December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (நந்தினி-அஷ்ட வசுக்கள் கதை)

பசுவை ஏன் உசத்தி வைத்திருக்கிறோம்? கோ-மாதா என்ற பெயரும் வழங்குவதுண்டு. பசு என்றால் சிறப்பு என்பதால், த்வாபர யுக முடிவில் அல்லலுற்ற பூமாதேவி தன் முறையீட்டை தெரிவிக்க இறைவனிடம் பசுவின் வடிவில் சென்றாளாம். பசு என்றால் என்ன சிறப்பு? நடைமுறை வாழ்வில் பசு என்ற பிராணி மட்டுமே பிறர்க்கு உதவும் பொருட்டு தன் செல்வத்தை செலவிடுகிறது. அதன் பால், நமக்கு பாலாய்-தயிராய்-வெண்ணையாய் நெய்யாய் உருக்கி பயன்பட உதவுகிறது. அதன் சாணம் கூட வீணாக்கப்படாமல் உபயோகிக்கப்படுகிறது. மேலும் தன் கன்றுக்கு பாலூட்டிய பின் பிறருக்கு பால்வழங்கும் ஜீவன் பசு. இப்படி சிறந்த குணங்கள் கொண்டதால் பசுவை உயர்வில் வைத்திருக்கிறோம்.

யார் நந்தினி? - நந்தினி என்பவள் கோ-மாதா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவள் வசிஷ்டரின் ஆசிரமத்தில் அவருடைய நித்ய கர்மாக்களுக்கு உதவியாக இருந்தவள் என்பதும் பல பேருக்கு தெரிந்த விஷயம். நந்தினியின் அபார திறமையின்பாற் ஆவல் மேலிட விச்வாமித்ரர் அவளை கோரியதும், வசிஷ்டர் அந்த கோரிக்கையை மறுத்ததும் புதிய விஷயமன்று.

அஷ்ட வசுக்கள் யார்? - நம்மில் பலருக்கு தெரியாத கதையும் விஷயமும் அடங்கியிருக்கிறது. தக்ஷனின் மகள் வசு. அவளின் புதல்வர்களே அஷ்ட வசுக்கள். அஷ்ட வசுக்கக்களும் சாபத்தின் காரணாமாக பூமியில் பிறக்க நேரிட்டது.

அப்படி என்ன தான் சாபம்? யார் கொடுத்தது? ஏன் கொடுக்கபட்டது? - ஒரு முறை அஷ்ட வசுக்கள் தம் மனைவியருடன் வசிஷ்டரின் ஆசிரமத்தின் அருகில் அளவளாவிக்கொண்டிருந்தனர். ப்ரபாசன் என்பவனின் மனைவி வசிஷ்டரின் ஆசிரமத்தில் வளைய வரும் நந்தினியின் பால் ஆசை மேலிட, அதனை கொண்டு வருமாறு தன் கணவனை பணித்தாள். ப்ரபாசன் முதலில் மறுத்தான், பின் மனைவியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நந்தினியை தன்னுடன் இட்டுச் சென்றான். இதனை ஞானக்கண் கொண்டு அறிந்த வசிஷ்டர் கோபம் மேலிட அஷ்ட வசுக்கள் பூமியில் பிறக்கக் கடவது என சபித்தாராம். அப்போது கங்கையும் பூமியில் தோன்றியிருந்ததால், தாங்கள் கங்கைக்கும் சந்தனுவிற்கும் புதல்வர்களாய் பிறக்க போவதாகக் கூறி, பிறந்தவுடன் தங்களை கொன்றுவிடும் படி அவர்கள் கங்கைக்கு வேண்டுகோள் விடுத்தனர். அஷ்ட வசுக்களில் ஒருவருக்கு நீண்ட நாள் பூமியில் இருக்கும்படி சாபம். அவர் தான் பீஷ்மர். அதனாலேயே அவர் தன் கர்மாவை/சாபத்தை பிறவி முழுவதுமாய் வாழ்ந்து தீர்த்துக்கொண்டார்.

No comments:

Post a Comment