December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் end of part1 (தொலைந்து விட்ட உண்மை பிராமணன்)

தேடலின் முடிவு தான் என்ன? இன்றளவும் 'உண்மை பிராமணன்' என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் எவரேனும் இருக்கின்றனரா? ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. வர்ண முறைப்படி இன்று பிராமணன் மட்டுமல்ல எவருமே வாழவில்லை என்பதே உண்மை.

பிராமணன் என்பவன் பிரம்ம ஞானத்தை தேடுபவன். அவன் ஒவ்வொரு காரியமும் அதனை நோக்கி அதன் பொருட்டே செய்யப்படும்.

க்ஷத்திரியன் என்றால் உலகை நாட்டை மக்களைக் காப்பவன். க்ஷத்ரம் என்றால் வலிமை. அதை சரியான வழியில் மட்டுமே பயன்படுத்தி முறையாக பாலிப்பவன் உண்மை க்ஷத்திரியன்.

வைசியன் என்பவன் நியாயமான முறையில் வாணிபம் தொழில் அல்லது விவசாயம் செய்து பொருளீட்டி வருபவன்.

சூத்திரன் என்பவன் பிறர் துன்பத்தை பொறுக்காதவன் என்று பொருளாம். அதனாலேயே அவனுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் இயல்பில் அமைகிறது.

தற்கால மனிதர்களை எந்த பிரிவில் சேர்ப்பது? யார் சுயநலமற்று சிந்திக்கிறார்கள்?


இப்பூவுலகில் இன்றளவும் வாழ க்ருஹஸ்தனுக்கு வேறு வழிகள் உண்டோ? நாளைய சோற்றைத் தேடி, வாழ்வைத் தெடி, தனக்கென இல்லாவிடினும் பிள்ளைகளின் வளத்தைப் பெருக்க பந்தங்களால் கட்டுண்டு இயலாமையால் மீண்டும் மீண்டும் பணத்தை நோக்கியே நம் ஓட்டம் திசை திருப்பப்பட்டிருக்கிறது.

எனக்கென ஒரு குடிசை போதும், பிறர் நலனுக்காக பிரார்த்தனை செய்து வாழ்கை வாழ விரும்புகிறேன்। எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு பிடி சோறு, உடுத்த இரு மாற்றுத் துணிகள்। இப்படி சிந்திக்கவும் சிலர் இருக்கின்றனர். ஆனாலும் அச்சிந்தனை கணநேரத்திற்கு மேல் நீடிப்பதில்லை. நம் வாழ்வை நாம் நிர்ணயிக்க முடிவதில்லை. நமக்கென குடும்பம் இருக்கும் பொழுது பிணைப்பிலிருந்தும் பொறுப்பிலிருதும் விடுபட முடிவதில்லை. நம் பிள்ளைகளுக்கு வேதம் கற்பித்து, நெல் பொறுக்கி உண்ணவும் உஞ்ச விருத்தி செய்து வயிறு நிரப்பவும் சொல்லிக்கொடுக்க முடிவதில்லை.
பிறர் நலன் கருதி யாகமும், தவமும், பூஜைகளும் ஹோமங்களும் செய்து வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு அக்காலத்தில் மதிப்பு இருந்தது. முறைகளை க்ரமப்படி செய்து, அத்தனை உயிர்களின் உயர்வுக்கும் நல்வாழ்வுக்கும் வழி வகுத்தனர். உலக நலன் கருதினர். அனைவரும் உய்யவேண்டி தம் திறமையை, கல்வியை ஞானத்தை செலவிட்டனர். அப்படிப்பட்ட பிராமணனுக்கு உணவிடுதலை கர்மமாக செய்து வந்தனர். அவர்களுக்கு தானம் தருவதை பாக்கியமாகக் கருதினர்.

http://www.vhp-america.org/whatvhpa/sanghatanmantra.htm

இவை மட்டுமல்லாது, சமப்பார்வையும், தவமும், பொறுமையும், தானமும் சீலமும், இந்தியங்களை அடக்குதலும் அவர்கள் இயல்பாய் இருந்தன. இப்பேற்பட்ட மனநிலையும் குணமும் இன்றைக்கு யாரிடம் இருக்கிறது? ஒரு க்ருஹஸ்தனால் அப்படிப்பட்ட வாழ்கை வாழ்வது கடினம். சேமிப்பு சிறிதும் இன்றி, ஒருவன் வாழ முற்படுவானேயானால் அன்ன ஆகாரமின்றி தெருவிலல்லவா நிற்பான்?

உண்மை பிராமணாக இருக்க விடாமல் எது செய்கிறது? யார் காரணம்? "காலத்தின் கட்டாயங்கள் மாறி வருகிறது" என்பதே நமக்கு நாமே கூறிக்கொள்ளக்கூடிய சமாதானம். குறைந்தது 'இருக்க இடமும், உடுக்க உடையும் அடுத்த வேளைக்கு சோறும்' சேர்த்து வைக்கும் கட்டாயத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம். சன்யாசம் வாங்கியவன் கூட இன்றைக்கு அடுத்த வேளைக்குறிய உணவேனும் செமிக்காமல் இருப்பதில்லை. எல்லாவற்றையும் பணமாக மட்டுமே பார்க்கிறோம், மாற்றுகிறோம், பெறுகிறோம். திறமையை, சேவையை,

உழைப்பை, கல்வியை, நியாயத்தை, நீதியை, ஏன் அறிவைக் கூட விற்று பணமாய் மாற்றிக்கொள்கிறோம். அதுவும் சில நேரங்களில் நியாயங்களுக்கு உட்பட்டு, சிலநேரங்களில் அதையும் தாண்டி.

நாம் எல்லோரையும் இன்றைக்கு ஒரே வர்ணமாக ஒன்றுபடுத்திக்கொள்ளலாம். நாம் எல்லோரும் இன்று வைச்யர்களாக மட்டுமே வாழ்கிறோம் (நியாயமான பணம் ஈட்டினோமேயானால்) .

'உண்மை பிராமணனை' இன்றும் தேடித் தேடி அலைகிறோம். நம் காலடித்தடங்கள் பூவுலகமெங்கும் 'எங்கே பிராமணன்' என்று ஒலித்தவண்ணம் இருக்கிறது. இன்று வரை அப்படிப்பட்டவன் தென்படவேயில்லை

2 comments:

  1. அருமையான பதிவு.

    பலர் உள்ளக் கிடக்கைகளை பிரதிபலிக்கும் வரிகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தும்பி :)

    ReplyDelete