December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (சௌந்தரியலஹரி-கனகதாரா ஸ்தோத்திரம்)

கனகதாரா ஸ்தோத்திரம் ஆதிஷங்கரரால் கூறப்பட்டது. ஏழை அந்தணர்கள் குடும்பத்தை வாழ்விக்க அவர் பாடினார். ஸ்வர்ணத்தில் நெல்லிக்கனி மழை பொழிந்ததாய் கூறுவதுண்டு। அப்படிப்பட்ட ஏழைகளாய் அந்த அந்தணர்கள் வாழ்ந்தனராம். ஏனெனில் அவர்கள் உஞ்சவிருத்தி எடுத்து பிழைத்து வந்தனர். உஞ்சவிருத்தி என்றால், கீழ் சிந்தி வீணாக்கப்பட்ட நெல்லைப் பொறுக்கி அதனை பொங்கி உண்டு ஜீவித்திருப்பது. அவர்கள் ஷங்கரருக்கு வழங்கிய நெல்லிக்கனியும் கூட அழுகிய நெல்லிக்கனி. நல்ல நெல்லிக்கனியாய் இருந்தால் பயன் மற்றோருக்கு உண்டு என்று அதனை தவிர்த்து, பிறர் தவிர்த்த பொருளை உண்டு வாழ்பவர்கள். அப்படிப்பட்ட ஜீவனத்திலும் தன்னால் பிட்சை இட முடியவில்லை என வருந்தி, இருந்த ஒரு நெல்லிக்கனியும் கொடுக்க, ஆதிஷங்கரர் லக்ஷ்மிதேவியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். "இவர்களின் முன்வினைப்பயனோ மிகவும் முற்றியது, வினைப்பயனை ஒதுக்கி எவ்வாறு காத்தருள்வது" என்று லக்ஷ்மிதேவி திகைக்க, "அவளிடம் இருந்த ஒரே சொத்து நெல்லிக்கனி, அந்த நெல்லிக்கனியையும் வழங்கிவிட்டதன் மூலம் அவள் தன் மொத்த செல்வத்தையும் தானம் செய்துவிட்டாள். இந்த ஒரு நற்செயலே அனைத்து பாபங்களையும் கழுவ வல்லது" என்று ஷங்கரர் மீண்டும் வலியுறுத்த, லக்ஷ்மி மனமிரங்கி அருள் புரிந்தாள் என்கிறது புராணம்.

அடுத்து சௌந்தர்ய லஹரி। ஷங்கரர் அம்பாளின் ஸ்வரூபத்தை அழகை வர்ணித்து எழுதுவதாய் இருக்கிறது அனைத்து ஸ்லோகங்களும். ஆனால் அம்பாள் அழகை வர்ணித்து முதலில் பாடியதோ சிவபெருமான். ஒரு முறை ஷங்கரர் கைலாயத்திருக்கு சென்றிருந்தார். சிவன் மகிழ்ந்து அவருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்களை வழங்குகிறார்.

1. யோக லிங்கம் - - காஞ்சிபுரம் (சந்திரமௌலீஸ்வரர்)
2. முக்தி லிங்கம்- - கேதார்நாத்
3. வர லிங்கம்- - நேபாளம்
4. போக லிங்கம்- - ஸ்ருங்கேரி
5. மோக்ஷ லிங்கம் - - சிதம்பரம்


லிங்கங்கள் மேற்கூறிய ஸ்தலங்களில் பின்பு ப்ரதிஷ்டிக்கப்பட்டிருக்கிறது.

அம்பாள் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் லஹரியை வழங்குகிறாள்। அதை கொணரும் போது நந்தி வழிமறித்து 59 ஸ்லோகங்களை பிடுங்கிக்கொண்டுவிடுகிறார். அந்த ஸ்லோகங்கள் முறையே சிவன் பார்வதியின் ஸ்வரூபத்தை வர்ணித்து துதித்த ஸ்லோகங்கள். மிச்ச 41 ஸ்லோகங்கள் தந்திர யந்திரங்களைச் சொல்வது. அது ஆனந்த லஹரி எனப்படும். அம்பாளின் வேண்டுகோளுக்கிணங்க ஷங்கரர் 59 ஸ்லோகங்களை அவள் த்வ்ய ரூபத்தை வர்ணித்து பின் இயற்றியிருப்பதாய் புராணம் பறைசாற்றுகிறது.

No comments:

Post a Comment