December 20, 2009

எங்கே பிராமணன் பாகம் இரண்டு - பகுதி 3/4 (ஆழ்வார் பாசுரங்கள்)

நம்மாழ்வார் இராமனின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. "உள்ளே யாரையும் அனுமதியாதே" என்ற இராமனின் ஆணையை மீறி லக்ஷ்மணன், துர்வாச முனிவரின் கோபம் நாட்டையே சீரழித்து விடுமோ என அஞ்சி, அவரை மட்டும் அனுமதிக்கிறான். சொல் மீறி செயல்பட்டதால் புளியமரமாய் பிறப்பெடுப்பாய், என்று ராமன் லஷ்மணனை சபித்துவிடுகிறான். 'உன் மரத்தின் நிழலிலேயே நானும் வந்து இருப்பேன்' என்று இராமன் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்படுகிறது. நம்மாழ்வார் சரித்திரத்தில், அவர் பிறப்பே அன்னாரின் தனித்துவத்தை சுட்டிக்காட்ட வல்லதாய் உள்ளது. பிறந்தது முதற்கொண்டு ஜீவன் மட்டுமே தாங்கி அசைவின்றி இருந்த குழந்தை, முதன் முதலில் அசைந்து நகர்ந்து சென்றது கோவிலின் அருகில் இருந்த ஸ்தலவிருஷமான புளியமரத்தடியிலே என்கிறது வரலாறு. ஆன்மதாகம் பெருக்கெடுத்து குருவை தேடி அலையும் மதுரகவி ஆழ்வாரின் சந்தேகத்தை நம்மாழ்வார் முதல் முதலில் திருவாய் திறந்து, தீர்த்து வைத்தார். சரீரத்தில் கட்டுண்ட ஆன்மாவின் கதியைப் பற்றி மதுரகவி ஆழ்வார் கேள்வி எழுப்ப அதற்கு பதினாறு வயது நிரம்பிய பாலகனாம் நம்மாழ்வார் முதன்முதலாய் வாய்திறந்து பதிலுரைததாய், 'நம்மாழ்வார் சரித்திரம்' தெரிவிக்கிறது.


உரைக்க வல்லேன் அல்லேனுன்
உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்?
காதல் மையல் ஏறினேன்,
புரைப்பி லாத பரம்பரனே.
பொய்யி லாத பரஞ்சுடரே,
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த யானும் ஏத்தினேன்


என்பது நம்மாழ்வார் பாசுரம்.

உன் பெருமையிலும், கீர்த்திலும், மூழ்கி கிடக்கும் நான், உன் பெருமையை, சிறப்பை, தனித்துவத்தை எவ்வாறு கூறுவேன்? உன்னைப் பற்றி கூறும் திறமை எனக்கு இல்லை. உன்னிடம் கரைகாணா அன்பு கொண்டிருக்கிறேன், சத்தியமானவனே, உன்னை மேன்மக்களும் அறிஞர்களும் ஞானிகளும் துதி செய்ய, அவர்களுடன் சேர்ந்து, அவர்களைப் பார்த்து, அவர்களுள் ஒருவனாய் நானும் உன்னை துதிசெய்கிறேன். என்று தோராயமாய் பொருள் கொள்ளலாம்.

குற்றமற்றதாய் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை தனியொருவனாய், மானிட உருவில், ஒரு கட்டுண்ட ஜீவன் எவ்வாறு விளக்க முடியும்! பரம்பொருள் பெரும் கடல் என்றால் நாம் ஒரு துளியல்லவா, அதனின் குணங்களையும், நிர்குணங்களையும் தனியொருவனாய், தனியொரு துகளாய் சொல்லும் வல்லமை யாருக்கு உள? உயர்ந்தவர்களும் அறிஞர்களும் உன் புகழ் பாட, அந்த கோஷத்தில் நானும் ஒரு துளியாய் கலந்து கொள்கிறேன் என்று சொல்வதாய் உணரலாம். துகளிலும் துகள் நான், உன் பெருமை நான் எவ்வாறு கூறுவேன் எனும் போதே, அஹங்காரம் அடிப்பட்டு போவதைக் காண முடியும். நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையானவராய் கருதப்படுகிறார்.

திருமங்கையாழ்வாரின் சரித்திரமும், தொண்டரடிப் பொடியாழ்வாரின் சரித்திரமும், நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம், சரித்திரம் படித்திராவிடினும் கூட, "திருவருட்செல்வர்" எனும் திரைப்படத்தில், நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய கதாபாத்திரங்கள்.

திருமங்கையாழ்வாரை இறைவன் பணிசெய்ய முதலில் தூண்டுவது அவர் மனைவி. அதன் பின் அவர் இறைவனே கதியென கிடப்பதும், இறைவனினுக்கு ஆலயம் எழுப்ப, வலியோரிடம் திருடி பொருளீட்டுவதைக் கூட நியாயப்படுத்தியும் வந்திருக்கிறார். இறைவனும் இறைவியும் சாமான்யர்களாய் இவர் முன் பொருள் பறிகொடுத்து, பின் இவரின் அறிவீனத்திற்கு பாடம் புகட்டியதாய் கதை உண்டு.

