December 16, 2009

எங்கே பிராமணன் - முதல் அத்தியாயம் (உன்னுள் தேடு) dec14

உலகில் பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை நமக்குள்ளே தேடாமல் வெளியே தேடுவதால் முயற்சி தோல்வியடைவதோடு மட்டுமின்றி, எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றத்தால் மனவருத்தம் எஞ்சி நிற்கிறது. தத்துவக் கதைகள் பலவற்றிலும் சுட்டிகாட்டியது போலவே, தொலைத்த பொருளை தொலைத்த இடதில் அல்லவா தேட வேண்டும்? இக்கதையை பல முறை நாம் கேட்டுணர்ந்திருந்தாலும், நம் வாழ்வில் தொலைக்கும் சிறு சந்தோஷங்களைக் கூட நாம் வெளியே தேட முயற்சிக்கிறோம். அன்போ, அமைதியோ, இன்பமோ முதலில் நம் மனதில் கொணர்ந்தால், அதை பிறரிடம் பகிர்ந்து கொள்வதும் காணப்பெறுவதும் எளிதாகப் பெறும்.

நம் கதையில் நாயகன் அஷோக் "எங்கே பிராமணன்" என தேடித் தேடி எவருமே தென்படாததால் மனவருத்தம் கொண்டு துவண்டு விடுகிறான். ஏட்டில் சுட்டிக்காட்டிய பிராமணனுக்குறிய தகுதியும் வாழ்வு முறையும் இக்காலத்தில் எவரும் பின்பற்றுவதே இல்லாததால், அது தொலைந்தே விட்டதோ என்ற கவலை மேலிடுகிறது. அப்போது அவனைத்தேடி வருகிறார் ஒரு பெரியவர். அவர் கூறுவதும் இதைத் தான்.

"தொலைந்தவனை நீ உன்னுள் தேடு" என்கிறார். "உன்னிடதில் அவன் ஒளிந்திருக்கலாம், கஸ்தூரி தன்னிடமே வைத்திருந்தும் அதை அறியாத கஸ்தூரி மானைப் போல, நீயே உன்னுள் அவனை ஒளித்து வைத்திருக்கலாம். அப்படி ஒருவன் அகப்படவில்லையெனில், அவனை நீயே உன்னுள் செதுக்கு. எப்படி ஒரு வண்ணத்துப் பூச்சி தன்னை தானே செதுக்கி உருமாற்றிக்கொள்கிறதோ, மாற்றத்தை தன்னுள் தானே கொணர்கிறதோ, அப்படி நீயே மாற்றத்தை உன்னுள் கொண்டு வர வேண்டும். தேடுவதை நிறுத்து, தேடுவதை நிறுத்தினாலே தேடுவது கிடைக்கும்"

சென்ற பாகத்திலும் இதைத் தான் பார்த்தோம்.

'நான் யார்' போன்ற கேள்விகளுக்கு மட்டுமின்றி ஏனைய் பல கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு நமக்குள் தேடினால் தென்படுவதே.

"ஒரு பிச்சைக்காரன் பாறையின் மேல் அமர்ந்து தினமும் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். பின்னர் ஒரு நாள் பாறையை தோண்டிய போது அங்கு புதையலே இருப்பது தெரிந்தது, அது தெரியாமலே, இத்தனை நாள் அவன் வெளியில் பிச்சை எடுத்திருக்கிறான், அது போலத்தான் வெளியே அமைதி தேடும் முயற்சி." என்று சென்ற பாகத்தில் வயோதிக வேடத்தில் வந்து நாரதர் கூறிய கதையை மீண்டும் நினைவு கோரலாம். இம்முறையும் இந்த உபதேசத்தை வயோதிக சன்யாசியின் வேடத்தில் வந்து நாரதரே சொல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இத்தொடரில் காட்டப்படும் கைலாயத்தை பார்த்தாலே நமக்கு எரிச்சலாய் வருகிறது. சிவன் வேடத்தில் வருபவர் நடிப்பால் நம்மைக் கொன்று விடுகிறார். "ஹ்ம்ம்", "ம்ம்ம்ம்" என்று சுருதி ஏற்ற இறக்கத்துடன் அவர் நாரதருக்கு செவி மடுப்பது எரிச்சலின் உச்ச கட்டம். கைலாய கூட்டத்தில் நாரதராக வருபவர்க்கு மட்டும் போனால் போகிறது என்று பாஸ் மார்க் தரலாம்.

2 comments:

  1. //அன்போ, அமைதியோ, இன்பமோ முதலில் நம் மனதில் கொணர்ந்தால், அதை பிறரிடம் பகிர்ந்து கொள்வதும் காணப்பெறுவதும் எளிதாகப் பெறும்.//

    சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த அன்பும், அமைதியும், இன்பமும் தன்னிடம் இருந்தால் தானே அதைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதும், அதைப் பிறரிடம் காணப் பெறுவதும் முடியும்?..

    அன்பு என்பது சுவ்ற்றில் அடித்த பந்து மாதிரி; பிறரிடம் செலுத்த பன்மடங்காக செலுத்துவரிடமே திரும்பி வரும் சேதி.
    ஆக, பிறர் அன்பைப் பெற்று வாழ சுலபமான வழி, நாம் பிறரிடம் அந்த அன்பைச் செலுத்துவதே.

    ReplyDelete
  2. வருகைக்கும் ஒத்த கருத்துக்கும் மிக்க நன்றி ஜீவி :)

    ReplyDelete