December 14, 2009

சொ-வின் எங்கே பிராமணன் part1 (மனத்தின் வலிமை)

மனதால் நினைக்கும் நினைவுகளுக்கு அத்தனை பலன்கள் உண்டு. இறைவனை குறித்து மனசு, இந்திரியம், வாக்கு, புத்தி, ஆன்மா ஆகிய எல்லாவற்றாலும் தியானிப்பது மெத்த சிறந்தது.

காயேன சா மனசேந்திரியைர்வா புத்யாத்மனாவ ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி


என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியில் வரும்.

காயத்தால் - (உடலால்) மனசால், இந்திரியங்களால் புத்தியால் ஆன்மாவால் நான் செய்யும் ஒவ்வொன்றும் நாராயணனுக்கே சமர்பணம். எல்லாவற்றாலும் முடியாது போனாலும் சரீரத்தால் செய்யலாம். மனம் எங்கோ லயிக்க பூஜையறையில் வீற்றிருப்பது இவ்வகையைச் சாரும். மனம் இன்னும் சூஷ்மமானது என்பதால் மனதால் நினைப்பது விசேஷமானது. மனதால் நினைப்பவன் சரீரத்தால் செய்பவனைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறான். மனதால் நினைக்கும் நினைவு சரீரத்தால் செய்யும் செயலை விட சக்தி வாய்ந்தது.

ருக்மிணி க்ருஷ்ணனை முதலில் மனதால் தன் கணவனாக வரித்தாள். அப்படி மனதால் ஒருவனின் பார்யை ஆனவளுக்கு திருமணம் செய்விப்பது அக்கால வழக்குகளில் பெரும்பாலும் இல்லை. அப்படி செய்வித்தாலும் அது செல்லாது. மனத்தின் நினைவுகளுக்கு அவ்வளவு மதிப்பும் மகத்துவமும். நம்மில் சிலர் சொல்ல கேட்டிருப்போம், "மனதாலும் தீங்கு நினையாதே" என்று. மனதால் ஒருவனை தூஷித்தால், த்வேஷம் வளர்த்தால், அது சரீரத்தால் அவனிடம் பகை செலுத்துவதற்குச் சமம். அதனினும் வீர்யம் அதிகம்.

ஒரு முறை அர்ஜூனன் வேறுலகம் செல்கிறான். அங்கே மலையாய் குவிந்திருக்கும் பூக்களைக் காண்கிறான். அவையெல்லாம் பீமன் சிவனைத் துதித்து அர்ச்சித்தப் பூக்கள் எனத் தெரிந்து கொள்கிறான். பீமன் பூஜித்தே கண்டறியேன் அவன் பூஜைக்கு எப்படி இவ்வளவு மலர்கள் குவிந்திருக்கின்றன என அர்ஜுனன் மலைத்துப் போகிறான். தினமும் பூஜிக்கும் என் பூக்கள் இங்கே வந்து சேர்ந்தனவோ என தேடிய அவனுக்கு கைநிறைய பூக்கள் மட்டுமே கிட்டின. இது எப்படி சாத்தியம்? என்றால், இதற்கு கிடைக்கும் பதில் மனத்தின் ஆழத்தையும் அதன் ஆற்றலையும் நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. பீமன் சதா மானசீகப்பூஜை செய்பவன். நித்தியமும், ஒவ்வொரு நொடியும், மனதால் இறைவனை நினைத்தபடி தன் வேலைகளை செய்து கொண்டிருப்பவன், அவன் செய்த பூஜையின் தரம் உயர்ந்திருப்பதால் அதன் பலனும் உயர்ந்திருக்கிறது.

'மனம் எவ்விதம் லயிக்கிறது என்பதே நம் கர்மாக்களையும் கர்ம பலன்களையும் தீர்மானிக்கிறது. தாசி வீட்டிற்கு போன ஒரு நண்பனும், கீதை காலேக்ஷபம் கேட்ட இன்னொருவனின் மனநிலையும் குறிப்பிட்டு சொல்லும் பிரபல கதை நமக்குத் தெரியும். அதைப் போல் இன்னொரு கதையை சோ பகிர்ந்து கொண்டார்.

"நிச்சனமாய் வாழும் இந்த சன்யாசியைப் போல் நான் பகவான் நாமத்தை உச்சரிக்க முடியவில்லையே" என்று வருந்து தாசிக்கு உயர்கதியும், "அட என்ன பிறப்பு இவள், அழகை வைத்துக்கொண்டு தாசி பிழைப்பை நடத்துகிறாளே", என்று அவளைப் பற்றியும், அவள் வாழ்கையைப் பற்றியும் சிந்தித்த துறவி ஒருவன் உயர்கதி அடையாமல் போகிறான்.

மனத்தால் இறைவனை ஆராத்ப்பதை விட சிறந்தது ஏதுமில்லை என்று பூசலார் எனும் நாயன்மாரின் கதையும் எடுத்துரைக்கிறது। அவர் இறைவனுக்கு சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப ஆவல் கொண்டார். எனினும் அவரிடம் பணமோ படையோ மக்கள்பலமோ இல்லையே என வருந்தினார். அதனால் மனதாலேயே ஆலயம் எழுப்ப தீர்மானித்து தொடர்கிறார். நாளொரு முன்னேற்றமாக மனதாலேயே செங்கல் அடுக்கி, சிற்பங்கள் செதுக்கி, கோவில் எழுப்பி, நல்ல நாளில் இறைவனை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யவும் தீர்மானிக்கிறார். இத்தனையும் எழுப்பியது அவர் மனதில். பல்லவ அரசனின் பெரியதாய் கோவில் எழுப்பியிருந்தார், அதே தேதியில் அரசன் எழுப்பிய கோவிலுக்கும் அதே கும்பாபிஷேகம் ஏற்பாடாகியிருந்தது. இறைவன் அரசனின் கனவில் தோன்றி 'நீ எழுப்பிய கோவலில் கும்பாபிஷேக தினத்தில் நான் இருக்க மாட்டேன், என் பக்தன் எழுப்பிய கோவலில் எழுந்தருள எண்ணியிருக்கிறேன்' என்று கூறுகிறார். அப்பேற்பட்ட கோவிலை காண ஆவல் மேலிட்டு, அரசர் பூசலாரை தரிசிக்க வருகிறார். அதன் பின் மனதால் எழுப்பிய கோவிலின் பெருமையை உணர்ந்து நெகிழ்ந்து போகிறார். பூசலாரோ, இறைவனின் கருணையை எண்ணி நெகிழ்கிறார்.

இன்றும் திருநின்றவூர் அருகே பூசலாரின் பெருமையை நினைவு படுத்தும் வகையில் ஒரு கோவில் எழுப்பியுள்ளனர். அதன் சந்நிதியில் சிவபெருமான், "ஹ்ருதலாயேஷ்வரராய்" எழுந்தருளியிருக்கிறார். இருதய நோய் இருதயம் தொடர்புடைய வியாதி உள்ளவர்கள் இன்றும் அங்கு சென்றால் நிவாரணம் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

No comments:

Post a Comment