December 14, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 ( நாளைக்கென சேமிக்காத ஞானி)


பணக்காரனுக்கு உள்ள துன்பங்கள் சொல்லி மாளாது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. கட்டிக்காக்கும் பொறுப்பு இருக்கையில், அதைப் பற்றிய பயமும் அதிகரிக்கும். பணக்காரர்கள், தம் நண்பர்கள் -பகைவர்கள் - உறவினன் என எல்லோரையும் பயத்துடனேயே நெருங்குகின்றனர். என்றைக்கேனும் தனதென்று வைத்துள்ளது தம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் நிறைந்த வாழ்க்கை. "மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்" என்ற தொன்மை மிகுந்த கூற்றை இங்கு அப்படியே with literal meaning பயன்படுத்திக்கொள்ளலாம்.

சேமித்து வைத்து அதை தனதென்று உரிமைக்கொண்டாடி, பயத்துடன் கட்டிக்காப்போனுக்கு தேனி கதை பொருந்தும். தேனி சிறுக சிறுக சேமித்து கூட்டைக் கட்டும், ஒரே நாளில் அதை அழித்து அதன் பலனை இன்னொருவன் கொண்டு சென்றுவிடுவான். சேகரித்து சேமித்து வைக்கும் பணக்காரன் நிலையும் இது தான். இவ்வுலகில் எதுவும் சாஸ்வதம் அல்ல. தேவைக்கு அதிகமாக சேர்க்காத மலைப்பாம்பு, இரை அருகில் வந்தால் உண்ணுமாம். பசி நேரத்தில், தேவையான அளவு கிடைத்த பொழுது கிடைத்த உணவை உண்ணும் மலைப்பாம்புக்கு வேறு அனாவசிய கவலைகள் இருக்க வாய்ப்பில்லை.

உயர்ந்த ஞானிகளும் தமக்கென சேமித்து வைப்பதில்லை.



பட்டினத்தாரும் தனக்கென சேமிக்காமல் யாசகம் கேட்டு கேட்டுச் செல்கையில், அவருக்கு திருட்டுப் பட்டம் கட்டிவிட்டனர். மனம் வருந்தி, 'உணவு எனைத்தேடி வந்தால் உண்பேனே ஒழிய, இளைத்தாலும், நான் இனி உணவைத் தேடிச் செல்லமாட்டேன் என வைராக்கியம் பூண்கிறார். பட்டினத்தார் எப்பேர்பட்ட ஞானி என இன்று நாம் பேசிக்கொண்டாலும், அவர் வாழ்ந்த காலகட்டத்தில், அவரை இகழ்ந்தவர்களும், பைத்தியக்கார பட்டம் கட்டியவர்களும் அதிகம்.

ஒருமுறை பட்டினத்தார் வயல்வரப்பில் கையை தலைக்கு அணையாக வைத்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்। அவ்வழியே கடந்து சென்ற இரு பெண்டிரில் ஒருவர், "இவரெல்லாம் என்ன ஞானி! உறங்கும் போதும் சுகம் வேண்டியிருக்கிறது பார், கையை தலைக்கு அணையாக்கி உறங்குகிறார்" என்று இன்னொருத்தியிடம் சாடை பேசுகிறாள். "அப்படி பேசாதே அவர் உண்மையில் பெரிய ஞானி" என்று மறுத்துரைக்கிறாள் மற்றொருத்தி. உடனே பட்டினத்தாருக்கு மனம் வெம்பியது.'ஆஹா நம்மால் இன்னும் சரீர சுகத்தை துறக்கமுடியவில்லையே என்று வருந்தி, இனி இதுவும் வேண்டுவதில்லை என கையையும் விடுத்துப் படுத்தார். மீண்டும் அவ்வழியே திரும்பச்சென்ற அப்பெண்டிரில் இன்னொருத்தி "பார்த்தாயா நீ கூறியதும் அதையும் துறந்துவிட்டார்" என்று சொல்ல, முதல் பெண் "இன்னொருவர் சொல்வதைக் கேட்டு, அதனால் பாதிக்கப்பட்டு, தன் போக்கை மாற்றிக்கொள்ளும் இவரெல்லாம் ஞானியா" - அலட்சியம் பேசிச் செல்கிறாள். இக்கதையில் வரும் இரு பெண்டிரும் உமையும் சிவனுமே ஆவார்கள் எனக்கூறுவர். சுரீரென உறைத்தது பட்டினத்தாருக்கு. "உலகத்தோரின் பேச்சுக்கு தன் மனம், செவி சாய்த்து அதனால் பாதிக்கப்படுகிறதென்றால், எப்பேற்பட்ட அஞ்ஞானத்தில் உழன்றுகொண்டிருக்கிறோமே, இன்னும் எத்தனைப்படிகள் ஞானத்தை நோக்கி செல்லவேண்டுமோ" என மறுகுகிறார்.

இயல்பான மனநிலையைத் தாண்டிய plane or சிந்தனை ஓட்டம் உடையவர்களுக்கு பொது ஜனத்துடன் பழகுதல், இருத்தல், அவர்களுடன் லௌகீக விஷயங்களில் ஈடுபட்டு இன்புறுதல், இதெல்லாம் மிகக்கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஞானநிலையை எய்திவிட்டால், அவர்கள் பொது ஜன மனஓட்டத்துக்கு கீழிறங்கி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆச்சார்யர்களாக, குருக்களாக, மஹான்களாகத் திகழ்கின்றனர். வேறு சிலர், காடுகள் மலைகள் என தனிமையைத் தேடி, அங்கு சித்தர்களாக வாழ்ந்து நித்யானந்தம் அனுபவிக்கின்றனர்.

உலகத்தோடு ஒட்டொழுகல் கடினம் என்பதாலேயே, ஞான நிலையை நோக்கி படிகள் எடுத்து வைப்பவன், பெரும்பாலும் தனிமையை நோக்கியே பயணிக்கின்றனர்.

இப்படிப் பட்டவர்களின் மனநிலையை பாரதியார் எவ்வளவு அருமையாய் இரண்டே வரிகளில் அடக்கிவிட்டார்!


சொல்லடி சிவஷக்தி எனைச்
சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்!
வல்லமை தாராயோ இந்த
மானிலம் பயனுற வாழ்வதற்கே!

No comments:

Post a Comment