December 13, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (க்ருஷ்ணன் எப்படி நித்ய ப்ரம்மச்சாரி? )

கர்மாவை பற்றற்று செய்பவனுக்கு, அவற்றினால் ஏற்படும் பாப புண்யங்கள், தாக்கங்கள், பற்றிக்கொள்வதில்லை. கர்ம பலன்கள், அவனை சுற்றிப் பிணைத்துக்கொள்வதில்லை. இதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது ஒரு கதை.

ருக்மிணியை துர்வாச முனிவருக்கு பிரசாதம் வழங்கிவிட்டு வருமாறு க்ருஷ்ணன் அனுப்புகிறான்। வழியே ஆற்றுவெள்ளப்பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுகின்றபடியால், ருக்மிணியால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. "க்ருஷ்ணன் நித்ய ப்ரமச்சாரி என்றால் வழி விடு" என்று வேண்ட சொல்கிறான் க்ருஷ்ணன்। ருக்மிணியும் அவ்வாறே கேட்டுக்கொள்ள ஆறு ஒதுங்கி வழிவிட்டது. பிரசாதம் உட்கொண்டு துர்வாசரிடத்தில் விடை பெற்று திரும்புகிறாள் ருக்மிணி. மீண்டும் வெள்ளம். "துர்வாசர் நித்ய உபவாசி என்றால் வழி விடு" என்று பணிக்கச் சொல்கிறார் மாமுனி. ருக்மிணியும் அவ்வாறே கூற ஆறு வழிவிடுகிறது. ருக்மிணிக்கு ஒன்றுமே புரியவில்லை. தம்முடன், குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் க்ருஷ்ணன் எப்படி நித்ய பிரம்மசாரி ஆக முடியும்? க்ஷண நேரம் முன்பு பிரசாதம் உட்கொண்ட முனிவர் எப்படி நித்ய உபவாசி ஆகப் பெறுவார்? குழப்பதிற்கு விடை க்ருஷ்ணன் அளிக்கிறான். 'நாங்கள் இருவருமே பற்றற்று எங்கள் செயல்களை, கடமைகளை, செய்வதால், எங்களுக்கு கடமையால் பிணைப்பு ஏற்படுவதில்லை' என்கிறான். எப்பேற்பட்ட பற்றற்ற நிலை இருந்தால் இது சாத்தியம் ஆகும் !!

'நிஷ்காம கர்மா' என்பது பலனை எதிர்பாராமல், கடமையைச் செய்வது. நம்மில் ஏறக்குறைய அனைவருக்கும், செயலை விட செயல் ஈட்டும் பலன் மேல் சந்தோஷம் இருக்கக்கூடும். நிஷ்காம கர்மாவைச் செய்பவனுக்கு செயலே சந்தோஷத்தை தருகிறது. அதனைத் தாண்டிய பலனைப் பற்றி அவன் பொருட்டாய் நினையாமல், செயலை சிறப்பாய் செய்வதிலேயே முழுமையான மகிழ்ச்சியை அடைந்து விடுகிறான்.

இதனை நடைமுறை வாழ்வில் கொணரும் போது, செய்யும் செயலில் மேலும் நேர்த்தி கூடுகிறது. ஒரு பொருளின் தரத்தில் கவனம் செலுத்தி, அதனை தயாரித்தால், அதன் தரம் மேம்பட்டு, உபயோகிப்பவன் பயன் அடைகிறான். So called goodwill increases. இறுதியாக, நாம் பயனைப் பொருட்டாய் கருதாவிட்டாலும், பயன் நன்றாக அமைந்து விடுகிறது. லாபத்துக்காக பொருளின் தரத்தை குறைத்து தயாரிப்பவன் நெடு நாள் வேரூன்ற முடிவதில்லை. இலவசப் படிகள், ஊக்கத்தொகை, சம்பள உயர்வை மனதில் கொண்டு, உழைப்பவனின் உழைப்பு, முழுமையாய் வெளிப்படுவதில்லை.

முழுமையாய் உழைப்பதை தம் கடமையாக கொண்டவனுக்கு, ஊதிய உயர்வு இத்யாதிகள் தானே வந்து சேர்கிறது. இங்கு கர்மா எனப்படுவது அவரவர் செய்யும் தொழில் எனக் கொள்ளலாம், பெரிய அளவில், உயரிய நோக்கில் கர்மா எனப்படுவது யாகம் போன்றவற்றை குறிக்கும்.

No comments:

Post a Comment