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள்மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனது அடியே சரணமே


என்று இவர் பாடிய பாசுரத்திற்கு,

கருமையான வண்ணம் (நீல) வண்ணம் உடையோனே! கனல் வடிவானவனே! நீர் வடிவானவனே! மலை மேனி உள்ளவனே, பல வடிவுகள் உள்ளவனே, மலர்மகள் வாழும் சிறுபுலியூரில் ஜல சயனதிதில் உறைபவனே! அருட்கடல் அமுதே! உன் அடியே ஷரணம். என்பது விளக்கம்.

விஷ்ணுவின் சிறந்த பக்தர் ஒருவர் இறைவனின் துதி மறந்து தேவதேவி எனும் தாசியின் மயக்கத்தில் கிடந்து, பின் மீண்ட கதை தான் விப்ரநாராயணர் தொடரடிப்பொடியாழ்வார் ஆன கதை. இறுதியில் இறைவன் இவர்களின் பழி அகற்றி, ஆட்கொள்கிறார். அதன் பின் தொடரடிபொடியாழ்வார் என பெயர் கொண்டு நிறைய பாசுரங்கள் பாடி இறைவனின் சேவையில் ஈடுபடுகிறார்.பழி அவரைச் சூழ்ந்து வாழ்வு இருண்டிருந்த பொழுது அவர் எழுதிய பாசுரம்:

ஊர் இலேன், காணி இல்லை, உறவு மற்று ஒருவர் இல்லை;
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே! என் கண்ணனே! கதறுகின்றேன்;
ஆர் உளர் களைகண்? அம்மா! அரங்க மா நகருளானே!


எனகென்ன சொல்லிகொள்ள உறவோ, ஊரோ, நிலமோ நாதியோ இல்லாதவன். (எவ்வகை ஆதரவும் இல்லாதவன்) இப்பூவுலகில் பரம்பொருளே உன் பாதம் ஒன்றையே பற்றியிருக்கிறேன். உன் பாதம் ஒன்றே எனக்குத் துணை. கருமை நிறம் கொண்ட என் கண்ணனே! நான் கதறுகிறேன். அரங்க மா நகரத்தில் உறைபவனே என் குறை தீர்க்க யார் உளர்? என உருகுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.


இதெல்லாம் ஏன் திடீரென்று? என்றால், சார்யார் தனது மகனின் பொறுப்பற்ற நடத்தையைப் பற்றி கவலையோடு சிந்தித்தவண்ணம் பாசுரங்களை பாடி இறைவனிடன் குமுறுகிறார். அப்பாசுரங்களும் அதனின் ஆழ்ந்த விளக்கங்களும், அதனைத் தொடர்புடைய சில தகவல்களும் சோ அவர்களால் விளகப்பட்டன.

இன்றைய தொடரில் விவாகரத்து அதிகரித்து விட்டதைப் பற்றி சாம்புவும் வேம்புவும் பேசிக்கொள்வதாய் காட்சியிருந்தது. போன தலைமுறை வரை அமைந்திருந்த கூட்டுக்குடும்ப வாழ்வில், தம்பதிகளுக்குள் அவ்வப்போது எழும் சிறு சிறு சச்சரவுகளும் பெரியோர்களால் தீர்க்கப்பட்டுவிட்டதால், 'விவாகரத்து' என்பதே அதிகம் சிந்திக்கப்படாத விஷயமாய் இருந்தது. இன்றைக்கு இதே அறிவுரைகளை பணம் வாங்கிக்கொண்டு 'marriage counselling' என்ற பெயரில் மூன்றாம் மனிதர் தலையிட்டு சரி செய்ய முயல்கிறார் என அங்கலாய்க்கின்றனர். இதனைப் பற்றி சோ கருத்து தெரிவிக்கையில், பண்டைய காலத்திலும் விவாகரத்திற்கும் மறுமணத்திற்கும் விதவைத் திருமணங்களுக்கும் 'அர்த்த சாஸ்திரத்தில்' இடம் இருந்திருக்கிறது என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார். விவாகரத்திற்கு இருதரப்பினரும் விண்ணப்பிக்க வேண்டும். i.e. divorce on mutual consent என்பது வழக்கத்தில் இருந்திருக்கிறது.

சகுனங்கள் கனவுகளைப் பற்றி அக்னி புராணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. சகுனங்கள் சில நேரம் ஆபத்தை உணர்த்துவதும் உணர்த்தாமல் போவதும் கூட கர்மவினைப் படியே நடைபெறுகிறது. கனவுகளைப் பற்றியும் இப்புராணத்தில் பேசப்பட்டிருக்கிறது.

இரவு காலத்தை 4 வகையாக பிரித்து

முதல் பாகத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்தில் பலிதம் இருக்கும் என்றும் இரண்டாம் பாகத்தில் கண்ட கனவு ஆறு மாதங்களில் பலிக்கலாம் மூன்றாம் பாகத்தில் கண்ட கனவு மூன்று மாதங்களில் பலிக்கலாம் நான்காம் பாகத்தில் கண்ட கனவு பத்து அல்லது பதினைந்து நாட்களில் பலிக்கலாம் என்று புராணம் கூறுகிறது.

(பொதுவாக நமக்கு முதல், இரண்டு, மூன்றாம் பாக கனவுகள் மறந்து விடும் என்று நினைக்கிறேன்)

நளினி தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். குயிலியின் பேச்சில் வழக்கம் போல, இயல்பை விட நாடகத்தன்மை அதிகம் தெரிகிறது.

No comments:

Post a Comment