December 13, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (வார்த்தை நிதானம்)

வார்த்தைகளுக்கும் ஒலிகளுக்கும் பலம் அதிகம். திடீரென ஒலிக்கும் சில வார்த்தைகள் கூட நம்முள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. நல்ல வார்த்தைகளும் ஓலிகளையும் பகிர்ந்துகொள்ள முடியாது போனால், மௌனமாய் இருப்பது நலம். இறைவனிடம் மந்திரங்கள் ஜெபிக்கும் போது வார்த்தைகளை மிகச் சரியாக உச்சரிக்கவேண்டும்.

வெங்கடராமன் எப்படி ரமணர் ஆனார்? உறவினர் ஒருவர், 'அருணாசலம்' என்ற பெயரிட்ட இன்னொருவரை விளிக்க, அந்த வார்த்தை அவருள் பெரிய மாறுதலை உண்டாக்கியது. திடீரென ஆன்ம தாகம் பெருக்கெடுக்க, அதற்கு விடையும், அதன் இலக்கையும் தேடத் துவங்கினார். சிறுவயதிலேயே அவர் சமாதிநிலையை அனுபவித்துள்ளார். அதைப் பற்றி பிறரிடம் கூறத்தான் என்ன இருக்கிறது? அதனால் அதைப் பற்றி வீட்டிலோ வெளியிலோ விஸ்தாரிக்கவில்லை. 'அருணாசலம்' என்ற வார்த்தை கேட்ட மாத்திரம் நிகழ்ந்த உள்ளுணர்வைத் தொடர்ந்து, 'தன்னைத் தேடவேண்டாம்' எனக் கடிதம் எழுதிவைத்து விட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

த்வஷ்டா என்ற தேவதச்சன் யாகம் செய்து இந்திரனைக் கொல்ல ஒரு மகன் வேண்டினான். மந்திரம் உச்சரிக்கும் போது உச்சரிப்பு தவறியதால் அவனுக்கு கிடைத்ததோ இந்திரனால் கொல்லபட்ட மகன். ஆகவே இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து விடாமல் மந்திரம் சொல்லும் போது, மிகவும் கவனமாக பிரார்த்திப்பதும், உச்சரிப்பதும் அவசியம்.

கொசுறு தகவல்: நம் வீடுகளில் விரத பூஜைகளுக்கு மந்திரம் ஓதி சங்கல்பம் எடுத்து செய்யும் போது (குறிப்பாக வரலக்ஷ்மி விரதம், விக்னேஸ்வர பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவை) கடைசியில் ஒரு மந்திரம் சொல்லி முடிப்பது வழக்கம்.

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் சுரேஷ்வரீ
யத் பூஜிதம் மயா தேவி பரிபூரணம் ததாஸ்து மே


இதன் பொருள், 'இப்பூஜையில் ஏற்பட்டிருக்கும் மந்திர தவறுகள், செயலால் அல்லது பக்தியின் குறைவால் ஏற்பட்டிருக்கும் குறைகளை மன்னித்து, பரிபூர்ண பலன் அருள்வாய்' என்பதாகும்.

No comments:

Post a Comment