழைக் குறிக்கிறதா அல்லது சிற்றறிவு கொண்டு கூத்தாடும் மாநதரைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை...any takers? )

முக்கனி சக்கரை பத்து வகை பட்சணங்கள் உண்ட வாய், இப்போது மண்ணைக் கவ்வும் நிலை குறித்து, உடலின் நிலையற்ற தன்மை நினைந்து எழுதாடு பாம்பே என்பது குத்துமதிப்பான விளக்கம்.

ஆதி சங்கரர் அருளிய பஜகோவிந்த வரிகள் நினைவிற்கு வருவதை தவிர்க முடியவில்லை.

மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

ஞான உபதேசங்கள் தொடர்ந்து பாடிய வண்ணமிருக்கிறார். அதன் பின் சந்தேகம் உதித்த அரசிக்கும் தான் யார் என்று கூறி நல்லுபதேசம் செய்து மீண்டும் தன் உடல் கொண்டார். பல அறிவுரைகளும் தத்துவ உபதேசங்களும் செய்த வண்ணம் தன் வாழ்நாள் தொடர்ந்தார். தேடிப்போய் உபதேசித்தும் இந்த அறிவிலி மக்கள் திருந்துவதில்லையே என்று வருந்திய் சித்தர், யார் கண்ணிலும் படாமல் மறைந்தார்.

திருமூலர் என்ற சித்தரும் கூடுவிட்டு கூடுபாய்ந்ததாக சொல்லப்படுகிறது. திருமூலர் கைலாய பரம்பரையை சேர்ந்தவர். சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனனாகிய மூலன் பசுக்கள் மேய்த்து வந்தான். அவன் வாழ்நாள் முடிந்த வினையால் உயிர் நீங்கி நிலத்தில் வீழ்ந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி கதறி வருந்தின. இதனைக் கண்ட திருமூலர் பசுக்களுக்காக மனம் நெகிழ்ந்து அவன் உடல் கொண்டார். பசுக்களை மேய்த்து தத்தம் இடத்தில் அனுப்பிய பின், தனித்து நின்று கொண்டிருந்த திருமூலரை மூலன் மனைவி கண்ணுற்றாள். விரும்பி வீடு அழைக்கும் அவளுக்கு தான் மூலன் அல்ல என்றும் அவன் விதி முடிந்து இறந்து விட்டான் என்ற உண்மை திருமூலர் கூறியும் உரைத்தபாடில்லை. தன் கணவனுக்கு புத்தி தடுமாறியதென்று ஊரைக் கூவி அழைத்து, அவனை தன்னுடன் இருக்குமாறு அறிவுரை வழங்கச் செய்கிறாள். தன்னுடலைத் தேடி அதனுள் புகுந்து உண்மையை உணர்த்தி இவ்வுடலை செய்யலற்றதாக்கி தன்னை யார் என்று நிரூபித்தார். உண்மை உணர்ந்த சான்றோர் மூலன் மனைவியைத் தேற்றி அவளை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

அதன் பின் அவருக்கு எங்கு தேடியும் தன் பழைய உடல் தென்படவில்லை. மூலன் உடலிலேயே நிரந்தரமாகத் தங்கி விட நேரிடுகிறது. உலகத்தோர் உய்யும் பொருட்டு க்ரியை, ஞானம், சரியை, யோகம் என்று நால்வகை நன்னெறிகளும் விளங்கும் திருமந்திரம் என்னும் நூல் வழியாக ஓர் ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் வழங்கியுள்ளார். பின்னர் இந்நூல் நிறைவுற்றதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இறைவன் திருவடி அடைந்தார்.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நென்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே

- திருமந்திரம்.

உயிர்கள் அனைத்தும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன், என்று நினைப்பவருக்கு மரணமில்லை i.e. அவர்கள் இறவாத்தன்மை அடைந்து விடுகின்றனர். இந்த எண்ணத்தில் நீர் நிலைபெற்று நின்றால் அதுவே முக்திக்கு வழி. வேறில்லை என்பது தோராயமான பொருள்.


(நன்றி: சி.எஸ் முருகேசன் அவர்கள் எழுதிய பதினெண் சித்தர் வரலாறு )

(தொடரும்)

3 comments:

  1. பதினெட்டு சித்தர்கள் பற்றியும், படித்து தெரிந்து கொள்ள ஆசை...

    இந்த பதிவில் :

    பாம்பாட்டி சித்தரை பற்றிய விபரங்கள் நன்றாக தரப்பட்டுள்ளது...

    மற்றவர்களை பற்றியும் பதியுங்கள்... படிக்க ஆவலுடன் உள்ளேன்...

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி கொபி.:)

    இத்தொடரில் தரப்பட்ட செய்திகளை இன்னும் தொகுத்து முடிக்கவில்லை. அதன் பின், எனக்குப் பிராப்தம் இருந்தால், மற்ற சித்தரைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.. திருச்சிற்றம்பலம்💐💐💐

    ReplyDelete